17 நவ., 2013

ராவண தேசம் - விமர்சனம்...

ராஜிவ் கொலைக்குப் பிறகு ஈழம் சம்பந்தமான படங்களுக்கு என்ன மாதிரியான நிர்பந்தங்கள் இருந்திருக்கின்றன என நமக்குத் தெரியும். ஈழ ஆதரவு படம் என்றால் மத்திய, மாநில அரசுகளும், ஈழ எதிர்ப்பு, சிங்கள ஆதரவு படங்கள் என்றால் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பும் சம்பந்தப்பட்ட படங்களுக்கான சிக்கலை ஏற்படுத்தின. முதன் முறையாக அப்படி எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் வந்திருக்கும் படம். அதற்குக் காரனம் படத்தின் இயக்குனர் சாதுர்யமாக யார் பக்கமும் சாயாமல் படத்தின் முதல் பாதியை நகர்த்தியிருப்பதுதான்.
 

நாயகன் அஜெய் நூத்தகி( இவர்தான் படத்தின் இயக்குனரும்) நாயகி ஜெனிபரின் காதல் காட்சிகளோடு படம் துவங்குகிறது. முல்லைத்தீவு பகுதியில் கதை நடப்பதாக காட்டியிருக்கிறார்கள். ஆந்திரா பக்கம் வயல்வெளிகள், கடல் சூழும் ஒரு இடத்தில் படமாக்கியிருப்பார்கள் போல, கிடைத்த பட்ஜெட்டில் போடப்பட்ட செட், நாடக பாணி நடிகர்கள், கற்பனையான காட்சிகள் என சுமாராகவே படம் நகர்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் பதுக்கல் செய்யும் ஒரு வியாபாரி என்பது  மிகையான கற்பனை. அதே போல் ஒரு விடுதலைப்புலி தளபதி உயிர் தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த தனது போராளி ஒருவரை விட்டு தன்னை சுட்டுத்தள்ளச் சொல்வதும் அபத்தமான கற்பனையே. இதன் மூலம் இயக்குனர் இப்படத்தில் போராட்டம் சம்பந்தமான விசயங்களின் மேல் எந்தக் கவனமும் கொள்ளவில்லை என்று தெரிகிறது. சிங்கள ராணுவம் பற்றிய காட்சிகளில் மட்டும் அவர்கள் பெண்களை பாலியல் வண்முறைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதையும், அப்பாவிகளை கொடுமைப் படுத்துகிறாகள் என்பதையும் காட்டியிருக்கிறார். மற்றபடி புலிகளின் காவல் பரண்கள் எல்லாம் பட்ஜெட்டின் வெளிப்பாடு. முதல் பாதிக்கான ஒரே ஆறுதல் சிறுவனின் பாத்திரப்படைப்பும், சில காட்சிகள் படமாகப்பட்ட விதமும். மேலும் புலிகளின் கொடி பறக்கும் காட்சிகள் சென்சாருக்கு தப்பியிருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாகம்தான் இப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. முள்ளி வாய்க்கால் மீது ராணுவம் தாக்குதலை துவங்கும் முதல் நாள் இரவு அன்று நாயகன், நாயகி, வயதான தம்பதிகள், கடை வைத்திருக்கும் குமரன் தம்பதியினர், குழந்தையுடன் ஒரு தம்பதியினர், நாயகனின் நண்பர்கள் இருவர் என ஒரு படகில் இந்தியாவின் ராமேஸ்வரம் நோக்கி கிளம்புகின்றனர். சுற்றுப்பாதையில் முதல் இரண்டு நாள் எவ்வித பிரச்சினையும் இன்றி படகு நகர்கிறது. பாட்டுப் பாடுகின்றனர், காதல் காட்சிகள் இருக்கின்றது. குமரனின் பந்தாவான பேச்சு, அவரின் தம்பட்டம் என நகரும் படகுப் பயணம் மூன்றாம் நாள் இலங்கை நேவிக்கு சொந்தமான கப்பலைப் பார்த்ததும் அனைவரும் படகுக்குள் பதுங்குகின்றனர். அசதியில் அனைவரும் தூங்கி விடுவதால் நேவியிடம் இருந்து தப்பித்தாலும் திசை குழம்பிவிடுகிறது. இதன்பிறகு திசை மாறும் படகால் அடுத்தடுத்த நாள்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். பட்டினி, தண்ணீர் இன்றி கடல் நீரை குடிக்கவேண்டிய அவலம், மழை, மரணம் என நம்மையும் துன்பக் கடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.  இக்காட்சிகள் உலகம் முழுதும் அகதியாய் கடலில் பயணித்து கரைசேர முடியாத அத்தனை பேருக்குமானது, சமீபத்தில் மியன்மரில் இஸ்லாமியர்கள் இப்படி நூற்றுக்கணக்கில் இறந்து போனார்கள். ஈழத்தில் இருந்து பனிரெண்டு கடல் மைல் தொலைவில் இருக்கும் ராமேஸ்வரம் வருவதற்கே எம் இனம் இத்தனை துயரங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்றால், உலகம் முழுதும் அவர்கள் சென்று சேர எத்தனை இடர்களை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கும்போது மனம் பதறுகிறது.

                                                                   
இறுதியில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மீனவர்களால் காப்பற்றப்பட்டு எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதோடு படம் முடிகிறது. படத்தை நம்முடைய ஈழ ஆதரவு, வெறுப்பு போன்ற கருத்துக்களையும், காட்சியமைப்புகளில் ஆங்காங்கே காணப்படும் அமெச்சூர் தனத்தையும் தள்ளிவைத்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் பத்து நாள் கடல் பயணம், அதீத சோகம் என லேசாக போர் அடித்தாலும், நடித்த நடிகர்கள் அனைவரும் கடலில் ஒவ்வொரு நாளும் கடக்கும்போது அதிகமாகும் உடல் வேதனையை சரியாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

6 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

விமர்சனம் அருமை...
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

பார்க்கலாம்.

www.pimbam.com

Unknown சொன்னது…

பார்க்கலாம்

www.pimbam.com

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்போ படம் பார்க்கலாம்னு சொல்லிட்டீங்க ஓகே அண்ணே...

Unknown சொன்னது…

துயரங்களை காட்சிப் படுத்தும் இம்மாதிரி படங்கள் வரவேற்கப் படவேண்டும் !
த ம 9

நம்பள்கி சொன்னது…

போ!