31 மார்., 2009

"ராமசாமி'' அத்தியாயம் 9

\"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.\"

-செம்புலப் பெயனீரார்.
What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain:
mingled
beyond parting.

இந்த குறுந்தொகை கவிதைதான் நான் அவளுக்கு கடிதமாக அனுப்பினேன், மேலும் கடிதத்தில் இதைதவிர வேறு எதுவும் எழுதவில்லை. ஏனென்றால் என் காதலை இதைவிட எப்படி சிறப்பாக சொல்லமுடியும். என் மனதை படித்த கவிதை இது.

மனம் பதைபதைக்க என்ன சொல்வாளோ என்ற பதட்டத்துடன் சென்றேன். கோவிலுக்குள் நுழைந்தவுடன் அவளை பார்க்கும்போது கோபமாகத்தான் அமர்ந்திருந்தாள்.. சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.. இதற்குமேல் நடந்தவற்றை உரையாடலாக தருகிறேன்..

\'\'உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே குமார்\'\'
\'\' அதன் சொல்லிட்டேனே\'\'
\'\'நமக்குள்ள இது எப்படி ஒத்துவரும்ன்னு நெனைக்கிறே\'\'
\'\'ஏன் ஒத்துவராது?\"
\" எதுவுமே ஒத்துவராது\'\' முதல்ல நீங்க தேவர், நாங்க வேளாளர். அப்புறம் உங்க ஊரு பரவாக்கோட்டை, அந்த பேரை சொன்னாலே அப்பா சம்மதிக்கமாட்டார், அப்பிடி ஒரு பேரு வாங்கியிருக்கிங்க, எதுக்கெடுத்தாலும் வெட்டு, குத்துதான்.. அதனால இது நமக்கு சரிப்பட்டு வராது குமார்..
\" நீயா எல்லாத்தியும் முடிவு பன்னிர்றதா? அஞ்சலி\"
\"என்ன இப்பவே அதிகாரம் தூள் பறக்குது.. முதல்ல எனக்கு உன்னை புடிக்கணும் தெரியுமா?\"
\'\' அப்ப புடிக்காமதான் இவ்வளவு நாளும் பழகினியா?\"
\" பாத்தியா நீயும் சராசரிதான்னு நிருபிச்சுட்டே.. நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?\'\'
\'\' என்னை விரும்புகிறாயா? இல்லையா? அத மட்டும் சொல்லு அஞ்சலி..\"
\"இல்லை குமார் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை\"
\"அத சொல்லிட்டு போ.. அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணாத\"\'
\" ஏன் கோபப்படுறே நியாயமா எனக்குதானே கோபம் வரணும்\"
\" நான் உன்னை விரும்புகிறேன் அவ்வளவுதான். புடிச்சா பேசு இல்லாட்டி போய்கிட்டே இரு அஞ்சலி\"
\'\'ரொம்ப பேசுறே குமார், உன்னோட ஊர் குணத்த என்கிட்டே காட்டாத\"
\" இப்ப என்னை என்னதான் பண்ண சொல்றே\"
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள்.. பிறகு ஒன்றை நீ புரிஞ்சுக்கணும் ஒரு நல்ல நண்பனாக நீ இருக்கமுடியும் ஆனால் வாழ்க்கை முழுக்க ஒன்னோட வாழனும்னா அது கஷ்டம், ஏன்னா முதல்ல என்னோட வீட்டுல இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க, அவங்கள எதுத்துக்கிட்டு என்னால எதுவும் பண்ண முடியாது, இவ்வளவு நாள் அப்பா, அம்மாவ பிரிஞ்சு இருந்தாச்சு, இனிமே என்னால அவங்கள பிரிய முடியாது.
அப்புறம் முக்கியமா இது நமக்கு வயசில்லை, உன்னை பொறுத்தவரை இன்னும் அஞ்சு வருசமாவது போவனும், சும்மா வெட்டியா பொழுது போக்குற உன்னை நான் எப்படி நம்ப முடியும். அதனால இன்னையோட நாம எல்லாத்தியும் முடிச்சிக்கலாம், நான் உன்னை சராசரிக்கும் மேல் இருப்பாய் என நினைத்தேன், ஆனால் நீ அப்படி இல்லை, இதற்க்கு பிறகும் வெறும் நட்போட உன்னால் என்கூட பழக முடியாது, இப்ப நான் உன்னை நான் பாத்து பேசுறது கூட நீ எனக்கு எழுதுன லெட்டர்தான் அந்த கவிதை அற்புதம். இதையே ஒரு அஞ்சு வருடம் கழித்து கொடுத்து இருந்தா, நல்லா இருந்திருக்கும். அப்படின்னு சொல்லிட்டு இனி நான் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என் சொன்னாள்,

நானோ முதல்ல நீ எனக்கு அட்வைஸ் பன்றத நிறுத்து, என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும், நான் என் விருப்பத்த சொன்னேன், உனக்கு பிடிக்கலேன்னா, சொல்லிட்டு போ, இனிமே உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லேன்னு சொன்னா எப்படி, அப்புறம் ஒரு அஞ்சு வருஷம் போகட்டும், அப்ப உனக்கு பிடிச்சுருந்தா பாக்கலாம், இல்லேன்னா நட்பா இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை என்றேன்.

இல்ல குமார் இனிமே அப்படி இருக்கமுடியாது, உன்ன பார்க்கிரப்பல்லாம் நீ இதைபத்திதான் பேசுவே, இனிமே நமக்குள்ள நட்பு மட்டும் இருக்காது, எனவே தயவு செய்து என்னை மறந்திடு. ஒரு சிறப்பான வாழ்க்கை உனக்கு உண்டு, வேன்னா ரெண்டு வருஷம் போவட்டும், நீ முதல்ல உன் எதிர்கால வாழ்க்கைக்கு இப்பவே திட்டமிடு. அதற்கு அப்புறமும் நீயும் நானும் இதே மனநிலையில் இருந்தால் அப்ப பாக்கலாம் என்றாள்.

நான் எதுவுமே பேசவில்லை, கனத்த மௌனத்துடன் தலை தொங்கி அமர்ந்திருந்தேன், என்தலையை நிமிர்த்தி, ப்ளீஸ் புரிஞ்சுக்கப்பா என்றாள். நான் பதில் சொல்லவில்லை, என் வலது கையை எடுத்து தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துகொண்டாள், என் கை நடுங்கியது. அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது, மெல்ல என் கையை விடுவித்து ஒரு சிறிய சங்கினை கொடுத்தாள், என்னைப்பற்றி நீ நெனைக்கிற போதெலாம் இதபாரு உனக்கு சில விசயங்கள் புரியும், அயம் வெரி வெரி சாரி குமார் உன்னை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று சொல்லிவிட்டு விறுவென நடந்துவிட்டாள்.

நான் அமர்ந்திருந்தேன் அவள் தூரமாய் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன், என் உயிர் என்னைவிட்டு பிரிகிறமாதிரி இருந்தது, எனக்கு ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது..

நீ
அமர்ந்து போன இடங்களில்
உதிர்ந்து போன மல்லிகை மொக்குகளை
மெல்ல எடுத்து நான்
பாட புத்தகங்களில் பாதுகாத்து வைத்தது
தெரியாது
உனக்கு தெரியாது..

நீ
நடந்து போன பணிபாதைகளில்
நசுங்கிப்போன பசிய புற்களை
அன்பாய் பார்த்து
தடவிகொடுத்தபின் மெல்ல நிமிர்கிற அவற்றிடம்
உனக்காக நான் மன்னிப்பு கேட்டது
தெரியாது
உனக்கு தெரியாது..

மன்மத சாட்டையாய்
நீண்டு கிடக்குமுன் கூந்தல்
பின்னழகில் உரச உரச நீ
நடந்து போகையில்
என் மனக்காடுகளில்
தீப்பிடித்து எறிந்த கதை
தெரியாது
உனக்கு தெரியாது..

ஓர்
இராப்பிச்சைகாரனாய்
உன்னை மட்டுமே பின் தொடர்ந்து வரும்
எனக்கு
கோயிற் குளத்து மீன்களுக்கு
ரொட்டி துண்டுகளை பிய்த்து போடுகிற மாதிரி
சின்ன சின்ன புன்னகைகளை
நீ
பிச்சை இட சம்மதிக்கிறாய்
மெல்ல
மெல்ல..
ஓர் வானவில் போல்
நம் காதல் வளர ஆரம்பிக்கிறது..

இறுதியில்
நீ போகிறாய்
திரும்பித்
திரும்பி பார்த்தபடி
நீ போகிறாய்
போகப் போக பார்த்துக்கொள்ளலாம்
என்றவள் போகிறாய்
போகப் போக பார்த்தாயா
நான் நிற்கிறேன்
மெல்ல
மெல்ல..
ஓர் வானவில்போல்
வளர்ந்த நம் காதல்
இதோ உடைந்த வளையல் துண்டாய்
புழுதியில் கிடக்கிறது...



என் மனதை அப்படியே படம் பிடித்த இந்த கவிதை எழுதியவரை நான் மானசீகமாக வணங்கினேன்..

இத்தோடு முடிந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும், ஆனால் விதி வலியது. எங்களை அது ஒரு கை பார்த்துவிட்டே சென்றது, அவள் மீண்டும் என்னை தேடிவந்தாள் இதற்க்கு அப்புறம் நடந்தவற்றை அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன் .....

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

28 மார்., 2009

"விஜயகாந்தின் பம்மாத்து"

தற்போதைய தமிழக அரசியலில் நடக்கும் உச்சபச்ச கோமாளித்தனம் விஜயகாந்த் செய்வதுதான், காங்கிரசுடனும், அதிமுகவுடனும் மாறி மாறி பேரம் பேசி படியாமல் இப்போது மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என்கிறார், இதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லியிருந்தால் வந்துட்டாருய்யா நம்மை ஆளப்போகும் பெருந்தகை என்று ஒரு ஓட்டை போட்டிருக்கலாம். இப்ப ரொம்ப கஷ்டம் சார்.

அப்புறம் இப்பதான் இலங்கை பிரச்சினை அவருக்கு தெரிய வந்தது போல, ஈழ பிரச்சினையில பிரனாப்பும், கலைஞரும் ஒண்ணுமே பண்ணல பாருங்க, நம்பல எல்லாம் ஏமாத்துறாங்கன்னு சொல்றார், அண்ணே தமிழண்ணா ஒங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா... நீங்கதான் தூங்கிட்டிருக்கீங்கன்னா நாங்க முழிச்சு ரொம்ப நாளாச்சு. அதனாலே இலங்கை தமிழன் செத்து சுண்ணாம்பு ஆகட்டும், தயவு செய்து நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். கிடைக்கிற கொஞ்ச ஓட்டையும் இழந்துராதீங்க.

எல்லா தொகுதிலயும் ஆள நிறுத்த வேண்டியதுதானே, அத விட்டுட்டு ஏன் ஒன்பது தொகுதிகள்ல மட்டும் நிறுத்தி இருக்கீங்க.. மத்த தொகுதிகள்ல உங்க கட்ச்சிகாரங்க யாரும் இல்லையா? சரி பின்னாடி அறிவிப்பீங்க...

ஆந்திராவில் உங்களுக்கு பின்னாடி கட்சி ஆரம்பிச்ச சிரஞ்சீவிக்கு இருக்கிற துணிச்சல்ல பாதியாவது உங்ககிட்டே இருக்கா, உங்க வீரமெல்லாம் சினிமாவுக்கு மட்டுந்தானா?

ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்படக்கூடிய வாய்ப்பை நீங்கள் இலங்கை பிரச்சனையில் இழந்து விட்டீர்கள், அதான் நாங்க கருப்பு கொடி குத்திகிட்டோமே, என் பையனுக்கு பிரபாகரன்னு பெயர் வச்சோமேன்னு சொல்றிங்க.. உங்களின் பூர்வீகம் தெலுங்காக இருக்கலாம், உங்களை நாங்கள் அப்படி பிரித்து பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் அத்தனை பெரும் எங்களை பொறுத்தவரை தமிழன்தான். ரொம்ப நாளா பிறந்த நாள் கொண்டாடாம இருக்கீங்க, இப்படி தமிழ்நாட்டுல எல்லாரும் பிறந்தநாள கொண்டாடாம இருந்த சீக்கிரமா ஈழம் கிடைச்சிடும், ஆனால் உங்க அளவுக்கு எங்களுக்கு தெளிவில்ல, அதனால்தான் பொழப்பு இல்லாம போராட்டம் பண்றோம்.

உங்க திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதே உங்கள் மக்கள் பற்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பவே என் திருமண மண்டபத்தின் இடம் மக்களுக்கு தேவை என்றால் அதனை நான் இலவசமாகவே வழங்குகிறேன் என்று அறிவித்திருந்தால், நீங்கள் எங்கள் மனதில் ஆழமாக இடம்பெற்று இருப்பீர்கள். ஆனால் இன்றுவரை அதே பொலப்பம்தான். என்னோட மண்டபத்த இடிச்சிட்டாங்க என்னை பழிவாங்கிட்டாங்கன்னு எல்லா கூட்டத்துலயும் சொல்றீங்க. நீங்க எப்படி பொதுநலன் பத்தி பேசுறிங்க? அத நாங்க வேற நம்பனுன்னு நெனைக்கிறீங்க.

அடுத்து வடிவேலு பிரச்சினை, வடிவேலே உங்க ஆளுங்ககிட்டே பிரச்சினை பண்ணியிருந்தால் கூட நீங்க நேரா போய் வடிவேலுகிட்டே பேசி இருந்தா உங்கள தூக்கி வச்சி கொண்டாடி இருப்போம். நீங்களோ சும்மா இருந்திட்டிங்க, அத சரியா பயன்படுத்திக்கிட்டு வடிவேல ஆளும்கட்சி தூண்டிவிட்டப்ப கூட போய் பேசி இருக்கணும், தவற விட்டுட்டீங்க...

இப்ப பிரச்சனை என்னன்னா இப்படி நீங்க ஈழ பிரச்சனையில் திடீரென காட்டும் அக்கறை, கொஞ்சம் ஜெயலலிதாவுக்கு முன்னாடி காட்டியிருந்தால் கூட, அட இவருக்கும் நடிக்க வருதுப்பான்னு சந்தோசப்பட்டிருப்போம்.

ஆனா நீங்க நல்லது செய்வீங்கன்னு மாபா பாண்டியராஜன் கூட நம்புராரு பாருங்க, அவர நெனச்சாதான் வருத்தமா இருக்கு. ஜோசியக்காரனையும், சாமியாரையும் நம்பி களத்தில நிக்கிறீங்க, நீங்க எதிர்ப்பது அரசியல்ல மிகுந்த அனுபவம் மிக்க கலைஞரையும், தன்னை அப்பட்டமாக நம்பும் ஒரு கோடி முட்டாள்களை கொண்ட ஜெயலலிதாவையும், யார் குட்டிசுவரானால் எனக்கென்ன எனக்கு என் சொந்த நலனே முக்கியம் என அரசியலில் சரியாக காய் நகர்த்தும் ராமதாசையும், என்பதை மறந்து விடாதீர்கள். ஆனா நீங்க எல்லாரும் மறந்தது மக்கள் ஒட்டு போட்டாதான் ஜெயிக்கமுடியும் என்பதை. தேர்தல் கமிசன் ஒரே நாள்ல இந்த தேர்தல தமிழகத்துல வச்சதால், திருமங்கலம் போல பணத்த பாதாளம் வரைக்கும் பாய்ச்ச முடியாது,

இப்போது போகட்டும் வரும் சட்டமன்ற தேர்தலிலாவது ஒரு தெளிவான முடிவோடு, தனியாக களத்தில் நில்லுங்கள், உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துங்கள், உங்களுக்கு என் ஒட்டு நிச்சயம் உண்டு. ஆனால் இந்த தேர்தலில் என்னால் உங்களுக்கு ஒட்டு போட முடியாது விஜயகாந்த்....

21 மார்., 2009

"அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி!"

திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருக்கிறார். எனக்கு தனிப்பட்ட முறையில் திருமாவின்மேல் ஒரு மரியாதை எப்போதும் உண்டு. ஆனால் இப்போது எல்லா அரசியல்வாதிகளைபோலத்தான் அவரும் என்று நினைக்க தோன்றுகிறது.

திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதை காங்கிரசார் விரும்பாத நிலையில் பலவந்தமாக நான் அந்த கூட்டணியில்தான் இருப்பேன் என சொல்வது நியாயமா திருமா? ஈழத்தமிழனுக்காக நீங்கள்தான் சுயநலம் பார்க்காமல் குரல் கொடுத்தவர் என பார்கிறவரிடத்தில் எல்லாம் பெருமையாக சொல்லிக்கொண்டுஇருந்தேன், இப்போது இன அழிப்பு போரை இந்தியாவே முன்னின்று நடத்துவதை தெளிவாக தெரிந்த நீங்கள் எப்படி மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வருவதை விரும்புகிறீர்கள்.

நாளை தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்களும் காங்கிரசாரும் எப்படி ஒரேமேடையில் நின்று பேசுவீர்கள். உங்கள் மனசாட்சி உங்களை சுட்டெரிக்காதா?
கலைஞர் தமிழின் காவலன் என்ற காலம் போயேபோச்சு என்பது உங்களுக்கு தெரியாதா? எதிரிகளை கூட மன்னிக்கலாம், கலைஞர் மாதிரி துரோகிகளை எப்படி மன்னிப்பது.

தன் குடும்பத்தின் சுயநலத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட கருணாநிதியும், தினம் தினம் நம் இனத்தை அழிக்கும் செயலை திறம்பட செய்யும் இத்தாலி பொம்பளைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.

இதற்குமேல் உங்களை பற்றி திட்டி எழுதக்கூட என்னால் முடியவில்லை. காலம் கடந்து விடவில்லை. சீக்கிரம் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் இவ்வளவு நாள் நீங்கள் முன்வைத்த போராட்டமும், நம் சகோதரர்களின் மரணமும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

உங்கள் பெயர் நம் நீண்ட தமிழ் சரித்திரத்தின் கருப்பு பக்கங்களில் இடம்பெறாமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்,

அன்புடன்.

உங்கள் மேல் ஆழ்ந்த பாசமும், மரியாதையும் கொண்ட,

ஒரு தமிழன்.....

"ராமசாமி அத்தியாயம் 8"

என்னுடைய இருபதாவது வயதில் எதிர்கால திட்டங்கள் எதுவுமின்றி நாட்களை நகர்த்திகொன்டிருந்தேன். அப்போது தினமும் மன்னார்குடி சென்றுவிடுவேன், அங்கு எனக்கு ஒரு மடம் இருந்தது, எனக்கு கணக்கு சொல்லிக்குடுத்த ஆத்மநாதன் அத்தான் டுயசன் சென்டரில் தினமும் ஆஜராகிவிடுவேன். அவருக்கு குழந்தை இல்லை அதனால் யாரிடமும் கோபப்படமாட்டார், டுயசன் பீஸ் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் ஒன்றும் சொல்லமாட்டார். ஆனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாகத்தான் வகுப்பு எடுப்பார், பெண்களுக்கான வகுப்பில் எந்த ஆண்களும் உள்ளேவரக்கூடாது, ஆனால் எனக்கு மட்டும் எப்போதும் வரக்கூடிய சுதந்தரத்தை அளித்திருந்தார். என்மேல் அதீத பாசம் வைத்திருந்தார், எப்போதும் என்னை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிடுவார். அப்போது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மட்டும் 500 மேல் அங்கு படித்தனர், அவர்களின் அப்ளிகேசன்கள் அனைத்தும் நான்தான் சரிசெய்து அனுப்பிவைப்பேன்.

அப்போது போட்டோ காப்பி எடுக்க ரங்கூன் டிராவல்ஸ்தான் செல்வேன் அங்கு ஒரு காப்பிக்கு ஐம்பது காசுதான் மேலும் ஒரு காப்பி எடுத்தால்கூட ஒரு கவரில் போட்டு தருவார்கள். அப்படிதான் ஒருநாள் என்னுடைய கவர் வந்தவுடன் காப்பிகள் சரியாக இருக்கிறதா என பார்த்தபோது அதில் வேறொருவருடைய நகல் இருந்தது, பெயர் கீதாஞ்சலி என இருந்தது, நான் யாருங்க கீதாஞ்சலி என்றேன், எஸ் என்ற குரல் வந்த திசை நோக்கினேன் திடீரென தென்றல் குளிர்ந்து வீசியது, வெளியே மழை கொட்டியது, வானத்தில் இருந்து தேவதைகள் எல்லாம் பூக்களை கொட்டினார்கள் என்றெல்லாம் எழுதலாம்தான், ஆனால் எதுவும் நடக்கவில்லையே...

அவள் கையில் கவரை கொடுத்தபோது பெயர் சூப்பர் என்றேன். என்னை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள். நானும் அவளை மறந்துவிட்டேன். அப்போது எனக்கு அமைதியாக படிக்கவேண்டும் எனதோன்றினால் பாலகுமாரன் மற்றும் சுஜாதா நாவல்களை எடுத்துக்கொண்டு பெரிய கோவில் சென்றுவிடுவேன், அங்கு பனிரெண்டு மணிக்கெல்லாம் கோவில் நடைசாத்திவிடுவார்கள் ஆனால் மக்கள் சுலபமாக மற்றொரு தெருவுக்கு செல்ல நுழைவாயிலில் ஒரு சிறிய கதவை நாற்புறமும் திறந்து வைப்பார்கள், அதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் நான் அங்கு போவேன் அருமையான காற்றுடன் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும், அங்கு போனால் படித்த நேரம் போக நன்றாக தூங்கலாம், இப்படிதான் ஒருநாள் அங்கு அவளை இன்னொரு பெண்ணுடன் பார்த்தேன், உடனே என்ன அஞ்சலி எப்படி இருக்கே என்றேன். அவள் திருதிருவென முழித்துக்கொண்டே நல்லா இருக்கேன் என சொல்லிவிட்டு அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டாள்.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே கோவிலில் அவளை பார்த்தேன். சைக்கிளில் தனியாக வந்தாள். நான் வழக்கம்போல் ஆரம்பித்தேன் உடனே கோபமாக இங்கிலீசில் பொளந்துகட்டினாள் அப்ப எனக்கு பீட்டர் அவ்வளவா புரியாது. சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். இரண்டு வாரங்கள் போயிருக்கும் நான் சென்டருக்கு போனேன் பெண்களுக்கு வகுப்பு நடந்துகொண்டிருந்தது, அத்தான் என்னைக்கூப்பிட்டு ஒரு சைக்கிள் பஞ்சர் அதனை சரிபண்ணு என்றார், நான் சரிபண்ணி எடுத்துவந்தபோது அங்கே அஞ்சலி நின்றுகொண்டிருந்தாள், தேங்க்ஸ் இப்ப என்கிட்டே காசில்லை சார்கிட்டே சொல்றதுக்குள்ளே அவர் போய்ட்டாரு அதனால் நாளைக்கு கொடுத்தர்றேன் என்றாள், நான் சிரித்துக்கொண்டே பரவாயில்லை ஆனால் எப்படி இருக்கிங்கன்னுதானே உங்ககிட்டே கேட்டேன் அதுக்கு ஏங்க அப்படி கோபபட்டிங்க என்றேன், உடனே சாரிங்க இந்த ஊரில எல்லா பசங்களும் பொண்ணுங்களை மொறைச்சு பாக்குறாங்க, சும்மா பாத்துட்டு போகவேண்டியதுதானே அப்புறம் நாம திரும்பி பார்த்துட்டா போதும் தினமும் பின்னாடியே சைக்கிள்ள வந்து வீடுவரைக்கும் விட்டுட்டு போறாங்க அதானல எனக்கு எல்லார் மேலயும் வெறுப்பு என்றாள். நான் சிரிச்சுட்டு சரிங்க நான் உங்க பின்னாடிஎல்லாம் வரமட்டேன் என்றேன். அவளும் சிரித்தாள்.

அப்ப நான் பாலகுமாரனின் தீவிர ரசிகன் அவரின் அத்தனை எழுத்துக்களையும் படித்துவிடுவேன், அவர் புத்தகம் வந்தவுடன் வீட்டில் போய் படிக்கிற அளவுக்கு பொறுமை இருக்காது, அதானால் புத்தகத்தை வாங்கியவுடன் பெரிய கோவில் சென்று ஒரே மூச்சில் படித்துவிடுவேன். அவரால் பெண்கள் மேல் எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது, அப்புறம் சில வாரங்கள் நான் செண்டருக்கே போகவில்லை, ஒருநாள் சார் வரசொன்னார் என்று ஒரு பையன் சொல்லிவிட்டு போனான், நான் போகும்போது பெண்கள் வகுப்புமுடிந்து கிளம்பிக்கொண்டிருந்தனர், அப்போது அஞ்சலி என்னிடம் வந்து உங்க பணம் இந்தாங்க என்றாள், நான் அத்தான் கிட்டே கொடுக்கலியா என்றேன், இல்லைங்க அவர் வாங்கிகல அதனால் உங்ககிட்ட கொடுக்கிறேன் என்று ஐம்பது ரூபாய் கொடுத்தாள், என்கிட்டே சில்லறை இல்லைங்க அப்புறம் கொடுங்க என்றேன், பரவாயில்லை வச்சுகங்க என்றாள், அட ஒரு பஞ்சர் ஓட்ட ஐம்பது ரூபாயா அப்படின்னா உங்க சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆகணும் என்றேன், அவளின் கலகலவென்ற சிரிப்பு அங்கிருந்த எல்லோரையும் எங்களை திரும்பி பார்க்க வைத்தது.

மறுநாள் நான் பெரிய கோவிலில் படித்துகொண்டிருக்கும்போது அவள் வந்தாள், என்னங்க இந்த பக்கம் என்றேன், என் வீடு திருமஞ்சன வீதியிலதான் இருக்கு என்றாள். நான் எங்க அக்கா வீடு கூட அங்குதான் இருந்துச்சு என்றேன், இப்ப எங்க இருக்கு என்றாள் என் அக்காவும் அத்தானும் தன் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு இறந்த கதையை சுருக்கமாக சொன்னேன், கண்ணீர் வழிய கேட்டவள், சாரி குமார் அந்த குழந்தைகளை பத்திரமா பாத்துகங்க என்றாள்.

அதன் பிறகு எங்களின் சந்திப்பு பெரிய கோவிலில் அடிக்கடி நடந்தது, அவள் சின்ன வயதிலேயே தன் அத்தைக்கு பெண் குழந்தை வேண்டும் என்பதால் தன் தந்தையால் சகோதரிக்கு தத்து கொடுக்கப்பட்டு பெங்களூரில் வளர்ந்ததாகவும் இப்போது தன் அக்காவை அத்தை மகனுக்கு திருமணம் செய்வதால் தான் மீண்டும் தன் வீட்டிற்க்கே வந்து விட்டதாகவும், இங்கு உள்ள சூழ்நிலைகள் பிடிக்காமல் தான் மீண்டும் பெங்களுருக்கே செல்ல விரும்பியாதகவும், வீட்டிலும் மேற்கொண்டு பெங்களூரில் படிக்க ஏற்பாடு செய்துவிட்டனர் ஆனால் தான் இப்போது போக மறுத்துவிட்டேன் என்றாள். நான் அந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று கேட்டேன், அதான் எனக்கும் தெரியல என்றாள்.

இதற்குள் நான் அவளுடன் பழகுவது என் நண்பர்களுக்கு தெரிந்து போனது, அவர்கள் என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர், நான் ஒரு பெண்ணை காதலிப்பதாக எல்லோரிடமும் சொன்னார்கள், அதுவரை அவளை அந்த கோணத்தில் பார்க்காத அதான் முதன் முறையாக அவளை திருமணம் செய்துகொண்டால்தான் என்ன என நினைத்தேன், இப்போது நிஜமாகவே மணி அடித்தது, சிரிக்காதீங்க அப்ப நான் பெரிய கோவில்லதான் இருந்தேன். பூஜை மணிதான் அடித்தது.

அப்புறம் சில நாள் அவளை பார்ப்பதை தவிர்த்தேன், எப்படி சொல்வது என்ற தயக்கம், அவள் தன் தோழியை சைக்கிள் ஸ்டாண்டிற்கு அனுப்பி( என்னோட வெட்டி ஆபிஸ்) கோவிலுக்கு வரச்சொன்னாள், அங்கு போனதபோது ஏன் வரவில்லை என்றாள். அப்ப நமக்கு சண்டை வம்புகள் சர்வ சாதாரணம் இடையில் நடந்த ஒரு தகராறால் வரமுடியவில்லை என்றேன். கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்துவிட்டு உங்களுக்கு நான் பேசுறது இப்ப பிடிக்கலேன்னாலும் வீட்டில பொய் நெனச்சு பாருங்க என்று ஒரு மணி நேரம் பேசினாள். என்னுடைய அத்தனை திறமைகளையும் பட்டியலிட்டாள், என் கடமைகளை சொன்னாள், என் இப்போதைய முட்டாள்தனத்தை அதனால் ஏற்படபோகும் பின் விளைவுகளை எடுத்துசொன்னாள், கடைசியாக உன்னை ஏன் எனக்கு ரொம்ப பிடிக்குறதுன்னா இவ்வளவு நாள் பழகின பின்னாடியும் என்னை காதலிக்கிறேன்னு சொல்லாத முதல் ஆள் நீதான் என்றாள்.
அன்று சுட்டெரிக்கும் வெயிலில் எனக்குள் பெரிய இடி ஒன்று இறங்கியது.

கையில் ஒரு ஐந்நூறு ரூபாயை கொடுத்து எங்காவது ஒரு வாரம் போய்ட்டுவா என்றாள், எனக்கோ எங்கும் போக விருப்பம் இல்லை, நான் அவளை விரும்பும் விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா என குழம்பினேன், ஒரு வழியாக சொல்லிவிடுவது என முடிவுசெய்தேன் நேரில் சொல்ல முடியாது. அதனால் கடிதம் கொடுப்பதுதான் சரி என முடிவு செய்தேன். எப்படி எழுதுவது? தாமஸ் ஆல்வா எடிசன் கூட அப்படி யோசிதிருக்க மாட்டார். ஒரு வழியாக குறுந்தொகையில் இருந்து ஒரு கவிதையை எடுத்து அப்படியே எழுதி அவள் தோழி மூலம் கொடுத்துவிட்டேன்.

ஒரு வாரம் மன்னார்குடி பக்கமே எட்டி பார்க்கவில்லை, அத்தான் ஆளனுப்பினார் அவசரம் என்றவுடன் காலையிலேயே வந்தேன். பெண்கள் வகுப்பு நடந்துகொண்டிருந்தது அவளும் வகுப்பில் இருந்தாள், எப்போது என்னை பார்த்தாலும் ஒரு தாமரைபூவாய் மலரும் அவள் முகம் என்னைபார்த்தவுடன் கருத்து கிடந்தது. ஒரு புயல் மைய்யம் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. வகுப்பு முடிந்து போனபோது என்னிடம் வந்து சாயந்தரம் ஆறுமணிக்கு கோவிலுக்கு வா என்றாள்( வழக்கமான வாங்க போய் வா என அழைத்தது எனக்கு உறுத்தியது) போகலாமா, வேண்டாமா மனம் குழம்பி தவித்தது, அத்தானோ என்ன மாப்பிள்ளை ஒரு மாதிரியா இருக்கீங்க என்றார். தலைவலி சாயந்தரம் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு ஓரமாக தூங்கினேன், கண்கள்தான் மூடியிருந்தது, மனம் அலைபாய்ந்தது,

சரி வருவது வரட்டும் என கோவிலுக்கு போனேன், எனக்கு முன்பே வந்து காத்திருந்தாள். அதன் பிறகு நடந்தவை என் வாழ்கையை புரட்டிபோடும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை. அதனை அடுத்தவாரம் எழுதுகிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

17 மார்., 2009

"வாக்காளர் அடையாள அட்டை"

வாக்காளர் அடையாள அட்டை பற்றி எல்லோருக்கும் தெரியும். விஷயம் என்னன்னா எல்லா விஷயத்துக்கும் ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுற தேர்தல் கமிசன், இந்த அடையாள அட்டை விசயத்தில் செய்யும் சொதப்பல் இந்தியாவே அறியும்,.

1990 என்று நினைக்கிறேன் அப்போதுதான் முதல்முதலில் புகைப்படம் எடுத்தார்கள், ஆனால் அப்போது எனக்கு மட்டும் அட்டை வரவில்லை, போய் தாலுக்கா ஆபிசுல கேளுன்னு பத்திவிட்டாங்க, அங்க போய் எவன கேக்குறது, போங்கடா எனக்கு வேற வேலை இல்லையா என பேசாம இருந்திட்டேன் ( அப்பல்லாம் எனக்கு இவ்வளவு விழிப்புணர்வுதான் இருந்துச்சு). அப்புறம் வந்த எலக்சன்ல ஒட்டர் லிஸ்டுல பேரு இருந்தா போதும்னு குத்த அனுமதிச்சாங்க, நானும் சந்தோசம் தாமரைக்கு ஒரு குத்து குத்தினேன்,.


அப்புறம் சிங்கப்பூர் போய்ட்டதால மத்த எலக்சன்ல குத்த முடியல, ஒரு வழியா 2004 ஆம் ஆண்டு ஊருக்கு வந்த பின்னாடி சென்னையில செட்டிலாயிட்டேன், என்னோட மனைவியோ ஒரு ரேசன் கார்டு வாங்கிடுங்க, இங்க சினிமா தியட்டர தவிர எங்க போனாலும் அத கேக்குறாங்க என்றாள், நானும் உடனே ரேசன் கார்டு வாங்கிட்டேன். அந்த அப்ளிகேசன்ல கேஸ் இருக்கா? ன்னு கேட்ட இடத்துல, இருக்கு, அடிசனல் கூட இருக்குன்னு எழுதி தொலைச்சுட்டேன், ரேசன் கார்டு வந்த பின்னாடி, நம்மகிட்டே ஒரு சிலிண்டர்தாங்க இருக்கு, இன்னொன்னு அம்மாவோடது இனிமே அடிசனல் அப்ளை பன்ன முடியாதே என்றாள். அப்புறம் தம்பி குமார் இன்னொன்னு கொடுத்தார்,.


இந்த நேரத்துல வாக்காளர் அடையாள அட்டைக்கு போட்டோ எடுத்தாங்க, நாங்களும் கால் கடுக்க நின்னு போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு வந்தோம், மறுநாள் போனா எங்களுது மட்டும் இல்லை. என்னையா இப்படி பண்றீங்கன்னு சத்தம் போட்டேன், சார் இன்னொரு வாட்டி எடுத்துருவோம்ன்னு சொல்லி மறுபடியும் எடுத்தாங்க, ஆனால் மறுநாள் அந்த எடத்துல யாரும் இல்லை, எங்கதான் போய் இருப்பாங்கன்னு விசாரிச்சா நீங்க போய் கலெக்டர் ஆபிசுல வாங்கிக்கொன்னு அனுப்பிட்டாங்க, அப்பவும் வரல, அந்த எலக்சன்ல பான் கார்ட கொடுத்து சூரியனுக்கு ஒரு ஓட்ட குத்தினேன்.


இப்ப தி.நகர்ல இருக்கேன் இன்னும் அடையாள அட்டை வாங்கல, வீடு வீடா வருவோனாங்க யாரும் வரல, சரி நாமாவது பக்கத்துல இருக்கிற அலுவலகத்துக்கு போவோம்னு போனா, அங்க பெரும்பாலும் ஆளே இருக்கிறது இல்ல, இந்த தடவ காங்கிரஸ் கூட்டணிய புறக்கணிப்பதால், ஒட்டு போட வேண்டான்னு முடிவு பண்ணிட்டேன்,.


கிட்டத்தட்ட இருவது வருடமா அடையாள அட்டை குடுக்குது தேர்தல் கமிசன், அந்த போட்டவ பாத்திங்கன்னா, செத்தவன எடுத்தமாதிரி எடுத்திருப்பாங்க, உங்க அட்டையில நீங்க குடுத்த விபரம் எல்லாம் சரியா இருக்காது, இந்த ஒரு விசயத்த கூட ஒழுங்கா செய்யாத தேர்தல் கமிசன், இத்தன கண்டிசன் போடுறதா பாத்தா சிரிப்பாணியா வருது, இந்த எலக்சன்ல ஈழ பிரச்சினை பத்தி நோட்டிசு அடிக்க கூடாதுன்னு கண்டிசன் போட்டிருக்கு, கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு, அதனை கட்டுப்படுத்த கமிசனுக்கு யாரு அதிகாரம் கொடுத்தான்னு தெரியல, ஆனா இதை நான் வரவேற்கிறேன், என்ன இங்க திருமா, வைகோ தவிர எல்லாருக்கும் வருவது நீலிக்கண்ணீர் மட்டுமே. இல்லன்னா நாங்கதான் பிரனாப்ப அனுப்புனோம் சட்டசபையில தீர்மானம் போட்டோம், நிதி கொடுத்தோம், இப்ப பாத்திரம் கொடுக்கிறோம்ன்னு தி,மு,கவும்,. அம்மா உண்ணாவிரதம் இருந்தாங்க, உண்டியல் வச்சாங்கன்னு அதிமுகவும் மாறி மாறி போஸ்டர் அடிச்சு நம்மள கொன்னுருவாங்க.


எனக்கு தெரிஞ்சு நெறைய பேரு ஒட்டர் ஐடியே வச்சுகுறது கிடையாது, அய்யா தேர்தல் கமிசன் கணவான்களே முதல்ல இத சரிபண்ணுங்க அப்புறம் தேர்தல் நடத்தலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மல்டி பர்பஸ் கார்டுன்னு ஒன்னு கொண்டு வந்தார், சமிபத்திய இடைகால பட்ஜெட்டுலகூட அதுக்கு அறுநூறு கோடி ஒதுக்கினாங்க, அத கொடுத்தா போதும் அப்புறம் 90 சதவீதம் அக்கபோரே பண்ண முடியாது.


கொண்டு வருவீங்களா?

13 மார்., 2009

"ராமசாமி" அத்தியாயம் 7

சென்ற அத்தியாயத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை எழுத மறந்துவிட்டேன். சுட்டிகாட்டிய மணிகண்டனுக்கு நன்றி. மேலும் என் சிரமத்தை அறிந்து உடனே உதவ சொன்ன புவனாவுக்கும் என் நன்றி.

நண்பர் மணிகண்டன் ஏறக்குறைய எனக்கு இருபது ஆண்டுகளாக பழக்கம், என்னுடன் படித்த ராஜசேகர் மன்னார்குடி கல்லூரியில் படித்தான், அவனுடன் படித்த மணிகண்டன் முதலில் எனக்கு சாதரணமாக அறிமுகமானவர், ஆனால் என் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டார், என்னுடைய நண்பர்களில் நான் மணிகண்டனை ரோல் மாடலாக கொண்டிருந்தால், இந்நேரம் என்னிடம் சுமாராக இருநூறு கோடி சொத்து இருந்திருக்கும், சிறந்த திட்டமிடலும் கடின உழைப்புமே மணிகண்டனின் சிறப்பு.


ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்து, கிடைத்த வாய்ப்புக்களை ஒன்றைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு, இன்று துபையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார், அவரால் எனக்கு கிடைத்த நண்பர்கள் அநேகம், அவரிடம் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் நல்ல நண்பர்களை மட்டுமே எனக்கு அறிமுகபடுத்திவைப்பர், அவர் அறிமுகத்தால் கிடைத்த கண்ணன் அண்ணன்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தார். மேலும் அண்ணன் பாலா, தம்பி குமார் குடும்பத்தினர், நண்பர் செல்வம் குடும்பத்தினர் மற்றும் தம்பி சரவணன் குடும்பத்தினர் அனைவருமே மணியால் எனக்கு கிடைக்கபெற்றவர்கள்.

எதையும் நேர்மையாக அணுகும் குணம் கொண்ட மணியின் சில முடிவுகள் அவருக்கு எதிராகவே போனதுண்டு, அவருக்கு சில பலவீனங்களும் உண்டு, ஆனால் அதனை மிக எளிதாக கடந்துவந்துவிட்டார்.


என்னுடைய முதல் குழந்தை பிறந்தபோது என் கூடவே இருந்தார். கையில் ஒரு காசோலையுடன் வந்து எவ்வளவு தேவைப்பட்டாலும் எடுத்துகோங்க என்றார். புவனா அவருக்கு மனைவியாக கிடைத்தது மணியின் அதிர்ஷ்டம்.மிகவும் நல்ல அமைதியான பெண்.


வாழ்கையில் ஒரு சிலரைத்தான் தினம்தோறும் ஒரு தடவை நினைத்துகொள்வோம் அப்படி எனக்கு கிடைத்த சிலரில் மணியும் ஒருவர்.என் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூடிய நெருக்கமான நண்பர்.மணியிடம் எனக்கு பிடிக்காத ஒன்று உண்டு, அது தன் உடம்பை கவனிக்காமல் விட்டது. கல்லூரியில் படிக்கையில் அவர் NCC மாணவர். தன்னுடைய உடம்பை கனகச்சிதமாக வைத்திருப்பார். ஆனால் அமீரகம் சென்றபின் உடம்பை கவனிக்காமல் விட்டுவிட்டார். இவ்வளவிற்கும் தண்ணி, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவர். யோகா செய்யுங்கள் மணி. புவனா நீங்களாவது மணியை அதிகாலை எழுப்பிவிட்டு மெதுவோட்டம் பழக சொல்லுங்கள்.


இவர் மீது மாற்று கருத்துகொண்ட நண்பர்கள் இவரைப்பற்றி சில விசயங்கள் சொன்னபோதுகூட என்னால் அவர்களை முழுமையாக ஆதரிக்கமுடியவில்லை, காரணம் மணி ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது எப்படி என்மேல் பாசமாக இருந்தாரோ அதே பாசத்துடன்தான் இப்போதும் இருக்கிறார். மேலும் என்னால் அவருக்கு எவ்வித ஆதாயமும் இன்றுவரை இருந்ததில்லை, ஆனால் அவரால் நான் அடைந்த உதவி மட்டுமே உண்டு. அவரின் வீட்டில் என்னை எப்போதும் தன் சொந்த பிள்ளயைபோல்தான் பார்ப்பார்கள், மணிகண்டன் மீதுள்ள வருத்தங்களைகூட அவர் தந்தை என்னிடம் பகிர்ந்துகொள்ளக்கூடிய அளவிற்கு என்னை மிகவும் நெருக்கமாக கருதினார்.


அவர் தந்தையிடம் எனக்கு மிகவும் பிடித்தவிசயம் இந்த வயதிலும் உழைக்க நினைப்பது, தன் பிள்ளைகள் அவரை நிறைவாக வைத்திருந்தாலும் சும்மா இருக்காமல் வேலை செய்யவேணும் என நினைப்பவர். மதுக்கூர் போகும்போதெல்லாம் மணி வீட்டில் நான் தங்குவதில்லை என மணிக்கு வருத்தம், என்ன செய்வது நான் தெருவில் நின்றபோது என்னை அரவணைத்த கண்ணன் அண்ணன் வீட்டில் சென்று தங்குவதுதான் சரி. இப்போது நல்ல நிலைக்கு வந்தவுடன் நான் எப்போது ஊருக்கு சென்றாலும் கண்ணன் அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டுத்தான் நான் பரவாக்கோட்டைக்கே செல்கிறேன். என்னைபொருத்தவரை கண்ணன் அண்ணனின் வீடுதான் என் சொந்த வீடு, அதற்க்கு அப்புறம்தான் எல்லாம். மணியால்தான் கண்ணன் அண்ணன் எனக்கு அறிமுகம் என்பதால், நான் மணிக்கே நன்றிகடன் பட்டிருக்கிறேன். மதுக்கூரை பொறுத்தவரை எனக்கு கிடைத்த அத்தனை அறிமுகமும் மணியால் கிடைக்கபெற்றவர்கள்தான்.


மணிகண்டன் அரசியலில் சிலகாலம் தீவிரமாக ஈடுபட்டார், தி.மு.க வில் இருந்து வைகோ விலகியபோது ம.தி.மு.க வில் தீவிரமாக ஈடுபட்டார். தொடர்ந்து தி.மு.க.வில் இருந்திருந்தால் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருப்பார். ஆனால் அரசியலில் இருந்து விலகி தொழில் நோக்கி நகர்ந்துதான் அவரின் புத்திசாலித்தனம். இப்பவும் அரசியல் ஆர்வம் இருக்கா மணி?.


இவர் ஒரு கொடையாளி என்பது நிறைய பேருக்கு தெரியாது. வெளியே தெரியாமல் நிறைய பேருக்கு உதவுவார். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு சில காதல்கள் உண்டு. ஆனால் அவற்றில் இருந்து கவனமாக விலகிவிட்டார். பெரும்பாலும் காதல் வயப்பட்டால் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவோம். இவரோ காதலா? .. குடும்பமா? ... என்ற நிலை வந்தபோது காதலை தூக்கி எறிந்தார்.அப்போது இவர்மேல் எனக்கு பெரும்கோபமே இருந்தது, இப்போது யோசித்தால் இவர் எடுத்த முடிவு சரிதான் என்றே தோன்றுகிறது ( புவனாகிட்டே மாட்டிவிட்டுட்டேனா மணி?).


ஒரு சீரான வளர்ச்சியை எட்டிவரும் மணி ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆக வாழ்த்துகிறேன்....
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

5 மார்., 2009

"ராமசாமி" அத்தியாயம் 6

மூன்று மாதத்துக்கு முன்பு ஒரு மழைநாளில் என் பையனை பள்ளியில் விடப்போனேன், அது காலை நேர அவசரத்தில் எல்லோரும் அலுவலகத்துக்கு பறக்கும் நேரம். தெருமுனையில் திரும்புகையில் கவனமாக திரும்பவேண்டும் அப்போது தன் இரு குழந்தைகளை தன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துவந்த ஒருவர் வேகமாக திருப்பியபோது வண்டி சறுக்கி கீழே விழுந்துவிட்டார், நான் உடனடியாக என் வாகனத்தை சாலையின் குறுக்காக நிறுத்திவிட்டு ஓடிச்சென்று தூக்கினேன், என்னைபோல் பலரும் உதவிக்கு வந்தனர், ஒன்றும் பெரிய அடியில்லை, குழந்தைகள் அழக்கூட இல்லை. ஆனால் அந்த தந்தையை எங்களால் நிதானத்துக்கு கொண்டுவர வெகு நேரமானது. "என் குழந்தைங்க" என்ற வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருந்தார். அப்புறம் அவர் இல்லத்திலிருந்து மனைவி வந்தவுடன்தான் ஆசுவாசமானர். அன்றைக்குத்தான் தெரிந்தது ஒரு தகப்பனின் நிலைமை. தன் குழந்தைகளுக்கு ஒன்று ஆனதும் நிலைகுலைந்துவிட்டார்.

சென்றவாரம் எனக்கும் அப்படி ஒரு நிலைமை வந்தது. என் மனைவி நிறைமாதமாக இருந்தாள். மார்ச் பதினொன்றாம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக டாக்டர் சொல்லியிருந்தார். பிப்ரவரி 25 ஆம் தேதியன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றோம், என் மனைவி வலி இருக்கிறது என்றாள், டாக்டரோ தேவைப்பட்டால் அட்மிட் செய்கிறமாதிரி இருக்கும் என சொன்னார். அப்போது என் கையில் வெறும் 1500 ரூபாய் மட்டுமே இருந்தது. சரி அட்மிட் செய்கிற மாதிரி இருந்தால் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் அன்று வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

வீட்டிற்கு வந்ததில் இருந்து என் மனைவி சற்று தளர்ந்தே இருந்தாள், என்னை கூப்பிட்டு பணம் இருக்கிறதுதானே என்றாள். நானோ அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னேன். ஆனால் உண்மையில் என்னிடம் சுத்தமாக காசு இல்லை. இதைபோல பலமுறை இருந்திருக்கிறேன்.

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தபிறகு ஒரு வருடம் வீட்டில் சும்மாதான் இருந்தேன், அப்போது ஒருநாள் படம் பார்க்கபோகனும் இரண்டு ரூபாய் பணம் வேணும் என அம்மாவிடம் கேட்டேன், அம்மா தன்னிடம் இல்லை என்று சொன்னது, ஆனால் சற்று நேரத்தில் வந்து கேட்ட அண்ணனுக்கு நூறு ரூபாய் கொடுத்தது. நான் கோபப்பட்டு வெறும் ரெண்டு ரூபாய்தானே கேட்டேன், இல்லை என்று சொல்லிவிட்டு அவனுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறாயே என சண்டைபோட்டேன், அவன் சம்பாதித்து கொடுத்தான், அதனால் கொடுக்கிறேன் என்று சொன்னது அன்று முதல் வீட்டில் பத்து பைசா வாங்கியது கிடையாது.

அப்புறம் சென்னை வந்தவுடன் சில நாள் கழித்து கடைசி நிலத்தையும் விற்று அண்ணனுக்கு எல்லா பணத்தையும் கொடுத்துவிட்டு என்னிடம் வெறும்எட்டாயிரம் மட்டுமே தந்தார்கள் இன்றுவரைக்கும் அதுதான் எனக்கு கிடைத்த சொத்து, ஆனால் இன்றுவரை எல்லோருக்கும் நான்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

அப்புறம் சிங்கபூரிலிருந்து வந்தவுடன் நண்பனின் துரோகத்தால் செய்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு கணக்கு கூட கேட்காமல் ஊருக்கு வந்தேன். வந்த இடத்தில் அக்காள் மகனின் மரணத்தால் திருமணம் தள்ளிபோனது. திருமணத்துக்கு கடன் வாங்கிய பணத்தை அவனுக்காக செலவழித்துவிட்டேன். திருமணம் மற்றவர்களின் நிர்பந்தத்தினால் அவசரமாக வெறும் 1200 ரூபாய் செலவில் முடிந்தது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே என்னையும் மனைவியையும் அம்மா வீட்டைவிட்டு போகசொன்னது. கையில் ஒரு வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்ககூட காசில்லாமல் நண்பரின் வீட்டில் மனைவியை விட்டுவிட்டுதான் சிங்கப்பூர் சென்றேன்.

ஒரு வருடத்தில் கடனை அடைத்துவிட்டு கையில் ஒரு லட்ச ரூபாய் காசோடு ஊர் கிளம்பியபோது என் தோழி கண்மணி தன்னையும் தொழில் பங்குதாரராக சேர்த்துகொள்ளசொல்லி பணம் கொடுத்தது. வந்து பயண முகவாண்மை ஆரம்பித்தேன், நன்றாக போய்க்கொண்டு இருந்தபோது சனியனாக வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ் என்பவன், சென்னை அண்ணா சாலையில் பிச்சைகரனைபோல எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தவனை அழைத்துசென்று பணம் கொடுத்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றேன்.

மொரிசியஸ் செல்ல 1000 டாலர் கடனாக கேட்டான், ஒரு வாரத்தில் திருப்பி தருவதாக சொன்னான்( இன்றுவரை தரவில்லை) அப்புறம் அங்கு தேங்காய் தேவைப்படுகிறது அனுப்பலாம் ஆனால் என்னிடம் பணம் இல்லை என்றான். நான் என் தோழியிடம் அறிமுகபடுத்தினேன். அதோடு என் விஷயத்தை முடித்துவிட்டான் (இதனைப்பற்றி வேறொரு அத்தியாத்தில் விரிவாக எழுதுகிறேன்).

இன்றைக்கு நான் கிட்டத்தட்ட மறுபடியும் நடு ரோட்டுக்கு வந்துவிட்டேன். வியாபாரம் சுத்தமாக இல்லை வங்கியில் கடன் வாங்கி சிங்கபூரில் வாங்கிய மெசினை ரமேஷ் விற்று தின்றுவிட்டான். ஒவ்வொரு மாதமும் வங்கிக்கே 22500 ரூபாய் பணம் கட்டவேண்டும், மேற்கொண்டு வீடு மற்றும் அலுவலக வாடகை செலவு மற்ற செலவுகள் சேர்த்து மாதம் 50000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும்என்னால் மாதம் 25000 ரூபாய்க்குமேல் சம்பாதிக்க முடியவில்லை, எனவே மேலும் மேலும் கடன் வாங்குகிறேன்.
இந்த சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நிலை பலவீனமாக இருக்கிறது எனவும் அதனால் முடிந்தவரை ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் சொன்னார். என் மனைவியின் தயார் இங்கு சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார்கள், ஆனால் அவர்களால் உதவி பண்ணமுடியாது என சொல்லிவிட்டார்கள், வேலைக்கு ஆள் தேடினேன் அவர்களும் சரி வரவில்லை. இந்த சூழ்நிலையில் என் உடன் பிறவா சகோதரனின் தாயார் என் வீட்டிற்கு வந்தார். என் நிலைமையை பார்த்தவிட்டு நான் தங்கியிருந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு தேவையான அனைத்தும் அவரே செய்தார். என் மனைவிக்கு சிசேரியன் செய்யவேண்டும் என்றுதான் டாக்டர் சொன்னார், ஆனால் சுகபிரவசவம் ஆனது, அதற்கு முழு காரணம் அம்மாதான். என் மனைவியை தன் மகளைபோல் பார்த்துகொண்டர். வீட்டின் எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.

இந்த நேரத்தில்தான் கடந்த 27.02.2009 அன்று அதிகாலை என் மனைவிக்கு வலி எடுத்தது. உடனடியாக முருத்துவமனையில் சேர்த்தோம். என் கையில் வேறு 500 ரூபாய் மட்டுமே இருந்தது. அப்போது அம்மா தன் கையிலிருந்து 20000 ரூபாயை தந்து செலவை பார்த்துக்கப்பா என்றார். என் மனதுக்குள் அழுதேன். எனக்கு எத்தனையோ சொந்தங்கள் உண்டு. அவர்களில் ஒருவர் கூட என் அருகில் இல்லை.

என்னை பெற்ற தாய் ஒருவர் என்றாலும் என்னை பெறாத தாய் மூவர் சிங்கபூரில் இருக்கும் செல்வி அண்ணி, மதுக்கூரில் இருக்கும் மகாலட்சமி அண்ணி, இப்போது எங்களோடு கூட இருக்கும் தமிழ்செல்வி அம்மா. இவர்களை என் மரணத்திற்கு பிறகும் மறக்க முடியாது. இம்மூவரும் என் வாழ்க்கையின் இக்கட்டான காலகட்டத்தில் என்னைக்காப்பற்றியவர்கள்.
ஒரு தகப்பனாக என் பிள்ளைகளை இதுவரை வறுமை அறியாமல் வளர்த்துவருகிறேன். நான் வாழ்வில் நிறைய அனுபவங்களை பெற்றவன், ஆனால் தொடர்ந்து ஏமாந்துதான் போயிருக்கிறேன். இனியாவது ஒரு நல்ல சீரான பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.

அடர்ந்து இருள் படர்ந்து
அழகாய் இருக்குது காடு
கடந்து வெகு தூரம் செல்லவேண்டும்
கொடுத்த வாக்குகள் நிறைய உண்டு
காப்பதற்கு......
ராபர்ட் பிரஸ்ட்.....
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..