24 ஜன., 2012

வண்ணத்துப்பூச்சி பற்றிய கவிதை - 2...


பிரியா பனிரெண்டாம் வகுப்பு

தும்பிகளும்
வண்ணத்துப்பூச்சிகளும் நிறைந்த வயது
பூக்கள் 
அதிலும் 
சாமந்தியென்றால் கொள்ளைப்பிரியம்
எல்லா வண்ணங்களிலும் 
வண்ணத்துப்பூச்சி வரைவாள் 
ஒவ்வொரு நோட்டுக்கும்
ஒரு கலர் வண்ணத்துப்பூச்சி
அட்டையை அலங்கரிக்கும்..

பிரியா விலங்கியல் முதல் ஆண்டு

கல்லூரியில் விலங்கியல்தான் 
கிடைத்தது
பொம்பளை பிள்ளைக்கு அதுவே அதிகம் 
என்றார் மாமா,
இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்பதால்
ஒத்துக்கொண்டாள் பிரியா
சோதனைச்சாலையில் பெரிய
சோதனையாகிவிட்டது அவளுக்கு
எலி
தவளை
கரப்பான் பூச்சி 
இன்னபிற பூச்சி வகைகளை 
ஆராய்வதில் பிரச்சினை இல்லை
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சியில் 
அவள் நிலைகுலைந்தாள்
இறந்த வண்ணத்துப்பூச்சிகள் 
மூன்றாவது வருடமுடிவுவரை 
விரட்டின
தேர்வு முடிவுகள் சாதகமாக இல்லாததால்
சரவணனுக்கு வாழ்க்கைப்பட்டு 
சென்னைக்கு வண்டியேறினாள்
கட்டிடங்களால் நிரம்பிய சென்னையில்
வண்ணத்துப்பூச்சிகள் இல்லாத 
வாழ்க்கை..

பிரியாவின் மகள் பாவனா

ரங்கனாதன் தெருவில்
ஒரு சாலை விற்பனையாளனிடம்
விதவிதமாய்
சுவற்றில் ஒட்டும் பேப்பர்
வண்ணத்துப்பூச்சிகளை 
வாங்கி வந்து 
அறை முழுவதும் ஒட்டியிருந்தாள் 
பாவனா..

பாவனாவின் அம்மா பிரியா

பாவனாவை 
கல்லூரியில் சேர்க்கும் காலம் 
கணிப்பொறி இயலில் சேர்த்து 
வண்ணத்துப்பூச்சிகளை காப்பாற்றியதாக 
பெருமை கொண்டாள்
அரசுக் கல்லூரியில் படித்த
அம்மா பிரியா..

5 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும்...


மனசு சிரகடிக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய கவிதை வாழ்த்துக்கள் பங்காளி....

ஹேமா சொன்னது…

இந்தக் கவிதையில் வாழ்வியல் நிறையச் சொல்லியிருக்கு.இயற்கை அழிவு.அன்பு,காதல் எல்லாமே !

செந்தில் அனுபவத் தொடர்கள் எல்லாம் முடிஞ்சுபோச்சா.எழுதுங்க !

Chitra சொன்னது…

கவிதைகளில், உள்ளடங்கிய கருத்துக்கள் ஏராளம்.

வருணன் சொன்னது…

தற்கால சூழலில் பெண்ணியத்தை நயமாய்ப் பேசும் அழகிய பிரதி. பாவனாவையும் பிரியாவையும் கேட்டதாய்ச் சொல்லுங்கள் !

நீண்ட நாட்கள் ஆயிற்று நண்பா வலைப்பூக்களில் வாசித்து... மீண்டுமொரு நல்ல துவக்கமாய் இக்கவிதை...