30 மார்., 2010

"என் மகன் ரசிக்கும் ரயில்"

தியாகராயா நகரின் ராமசாமி சாலையில் கடந்த ஐந்து வருடமாக வசித்து வந்த எனக்கு அடிக்கடி விமான நிலையம் செல்லவேண்டி வரும், இரவானால் ரயிலில்தான் செல்வேன், எப்போதும் மக்களின் அடர்த்தியில் திணறும் ரங்கநாதன் தெருவை நள்ளிரவின் பின்னே பார்க்க பிடிக்கும்.
சில மாதங்களுக்கு முன் என் மகன் அகில் ஆதித்தனை அவனின் ஆறுமாத நச்சரிப்புக்குபின் ரயிலில் கூட்டிசென்றேன், அவனின் ஆர்வம், கேள்விகள்.. பதில் சொல்லி மாளவில்லை என்னால். இன்றுவரை அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி மீண்டும் எப்போது ரயிலில் போகலாம்?..

என்னுடைய முப்பத்தி ஒன்றாம் வயதில்தான் ரயிலில் செல்லகூடிய வாய்ப்பு கிடைத்தது, சென்னையில் இருந்து டெல்லிக்கு வியாபார நிமித்தமாக நானும் நண்பர்கள் இருவரும் சென்றோம். பகலெல்லாம் ரயில் வண்டியின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். ஆந்திரா தாண்டியதும் இரு பக்கங்களும் தெரிந்த வெறுமை எனக்கு வேறொரு இந்தியாவை அறிமுகம் செய்தது.

இரவானதும் எனக்கு பக்கத்து இருக்கையில் வந்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் தரையில் தூங்க இடம் தேடினர், அவர்களை விசாரித்தபோது RAC யில் வந்தோம் பரிசோதகர் இன்னும் இருக்கை ஏற்பாடு செய்யவில்லை என்றனர். அந்த பெண்ணிற்கு எனது இருக்கையை தந்து தூங்க சொல்லிவிட்டு நான் மீண்டும் படிக்கட்டில் வந்து அமர்ந்துகொண்டேன். நேரம் ஆனதும் ஒரு ஐந்து பேர் எனது அருகே வந்து அவர்களுக்குள் உரையாடினர். திடீரென பேச்சு என்பக்கம் திரும்பியது,என்னைப்போல் ஆட்கள்தான் ரயிலில் திருடுவார்கள் எனவும், ரயில் நிற்கும்போது ஏறிவிடுவது பின் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவார்கள் எனவும், நிச்சயம் ஒரு குழுவாகத்தான் நாங்கள் வந்திருப்போம் எனவும் ஆங்கிலத்தில் பேசினர். அப்போது அவர்களுள் ஒருவர் வைத்திருந்த பாட்டிலை திறக்க உற்சாக பானம் சாப்பிட ஆரம்பித்தனர்.

அதுவரை அமைதி காத்த நான் பேச ஆரம்பித்தேன். நான் யார் என்ன காரணத்திற்காக இங்கு அமர்ந்திருக்கிறேன் என்றும். என்னைப்பற்றி பேசிய நீங்கள் செய்யும் செயல் எந்த விதத்தில் சரி என்றேன். என்னுடையா ஆங்கிலத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, லுங்கியில் இருந்த நான் அப்படி பேசியதும், அவர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.

சென்னை தாண்டியவுடன் சொல்லிவைத்த மாதிரி அத்தனை பேரும் ஹிந்திக்கு மாறியது எனக்கு ஆச்சர்யம், மேலும் நான் பார்த்த மனிதர்கள், அவர்களின் நடவடிக்கைகள், பொதுவான அலச்சியம், சுத்தமின்மை என்னை வேறு உலகிற்கு இட்டுசென்றிருந்தது. அந்த ரயில் பயணம்தான் இந்தியா பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியது. சொல்லபோனால் தமிழகத்தில் ஜாதீய ரீதியில் எப்படி வேறுபடுத்தி பார்க்கபடுகிறோமோ, அதைப்போலத்தான் தமிழகம் தாண்டியதும் மாநில வாரியாக பார்க்கபடுகிறோம், அதிலும் வட இந்தியர்களுக்கு பொது நாகரீகம் இம்மியளவும் இல்லை.

அதன் பிறகு விலை மலிவான விமான பயணங்களால், ரயில் பிரயாணங்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் சென்னை மாம்பலத்தில் இருந்து மீனம்பாக்கம் சென்றபோது, பயண சீட்டில்லாமல் வந்த ஒருவரை பரிசோதகர் விரட்டினார். அவர் ஓடும் ரயிலில் பயந்து ஓடி வந்து ஏறியபோது தடுமாறி கீழே விழப்போனார் படிக்கட்டில் நின்றவர்கள் அவரை காப்பாற்றினார்கள். அடுத்த பெட்டியில் ஏறிவிட்ட பரிசோதகரும் அவரைப்பிடிக்க எங்கள் பெட்டிக்கு வந்தார், அப்போது பயந்து தடுமாறிய நபரை, நான் பயப்படாதீர்கள் உங்களுக்காக நான் அபராதம் கட்டுகிறேன் என நிற்கவைத்தேன். அருகில் இருந்த அனைவரும் பரிசோதகரை கடுமையாக திட்டினார்கள், என்ன நினைத்தாரோ அவரும் எதுவும் பேசாது அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

கோடி கோடியாக அடித்தவன் எல்லாம் சொகுசாய் வாழ, ஒரு பயணசீட்டு வாங்க முடியாதவரை துரத்தும் அரசு. சமயத்தில் எனக்கு இந்தியன் என சொல்லிகொள்ளவே அருவருப்பாக இருக்கிறது, எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடிக்கும், ரயிலை ஏனோ எனக்கு பிடிப்பதே இல்லை. அடித்தட்டு மக்களின் துயர பாடலை அதில் கேட்டு கேட்டு கையாலாகாத இந்த பதிவனுக்கு எப்படி பிடிக்கமுடியும் ரயில்களை. ரயில் பயணத்தில் நான் பார்க்கும் வெறுமை படர்ந்த முகங்கள், அலுவலகங்களின் அவசரத்திலும் நடக்கும் ஏலசீட்டுகள், சிறு வியாபாரிகளின் வியாபார பதட்டம், ரயிலின் சுவர் முழுதும் ஒட்டியிருக்கிற ஏமாற்று விளம்பரங்கள், வயோதிகர்களும், பெண்களும், குழந்தைகளும் நிற்க பொறுப்பற்று இருக்கையில் அமர்ந்திருக்கும் இளயோர்கள், ஏன் எனக்கு மட்டும் இப்படி இந்த பாசாங்கு வாழ்க்கையை ஏற்க முடியவில்லை?

புரச்சிகளாலும், போராட்டங்களாலும் அடைந்த தேசத்தை புல்லுருவிகள் ஆள அனுமதித்துவிட்டு, சாலை ஓரங்களில் வாழ பழகிக்கொள்ளும் மக்களாய், ராம் சொல்வது போல் அடிமையை வாழும் என் போன்றோருக்கு ரயில் பிடிக்காதுதான். எப்படி விளக்குவேன் என் பையனுக்கு ரயிலின் துயரத்தை....

அவன் நேசிக்கும் ரயில்கள் அவனிடமே இருக்கட்டும்......

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

புரச்சிகளாலும், போராட்டங்களாலும் அடைந்த தேசத்தை புல்லுருவிகள் ஆள அனுமதித்துவிட்டு, சாலை ஓரங்களில் வாழ பழகிக்கொள்ளும் மக்களாய்,

........ என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டீர்கள்....... என்னவென்று சொல்வது?

தாராபுரத்தான் சொன்னது…

வலைச்சரத்து மூலமா வந்தேன். ரயில் பயணத்தை யதார்த்த மாக பதிவு செய்துள்ளீர்ங்கோ.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

அகில் ஆதித்தனுக்கு எனது அன்பு வாழ்த்துகள்

ரயில் பயணம் பற்றிய கருத்து - நன்று நன்று . இருப்பினும் கடமையைச் செய்யும் பரிசோதகர் என்ன செய்வார் பாவம்.

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

அமுதா கிருஷ்ணா சொன்னது…

மாற்று கண்ணோட்டம் ... ரயில் பிடிக்காது என்பது ஆச்சரியம்..எனக்கு ரயில் தான் ரொம்ப பிடிக்கும்...இந்தியா முழுவதும் ரயிலில் சுற்றி உள்ளேன். குழந்தைகளாக நம்மை மாற்றி விடுவதும் ரயில் தான். வடமாநிலத்தில் நாம் எதிர்பார்க்காதவைகள் நடக்கும்.ஒழுங்காய் வரிசையில் வருவார்கள்,பெரியவர்கள் காலில் எந்த இடமானாலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள்...நிறைய வித்தியாசம் இருக்கிறது வட இந்திய தென்னிந்திய மக்களுக்கு...

Unknown சொன்னது…

பயணம் செய்தவர்களுக்கு நன்றி ...

//........ என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டீர்கள்....... என்னவென்று சொல்வது?

நன்றி சித்ரா.. ஒவ்வொரு பயணிக்கும் ஒவ்வொரு பார்வை..

எழுத்தாளனுக்கு வேறொரு பார்வை ..



//வலைச்சரத்து மூலமா வந்தேன். ரயில் பயணத்தை யதார்த்த மாக பதிவு செய்துள்ளீர்ங்கோ.//

நன்றி தாராபுரத்தான் ஐயா..



//ரயில் பயணம் பற்றிய கருத்து - நன்று நன்று . இருப்பினும் கடமையைச் செய்யும் பரிசோதகர் என்ன செய்வார் பாவம்.//

நன்றி சீனா ஐயா, நானும் அவர் கடமையை மதிப்பவன், ஆனால் விரட்டிச்சென்று கடமையை செய்யும் அளவிற்கு அவன் கொடூர குற்றம் செய்யவில்லை, அன்று அவன் அடிபட்டு இறந்திருந்தால் அதற்குபிறகு அவர் வாழ்நாள் முழுதும் தன் கடமையை சரிவர செய்ய முடியுமா?.



//மாற்று கண்ணோட்டம் ... ரயில் பிடிக்காது என்பது ஆச்சரியம்..எனக்கு ரயில் தான் ரொம்ப பிடிக்கும்..//

நன்றி அமுதா கிருஷ்ணன்.. அது என்னுடைய அப்போதைய பார்வை.. சமீபத்திய இந்தியா மாறிப்போய் விட்டது. ஆனால் மேல்வர்கம்..கீழ்வர்கம் எனும் சுரண்டலை வெறுக்கிறேன்..

AKM சொன்னது…

அவன் நேசிக்கும் ரயில்கள் அவனிடமே இருக்கட்டும்.....

உங்கள் பதிவை படித்து வந்த என்னை கடைசி இந்த வரிகள்தான் டக்கென
ஏதோ ஒரு நெகிழ்வான உணர்வு..

அவன் நேசிக்கும் ரயில்கள் அவனிடமே இருக்கட்டும்.....