30 டிச., 2010

இரண்டு நண்பர்கள் ...

பார்த்த மாத்திரத்தில் 
சட்டென அடையாளம் தெரியும் 
என்னை
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! 
என்றான், 
பணிரெண்டு வருடம் கூடப்படித்தவன் 
எனக்கும் அப்படிதான் இருக்கு 
என 
விலகி நடக்கையில் 
எனக்கும், அவனுக்கும் 
என்ன வித்தியாசம்? ..

கட்டித்தழுவி,
நலம் விசாரித்து,
டீ சாப்பிட்டு ,
செல்பேசி எண் பரிமாறி,
விடைபெற்ற பின்
சந்தேகமாய் இருந்தது 
சுப்ரமணியா? சண்முகமா?..

பயோடேட்டா - நக்கீரன் ...


பெயர்                        : நக்கீரன் 
இயற்பெயர்                    :     'முரசொலி' வெர்சன் 2          
தலைவர்                   : கோபால் 
துணைத் தலைவர்              : காமராஜ் 
மேலும்
துணைத் தலைவர்கள்            : வீரப்பன், நித்தி, ஜெகத் கசுப்பர் மற்றும் சிலர்  
வயது                        : 'சமூக சேவை' செய்து வீடு வாங்கும் வயது
தொழில்                    : பத்திரிக்கை நடத்துவது மட்டுமல்ல           
பலம்                        : நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும் 

                                     ஏமாளி வாசகர்கள்           
பலவீனம்                    :  என்னதான் பில்டப் செஞ்சாலும் கொண்டை 
                                            தெரிந்து போவது     
நீண்ட கால சாதனைகள்            : வீரப்பன் கேசட்டுகள் 
சமீபத்திய சாதனைகள்            : சி.பி.ஐ ரெய்டு அளவுக்கு 'தொழிலை' 
                                                                 விரிவுபடுத்தியது  
நீண்ட கால எரிச்சல்            : வால்டர் தேவாரம், ஜெ. ஜெ.. 
சமீபத்திய எரிச்சல்                : சவுக்கு சாட்டையைச் சுழற்றுவது   
மக்கள்                        : மஞ்சள் பத்திரிகை படிப்பவர்கள்       
சொத்து மதிப்பு                : அரசியல்வாதிகள் பொறாமைப்படும் அளவுக்கு  
நண்பர்கள்                    : முன்பு மனித உரிமை பேசுவோர்,இப்போது
 
                                              காக்கிகள், வெள்ளைகள்       
எதிரிகள்                    : சவுக்கு, சி.பி.ஐ         
ஆசை                        :No.1 நடுநிலை புலனாய்வு இதழ்         
நிராசை                    : ஜூனியர் விகடன் தட்டிப் பறித்து விட்டது   
பாராட்டுக்குரியது                :ஜெயலலிதாவை எதிர்த்தது        
பயம்                        :மீண்டும் ஜெ (Return the Dragon?!)
கோபம்                    : ஈழ ஆதரவு முகத்திரையை  கிழித்தவர்கள் மீது
காணாமல் போனவை            : நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே  
புதியவை                    :(அநீதி கண்டு ) இரண்டு கண்களையும் மூடினால் 
                                         செல்வம் கொட்டுமே
கருத்து                    : மீசைய பெரிசா வளர்த்தது தப்பில்ல ஆசையையும் 
                                      வளத்ததுதான்........            
டிஸ்கி                        : தன்நெஞ்சு அறிவது பொய்யற்க!

28 டிச., 2010

"ழ" என்கிற கனவின் விதை...

இளமை எனும் வாழ்வின் வஸந்தபருவத்தில் ஒவ்வொருவருமே கண்கள் முழுக்க கனவுகள் நிரப்பித்தான் திரிவார்கள். காதலைச் சுமந்த கனவுகள், வாழ்க்கையைச் சுமந்த கனவுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கனவுகள்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதக்கனவு. வர்ணங்களில் மின்னும் கனவுகள் காலவெள்ளத்தில் சாயமிழந்து கறுப்புவெள்ளையாய்த் தேய்ந்துபோவதுதான் பெரும்பான்மையாக இருக்கின்றது. "எனக்கு ஒரு கனவு இருக்கின்றது" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகம் போலவே எங்களுக்கும் ஒரு கனவு இருந்தது. புதிய யுகத்துக்கான மகரந்தங்களைச் சுமந்து வரும் ஒரு பத்திரிகைப்பூவை முகிழ்க்கவைப்பதே அந்தக் கனவு.வாழ்வின் லட்சியங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் இதுவும் வெறும் கனவாகத்தான் போய்விடுமோ எனக்கவலை கொண்ட பொழுதில் நாம் ஏன் ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். அதுபற்றி விசாரித்தால் அது தமிழ் கூறும் நல்லுலகில் தற்கொலைக்குச் சமமான விசயம் என எச்சரித்தபோது எங்களுக்கு இதன் மேலிருந்த சுவாரசியம் கூடிப்போனது. இங்கு நாங்கள் என்பது நானும் என் மாப்பிள்ளையும் பதிவரும் ஆன தஞ்சாவூரான் என்கிற ராஜாவும். 

எனவே நெருங்கிய நண்பர்களான கேபிளையும், விந்தைமனிதனையும் கூப்பிட்டுப் பேசியதில் அவர்கள் தந்த உற்சாகத்தால் நாங்களும் பதிப்பகத் தொழிலில் இறங்கிவிட்டோம். எங்கள் பதிப்பகம் என்ற விதையின் முதல் தளிராக கேபிள்சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை" என்கிற குறுநாவலையும் அத்துடன் அவரின்  22 சிறுகதைகளையும் சேர்த்து முதல் புத்தகமாக வெளியிட இருக்கிறோம். எங்களின் அடுத்த வெளியீடு எனது "பணம்" தொடர். இதில் மிகுந்த மகிழ்ச்சியான விசயமே முதல் புத்தகம் "மீண்டும் ஒரு காதல் கதை" அச்சில் இருக்கும்போதே நூறு புத்தகங்களுக்கான ஆர்டர் கிடைத்து விட்டதுதான்.

கூடிய விரைவில் எங்களின் முதல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பை எல்லோருக்கும் அனுப்புகிறோம். பதிவுலக நண்பர்களின் எழுத்துக்கு முன்னுரிமை தரலாம் என்றிருக்கிறோம். எனவே பதிவுலக நண்பர்கள் தங்கள் படைப்புகளை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட விரும்பினால் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் படைப்புகளை எங்களின் ஆசிரியர் குழுவினர் பரிசீலித்தபின் உங்கள் படைப்புகளைக்  கண்டிப்பாக பதிப்பிக்கிறோம்.


எங்களது ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள எங்களது நண்பர்கள் விந்தைமனிதன் என்கிற ராஜாராமனுக்கும், கேபிள்சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கும் எங்களது நன்றிகள்..

நிறைய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். "ழ" என்கிற பெயரில் ஊன்றப்பட்டு அது தன் முதல் தளிரை முகிழ்க்கும் தருணத்தில் "ழ"வை நண்பர்களும் பதிவர்களுமான உங்களிடம் ஒப்படைக்கிறோம். இது கிளைவிரித்து விண்ணளக்கவும், வேர்பரப்பி மண் சிறக்கவும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். 
 

27 டிச., 2010

அதது..அததாய்...



அசூயையாய் விருப்பமற்று
"ம்" கொட்டினாலும் 
யாரிடமாவது இறக்கிவைக்கத்தான்
வேண்டியிருக்கிறது
மனக்கவலைகளை...

எப்படியாவது
ஒரு குறை வந்து
விரிசலை உண்டாக்கிவிடுகிறது 
பக்கத்துப் பக்கத்து
வீடுகளுக்கு...

நள்ளிரவில்
லிப்ட் கேட்பவர்களை
பயத்தோடுதான்
அணுகவேண்டியிருக்கிறது...

எப்போதும்
நிற்கும் இடத்தை விட்டு
தள்ளி நிறுத்தப்படும் பேரூந்தில்
ஓடித்தான்
தொற்றிக்கொள்கிறேன்...

உண்டியல்கள் வைத்து
வசூல் பண்ணியாவது 
காப்பாற்றத்தான் வேண்டியிருக்கிறது
கடவுள்களை...

இப்படியாக நகர்கிறது
வாழ்க்கை...
மனிதம் வாடியும்
மனிதம் நாடியும்..

26 டிச., 2010

சீமான்; மாற்று அரசியலுக்கான சாவி ...

A healthy democracy requires a decent society; it requires that we are honorable, generous, tolerant and respectful. -Charles W. Pickering 

நேற்று 25.12.2010 மாலை டிஸ்க்கவரி புக் பேலஸில் நடைபெற்ற சுரேகாவின் "நீங்கதான் சாவி " புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். போகும் வழியில் எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியின் ஏற்ப்பாட்டில் பெரியாருக்கும். எம்.ஜி.ஆருக்கும் வீரவணக்க கூட்டம், சீமான் தலைமையில் நடைபெறுவதாக மேடை அமைக்கப்பட்டு , விளம்பரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. புத்தக வெளியீடு முடிந்தபின் இங்கு வந்து பேசுவார் என்பதால் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என நினைத்துக்கொண்டே புத்தக வெளியீட்டு விழாவுக்கு போனேன். அங்கு பதிவர்கள் மணிஜி, அதிஷா, லக்கி, மயில்ராவணன்,வாசு, மணிகண்டன், நர்சிம், சுகுமார், ரமேஷ்வைத்யா, பெஸ்கி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே புத்தக வெளியீட்டு விழாவுக்கு சீமான் வர தாமதம் ஆகவே, அண்ணாசாலையில் நடைபெற்ற மனுஷ்யபுத்திரன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டனர். பெஸ்கியும், தம்பி சாமிதுரையும் மட்டும் கடைசிவரை இருந்தனர். சீமான், நாம் தமிழர் கட்சியின் தோழர் ஒருவருடன் மட்டுமே வந்து ஆச்சர்யப்படுத்தினார். புத்தகத்தை வெளியிட்டு ஐந்து நிமிடங்கள் அதனைப்பற்றி சிறப்பாக பேசினார். அப்போது தமிழ்வனம் பதிப்பக உரிமையாளர் காந்தி அவர்களின் இரண்டாவது மகன் ரிஷி சீமானிடம் "இறையாண்மை என்றால் என்ன மாமா? "என்று கேட்டான். சிரித்தவாறே தெரியலயே என்ற சீமான் அதனைப்பற்றி மிகசிறந்த விளக்கம் ஒன்றை சொல்லி கூட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பிவிட்டார்.

நாங்களும் விடைபெற்றுக்கொண்டு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வரும்போது போலீசார் எங்களை திசைமாற்றி விடவும், ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தே வந்தோம், அப்போதே நல்ல கூட்டம் இருந்தது, நேரம் ஆக ஆக சாலையின் மூன்று பகுதிகளையும் கூட்டம் நிரப்பியது, வந்திருந்த அத்தனை முகங்களிலும் சீமான் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்திருந்ததை காண முடிந்தது. முதலில் புரட்சிப்பாடல்களை மேடையில் நிகழ்திக்காட்டினர். அடுத்து எல்லோருக்கும் வீரவணக்கம் செலுத்தியபின் ஒன்பது மணிக்கு சீமான் தன் உரையை துவக்குவார், எனவே பேசவரும் அத்துணை பெரும் அதனை அனுசரித்து பேசும்படி கேட்டுகொள்ளப்பட்டார்கள். இந்தக்கூட்டம் பற்றி கேள்விப்பட்டு கேரளாவில் இருந்து நால்வர் வந்திருந்தனர். முதலில் பேசவந்த அனைவரில் வேலு பிரபாகரன் மட்டும் தன் நீண்ட உரையால் மக்களை நெளியவைத்து அதற்கடுத்து பேசவந்தவர்களின் நேரத்தையும் எடுத்துக்கொண்டு விட்டதால், அதன்பிறகு வந்தவர்கள் மிக சுருக்கமாக பேசி அமர்ந்தனர். பேசியவர்களில் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது காங்கிரசார் பீகாரைபோல் தமிழகத்தில் தனித்து நிற்கமுடியுமா? என சவால் விட்டார். அடுத்து பேசிய கோட்டைகுமார் என்கிற சினிமா தயாரிப்பாளர் சோனியா , கலைஞர் இருவரையும் ஒரு பிடி பிடித்தார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி ரேவதி நடராஜன் இது கீழ்வெண்மணி படுகொலையின் நினைவு நாளும் என சொல்லி சீமான் பின் அனைவரும் நிற்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதன்பின் சீமான் சிறையிலிருந்தபோது அவருக்காக வழக்காடிய அனைவருக்கும் நன்றி சொல்லியபின் சீமான் பேச அழைக்கப்பட்டார்.

சீமான் சிறையிலிருந்து வெளியே வந்தபின் நடக்கும் முதல்கூட்டம் என்பதால் கூட்டம் மொத்தமும் சீமான் பேச வந்ததும் ஆர்பரித்து உற்சாகம் எழுப்பியது. சீமான் தந்தை பெரியாரை பற்றி சுருக்கமாக பேசிவிட்டு எம்.ஜி.ஆரை பற்றி பேச ஆரம்பித்தார். தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்புவரைக்கும் எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்தது இல்லை என்றும், அவர் ஒரு மலையாளி என்று அவரை ஒதுக்கி வைத்திருந்தேன் என்றும், அதற்கு முக்கிய காரணமே கலைஞரின் பேச்சை சின்ன வயதில் இருந்தே முன்வரிசையில் அமர்ந்து கேட்டதுதான் என்றும், பிரபாகரனை தான் சந்திக்கும்போதுதான் எம்.ஜி.ஆர் தமிழனுக்காக சத்தமில்லாமல் செய்த அத்தனை தொண்டுகளை அறிந்ததாகவும் அது முதல் எம்.ஜி.ஆரை பற்றி தேடித்தேடி படித்தும், அவர் படங்களை பார்த்தும் அவரை நிராகரித்த பாவத்தை கழுவிக்கொண்டதாகவும், பட்டுகோட்டயாரின் பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் திரையில் நேர்மையாக பயன்படுத்திகொண்ட விதம் பற்றி பேசினார். சீமான் மீது பொதுவாக அனைவரும் வைக்கும் குற்றசாட்டு அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர் மேலும் அவர் இந்தியாவின் பிரச்சினைகளை பற்றி பேசாமல் ஈழத்தை பற்றி மட்டுமே பேசுகிறார் என்பதாகும். இந்தகூட்டத்தில் எம்.ஜி.ஆரை பற்றி பேசி முடித்ததும் அவர் இந்தியாவின் இறையாண்மை இன்றைய ஆளும் வர்க்கத்தால் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டு வருகிறது என பட்டியலிட்டார். காங்கிரசையும், அதற்கு துணைநிற்கும் தி.மு.க வையும் கடுமையாக சாடினார். காங்கிரசுக்கு கலைஞரை விட சிறந்த அடிமை இல்லை என்பதையும் அதற்கு காரணம் என்னவென்பதையும் சொன்னபோது கூட்டம் வெகுநேரம் கைதட்டியது. வருகிற தேர்தலிலும் தான் அ.தி.மு.க வைத்தான் ஆதரிக்கபோகிறேன் என்றும், அப்படி ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது என்பதையும் விளக்கினார். அடுத்து முழு மூச்சாக கலைஞரை விளாசினார். அது யார் காதுக்கு எட்டியதோ போலீசார் வந்து நேரமாகிவிட்டதால் கூட்டத்தை முடிக்குமாறு சொல்லவே, கூட்டம் மொத்தமும் போலீசாரை திட்டியது. ஆனால் சீமானோ அவர்களை ஒன்றும் சொல்லவேண்டாம் அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள் என கூட்டத்தை அமைதிபடுத்தி இன்னும் ஐந்து நிமிடத்தில் முடித்துகொள்வதாக போலீசாரிடம் வாக்கு கொடுத்து அதன்படியே ஐந்துநிமிடத்தில் முடித்துக்கொண்டார். 

மொத்தகூட்டமும் சீமான் பேச்சை முழுவதுமாக கேட்டபின்தான் கலைந்தது. இந்த கூட்டத்தில் சீமான் பேசும்போது வெகு நிதானமாக பேசினாலும் தன் கருத்துகளை மிக ஆணித்தரமாக வைத்தார். சுமார் 25000 பேருக்குமேல் கூடியிருந்த கூட்டம் சீமான் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒரு சான்று. சமீப வருடங்களில் பிரியாணி, குவார்ட்டர், ஆயிரம் ரூபாய், நாளிதழ்களில் கால், அரை, முழுபக்க விளம்பரங்கள் கொடுக்காமல் வந்த கூட்டம் இது. வந்த அத்துணை பெரும் ஒரு மாற்றத்துக்கான ஆவலை கொண்டிருந்தார்கள். கலைஞர் பற்றி பேசும்போதெலாம் கூட்டத்தினர் அடித்த கமெண்டுகள் அவர்மேல் எத்தனை வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதைக்காட்டியது. 

எனக்கிருக்கும் கவலையே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சீமான் தன் அரசியல் இருப்பை நிர்ணயம் செய்துகொள்ளவேண்டும் என்பதே. அதற்கு இப்போது தன்னுடன் இணைய வருகிறவர்களை சரியாக ஆராய்ந்து இணைத்துக்கொள்ளவேண்டும், ஏற்கனவே இருக்கிற அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் வந்து சேர்ந்தால் அவரின் நோக்கத்தை குலைத்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

காலம் நிச்சயம் அதனை சொல்லிவிடும் அவர் பத்தோடு பதினொன்றா? அல்லது ஒரு விடிவெள்ளியா? என்பதை என்றாலும் நேற்று அவருக்காக கூடிய கூட்டம் "ஒரு மாற்று அரசியலுக்கான சாவியாக" அவர் இருப்பார் என்பதையே காட்டியது.

25 டிச., 2010

பிசாசுகள் உலவும் நகரம்...

கிராமங்களின் நடு இரவுப்பிசாசுகள் 
பகலில் பெயர்கின்றன நகரம் நோக்கி
சிறிது இடைவெளிகளில் 
பேருந்துகளிலும்... 

அலுவலக மதிய உணவு நேரங்களில்...
ரங்கநாதன் தெரு கூட்ட நசுக்கல்களில்...
எங்கணும் உலவும் பிசாசுகளில்
பால்பேதங்கள் இருந்ததில்லை,
சிறிய உரையாடல்களில் 
கடந்து விடுகிற தருணங்களில்
சிதறப்படும்
சொற்களின் குரூரம் 
நள்ளிரவுகளில் 
இமைகளைத் திறந்து அமர்ந்துகொள்ளும்,

நேற்று அதிகாலை 
தன் கோரப்பற்களை காட்டி முறைத்தது 
கண்ணாடியில் 
நான் நன்கறிந்த ஒரு மாயப்பிசாசு...

24 டிச., 2010

தலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..

இந்தியா ஒரு ஆன்மீக புண்ணிய பூமி, உலகமெலாம் மென்பொருள் அறிவாளிகளை அனுப்பிய தேசம், மிகுந்த புத்திசாலிகள் நிறைந்த நாடு என நம்மை நாமே பெருமையாக பேசுவது உண்டு. ஆனால் உண்மையில் நாம் நமக்கான நிர்வாகிகளை ஒழுங்காக தேர்வு செய்திருக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் கோரசாக பதில் சொல்லுகிறோம். உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் இன்றைய நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பது ஊடகங்களை கவனிப்பவர்களுக்கு தெரியும், பொதுவாகவே எந்த அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது. காரணம் ஆளும் வர்க்கம், ஒரு காலத்தில் மன்னர் ஆட்சி நடந்து முடிந்து, ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்து போய்விட்டபின்னும் நம்மிடம் இருக்கும் அடிமை மனோபாவம் மாறவேயில்லை. 

இந்தியாவின் அத்தனை அரசியல் கட்சி தலைவர்களுமே மன்னர்களைபோல்தான் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள், அவர்களுக்கான தொண்டர்களும் குறுநில மன்னர்களாக தங்களை நினைத்துகொண்டு தங்கள் ஒரு அரசியல் கட்சியின் தனித்த அடையாளமாக காட்டிக்கொள்வதில்தான் முனைப்பாக இருக்கிறார்கள்.இந்தியாவின் தற்போதைய பெரிய அரசியல் கட்சியான காங்கிரசை நிர்வாகிக்கும் ராஜீவ் குடும்பத்தினர், தங்கள் பெயருக்கு பின்னால் காந்தி என்ற பெயரை போலியாக வைத்துகொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏமாற்றுகிறது. காந்தி என்ற அவர்களின் பெயரின் பிற்பாதியை எடுத்துவிட்டால், அவர்களால் அரசியலில் பிழைக்க முடியாது. தமிழகத்தின் அரசியலை எடுத்துகொண்டால் கலைஞரின் குடும்பம் மொத்தமும் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு கோலோச்சுகிறது, பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க வின் செயலாளர் (நிரந்தர) அவருக்கும் , அவரின் தோழிக்கும் வாரிசு இல்லையென்றாலும் தோழியின் சொந்த பந்தங்கள்தான் அந்த கட்சியின் உரிமையாளர்கள், பா.ம.க, ராமதாஸ் மற்றும் அவர்தம் குடும்பதினர்களால் நிர்வாகிக்கப்படும் கட்சி, மாற்று அரசியல்வாதியாக இருப்பார் என நம்பப்பட்ட விஜயாகந்துக்கு அவரும் மனைவியும், மச்சானும் நிர்வாகிகள். மற்ற அரசியல் கட்சிகளை பற்றி பேசத்தேவையில்லை, அதன் காரணம் உங்களுக்கே தெரியும்.

இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக இப்படி அரசியல்வாதிகளை பாதுக்காக்கவே செயல்படுகிறது. தங்கள் உயிரை பாதுகாத்துகொள்வதில் அவர்கள் காட்டும் முனைப்பும் அக்கறையும் சாதாரண மனிதர்கள் விசயத்தில் அவர்கள் ஏன் காட்டுவதில்லை?. சாதரண மக்கள் தினசரி சாலைகளில் அடிபட்டு செத்துபோகிறார்கள், ஆனால் அவர்களுக்கான முறையான சாலை பாதுகாப்போ, மருத்துவ வசதிகளோ இல்லை. ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் நாட்டின் வசதிமிகுந்த தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். எந்த அரசியல்வாதியும் அரசாங்க மருத்துவமனைகளுக்கு போவதே இல்லை. இப்படி அரசியல்வாதிகள் திமிர்த்தனத்துடன் இருக்க காரணமே அவர்களிடம் இருக்கும் தொண்டர்கள் கூட்டம்தான். இன்றைக்கு இருக்கிற அத்தனை அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் சுயநலம் பற்றிய கவலையில் இருப்பவர்கள்தாம். அவர்களுக்கு நாடு, மக்கள் பற்றிய அக்கறையெல்லாம் துளியும் கிடையாது. கறை ( (கறை படிந்தவர்கள் என்பதாலா?) வேட்டிகளை கட்டிக்கொண்டு, அல்லது சட்டை பைகளில் தங்கள் தலைவர்களின் படம் தெரியும்படி வைத்துகொண்டு இவர்கள் அடிக்கும் கூத்து நீங்கள் அன்றாடம் பார்ப்பவைதான்.

அன்றாடம் நாம் பார்க்கும், படிக்கும் ஊடகங்களும் இந்த அரசியல்வாதிகளுடயது என்பதால், அவர்களும் மானாட, மயிலாட, ஜோடி No.5 . அல்லது குடும்பதில் இருக்கும் எல்லோரையும் கெட்டவர்களாகவே காட்டும் சீரியல்கள் என இப்படி மூளையை மழுங்கடிக்கும் நிகழ்சிகளை தந்து நம்மை சிந்திக்கவிடாமல் ஆக்கிவிட்டார்கள்.  நாம் நம் பிள்ளைகளையும் இதற்க்கு பழக்கி விட்டதால், உடல் விளையாட்டுகளை அவர்களும் மறந்தே போய்விட்டனர். திட்டமிட்டே உருவாக்கபடும் அடிமை வாழ்வுக்கு நாம் ஏறக்குறைய தயாராகிவிட்டோம்.  

இதற்கான மாற்று இப்போது வராது என்றே நான் நினைக்கிறேன். ஒரு ஓட்டு மொத்த புரட்சி ஏற்பட்டால் ஒழிய மாற்றங்கள் வர வாய்ப்பே இல்லை. அதுவரைக்கும் ஏறும் விலைவாசியை பொறுத்துக்கொண்டு மக்களாகிய நாம் வாய்மூடி வாழத்தான் வேண்டும். 

பதிவுலகத்திலும் மாற்று சிந்தனைகள் மிகக்குறைவாக இருப்பதும் வருத்தமே. எழுதும் பதிவர்களும் மிகுதியாக காதல் கவிதைகளை எழுதுகிறேன் என வரிகளை மாற்றிபோட்டு எரிச்சல்படுத்திக்கொண்டும், அல்லது மொக்கையாக எழுதி அதனை நகைச்சுவை என்றுவேறு சொல்லி வெறுப்பேற்றியும் வருகிறார்கள். அல்லது நாளிதழ்களை படித்துவிட்டு எழுதுவதும், மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவதும், இதற்கென்று ஒரு குழுவாக நூறு பின்னூட்டங்களுக்கு மேல் காப்பி, பேஸ்ட் செய்தும் அதனை பெருமையாக சொல்லிக்கொண்டும் இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்தம் தொண்டர்களுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லையென நிரூபிக்கிறார்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,  பதிவர்களே கொஞ்சம் அறிவுபூர்வமா சிந்திக்கப்பா...

23 டிச., 2010

பதிவர்களின் கொண்டாட்டம்..

இந்த வாரம் பதிவர்களுக்கான சிறப்பு வாரம். 

25.12.2010 அன்று மாலை 4.30 மணிக்கு  டிஸ்க்கவரி புக் பேலஸில் பதிவர் சுரேகாவின் நீங்கதான் சாவி என்கிற புத்தக வெளியீட்டு விழாவுடன் குகன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தக விமர்சனக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

26.12.2010 அன்று மாலை 5.30 மணிக்கு  தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய்ய நூலகத்தில் உயிர்மை வெளியீடாக பணிரெண்டு நூல்கள் வெளியிடப்படுகிறது.

26.12.2010 அன்று மாலை 5.00 மணிக்குசெ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, தியாகராய நகரில் கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியிடப்படுகிறது.

26.12.2010  ஈரோட்டில் காலை 11.00 மணிக்கு  ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் நடைபெறுகிறது.

பதிவர்கள், பதிவுலக வாசகர்கள் அனைவரும் தங்களது நேரத்தை ஒதுக்கி கலந்துகொள்ள வாய்ப்பு உள்ள விழாக்களில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு கருத்துகளை பரிமாறிக்கொள்வதின் மூலம் ஒரு புதிய நட்பு வட்டத்தை நாம் பெறலாம்..

22 டிச., 2010

வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க - பகுதி இரண்டு...

இதற்கு முந்தய பதிவில் விவசாயம் செய்ய அனைவரையும் வரவேற்றிருந்தேன். இந்த பதிவில் அதன் எதிர்கால பலன்களையும், விவசாயம் செய்வதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றியும் ஓரளவுக்கு அலசலாம். இன்றைய தேதியில் விவசாயம் என்பது, கிராம விவசாயிகள், தனித்தனியாக மிகக்குறைந்த அளவே நிலத்தில் பயிரிட்டு அப்படி பயிரிட்ட வெள்ளாமைகளை ஒழுங்காக அறுவடை செய்ய இயலாத நிலைதான் பரவலாக இருக்கிறது. பெரிய விவசாயிகள் எனப்படும் நிலசுவாந்தார்கள் தங்கள் பரந்துபட்ட வயல்களுக்கு நிறைய ஆழ்துளை கிணறுகளை போட்டு இலவச மின்சாரத்தை பயன்படுத்தி கண ஜோராக விவசாயம் செய்வார்கள். எங்கள் பகுதிகளில் தமக்கு போக எஞ்சிய நீரை மணிக்கு இவ்வளவு என வாங்கிகொண்டு விற்கவும் செய்வார்கள். கூட்டுறவு சங்கங்கள், மற்றும் அரசு வங்கிகள் இவர்களுக்கு மட்டும்தான் இருக்கும் அனைத்து கடன்களையும் கொடுக்கும் பின் அது தள்ளுபடியாகும் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த நிலசுவாந்தார்கள் பெரும்பாலும் தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் இருக்கிற சொற்ப நிலங்களையும் தங்கள் மகள்களின் திருமணத்திற்காக அல்லது பிள்ளைகளின் படிப்புக்காக பெரிய விவசாயிகளிடம் விற்றுவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். பொருளாதார புரட்சி அடைந்து விட்டோம், நாடு மறுமலர்ச்சி அடைந்து விட்டது எனக்கூவும் பொருளாதார வல்லுனர்கள் ஏ.சி அறையில் அமர்ந்துகொண்டு அட்டவணை தயாரிப்பதுடன் சரி, ஆனால் நாடு உண்மையில் ஊழலில் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. சரி விவசாயத்திற்கு வருவோம், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அதில் பல் நோக்கு விவசாயம் செய்வதால் ஒரு நான்கு பேர் இருக்ககூடிய குடும்பத்தால் நிம்மதியாக வாழமுடியும். பல்நோக்கு விவசாயம் என்பது ஒரே நேரத்தில் தொடர்புள்ள நிறைய பயிர்வகைகளை பயிரிடுவது. பொதுவாகவே அன்றாடம் காய்கறிகளுக்கு என தனியாக ஒரு விற்பனை வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தையும் பிரித்து மிகுதியாக கீரை வகைகளையும், காய்கறிகளையும் இயற்க்கை முறையில் பயிரிட்டு அருகில் இருக்கும் நகரத்திற்கு எடுத்து சென்று நேரிடையாக விற்பனை செய்தால் இடைதரகர் ஏதும் இல்லாது மக்களுக்கும் நல்ல பொருள் கிடைக்கும், விவசாயிக்கும் அதிக லாபம் கிடைக்கும், கூடுதலாக இரண்டு பசுமாடுகளும், கொஞ்சம் ஆடுகளும், கோழிகளும் வளர்த்து வர அது தனியாக லாபத்தை தரும்.

இன்னொன்று இன்றைக்கு நிறைய கிராமங்களில் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி நிலங்களை  குத்தகைக்காக விடுகிறார்கள். அப்படி கிடைக்கும் நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து பயிர்செய்து பார்க்கலாம். விவசாயம் முழுக்க இயற்க்கை சார்ந்தது என்பதால் நீங்கள் விவசாயம் செய்த பகுதியில் எந்தந்த சீசனில் அதிக மழை பெய்யும் என்பதை அங்குள்ள பெரிசுகளை கேட்டால் பட்டியல் தருவார்கள், மேலும் அந்த பகுதி நிலங்களில் அதிகமாக விளைந்த பயிர்வகைகளையும் தெரிந்து கொள்ளலாம், மண் பரிசோதனை மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். குறைந்தது இருபது ஏக்கர் நிலம் இருந்தால் ஒரு மாடல் விவசாயப்பன்னையை நம்மால் அமைத்துவிடமுடியும். எல்லா எந்திரங்களும் மானிய விலைகளில் அரசால் தரப்படுகிறது, அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். என்னால் அப்படியெல்லாம் உழைக்க முடியாது என்பவர்கள்.கனி வகைகளை தரும் மரங்களை நட்டு வைத்து குறிப்பிட்ட காலம் வரைக்கும் மட்டும் காப்பாற்றினாலே போதும் பின்னாளில் அது மிகசிறந்த பலனை தருவதோடு நிலத்தின் மதிப்பையும் பன்மடங்கு உயர்த்தும்.

பண்ணை தொழில் முறையில் நீர்பிடிப்பு அதிகமுள்ள பகுதி என்றால் நிறைய குளங்களை வெட்டி மீன் வளர்க்கலாம், முறையாக பராமரிக்காத மீன் குளத்தில்கூட இயற்கையாக அதில் கிடைக்கும் உணவுகளை உட்கொண்டு வளரும் மீன்களால் பலன் இருக்கும், ஆனால் தஞ்சை மாவட்டம் முத்துபேட்டையில் நிறைய விவசாயிகள் மீன் வளர்ப்பதை முழுநேர தொழிலாக செய்து வருகிறார்கள். ஒரு நேரத்தில் செயற்கை இறால் வளர்ப்பால் கோடிசுவரர் ஆனவர்கள் இந்தபகுதியில் அதிகம். ஆனால் மீன் வளர்ப்பை போல் இறால் வளர்ப்பதை அலட்சியமாக செய்ய முடியாது. அப்படி செய்தால் அது மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். 

எல்லா கிராமங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி விவசாயம் செய்வதால்தான் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையான மழைப்பொழிவை சமீப காலமாக சந்திக்கிறோம் அதனால் பயிர்கள் மூழ்கி மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்துகின்றன. ஆனால் அதைபற்றிய எச்சரிக்கை இல்லாமல் தொடர்ந்து இழப்பு ஏற்ப்பட்டு நிவாரணத்துக்கு கையேந்துகிறோம். அரசும் நம்மை அப்படி வைத்து பார்க்கத்தான் விரும்புகிறது என்பதால், தொலைநோக்கு பார்வையால் இதனை எப்போதும் அவர்கள் சரி செய்யவே மாட்டார்கள். எனவே மாற்றங்கள் என்பது தனிமனிதனில் இருந்துதான் துவங்க வேண்டும். தனித்தனியாக நாம் விழிப்புணர்வு பெறும்போது ஒரு கட்டத்தில் நமக்கு நமக்கான இலக்கு தெளிவாக புரிந்துவிடும்.

பல்நோக்கு விவசாயம் பற்றிய கருத்தரங்குகள் இப்போது அடிக்கடி குறைந்த கட்டணத்தில் நடைபெறுகின்றன. அதில் சந்தை வாய்ப்புகள் உட்பட பயிற்பராமரிப்பு மற்றும் விவசாய மேலாண்மை பற்றி சிறந்த பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த விவசாயிகளைக்கொண்டே சொல்லித்தருகிறார்கள். விவசாயத்தை முழுநேர தொழிலாக மேற்கொண்டால், ஒரு நிம்மதியான இயற்க்கைத்தன்மையுடன் இணைந்த வாழ்வைப்பெறலாம், உணவு உற்பத்தி சார்ந்த விசயம் என்பதால் நமக்கான அடிப்படை உணவுதேவைகளை நாமே உருவாகிக்கொண்டு அதனை வியாபாரம் செய்து பலன் பெறுகையில் ஏற்ப்படும் மனநிறைவு அலாதியானது. 

கூடிய மட்டும் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் ஒரு மாடல் பண்ணையை ஏற்ப்படுத்தி நேரடியாக விவசாயம் செய்து பார்க்கலாம் என அதற்க்கான முன் ஏற்ப்பாடுகளை இப்போதில் இருந்தே துவக்கி இருக்கிறேன். என்னில் மிகுதியாக படித்த விசயங்களை பகிர்ந்துகொள்வதைவிடவும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில்தான் உண்மைத்தன்மை இருக்கும் என் நம்புபவன் நான். 

இதுபற்றிய உங்கள் அனைவரின் கருத்துகளையும் அறிய விழைகிறேன்...  

21 டிச., 2010

காதல்பறவை...

கிளிபோல ஒரு பெண்... 
மைனா போலவும், குயில் போலவும் 
இன்னும் இருவர் 
பேசிப்பழக ஆசைப்பட்டு 
மெல்ல சிரித்து வைத்ததில் 
கிளி போன்ற பெண்ணின்
மூக்குச் சிவக்க முறைக்க 
மைனா போன்றவள் நாணத்தால் 
முகம் கவிழ்ந்தாள்...
குயில் போன்றவள் கலவரமாகி 
அங்கும் இங்கும் பராக்கு பார்க்க 
காகம் போல் வந்த ஆண்கள் இருவர்
கழுகுப்பார்வையால் துளைக்க
அப்பறவைப் பெண்டிருக்கான
பேருந்து வந்துவிடவே 
மாற்று இரைகளைத் தேடின 
எமது கண்களும் ...

20 டிச., 2010

பயோடேட்டா - கேபிள் சங்கர் ...


பெயர்                        : கேபிள் சங்கர்
இயற்பெயர்                    : சங்கர் நாராயண்                 
தலைவர்                   : பழகும் எல்லாருமே
துணைத் தலைவர்கள்                : 'வர்' க்கு பதில் 'வி' போட்டால் டஜன் 
                                                            
கணக்கில் தேறும்
   
மேலும்
துணைத் தலைவர்கள்            : அததுக்கு தனித்தனி குரூப் இருக்கு 
வயது                        : யூத்துன்னு சொல்ல நினைச்சா தொப்பை வில்லனா
                                      நிக்குது
தொழில்                    : கேபிள் டிவி, எழுத்தாளர், நடிகர், அப்புறம் இயக்குனர் 
                                      கடைசியில் பிளாக்கரும்              
பலம்                        : கொத்து புரோட்டா, சினிமா விமர்சனம்... அப்புறம் என்ன 
                                    சரக்கடிச்சாலும் ஸ்டெடியாக நிற்பது
பலவீனம்                    :நேத்து புதுசா வந்த பிளாக்கர் கூடவும் தண்ணி அடிப்பது         
நீண்ட கால சாதனைகள்            : N0.1 பிளாக்கர் 
சமீபத்திய சாதனைகள்            : சினிமா வியாபாரம் 
நீண்ட கால எரிச்சல்            : தயாரிப்பாளர் சிக்காதது ("நமக்கு வாய்த்த அடிமைகள் 
                                                   மிகவும் திறமைசாலிகள்" என்ற டயலாக்கை ஒரு 
                                                   முறையாவது சொல்லிவிடலாம் என்று ஆசை!)
சமீபத்திய எரிச்சல்                : ஒரே நேரத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் பேசுவது
மக்கள்                        : சினிமா பார்ப்பவர்கள், பிளாக் படிப்பவர்கள் மட்டும்       
சொத்து மதிப்பு                : இதுவரைக்கும் பதினெட்டு லட்சம் ஹிட்டுகள்   
நண்பர்கள்                    : பார்க்கும், பழகும் எல்லாருமே       
எதிரிகள்                    : கலாசாரக் காவலர்கள்         
ஆசை                        : சினிமா இயக்க (படம் பாத்துட்டு வர்றவங்க 
                                      'கொன்னுட்டான்யா(!)ன்னு சொல்லணும்)                
நிராசை                    : இயக்கப்போகும் முதல்சினிமா பார்க்க அப்பா என்கிற 
                                     ஆசான் இல்லாமல் போனது
பாராட்டுக்குரியது                :சிறந்த திரைக்கதை ஆசிரியர்        
பயம்                        :இல்லாத மாதிரி நடிப்பது ( வீட்டில் வெரிஃபை பண்ணனும்)
கோபம்                    : அரசியல்வாதிகள் மீதல்ல
காணாமல் போனவை            : சினிமா, சீரியலில் நடிப்பது 
புதியவை                    : மீண்டும் ஒரு காதல் கதை (கதை மட்டும்தான். நிஜம்னு 
                                       சொன்னா உதை நிச்சயம்!)           
கருத்து                    : மொக்கை சினிமா உட்பட ஒரு படம் விடாமல் ( உலக 
                                    மொழிகள் அனைத்தும் உட்பட) எப்படிப் பார்க்க நேரம் ஒதுக்குகிறார் 
                                    என்பது வியப்பு.            
டிஸ்கி                        : இவரின் படத்தை யாராவது 'கொத்துபரோட்டா' போடணும். 
                                      அதை ஆசைதீர பாக்கணும். 

19 டிச., 2010

ஏன் அப்படி செய்தாள்?...


எனக்கொரு காதல் இருந்தது 
சித்திரை மாதச் சிறு மழையென
சட்டென வந்தவள்
என்னுள்
மொட்டென முகிழ்த்தவள்...

மனதாழம் தோண்டிப்

பதில் வாங்கும் பிடிவாதக்காரி 
சிறு வாதம் செய்தாலும்
தோல்வியை விரும்பாத
அழுத்தக்காரி ..
அவளைப் பிடிக்கின்றபோதே
வெறுக்கின்ற மனசும்
சிரிக்கின்றபோதே
அழுகின்ற ரவுசும்...
என்ன காதலோ?!


அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்
விருப்பங்களை திணிக்கும் ராட்சசி..

வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை..

புனைவுகளால் பின்னப்பட்ட
நாடகங்கள் அவள் ..
காற்றும், இலையும்
உறங்கும் இரவொன்றில் 
அவள் அழைப்பு,
எதிர்முனையில் கண்ணீர்
எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை
துண்டிக்க..

மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

18 டிச., 2010

ஒரு விவாகரத்து...


சமீப வருடங்களில் நான் எந்தப் பஞ்சாயத்துகளிலும் கலந்து கொண்டது கிடையாது. ஊரில் என் தந்தையார் ஒரு பஞ்சாயத்தார். மிகவும் நேர்மையான ஆள் அவர். எந்த அளவுக்கு நேர்மையான ஆள் என்றால், நான் இரண்டாண்டுகளுக்குமுன் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மெசினை சிங்கப்பூரில் வாங்கியபோது, அந்த மெசினை, எனக்கு ஏற்கனவே தர வேண்டியிருந்த பணப்பாக்கிக்காக தன் நிறுவனப்பெயரில் சொந்தச் செலவில் இறக்கித் தருவதாகவும், அதற்கு ஏற்பபடும் செலவினங்களை எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்துக்கொள்ளச் சொல்லியும் சொன்னார். அப்போது தொடர்ச்சியாக அவர் இந்தியாவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை இறக்கிக்கொண்டு இருந்ததால் நானும் அவரே இறக்கித் தரட்டும் என அவரிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா வந்துவிட்டேன். இந்தியா வந்ததும் அவர்தான் இறக்கித் தருகிறார் என்பதை என் நெருங்கிய நண்பர்கள்  கேள்விப்பட்டு வேண்டாண்டா அவன் ஏற்கனவே உன்னை செமயா ஏமாத்துனவன் அவன்கிட்ட கொடுக்க வேணாம் என எச்சரித்தனர். விதி வலியது போலும், நான் என் நண்பர்களின் அறிவுரையைப் புறக்கணித்தேன். மெசினும் ஏற்றப்பட்டது. கையில் தற்சமயம் காசு இல்லை அதனால் கண்டெய்னர் வாடகை மட்டும் தாருங்கள் என முதலில் சிங்கப்பூர் பணமாக ஆயிரம் வெள்ளிகள் பெற்றுக்கொண்டார். ஒரு வாரத்தில் கண்டெய்னர் வந்து விட்டது என இங்கு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு கண்டேயினரை செட்டிங்கில்தான் எடுக்கவேண்டும் அதனால் தாமதமாகும் என ஒரு மூன்று மாதத்தைத் தள்ளினார். இப்படியே ஏதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லி ஆறு மாதம் கடந்தபோது முதன்முறையாக நான் கோபப்பட்டு பேசியபோது அவரும் தன் குரலை உயர்த்தினார். பேச்சு முற்றி உன்னால் முடிந்தால் என்னிடம் பொருளை வாங்கிப்பாரு என சவால் விட்டுவிட்டு தன் தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டார். அதன்பிறகு அந்த ஆளைத் தேடுவதிலேயே என் பொழுது கழிந்தது. ஒரு கட்டத்தில் என் சொந்த ஊரான மன்னார்குடியில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டு என் ஆட்களை அனுப்பி அவரைத் தூக்கிவந்து தங்கள் வசம் வைத்துகொண்டு பணம் கொடுத்தால் அனுப்பிவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அந்த நபரோ என் தந்தைக்கு போன் செய்து நான் அவரைக் கடத்தி வைத்திருப்பதாகவும் பணம் தந்தால்தான் விடுவிப்பேன் என மிரட்டுவதாகவும் போனிலேயே அழ, என் தந்தை எனக்கு போன்  செய்து விபரம் கேட்டபின், அவனை விட்டுர்றா பாவம் என்றார். நானோ அப்ப என் பணம் எங்கே என்று கேட்டபோது அவரோ, டேய் அவன்தான் கண்டிப்பா தர்றேன்னு சொல்றானே, மேலும் பணம் கொடுக்கலே என்பதற்காக ஒருவனைத் தூக்கி வருவது நியாயமான செயல் இல்லை. உனக்கு பணம்தானே வேணும், அதை நான் தருகிறேன், இப்ப அவனை விடப்போறியா? இல்லையா? என்று என்னிடம் கோபமாக கேட்டார். வேறு வழியின்றி நானும் அவரை விட்டுவிட்டேன். இன்றுவரைக்கும் என் பணமோ, மெசினோ வந்து சேரவில்லை, அந்த நபரும் மன்னார்குடியில் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். என்ன நான் என் தந்தையுடன் இன்றுவரைக்கும் சரியாகப் பேசுவது கிடையாது. நான் ஊருக்கு கடந்த ஒரு வருடமாகப் போவதும் கிடையாது.

இப்படிப்பட்டவரின் மகனான என்னை பெரும்பாலும் லண்டனுக்குப் பணம் கட்டி ஏமாந்தவர்களும், சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்புகிறேன் எனச்சொல்லி பணம் வாங்கிகொண்டு காலம் தாழ்த்துபவர்களிடம் இருந்து பணம் பெற்றுத்தரச் சொல்லியும்தான் நிறைய பஞ்சாயத்துகள் வரும். நிறைய பேருக்கு பணம் திருப்பி வாங்கித்தந்தும் இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக ஒரு வெறுப்பில் என் பழைய தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதால், இப்போது யாருக்குமே என்னை தொடர்பு கொள்ளும் வழிமுறைகள் இல்லை என்பதாலும் கொஞ்சம் நிம்மதியாக நான் உண்டு என் வேலை உண்டு என்றே இருந்தேன். கடந்த வாரம் என் நண்பர் என்னை வழியில் பார்த்துவிட்டு தனது அக்கா மகளுக்கு ஒரு பிரச்சினை நாங்கள் குடும்பத்தினர் மட்டுமே போகிறோம். நீங்களும் வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் எனக் கெஞ்சவே நான் வேறு வழியில்லாமல் அவருடன் போனேன். போகும்போதே என்னிடம் விபரங்களை சொல்லிக்கொண்டே வந்தார். அதாவது தனது அக்கா மகளின் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும், நான்கே நாட்கள்தான் மாப்பிள்ளை வீட்டில் வாழ்ந்தது எனவும், மறுபடி எடுத்த சமாதான நடவடிக்கைகளில் உடன்பாடு ஏற்ப்படவில்லை அதனால் இன்றைக்குப் பேசி பிரிச்சு வச்சுடலாம் என்றார். நான் அதெப்படிங்க முடியும்ன்னு கேட்டேன், அவரோ இல்லைங்க, அக்கா பொண்ணு இனிமே அந்த மாப்பிள்ளையோட வாழ முடியாதுன்னு சொல்லிடுச்சு, அப்படியே வாழ வச்சா நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லுது, அதனாலதான் சொல்றேன் பிரிச்சு வச்சிரலான்னு என்றார். சரி நான் அங்க போய் என்ன பேசணும் என்று கேட்டேன். அவரோ மாப்பிள்ளை வீட்டில் இரண்டு லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிருக்காங்க, நாங்க பொண்ணுக்கு போட்ட நகைங்க, எங்க பொண்ணு வீட்டுக்கு வரும்போதே கையோட எடுத்து வந்துருச்சு, நாங்க சீர் செஞ்ச சாமான்கள மட்டும் திருப்பி எடுத்துகிட்டா போதும், மற்றபடி அவங்க கல்யாண செலவைக் கேட்டா ஏதாவது கொடுக்கலாம் என்றார்.

மாப்பிள்ளை வீட்டாருடன் நான் மட்டுமே சென்று பேசினேன், முதலில் அவர்கள் கூறிய குறைகளைப் பொறுமையாக கேட்டேன். அவர்கள் தரப்பில் முதலிரவில் பெண் ஒத்துழைக்கவில்லை எனவும், மறுநாள் காலை மாப்பிள்ளை தன் அன்னையிடம் இதுபற்றிச் சொல்லவும், அவரின் அன்னை பெண்ணைக்கூப்பிட்டு உனக்கு யாரோடவாவது காதல் எதாச்சும் இருக்கான்னு கேட்க, அதற்கு பெண் கோபமாகி வீட்டை விட்டுப் போய்விட்டது எனவும், அதற்கடுத்த சமாதான முயற்சிகள் பலனற்று பெரிய விரிசலை உண்டு செய்துவிட்டதாகவும், இனி வாழவைக்க முடியாது எனவும் சொல்ல, பிரச்சினையை அவர்களே முடிவுக்கு கொண்டு வருவது அறிந்து, சரிங்க முடிச்சிக்கிறது அப்படின்னு வந்திட்டீங்க, இப்ப என்ன பண்ணலாம் எனக்கேட்டேன். 

பொதுவாகவே திருமணம் ஆன ஏழு வருடங்கள் கழித்து இம்மாதிரி விவாவகரத்து வழக்குகள் இருவருக்குள்ளும் வந்தால் மட்டுமே மாப்பிள்ளை தரப்பில் பெரிதாக பாதிப்பு இருக்காது, ஆனால் ஒரு வருடத்திற்குள் இப்படி பிரச்சினை என்றால் மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளே தள்ளும் அளவிற்கு சட்டம் பெண்கள் பக்கம் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆனால் இந்தப்பெண் நான் கோர்ட்டுக்கெல்லாம் வர விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டதால் இதனை எந்த அளவு சுமூகமாக முடித்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவு உங்களுக்கு நல்லது என சொல்லிவைத்தேன். அவர்களும் அதைக்கேட்டு கல்யாண செலவைக் கொடுக்க வேண்டாம், அவர்கள் வீட்டு சீரை இப்போதே எடுத்துப்போகட்டும், நாம் ஒரு வக்கீல் முன்னிலையில் இந்த விசயத்தை சமாதானமாக எழுதிக்கொள்ளலாம் என முடிவாகி பெண் வீட்டார் தரப்பில் சாமான்களை எல்லாம் ஏற்றி முடித்தபின் ஒரு பெரிய தகராறு உருவானது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் எரிச்சலில் இருந்த என் கோபம் தலைக்கு ஏறிப்போய் நான் இரு தரப்பையும் பார்த்து எச்சரித்து பெண் வீட்டாரை கொஞ்சம் கடுமையாகப் பேசி அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலை மாப்பிளை வீட்டார் தரப்பில் எனக்குத் தொடர்பு கொண்டு முதல்நாள் நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு நான்தான் இதை முடித்துவைக்க வேண்டும் எனகேட்க, நான் பெண் வீட்டாரை அழைத்துப்பேசி நேற்று வெள்ளியன்று (17.12.2010) இரவு, மாப்பிள்ளை, பெண் இருவரையும் அழைத்து மீண்டும் ஒருமுறை வாழ விருப்பமா எனக்கேட்டு அவர்கள் இருவரும் தங்களுக்குச் சம்மதமில்லை என்றதும், மனம் ஒப்பாததால் இருவரும் பிரிந்துகொள்கிறோம், இருவருக்கும் மறுமணம் செய்து கொள்ள நேர்ந்தால் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை செய்துகொள்ளமாட்டோம் எனவும், விரிவாக எழுதி கையெழுத்து வாங்கிகொண்டு பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். 

எல்லாம் முடிந்து மணப்பெண்ணின் தாயார், மணப்பெண்ணின் தாலியை என்னிடம் ஒப்படைத்து மணமகன் வீட்டில் கொடுக்க சொன்னார். தாலி செண்டிமெண்ட் பார்க்காத, தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான், ஆனால் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...

16 டிச., 2010

செட்டு மாத்திரைகளும், சில பதிவர்களும் பின்னே ஞானும்...

கடந்தவாரம் "நான் இறந்து போயிருந்தேன்" என்று ஏற்கனவே பாரத் பாரதி என்ற வலை தளத்திற்காய் நான் எழுதிய சவால் கவிதையை ( சாவு கவிதை என்று கேட்டிருப்பின் பொருத்தமாக இருந்திருக்கும்) பதிவேற்றியபோது ஆரம்பித்தது மெதுவான இருமல். அந்த போட்டியில் வெற்றி பெற்றதாக யாரையும் இன்னும் அறிவிக்கவில்லை. எல்லோருமே சுமாராக எழுதிவிட்டோமா என்ன? . அந்தக்கவிதைக்கான பின்னூட்டத்தில் சில அன்பு உள்ளங்கள் ( நன்றி மறப்பது நன்றன்று) பதறிப்போய் ஆறுதல் சொல்லியிருந்தனர். அவர்களுக்கு என் வந்தனம். இத்தனை மிகுந்த இடர்ப்பாட்டிலும் மேலதிக இடர்ப்பாடாய் தொடர்ந்த அழைப்புகளால் என்னை வெறுப்பேற்றி செல்பேசியை அணைக்க வைத்த விந்தை மனிதன் அனேகமாக அடுத்த இலக்காக ஜோதிஜியையோ, அல்லது கேபிளையோ குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்தி பரவியது. சில பேருக்கு மைக்கைப் பார்த்தால் ஒரு வியாதி... "அன்பார்ந்த.." அப்டீன்னு ஆரம்பிச்சு ஒண்ணேமுக்கால் மணிநேரத்துக்குக் குறையாமல் குதறி எடுத்து விடுவார்கள். இந்தாளுக்கு செல்ஃபோன் போல... ஹ்ம்ம்... 

மருதுவரைப்பார்த்தால் என்ன மருந்து கொடுப்பாரோ! அல்லது ஊசி போடுவாரோ!! எனப்பயந்துபோய் தெரிந்த மெடிக்கலில் செட் மாத்திரை வாங்கி வந்து முழுங்கிக் கிறங்கியதால் ஒரு முழு பாட்டில் மதுவை ஒரே ஆளாக அடித்தது மாதிரி இந்த உலகம் திடீரென வேகம் பெற்று சுழன்றதில் சில பூர்வ ஜென்ம தொடர்புகள் கிடைக்கபெற்றன. எத்தனை செட் மாத்திரைகள் போட்டாலும் வேலைக்கு ஆகாது என கிடைத்த தொடர்பு இடைவெளியில் சன்னலுக்கு வெளியே தோன்றி மிரட்டும் பிசாசுபோல விந்தைமனிதன் வந்து பயமுறுத்த அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றபோது எல்லா டெஸ்டுகளும் எடுத்து வா என என்னை பயமுறுத்தாமல் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என அதே செட் மாத்திரைகளை(கவனிக்க : அதே!) எழுதி தந்தார். என்ன கூடுதலாய் நூறு ரூபாய் பீஸ் கொடுக்கவேண்டி வந்தது.

இந்த இடத்தில் செட் மாத்திரையின் மகத்துவம் பற்றிக் கூறவேண்டியது ஆழிசூழ் உலகு போல தலைவலி,காய்ச்சல்,ஜலதோஷம் இன்னபிற வியாதிகள் புடைசூழ வாழும் கண்மணிகளுக்கு அவசியமாகிறது. காய்கறி மார்க்கெட்டில் போய் கதம்பமாய் கத்திரி,புடலை, வெண்டை,வெங்காயம் எனக் கூறுகட்டி வாங்கி வருவோமே அதை நினைவுகூர்ந்து கொள்ளுங்கள். தலைவிதியை எழுதும் பிரம்மதேவனின் கையெழுத்துக்கு காப்பிரைட் வாங்கிவைத்துக் கொண்டு ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதும் டாக்டர்களோடு மாரடித்ததில் மெடிக்கல்காரர்களின் நியூரான்களில் ஆழமாகப் படிந்துபோன விஷயம் ஒன்றுதான். நான்கு அல்லது ஐந்து வகை மாத்திரைகளை மாற்றி மாற்றிக் கொடுத்தால் சின்னச்சின்ன வியாதிகள் பறந்துபோம். சும்மா கோழிரத்தம் பார்ப்பதோடு கிராமப்புற பரிவாரதேவதைகள் திருப்தி அடைவதுபோல...

செட் மாத்திரை என்றவுடன் இன்னொன்றும் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இதே மாதிரி செட் மாத்திரைகளை கர்ணவள்ளல்போல வாரி வழங்குவார்கள். அந்த மாத்திரைகளில் த/அ என்று எழுதப்பட்டு இருக்கும். எனக்கு என்னவோ வந்த வியாதி 'தானா (குணம்) ஆனா'த்தான் உண்டு என்பதன் குறியீடாகவே அது தோன்றுகிறது

மறுநாள் இரவு இடைவிடா இருமலில் அவதியுற்று கிடந்தபோது ஆப்கனில் இருந்து வந்திருந்த நந்தா தொடர்பு கொண்டு சந்திக்கவேண்டும் என்று சொன்னபோது நான், கேபிள், தஞ்சாவூரான் சுரேகா மற்றும் சுரேகா நண்பர் கோபால் என ஒரு மினி பதிவர் சந்திப்பில் வல்லரசு மனிதர்களின் ஆப்கன் அபகரிப்பை பற்றி தொடர்ந்து பேச அதற்கு தொட்டுக்கொள்ள வைத்திருந்த ரெட் லேபில் முழுவதுமாக உள்ளிறங்கி இளவயது போர்னோ கதைகளில் மையல் கொண்டு இரவை பனிரெண்டு மணிக்கு நகர்த்தி வைத்தது. இன்னும் நேரம் நகர்ந்தால் கடிகாரம் ஒன்றுக்குப் போய்விடும் என்ற பயத்தால் (அட... ஒரு மணிக்குய்யா!) சந்திப்பை நாளை தொடரலாம் என தள்ளி வைத்து ஒரு புதிய உணவகத்திற்கு கேபிள் அழைத்து செல்ல அன்றைய இரவும் சமீபமாய் நான் மதுவகைகளை தவிர்த்து வந்ததால் இந்த இருமலுக்கு இதுவே சிறந்த நிவாரண் 90 என்ற அறிவுறுத்தலின் பேரில் அருந்திய ரெட் லேபிளையும் என் உடல் வென்று தூக்கத்தை தின்று விட்டதால் விடிகாலை கிடைத்த அசதியில் தூங்கி விழித்தபோது காலை பத்து மணிதான் என்று தெரிந்தபோது எழுந்த எரிச்சலில் கிளம்பிய இருமல் அடங்க இன்னொரு செட் மாத்திரை போட்டுவிட்டு சும்மா விட்டம் பார்த்து பொழுதை தள்ளினேன். ரசம் சேர்த்து பிசைந்த மதிய உணவு தட்டிலேயே இருந்ததைப்பார்த்து வேறெதாச்சும் செஞ்சு தரவா? எனகேட்ட மனைவியை கும்பிட்டு ஒரு குளியல் போட்டு வெளியே வந்தால் மீண்டும் போனில் நந்தா...

டிஸ்க்கவரி புக் பேலசின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கொஞ்சம் தலையை காட்டிவிட்டு கீழே வந்து பேசிகொண்டிருந்தோம். இன்றைக்கு வேறொரு நல்ல கடைக்கு சாப்பிட அழைத்துப்போங்கள் என்றார் நந்தா. தஞ்சாவூரான் மாப்ளே சொன்ன ஓட்டலுக்கு போனா மணி இரவு ஒன்பதுதான் ஆனதால் இவ்வளவு சீக்கிரமே சாப்பிடுவதா? என வருத்தப்பட்டதில் கேபிள் தலைமையில் சபை கூடி அருகில் உள்ள கடைக்குப் போய் கடமையாற்றி வரலாம் எனப்போய் வி.எஸ்.ஒ.பியுடன் சமரசம் செய்துகொண்டு மறுபடி ஓட்டலுக்கு வந்தால் பரிமாறிய மணிப்பூர்க்காரியுடன் (பேரு கேரோலினாம்) கேபிள் தன் உணவுப் பிரதாபத்தை எடுத்துரைக்க அவள் சமாளிக்க முடியாமல் நாளை வந்தால் கண்டிப்பாக சிறப்பாக தருகிறேன் எனக்கும்பிடு போடாத குறையாக மேலதிக டிப்ஸ்களை பெற்றவாறே வழியனுப்பி வைத்தாள்.

நந்தாவை வீட்டில் இறக்கி விட்டு என் வீடு வந்தேன். அன்று இரவும் என் இமைகள் என்னிடம் சண்டை போட்டு மேற்கொண்டு தலைவலி வந்து கோடாலி தைலத்தில் ஆரம்பித்து கிடைத்த தலைவலி தைலங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அப்பியதில் எரிச்சல் ஏற்ப்பட்டு ஒரு அரை மணி நேரம்  குளித்ததில் உடல் சமாதானமாக மொட்டை மாடியில் எவ்வளவு நேரம் நடந்தேன் என தெரியாத அளவுக்கு சுற்றி வந்ததில் அசதி ஏற்ப்பட்டு வழக்கம் போல் காலையில் தூக்கம். மறுநாள் ஒரு விவாகரத்து பிரச்சினையை சுமூகமாக (சுமூகமா இல்லாததுனாலதானே விவாகரத்தே வருதுன்னு யாராச்சும் அறிவுசீவி கேட்டீங்க...) தீர்த்து வைத்து முடிக்கும்போது மீண்டும் பிரச்சினை வெடிக்க ஆரம்பிக்க துவங்கியபோது என் எரிச்சலும் எல்லை மீற இதற்கு மேல் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்கள் ஆர்வத்தை பாராட்டி இத்துடன் முடித்துக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்..

15 டிச., 2010

இரண்டு கவிதையும், ஒரு என்கவுண்டரும்...

நான்,
இதற்க்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன் 
அது வேறொரு பெயரில் நீங்கள் படித்திருக்கலாம் 
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி 
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை 
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம் 
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட 
அந்த சம்பவத்தை,
அல்லது 
என் கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள் 
இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள் 
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே 
தொலைபேசியில் பாராட்டும் சிலர் 
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை 
அல்லது சில கவிதைகளை வெளியிடச்சொல்லி 
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி 
பின் மாநிலம் முழுதும் பரவி 
மொழிபெயர்க்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி 
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட 
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும் 
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும் 
முதன்முறையாக இடது வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து 
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும் 
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும் 
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும் 
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும் 
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும் 
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த 
உலகும், 
என்னை அல்லது அந்தக்கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க 
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும் 
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும் 
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக 
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில் 
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால் 
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக 
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு 
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த 
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள் 
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட 
ஒன்று கூடி, 
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகபோவதாக 
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென 
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி 
ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால் 
மிகுதியாக அரசாங்க சொத்துகளும் 
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும் 
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்க்காக யார் இறந்திருந்தாலும் 
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு 
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க 
கலவரத்திற்கு காரணமாக என்னை கைது செய்த 
அரசாங்கம் 
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து 
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும் 
இனி, 
நான் எழுதவே மாட்டேன் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு 
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை 
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல் 
எழுதிக்கொடுத்துவிட்டதால் 
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை 
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை 
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு 
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள் 
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும் 
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள் 
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம் 
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால் 
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ 
என் மரணம் நிகழக்கூடும் 
அப்போது மீண்டும் என்ன்னைபற்றி 
அல்லது 
அந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும் 
வேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது 
திட்டமிடப்பட்டோ நிகழ்த்தப்பட்டு 
மறக்கடிக்கப்படுவோம்  
நானும்,
என் இரண்டு கவிதைகளும்...

14 டிச., 2010

ஒரு மில்லியன் டாலர் ...

கடந்த ஒரு வாரமாக மிகுந்த உடல் பிணியால் அவதிப்பட்டதால் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை.  இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இரண்டு நாளுக்கு முன்னதாக என் நெருங்கிய நண்பர் எனக்கு போன் செய்து ஒரு முக்கியமான விசயம் பேசவேண்டும் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார். என்ன விசயம் என்றால் தன்னிடம் இருக்கும் யு.எஸ் டாலர்களை மாற்ற வேண்டும், அதற்காக உங்கள் உதவி தேவை என்றார். சட்டபூர்வமாக வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற வேண்டும் எனில் உங்களிடம் வெளிநாடு சென்று திரும்பியதற்கான அத்தாட்சி இருக்க வேண்டும். ஆனால் பர்மா பஜார் போன்ற இடங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை அத்தாட்சி எதுவும் இல்லாமல் வாங்கிக்கொள்வார்கள். அப்படி சிலரை எனக்குத்தெரியும் என்பதால் நண்பர் என்னை அணுகியிருக்கலாம் என நினைத்து எவ்வளவு டாலர் கைவசம் இருக்கு என்றேன். ஒரு மில்லியன் டாலர் என்றார், என் உடல் அசதியையும் மீறி நான் சத்தமாக சிரிக்கவும், அண்ணே ஏன்னே சிரிக்கிறீங்க என்றார். இல்ல தம்பி உங்களிடம் இருக்கும் ஒரு மில்லியன் டாலரும் ஒரே நோட்டா இருக்குமே என்றதும், "ஆமாண்ணே எப்புடி கரெக்டா சொல்றீங்க" என்றார். 


1957 வாக்கில் அமெரிக்காவின் பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கிளப்களில் ஒன்றுதான் "மில்லியன் டாலர் கிளப்" இதில் சேரும் தகுதி என்னவென்றால் ஒரு மில்லியன் டாலருக்கு மேலாக சொத்து வைத்திருப்பவர்கள் மட்டும் சேரலாம். அப்படி சேரும் உறுப்பினர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் நோட்டை படமாக போட்டு ஒரு சான்றிதழ் தருவார்கள். அந்த சான்றிதழின் ஒரு நகல்தான் ( ஆமாம் ஒரிஜினல் கூட கிடையாது) நண்பரின் கையில் இருப்பது. இன்றைய தேதியில் மில்லியன் டாலர் சொத்து என்பது நான்காம் உலக நாடுகளில் இருப்பவர்களிடம் கூட இருப்பதால், அமெரிக்காவில் இதன் வடிவம் மாறிவிட்டது. ஆனால் எண்பதுகளில் இதன் ஒரு காப்பி எப்படியோ இந்தியாவுக்குள் வந்து தமிழகத்தின் பெரிய புள்ளிகள் வசம் சுற்றியது. அப்போதே என் மாமா ஒருவர் இந்த பணத்தை மாற்ற அலைந்ததில் அவருக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகி ஒரு கட்டத்தில் அது என்னிடம் வந்து அப்போதே நான் விசாரித்து தெரிந்து கொண்ட விசயம்தான் இந்த மில்லியன் டாலர் கிளப் பற்றியும் அதன் விவரங்களும் அதன்பிறகு இன்றுவரைக்கும் பலபேர் இதுபற்றி என்னிடம் ஏதோ ஒருவகையில் இதைப்பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.



அமெரிக்க டாலர் என்பது ஒன்று, ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்ற மதிப்புகளில் மட்டுமே இருக்கும். எல்லா நோட்டுகளின் அளவும் ஒரே மாதிரி இருக்கும். கள்ள நோட்டு புழக்கத்தில் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதன் உள்நாட்டை பொறுத்தவரையில் பணப்பரிமாற்றங்கள் கார்டுகளில்தான் இருக்கும் என்பதாலும் அப்படி ஒரு ஏற்பாடு. சீட்டிங் செய்வது இன்றைக்கு வலையுலகம் வந்தபின் எக்கச்சக்கமாய் வந்துவிட்டாலும், அதிலும் நைஜீரியா ஆட்கள் மெயில் வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் தங்கள் திருவிளையாடல்களை அனுப்பியிருப்பார்கள். பெரும்பாலும் இப்படி ஏமாந்து போவதே அதிகம் படித்தவர்கள்தான். முகம் தெரியாத ஒருத்தன் நமக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றெலாம் யோசிக்காமல் அவன் விரித்த வலையில் சிக்கி குறைந்த பட்சம் ஐநூறு டாலர்களாவது இழந்தவர்கள் அதிகம். எல்லோருக்கும் சுலபமாக பணம் சம்பாதிக்கும் ஆசை வந்துவிட்டதால் இம்மாதிரி ஏமாற்றும் கும்பலும் அதிகமாகிவிட்டன. நாம் நம் உழைப்பை தகுந்த திட்டமிடல்களுடன் செய்வதில்லை. தொலை நோக்கு பார்வைகளும் நம்மிடம் இல்லாது போய்விட்டது. உடனடியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் தாரக மந்திரமாக இருக்கிறது. 



நண்பருக்கு அனைத்தையும் விளக்கி சொன்னேன். அதன்பிறகும் அவர் என்னை நம்பாத மாதிரிதான் தெரிந்தது. தான் இதுவரைக்கும் இது சம்பந்தமாக இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்துவிட்டதாகவும், அது கிடைச்சா கூட பராவாயில்லை என்றார். ஒரு மில்லியன் டாலர் தன் கையில் இருப்பதாக நினைததபோது எவ்வளவு கனவு கண்டிருப்பார். அது வெற்றுதாள்தான் என அறிந்தபின்னும் அதற்கு செலவு செய்த பணம் மட்டும் கிடைத்தால் போதும் என்று சொன்னபோது அவரின் அறியாமையை நினைத்து வருத்தமாக இருந்தது.இன்னும் நிறைய இளைஞர்களும் இந்த ஏமாற்று மோசடியில் சிக்கி வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பது பெருங்கொடுமை.



இன்னும் வேறுவகையான மோசடிகளும் இருக்கின்றன. ஸ்க்ராப் மார்க்கெட் என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வகையான மோசடி என்னவென்றால் "ஐநூறுகோடி ரூபாய் மதிப்பான ஸ்க்ராப் இருக்கிறது. ரொம்ப சீப்பாக 10 கோடியில் முடித்துவிடலாம்" என்பார்கள். முதலாமவர் அடுத்தவரிடம் சொல்ல அவர் இன்னொருவரிடம் சொல்ல என்று இது ஒரு சங்கிலி மாதிரி போய்க்கொண்டே இருக்கும். மெனக்கெட்டு லாட்ஜில் ரூமெல்லாம் போட்டு சீரியஸ் டிஸ்கஷன் வேறு நடக்கும். ஆளாளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று செலவாவதுதான் மிச்சம். கடைசியில் வேதனையான காமெடி என்னவென்றால் இந்த மாதிரி மோசடிகளில் வாங்குவரும் விற்பவரும்(seller &buyer) ஒரே ஆளாகத்தான் இருந்து தொலைவார்.



அடுத்துப் பார்த்தால் மண்ணுளிப்பாம்பு, கருப்பு ரத்தமுள்ள பூனை இவற்றைப் பிடிக்க ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பின்னால் ஏராளமான அப்பாவிகள் பத்துபைசாவுக்குக் கூட பிரயோசனமின்றி அலைவார்கள். கொஞ்சநாள் லட்சாதிபதி கனவில் மிதந்ததுதான் மிச்சம்.




இது சம்பந்தமாக எழுத நினைத்தபோதுதான் ஒரு ரியல் எஸ்டேட் மோசடியும், பேராவூரணிக்காரர்கள் செய்யும் பைனான்ஸ் மோசடியும் நினைவுக்கு வந்தது அதனை நாளை எழுதுகிறேன்..

10 டிச., 2010

நான் இறந்து போயிருந்தேன் ...

நான் இறந்து போயிருந்தேன் 
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று 
தனியாக 
வழிதவறிய 
மலை உச்சியின் நேர் கீழே 
என் உடல் ..

இன்னும் சற்று நேரத்தில் 
இறந்து போகும் என் செல்பேசியும் 
தொடர்ந்த அழைப்புகளுக்கு 
பதிவு செய்யப்பட்ட 
பதில்களை கேட்டு வெறுத்துப்போன 
மனைவி 
சபித்துக்கொண்டே அடுப்பை அணைப்பாள்.

நாளையோ 
அதற்கடுத்த நாளோ 
என்னை தேடும் உத்திகள் மேற்கொள்ளப்படும்
அதற்குள் 
மலை எறும்புகளுக்கோ 
ஓநாய்களுக்கோ உணவாகி 
எலும்புகளாய் கிடைப்பேன்..

அதுவரை 
என்னை நேசித்தவர்களின் 
நம்பிக்கைகளில் 
நான் உயிருடன்தான் இருப்பேன்.. 

8 டிச., 2010

பெண் எப்போது அடிமையானாள்?...

பெண்களை "சூத்திரர்களான" நாலஞ்சாதியருக்கு கீழாக மதிக்க வேண்டும் என்கிறது மனுதர்மம்.இந்துமதம் என்கிற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொருளாகத்தான் மதிக்கிறது. மற்றும் சில சமூகங்களில்  பர்தா என்றும், கோஷா என்றும்,திரை என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்கவேண்டியவர்கள் என்றும்.முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போகவேண்டியவர்கள் என்றும். ஆண்கள் பல பெண்களை மணக்கலாம், ஆனால் பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருசனுக்கு மேல் கட்டிக்கொண்டு வாழக்கூடாது என்றும் கூறப்படுகிறது. "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை" என்கிற வாக்கியபடி பார்த்தல், கற்பு என்பது சொல் தவறாமை: அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமிலாமல் என்றுதான் இருக்கிறது.தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்கிற பதம் காணக் கிடைகாதமைக்கு ஆணாதிக்கமே காரணம்.

கற்புக்காக புருசனின் கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கவேண்டும் எனும் கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாயவேண்டும். ஆணின்தன்மை கோபம்.வீரம், வண்மை, ஆளும்திறன் கொண்டு விளங்குகிறது என்றும், பெண்ணின்தன்மை அன்பு, மேன்மை, சாந்தம், பேணும் திறன் கொண்டு விளங்குகிறது என்றும் சொல்கின்றனர். நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப்போலவே பெண்ணுக்கு வீரம், வண்மை, கோபம், ஆளும்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதே. மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலரின் குணங்களும் சமமாக இருக்கவேண்டும் என்பதே எமது கருத்தாகும். இருபாலரும் சமமாகவே இருக்க இயற்கையில் இடம் இருக்கிறது. ஆனால் அது செயற்கையால் - ஆண்களின் சூழ்ச்சியால் மாறுபட்டு வருகிறது.

இன்றைய தினம் காதலைப்பற்றி பேசுகிறவர்கள், "காதலென்பது, அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல என்றும்," " அன்பு, ஆசை, காமம், நேசம்" வேறு , காதல் வேறு" என்றும்."அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே சொல்லமுடியாத ஒரு தனிகாரியதிற்க்கு ஏற்படுத்தப்பட்டது என்றும், அதுவும் "இருவருக்கும் இயற்கையாக உண்டாக்ககூடியது என்றும்" "அக்காதலுக்கு இணையானதாக உலகில் வேறு ஒன்றும் இல்லையென்றும்" அதுவும் " ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் மாத்திரம்தான் இருக்கமுடியும்" என்றும். பிறகு அந்தப்படி இருவருக்கும் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு எந்தக்காரணம் கொண்டும் எந்தகாலத்திலும் அந்தக்காதல் மாறவே மாறாது என்றும். அந்தப்படி அக்காலத்தில் வேறு யாருடனும் காதல் ஏற்படாது என்றும், அப்படி ஏற்பட்டால் அது காதலல்ல என்றும் அதை விபச்சாரம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய ஒருபோதும் அது காதலாகாது என்றும், பிறகு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டுவிட்டால் வேறு எந்தப்  பெண்ணிடமும் காதலோ, விரகமோ, மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன. இந்தப்படி ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதலேற்ப்பட்டு பின்பு காதலில்லாமலும் போகலாம் அது போலவே பெண்ணுக்கு ஆணிடத்திலும் காதல் ஏற்ப்பட்டு பின் காதலிலாமலும் போகலாம். ஆகவே ஒரு மனிதன் ஒரு வஸ்துவை பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - தனக்கு வேண்டும் என்று விரும்புகிறானோ, அது போலதான் இந்தக்காதல் என்பதும் ஏற்படுவதாக இருக்கிறதே ஒழிய வேறு எந்தக்காரணம் என நமக்கு புலப்படவில்லை.

இந்து மதத்தில் அறுபதினாயிரம் பெண்கள் வரையிலும், இஸ்லாத்தில் நான்கு பெண்கள் வரையிலும், கிறித்துவத்தில் எண்ணிக்கை குறிப்பிடப்படாமலும் பெண்களை மனம் செய்ய இடம் இருக்கிறது. இந்து மதத்தில் இந்துக்கடவுள்கள் பல திருமணங்கள் செய்துகொண்டதாகவும் மேலும் பல வைப்பாட்டிகள் வைத்திருந்ததாகவும் மத ஆதாரங்கள் காணப்படுவதுடன் மேலும் அந்தக்கடவுள்களை அந்தப்படியே அதாவது பல மனைவியர் மற்றும் வைப்பட்டிகளுடனே தமிழர்கள் - இந்துக்கள் பூசை, கல்யாண உற்சவம் முதலியன செய்து வருகிறார்கள். இஸ்லாமிய மதத்திலும் நாயகம் முகம்மது நபி அவர்கள் ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புகொள்ளப்படுகிறது. ஆகவே இதை மறுப்பவர்களோ இம்மாதிரி கடவுள்களையோ, நபியையோ குடறம் சொல்லுகிறவர்கள் ஒரு காலும் தங்கள் மதத்தின் பேரால் அல்லது கடவுளின் பேரால் மறுக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளமுடியாது. 

விபச்சாரம் என்கிற வார்த்தையின் அனுபவ தத்துவத்தை கூர்ந்து பார்த்தால் "விபச்சாரம்" என்பது பெண்கள் அடிமைகள் என்கிற குறிப்பு வார்த்தையாகத்தான் கொள்ளவேண்டும். அதாவது நமது நாட்டில் விபச்சாரம் செய்வதற்கென்று பெண்களைத்தான் பழி சுமத்தி சாதியை விட்டு தள்ளி வைக்கிறார்களே ஒழிய - வீட்டை விட்டு துரத்தியிருக்கிரார்களே ஒழிய, அடித்தும், உதைத்தும், வைத்தும் வைக்கிறார்களே ஒழிய சில சந்தர்ப்பங்களில் கொலை கூட செய்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கேள்விப்படிருகிறோம். சில இடங்களில் விபசாரம் ஆண்களுக்கு தற்பெருமை, கீர்த்தியாகவும், சில ஆண்கள் தங்களை பெருமையாகவும் சொல்வதைப்பார்த்து இருக்கிறோம். மக்களும் விபச்சாரி மகன் என்றால்தான் கொபித்த் கொள்கிறார்களே ஒழிய, விபசாரன் மகன் என யாரயும் சொல்வதில்லை. 

இப்படி புரச்சிகரமான கருத்துகளை சொன்னது தந்தை பெரியார், இவர் எழுதிய பெண் எப்போது அடிமையானால் என்ற புத்தகத்தில் இருந்து சில கருத்துகளை மட்டுமே உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

தரவிறக்கி முழுவதுமாக படிக்க...


இந்த இணைப்பு வேலை செய்யாவிட்டால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்தால் PDF தொகுப்பை அனுப்பி வைக்கிறேன்...