என்னுடைய வாழ்கையில் இப்படி ஒரு காதல் வந்து அதன்பிறகு நான் திருமணம் செய்வேன் என கனவிலும் நினைக்கவில்லை, சிங்கபூரில் இருந்து வந்து அக்கா மகளை திருமணம் முடித்த கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், ஆனால் நடந்த அத்தனை விசயங்களையும் அவளிடம் மறைக்காமல் சொன்னபிறகுதான், அவளின் பூரண சம்மதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்தேன்,
என் வாழ்கையில் கிடைத்த பொக்கிஷம் என் மனைவி காமாட்சி, நான் எத்தனையோ மேடுபள்ளங்களை சந்த்தித்து இருக்கிறேன், சில சமயம் செலவுக்கு பத்து ரூபாய் பணம் கூட இருக்காது, எப்போதும் ஒரே மாதிரி இருப்பாள், எதைபற்றியும் நீ கவலைபடுவதே இல்லையா என்றால்/ நான் ஏன் கவலைபடனும் அதான் எல்லாத்தையும் நீங்க பாத்துக்குவீங்களே என சாதாரணமாக சொல்லிவிடுவாள், இரண்டு குழந்தைகள், நான் இம்மூவரும்தான் அவள் உலகம், இன்றுவரை அவளை நான் எங்கும் கூட்டிபோனது கிடையாது, அவ்வளவு ஏன் இன்றுவரை திருமணம் முடித்து ஏழு ஆண்டுகள் ஆகிறது, நாங்கள் உணவகம் சென்று சாப்பிட்டது இல்லை.
எங்கள் திருமணம் முடிந்து சிலமாதங்களுக்குள் அம்மாவுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு வந்து அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே போகச்சொன்னது, அப்போது கையில் என்னிடம் சுத்தமாக காசு இல்லை. என்ன செய்வது என புரியாமல் நின்றபோது மதுக்கூர் கண்ணன் அண்ணன் தன் வீட்டில்தான் தங்கவேண்டும் என பிடிவாதமாக சொல்லி, அண்ணி, குழந்தைகளிடத்தும் சொல்லி எனக்கு பேச சொன்னார், அதுவரை சந்தித்திராத என் மனைவியை, மகாலட்சமி அண்ணி தன் மகளாய் ஏற்றுக்கொண்டார். வாழ்வின் அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது என தவித்த நாங்கள் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ காரணம், அன்று கண்ணன் அண்ணன் குடும்பத்தினர் எங்கள் மீது காட்டிய கருணை, எனக்கும், மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் நாங்கள் இருவரும் சாமியாய் நினைப்பது அண்ணனையும், அண்ணியையும்தான்.
கண்ணன் அண்ணனை பொறுத்தவரை அவரும் என்னைபோலதான், யாருக்காவது உதவிக்கொண்டே இருப்பார், ஒரு பெரிய பொருளாதார வசதி இல்லாமால் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவும் அவர்களின் குணம்தான் நான் இப்போதும் பின்பற்றுவது. அதிலும் அண்ணி உடல்நிலை சரியில்லாத போதும் வீட்டிற்கு வந்தவர்களை நிறைவாக கவனித்து அனுப்புவார். எங்களை பொறுத்தவரை அதுதான் எங்களின் தாய்வீடு.
ஏதோ ஒருவகையில் இயற்கை எப்போதும் என்னை காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இன்றுவரை யாராவது என்னை எமாற்றிவிட்டுதான் போகிறார்கள், அதிலும் ரமேஷ் என்பவன் என்னை திட்டம்போட்டு ஏமாற்றியவன். என்னை மட்டுமல்லாது பலரையும் ஏமாற்றியிருக்கிறான், பார்க்க அப்பாவிபோல் தோற்றமளிக்கும் அவனை நம்பி ஏமாந்தவர்கள் பலபேர், ஆனால் அவனும் உருப்படவில்லை. அந்த பித்தலாட்டக்காரன் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிவிடுவான். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இன்னும் அவனை சிலபேர் நம்புகிறார்கள் என்பதுதான். தன் தகப்பன் யாரென்றே தெரியாமல் வளர்ந்ததால் இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல், ஒரு மனநோயாளியாக திரிகிறான், ஆனால் அவனை பார்க்கும்போது அப்படி தெரியாது, அவ்வளவு நியாயம் பேசுவான். என்னிடமே ஒருமுறை தனக்கு நல்லவிசயம் ஒருமடங்கு தெரிந்தால், கெட்டவிசயம் மூன்றுமடங்கு தெரியும், தான் நினைத்தால் ஒருவனை வாழவிடாமல் செய்துவிடமுடியும் என சொன்னவன், ஆனால் எப்போதும் யாருக்காவது பயந்து ஒளியும் கோழையாகத்தான் அவனை நான் பார்த்திருக்கிறேன்.
இப்படி தொடர்ந்து நான் யாரிடமாவது ஏமாந்தாலும் நான் உதவி செய்வதை நிறுத்தவில்லை. இந்த சென்னை மாநகரில் நான் வேலைக்காக வந்தபோது திக்கு தெரியாமல் அலைந்தேன், அதனால் யார் என்னைத்தேடி வந்தாலும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
சின்ன வயதில் இருந்தே தனிமை விரும்பி, ஆனால் என்னைசுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். ஊரில் இருக்கும்போது நேரம் கிடைக்கும்போது தனியாக காட்டாறு ஒன்று ஊர்க்கடைசியில் ஓடுகிறது அங்கே சென்று பொழுது சாயும்வரை இருப்பேன்.சென்னைவந்தபிறகு மெரினாவுக்கு சென்று பனிரெண்டு மணிவரை அமர்ந்திருப்பேன், இப்போதோ எனக்கென்று நேரம் இருப்பதே இல்லை. எப்போதும் யாராவது என்னுடன் இருப்பதால் என் தனிமையை அனுபவிக்க முடியவில்லை.
எதிர்காலத்தில் ஒரு ஐம்பது ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என்றிருக்கிறேன் அப்போது எனக்கான தனிமை கிடைக்கலாம். தொடர்ந்து போரடித்துவிட்டேன் அடுத்தவாரம் முதல் மீண்டும் என் சிறுவயது அனுபவங்களை எழுதபோகிறேன்.
சின்னவயதில் எங்க ஊரில் காமன் பண்டிகை நடக்கும் அதனைப்பற்றி அடுத்தவாரம் எழுதுகிறேன்.
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக