22 பிப்., 2009

''ராமசாமி'' அத்தியாயம் 4

ஆரம்பத்தில் எனக்கு சென்னை அவ்வளவாக பிடிக்காது, ஆனால் தற்போது சென்னைவாசியாக மாறிவிட்ட எனக்கு அடிக்கடி ஊருக்கு போகிற வாய்ப்பு கிடைக்காது, ஆனால் எனக்குள் ஒரு கிராமத்தான் அப்படியே இருக்கிறான், கிராமத்தை விட சென்னையில்தான் தனிமனித சுதந்திரம் அதிகம் இருக்கிறது,
கிராமங்களில் எப்போதும் மற்றவர்களின் தலையீடு அதிகம் உண்டு, நகரங்களில் அப்படி கிடையாது, தேவையான வருமானம் இருந்தால் போதும் நகர வாழ்கைதான் சிறப்பு.மீண்டும் என்னுடைய கிராமத்துக்கே சென்றுவிடவேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய மனைவி மற்றும் மகனின் விருப்பம் என்னவென்று இதுவரை கேட்டதில்லை, ஒருவேளை அவர்களுக்கு கிராம வாழ்கை வேண்டாம் என நினைத்தால் என் ஆசையை மூட்டைகட்டி வைக்க வேண்டியதுதான்.
என்ன சிங்கார சென்னையின் தமிழ்தான் கொஞ்சம் கசக்கும், நீண்ட காலம் சென்னையில் இருக்கும் ஆட்கள் பேசுவது ஆரம்பத்தில் எனக்கு சுத்தமா புரியாது அதுவும் ''நீ என்ன சொல்றே சார்'' என்பார்கள் சார் என்று கொடுக்கும் கடைசி வார்த்தைதான் நமக்கான மரியாதை..
ஆனால் போகப்போக எனக்கும் அவர்களுடன் உரையாட பழகிவிட்டது, அவர்கள் சென்னை தமிழிலும் நான் தஞ்சை தமிழிலும் உரையாடும்போது ''உனக்கு சொந்த ஊர் எது சார்'' என கேட்டுவிடுவார்கள்,ஆனாலும் அநியாயத்துக்கு சகலரையும் சார் போட்டுத்தான் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் சென்னையுடன் எனக்கு ஒரு அந்நியத்தன்மை இருந்தது, இப்போது சகஜமாகிவிட்டது.
என்னுடைய நண்பன் இளங்கோ என்னுடன்தான் இருக்கிறான், பள்ளியில் பணிரண்டாம் வகுப்புவரை கூடப்படித்தவன், பத்தாம் வகுப்பில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன், பனிரெண்டாம் வகுப்பிலும் அவன்தான் முதல் மாணவன், பிறகு காந்தி கிராமம் படிக்க சென்று விட்டான், தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்த அப்பிராணி அவன், எங்கள் குழுவிலேயே அவன்தான் சீக்கிரம் முன்னுக்கு வருவன் என நினைத்திருந்தேன். காலம் அவன் வாழ்கையில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் என்னை சந்திக்க வந்திருந்தான், ஆளே மாறிப்போய் எப்போதும் கையில் புகையும் சிகரெட்டுடன் இருந்தான், எனக்கு முதலில் அதிர்ச்சி, ஆனால் இதுபோன்ற பல சம்பவங்களை பார்த்து விட்டதால், என்னடா இப்படி மாறிட்டே எனக்கேட்டால் அவனால் அப்போது முழுதாக அவனைப்பற்றி சொல்லமுடியவில்லை, தான் சினிமாவில் முயற்சி செய்வதாக சொன்னான்.
நானும் முதலில் சினிமாவில் சேரத்தான் சென்னைவந்தேன் அதனை தனி அத்தியாயத்தில் எழுதவேண்டும் ஆனால் அது எனக்கு சரிப்பட்டு வராது என்றவுடன் சிங்கபூருக்கு மூட்டைகட்டிவிட்டேன், எனக்கே சரிப்பட்டுவராத சினிமா மிகவும் நல்ல ஒருவனை என்ன செய்யபோகிறதோ என்ற கவலை எனக்கு, ஆனால் அவனோ தனக்கு சினிமாதான் எல்லாம் என்று சொன்னான், இன்றுவரை திருமணம் செய்யவில்லை, அதுவேறு வருத்தமாக இருந்தது,
சரிடா நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறாய் வா டீகடைக்கு (TASMAC) என அழைத்துபோனேன் அங்கு இரண்டு பியரை போட்டவுடன் சினிமாவுக்கு வர என்னதாண்டா காரணம் வச்சிருக்கே என ஆரம்பித்தேன், அவன் சொல்ல ஆரம்பித்தான் எனக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது, அப்போது வடபழனியில் அறை எடுத்து தங்கியிருந்தான், செலவுக்கு பணம் தேவைப்பட்டால் மட்டும் வருவான், அது சனிக்கிழமை என்றால் பியர் சாப்பிடுவோம்..
அத்தியாயம் நாட்களில் அவனுக்கு வி.சேகரிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது, அது தொலைக்காட்சி தொடர், பின் சன் தொலைக்காட்சி அதனை நிறுத்திவிட்டதால் அங்கும் வேலை இல்லை, திடீரென சொல்லாமல் ஊருக்கு சென்றுவிட்டான்..
சில நாட்கள் கழித்து மீண்டும் சென்னை வந்தான், அப்போது நானே அவனை ஒரு நல்ல கதை பண்ணேன்டா, எனக்கு சில தயாரிப்பளர்களை தெரியும் அவர்களிடம் சொல்லி ஒரு படம் பண்ணலாம் என்றேன், அப்புறம் அவன் டி.நகரை மையமாக வைத்து ஒரு கதை செய்தான் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது, ஆனால் செலவு அதிகம் வைக்கும் என்பதால், வேறு ஒன்றை தயார் செய்தோம்.
அந்த சமயம்தான் சிங்கபூரில் இருந்து எனது நண்பர் திரு.ராஜேந்திரன் வந்தார், அவரிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தேன், அவருக்கு அவன் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது, அவர் முழு கதையும் தயார் செய்துவிட்டு ,பட்ஜெட் என்னவென்று சொல்லுங்கள் , நிச்சயம் இந்த படத்தை செய்வோம் என்றார்சில நாட்களில் அவரும் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
அப்போது பொங்கல் சமயம், நண்பன் இளங்கோவும் பொங்கலுக்கு ஊருக்கு போகிறேன், அங்கு சென்று கதை எழுதிவிட்டு வருகிறேன் என சென்றுவிட்டான், இடையில் தொலைபேசியில் கதை முடிந்துவிட்டது, சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்றான்.
சென்னை வந்ததும் எங்கடா கதை என்றேன், இன்னும் எழுதலை ஆனால் சொல்கிறேன் என்றான் , கேட்டதற்கு சில குறைகளை தவிர மற்றபடி மிகவும் நன்றாக வந்திருந்தது, சரி குறைகளை திரைக்கதையில் பார்த்துகொள்ளலாம் நீ எனக்கு கதையை சுருக்கி ஒரு சிறுகதை அளவுக்கு எழுதிதாடா என்றேன், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது அதை எழுத,
ஒருவழியாக எழுதிகொடுத்தான் படித்துவிட்டு இன்னும் சில விசயங்களை சேர்க்கவேண்டும் அதன்பிறகு சிங்கப்பூர் அனுப்பலாம் என்றேன், சரி அதைப்பற்றி பேசுவோம் என்றான், இதற்குள் சிங்கபூரில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள், கதை ஏன் இன்னும் அனுப்பவில்லை, ஒவ்வொரு முறையும் ஒரு பொய் சொல்லி சமாளிக்கிறேன்,
அவனுக்கு நிஜமாகவே ஆர்வம் இல்லையா? அல்லது நானே அவனை இழுத்து செல்லவேண்டும்? என நினைக்கிறானா?என்னைபொறுத்தவரை ஆர்வம் இருப்பவர்களுக்குமட்டுமே என்னால் கூட இருந்து உதவ முடியும் , மேலும் முடிந்தவரை ஒருவரிடம் இருந்து எதாவது ஒரு வெளிப்பாட்டை எதிர்பார்ப்பேன் , நானாக எதையும் யாருக்கும் செய்யமாட்டேன், ஏனென்றால் பிடிக்காமல் கூட அவர்கள் எனது வற்புறுத்தலுக்காக செய்யலாம்.. அதை நான் எப்போதும் விரும்புவதில்லை.
இளங்கோ என்னுடன்தான் இருக்கிறான் , அவனின் தினசரி நடவடிக்கை ஒரே மாதிரியாக இருக்கும், காலையில் ஒன்பது மணிக்குத்தான் கண்முழிப்பான், நேர டீகடை( தேநிர்தான்) சென்று ஒரு டீயும் சிகரெட்டும் அடித்துவிட்டு வந்து குளிப்பான் , பிறகு மீண்டும் டீயும் சிகரெட்டும், மத்தியானம் சாப்பாடு, காலையில் சாப்பிடமாட்டன், இரவு எட்டுமணிக்கு சாப்பாடு, பத்துமணிக்கெல்லாம் தூக்கம், இந்த ஒரு நாளில் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட், இடையில் நான் எங்காவது அனுப்புவேன் அதுவும் எப்போதாவதுதான், மற்றபடி அவன் நண்பர்கள் சிலபேரை பார்க்க போவான்,
அவனுக்கு பிடித்தால் பேசுவான், இல்லையென்றால் எப்போதும் சிந்தனைதான், நானும் பலமுறை அவனை மாற்றிக்கொள்ளும்படி சொல்லிவிட்டேன், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான், கடந்த மூன்று நாட்களாக எட்டு மணிக்கு முழிக்கிறான், காரணம் அவன் குருவாக நினைக்கிற ராகவேந்திரர் கோவிலுக்கு போகிறான்,எனக்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது அப்போது என்னை நிரூபிப்பேன் என்பான், காலம் கடந்து கிடைக்கும் வெற்றியும் ஒரு வகையில் நமக்கு தோல்விதான் என்பேன், அதற்கு கனத்த மௌனம் காப்பான். ஒரு சிறந்த மாணவன் இப்படி ஆனது எனக்கு வருத்தம்தான், ஆனால் அவனுக்கு உண்மையில் எதில் ஈடுபாடு என்றுதான் தெரியவில்லை சிலசமயம் ஆன்மிகம் பற்றி மிக நன்றாக பேசுவான், சில சமயம் சினிமா பற்றி பேசுவான்.
ஆனால் நிறைய சமயங்களில் இவன் சீன் சொல்லும் அழகை பார்த்து வியந்திருக்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாலா மாதிரி வரக்கூடிய ஆள்தான், ஆனால் பாலாவிற்கு ஒரு தீவிர முயற்சி இருந்தது, இவனிடம் அது சுத்தமாக இல்லை, இவனை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை , இவனை நம்பி சிங்கப்பூர் நண்பர்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன், இதில் இன்னொரு விஷயம் இந்த படத்தின் தயாரிப்பாளரில் நானும் ஒருவன்.
ஆனால் இவன் ஒன்றை மட்டும் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டான், சினிமாவிற்காக அவனது பெயரை வர்கோத்தமன் என மாற்றிவிட்டான்....

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது

5 பிப்., 2009

''ரத்தம் சரணம்''


இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பவுத்த பிக்குகளை அனுசரிக்காமல் ஆட்சி நடத்த முடியாது. தற்போது நடந்துகொண்டிருக்கும் நான்காம் ஈழப்போரில் கொல்லப்படுவது, விடுதலைப்புலிகளோடு, அப்பாவி தமிழர்கள் மட்டுமல்லாது, பெருமளவில் ராணுவத்தினரும்தான், இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள்,இந்தியாவில் பிறந்த புத்தரின் கொள்கைகள் இந்தியாவில் பரவவில்லை ஆனால் சீனா, தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளில் முழுதுமாக பரவியது, அன்பையும், அஹிம்சையையும் போதித்த புத்தரின் வழிவந்தவர்கள் கொல்லுவதை தர்மமாக செய்கிறார்கள்.மேலும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு ஆதரவாக இலங்கை இருந்ததால் தற்போது ஜப்பான் பெரும் அளவில் பொருளாதார உதவிகளை செய்கிறது, மற்றொரு புவுத்த நாடான சீனாவோ ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை காட்டும் முயற்சியில் இந்தியாவிற்கு போட்டியாக ராணுவ உதவிகளை செய்கிறது, கொன்றொழித்தல் சேவை செய்யும் புத்தம் இல்லாது போகட்டும்..
ஈழத்தின் ஐம்பது வருட போராட்டத்தில் இந்தியாவின் பங்கு மாறி மாறி முடிவெடுக்க வைத்திருக்கிறது,புலிகளை வளர்த்துவிட்ட இந்தியாவின் ராவே தற்போது இலங்கை ராணுவத்துக்கு மூளையாக செயல்படுகிறது,இந்தியாவை பொறுத்தவரை ஆட்சியாளர்களை பொறுத்துதான் நிலைமை,பி.ஜெ.பி யின் சென்ற ஆட்சியின்போது ஜார்ஜ் பெர்னான்டஸ் அமைச்சராக இருந்தார் அவர் புலிகளின் ஆதரவாளர் அதனால் இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவின் உதவியை முடியவில்லை, அந்த சமயம்தான் இலங்கை அரசாங்கம் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்தது .
தற்சமயம் சோனியாவின் ஆசிர்வாதத்தோடு இந்திய இராணுவம் புலிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு அப்பாவி தமிழர்களையும் சேர்த்தே அழிக்கிறது.இந்தியாவின் வெளியுறவு செயலர் மேனன் மற்றும் ராணுவ அமைச்சர் எ.கே.அந்தோனி இருவரும் மலையாளிகள், அவர்களை பொறுத்தவரை தமிழன் தனி நாடு அடைந்துவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
தன்மானத்தலைவன் , தமிழின காவலன் என்று அடிவருடிகளால் வர்ணிக்கபடுகிற கருணாநிதி தன் ஆட்சியை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். மருத்துவர் மகனின் மந்திரிபதவி வேண்டும் அதே சமயம் தமிழனின் ஆதரவும் வேண்டும் என இரட்டை வேடம் போடுகிறார்.
திருமாவும் , வைகோவும் , நெடுமாறன் அய்யாவும் இல்லையென்றால் இங்கே சொரணைகெட்ட எந்த தமிழனும் குரல் கொடுக்கமாட்டான்.
தமிழக கிராமங்களில் இன்னும் வெள்ளநிவாரணம் வழங்கப்படுவதால் . கழக கண்மணிகளுக்கும் மற்றும் மாற்று கட்சியினரும் கவனிக்கபடுவதால் எல்லோருக்கும் அதைப்பற்றித்தான் பேச்சு, நாளிதழ் படிக்கும் வழக்கொழிந்து போன கிராமங்களில், தொலைக்காட்சி மட்டுமே பார்க்கும் கிராம மக்களுக்கு இலங்கையின் உண்மையான நிலவரம் தெரியாமல் போய்விட்டது, எந்த ஊடகமும் தமிழின அழிப்பை மக்களுக்கு எடுத்துசெல்லவில்லை. எந்த மக்களின் பணத்தில் தின்று கொழிக்கிறார்களோ, அதே இன மக்களின்அழித்தொழிப்பிற்கு நாமே உதவுவது எந்த விதத்தில் சரியாகும்?
இதனால் கிராமத்து மக்களுக்கு எதுவுமே சரியாக போய்சேரவில்லை, அவர்களும் அரசாங்கம் சில ஆயிரங்களுக்காக தங்களது பெருத்த மறந்து, அரசாங்க மதுகடைக்களில் வாங்கிய பணத்தை செலவழித்துவிட்டு, அடுத்த கடன் தள்ளுபடிக்கு எதிர்பார்த்துக்கொண்டு, ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுகின்றனர். ஆனால் ஆரம்பகட்ட போராளிகளின் பயிற்சிகள் கிராம மக்களாலே முன்னெடுத்து செல்லப்பட்டது, போராளிகளின் பயிற்சிக்கு தேவையான இடம் கொடுத்து , மேலும் உணவு வசதிகளையும் அவர்களே செய்து கொடுத்தனர், ஈழபோராட்டத்தில் ஆரம்பகட்ட நிதி கிராம மக்களிடம் இருந்தே திரட்டப்பட்டதுஆனால் இப்போதோ முன்னேடுத்துசெல்லக்கூடிய அரசியல் கட்சிகள் சோனியாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொண்டதால் யாருக்கும் அக்கறை இல்லை,
என்னைபோல் இணையத்தில் தன் ஆதங்கத்தை எழுதும் நண்பர்களை, கேலி செய்யும் கூட்டமொன்று இருப்பது இன்னும் வேதனை,
எம்மைபொறுத்தவரை உயிர் எல்லோருக்கும் பொதுவானது, அது சிங்களனோ, தமிழனோ, காசா இஸ்லாமியனோ எல்லோருடைய உயிரும் ஒன்றுதான்,இந்த பரந்த உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும்.புத்தம் தழைத்த ஊரில் செய்வார்களா?

3 பிப்., 2009

"'ராஜீவ்காந்தியும் பிரபாகரனும்"'

என் குடும்பம் பரம்பரை காங்கிரஸ் குடும்பம் , அப்பா வட்டார காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தவர், அம்மாவின் அப்பா பஞ்சாயத்து தலைவராக இருந்தவர், அம்மாவின் சித்தப்பா சேர்மன்ஆக இருந்தவர்,வீட்டில் காங்கிரஸ் தவிர மாற்று கட்சிக்கு ஓட்டுபோட மாட்டார்கள்.. அப்பா ஊரில் அனைத்து கட்சி விவசாய சங்க தலைவராக இருக்கிறார்.

நான் இருபத்தியோரவது வயதில் பி.ஜெ..பி யில் சேர்ந்தேன் அப்போது எங்கள் ஊரில் நானும் நண்பன் கணேசும் மட்டுமே அதன் அதிகாரபூர்வ உறுப்பினர்கள், எங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் சித்தப்பா மட்டுமே சீனியர் உறுப்பினர்.

என்னுடைய தகப்பனார் என்னை கூப்பிட்டு கண்டித்தார், நம் குடும்பம் காங்கிரஸ் குடும்பம் நமக்கு அதெல்லாம் ஆகாது, அதனால் பி.ஜெ .பி யில் இருந்து விலகிவிடச்சொன்னார் ஆனால் நான் மறுத்துவிட்டேன்,

ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது என் தந்தை அன்று நாள் முழுவதும் யாருடனும் பேசவோ சாப்பிடவோ இல்லை. எங்கள் வீட்டில் ராஜிவ்காந்தியின் பெரிய படம் ஒன்று இடபுறம் மாட்டியிருக்கும் அதற்க்கு வலதுபுறம் அதே அளவுள்ள பிரபாகரன் படம் மாட்டியிருக்கும் ,

ராஜிவ்காந்தி இறக்கும்வரை எத்தனையோ காங்கிரஸ்காரர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கின்றனர் அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாத அவர்கள் ராஜீவ்காந்தி மரணத்துக்குப்பின் என்ன தலைவரே பிரபாகரன் படத்த தூக்கிப்போடுங்க, அதுவும் தலைவர் படத்துக்கு பக்கத்துலயே இருக்கிறது என்னமோ போல இருக்கு என சொல்வார்கள் , ஆனால் பையன் அவர் மேல ரொம்ப பிரியமா இருப்பான், அதனால் ஒன்றும் சொல்வதில்லை என்பார்,

எனக்கு சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் திரு. லீ குவான் யு மற்றும் திரு.பிரபாகரன் இருவர் மட்டுமே ரோல் மாடல்கள். முன்னவர் ஒரு மீன்பிடி கிராமத்தை உலகிற்கே முன் மாதிரியாக மாற்றியவர், பின்னவர் தன் இனத்துக்காக உயிரை பணயம் வைத்தவர் .

சில நாட்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன். அப்போது நான் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க போவதில்லை என்று சொன்னேன். அதை மௌனமாக கேட்டுகொண்டிருந்துவிட்டு அது அவன் விருப்பம் என்றார் .

இந்தியாவில் சேகுவேரா படத்தை எப்படி வேண்டுமானால் பயன்படுத்தலாம் மற்ற புரட்சியாளர்களைகூட (முஸ்லீம் புரட்சியாளர் தவிர்த்து ) எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம், ஆனால் தமிழ்நாட்டில் கூட பிரபாகரன் படத்தை செய்திக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்,இவ்வளவிற்கும் தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்கள் என்று பார்த்தால் ஒரு ஐந்து விழுக்காட்டினர் மட்டும்தான் இருப்பார்கள், ஆனால் இன்று தமிழகத்தின் குடுமி அவர்கள் கையில் இருக்கிறது,

விடுதலைபுலிகள்தான் ராஜிவ்காந்தியை கொன்றார்கள் என்பதற்கு இன்னும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதில் நம் அரசியல் தலைவர்கள் பெயரும் அடிபடுகிறது, என்ன உண்மை என்பது பிரபாகரனுக்கே தெரியுமா?

இந்த இக்கட்டான நேரத்தில் கலைஞர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியை திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம் , ஆனால் மக்கள் மத்தியில் அவர் தமிழின தலைவர் என்ற நாற்காலி எப்போதோ அகற்றப்பட்டுவிட்டது.
இப்போதுகூட நேரம் கடந்துவிடவில்லை, தி.மு.க , ம.தி.மு.க . பா.ம க, விடுதலை சிறுத்தைகள் , பி.ஜெ .பி , வலது மற்றும் இடது சாரிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து மத்திய அரசை வலியுறுத்தினால் இலங்கையில் நல்லது நடக்கும் இல்லையேல் விடுதலைப்புலிகளால் மட்டுமே இதற்கு விடைகான முடியும் .

இங்கு சோனியா ஒருவரின் விருப்பு வெறுப்பின் பேரில்தான் காங்கிரஸ் இயங்குவதால் சிங்கள அதிகார வர்க்கத்துக்கு மட்டுமே மத்திய அரசாங்கம் உதவிசெய்யும், எனவே மத்திய அரசை எதிர்பார்ப்பது வீண்.
ராஜீவ்காந்தி ஒன்றும் கடவுளின் அவதாரம் அல்ல, இந்திரா காந்தி மற்றும் மகாத்மா போன்ற தலைவர்களுடன் ஒப்பிட்டால் ராஜீவ் காந்தியின் மரணம் ஒன்றுமே இல்லை, ஆனால் பிழைப்புவாதிகளின் உலகத்தில் ''வல்லான் வகுத்ததே வாய்கால் '' நியாயம், நேர்மை , எல்லாம் நம்மைப்போல் நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே,

இலங்கையில் தமிழன் சாவது அவன் தலைஎழுத்து என்று விட்டுவிடுவோம் ...

ஜெய் சோனியா மாதா கி ஜெ .....