18 ஏப்., 2011

துரோணா - 15 ...



இரா முழுதும் பரவிய தனிமையில் 
போதுமானதாக இல்லை வாங்கி வந்த சரக்கும்,
பைத்தியக்காரத்தனமான முடிவெடுத்து விட்டான் என நண்பர்களும் 
போய்ச்சேர வேண்டியவன்தான் என வெறுப்பவர்களும் 
அய்யோ போயிட்டியே ராசா என பெத்தவளும் 
இன்னும்..
இன்னும் ..
அத்தனை பேச்சுக்கும் தீனி போட 
செத்து விடலாம்தான்..?

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்.

காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான். 



அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி,

”என்ன மாப்புளே இந்த நேரத்துலே” என்றார்.. 

அவரை பார்த்ததும் நான் அழுதேன், 

”என்னடா முட்டாளா நீ?”

”எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பெரும் உன்னைநம்பிதானே இருக்காங்க,( என் அக்காவும், அக்கா கணவரும் ஒரு விபத்தில் இறந்ததால், அவர்களின் இரு குழந்தைகளும் எங்கள் பராமரிப்பில்தான் இருந்தன) கண்ணனோ (என் அண்ணன்)குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்க்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம்” என டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார். 

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி.. 

அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, .. 

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.. 

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான். பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர். 

1995 ஆம் ஆண்டு ஊருக்கு வந்தபோது பெங்களூர் சென்றேன். அங்கு கீதாஞ்சலி அடிபட்டு இறந்த இடத்தில் சாலையோரம் இரண்டு நாள் இருந்தேன். காலை முதல் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே திரிந்தேன். அப்போது ஒரு நண்பர் அறிமுகமானார், அவர் வாழ்வின் இன்னொரு கோணத்தை புரிய வைத்தார். 

இப்படியாக நகர்ந்த வாழ்க்கையில் என்னையும் இரு பிள்ளைகளையும் மட்டுமே உலகம் என நினைத்து வாழும் மனைவி. என் தொழிலில் எத்தனயோ தோல்விகள், நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். சில சமயங்களில் பத்து ரூபாய் கூட இல்லாமலும் இருந்திருக்கிறேன். ஆனால் என்னை சரியாக புரிந்துகொண்டு எனக்கு மிகவும் ஆறுதலாக இருப்பவள் என் மனைவி. சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே. என் திருமணத்துக்கு முன்பே இந்தக் காதலை அவளிடம் சொல்லிவிட்டேன்.

இடையில் ஒரு நாள் சிங்கப்பூரில் இருந்தபோது எங்கள் திருமண நாள் கடந்து போனதை மறந்து விட்டேன். அடுத்த வாரத்தில் போன் செய்தபோது அவள் நினைவு படுத்தினாள். அவளுக்கு உடனே ஒரு வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தேன்.அது ஹேராமில் கமல் சொல்வது.

"நான் என்றோ செய்த புண்ணியம் 
நீ எனக்கு மனைவியாக அமைந்தது"
"நீ என்றோ செய்த பாவம் 
நான் உனக்கு கணவனாக அமைந்தது."

இதை எழுதிக் கொண்டிருக்கிற வினாடி வரைக்கும் இதுதான் உண்மை. 

14 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ஹையா நான்தான் முதல்

ஜோதிஜி சொன்னது…

தொடர்ந்து சூறாவளி சுனாமி போல இந்த வலையுலகத்தை ஆக்ரமித்து இருக்கும் நீங்க திடீரென்று ஒரு நாள் மொத்தமாக ஒரு நாள் ஒதுங்கி இருக்கப் போறீங்க. அப்ப ரொம்ப பேரு கவலைப்படப் போறாங்க.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நெஞ்சை தொட்டுட்டீங்க தலைவரே....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஒரே சோகமாக உள்ளது.

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே.////

தலைவரே ஒரு சந்தேகம்? தண்ணி சாப்டீங்களான்னு கேட்கறதுக்கு பதிலா இப்படி நாசுக்கா கேட்கறாங்களோ?

ஹேமா சொன்னது…

தெரியாம தப்பு பண்றது பரவாயில்ல.
தெரிஞ்சிட்டே ஏன் தப்பு பண்றீங்க செந்தில்.மனசுக்கு நெகிழ்வாயிருக்கு !

மோகன் சொன்னது…

part 13 and part 14,I guess one part is missing in between.part 13 talks abt the Anjali'z leaving to blore and what happened after that was missing in part 14

iniyavan சொன்னது…

தலைவரே,

மோகன் அவர்கள் சொன்னது சரிதான். 13க்கும் 14க்கும் இடைவெளி உள்ளது. அஞ்சலிப் பற்றி நீங்கள் ஏற்கனவே எழுதிவிட்டாலும், இங்கே அது பகிரப்படாததால், புதிதாகப் படிப்பவர்களுக்கு அதன் ஆழம் தெரிய வாய்ப்பு இல்லை.

உங்கள் நட்பு எனக்கு கிடைத்தற்கு உங்கள் அஞ்சலியைப் பற்றி நான் படித்ததுதான் காரணம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

நீங்கள் அஞ்சலியின் கடைசி நாளை இன்னொரு முறை நான் படித்து அழ விரும்பவில்லை என்றாலும், அதை இணைத்துவிடுவதுதான் நல்லது.

அப்போதுதான் அனைவருக்கும் புரியும்.

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ம்..... படிக்கும் போது... மனது கனக்கிறது

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனசுக்கு கஷ்டமா இருக்குய்யா...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன்.//

தினமும் கோல்டு மெடல் வாங்கிட்டு வறேன்னு சொல்வது போல பெருமையா சொல்றீங்களே.!

தண்ணி போடுறத முழு மூச்சா நிறுத்துவது கஷ்டம்தான்.ஆனால் தினமுங்றதை எப்பவாதுனு மாத்திகுங்க.உங்க மனைவி அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே.

(ஆனால் தண்ணியடிக்கிறவன விட தண்ணியடிக்காதவனுக்குதான் அதிக வியாதி பிடிக்கிறது)

செங்கோவி சொன்னது…

உருக்கமாக எழுதி உள்ளீர்கள்..அருமை!

மாயாவி சொன்னது…

மதுவின் கோரம் இன்னும் மிக கொடியது தலைவரே... சுத்தமாக நிறுத்த முடியாவிட்டாலும் குறைத்து கொள்ளவும்.

babusam சொன்னது…

நண்பரே
உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது
உங்கள் பணம் , மற்றும் துரோன அத்தியாயம் ஒன்று விடாமல்
படித்தேன் அருமை அருமை