18 டிச., 2010

ஒரு விவாகரத்து...


சமீப வருடங்களில் நான் எந்தப் பஞ்சாயத்துகளிலும் கலந்து கொண்டது கிடையாது. ஊரில் என் தந்தையார் ஒரு பஞ்சாயத்தார். மிகவும் நேர்மையான ஆள் அவர். எந்த அளவுக்கு நேர்மையான ஆள் என்றால், நான் இரண்டாண்டுகளுக்குமுன் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு மெசினை சிங்கப்பூரில் வாங்கியபோது, அந்த மெசினை, எனக்கு ஏற்கனவே தர வேண்டியிருந்த பணப்பாக்கிக்காக தன் நிறுவனப்பெயரில் சொந்தச் செலவில் இறக்கித் தருவதாகவும், அதற்கு ஏற்பபடும் செலவினங்களை எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்துக்கொள்ளச் சொல்லியும் சொன்னார். அப்போது தொடர்ச்சியாக அவர் இந்தியாவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை இறக்கிக்கொண்டு இருந்ததால் நானும் அவரே இறக்கித் தரட்டும் என அவரிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா வந்துவிட்டேன். இந்தியா வந்ததும் அவர்தான் இறக்கித் தருகிறார் என்பதை என் நெருங்கிய நண்பர்கள்  கேள்விப்பட்டு வேண்டாண்டா அவன் ஏற்கனவே உன்னை செமயா ஏமாத்துனவன் அவன்கிட்ட கொடுக்க வேணாம் என எச்சரித்தனர். விதி வலியது போலும், நான் என் நண்பர்களின் அறிவுரையைப் புறக்கணித்தேன். மெசினும் ஏற்றப்பட்டது. கையில் தற்சமயம் காசு இல்லை அதனால் கண்டெய்னர் வாடகை மட்டும் தாருங்கள் என முதலில் சிங்கப்பூர் பணமாக ஆயிரம் வெள்ளிகள் பெற்றுக்கொண்டார். ஒரு வாரத்தில் கண்டெய்னர் வந்து விட்டது என இங்கு முப்பத்தி ஐந்தாயிரம் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு கண்டேயினரை செட்டிங்கில்தான் எடுக்கவேண்டும் அதனால் தாமதமாகும் என ஒரு மூன்று மாதத்தைத் தள்ளினார். இப்படியே ஏதாவது ஒரு சால்ஜாப்பு சொல்லி ஆறு மாதம் கடந்தபோது முதன்முறையாக நான் கோபப்பட்டு பேசியபோது அவரும் தன் குரலை உயர்த்தினார். பேச்சு முற்றி உன்னால் முடிந்தால் என்னிடம் பொருளை வாங்கிப்பாரு என சவால் விட்டுவிட்டு தன் தொலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டார். அதன்பிறகு அந்த ஆளைத் தேடுவதிலேயே என் பொழுது கழிந்தது. ஒரு கட்டத்தில் என் சொந்த ஊரான மன்னார்குடியில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டு என் ஆட்களை அனுப்பி அவரைத் தூக்கிவந்து தங்கள் வசம் வைத்துகொண்டு பணம் கொடுத்தால் அனுப்பிவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அந்த நபரோ என் தந்தைக்கு போன் செய்து நான் அவரைக் கடத்தி வைத்திருப்பதாகவும் பணம் தந்தால்தான் விடுவிப்பேன் என மிரட்டுவதாகவும் போனிலேயே அழ, என் தந்தை எனக்கு போன்  செய்து விபரம் கேட்டபின், அவனை விட்டுர்றா பாவம் என்றார். நானோ அப்ப என் பணம் எங்கே என்று கேட்டபோது அவரோ, டேய் அவன்தான் கண்டிப்பா தர்றேன்னு சொல்றானே, மேலும் பணம் கொடுக்கலே என்பதற்காக ஒருவனைத் தூக்கி வருவது நியாயமான செயல் இல்லை. உனக்கு பணம்தானே வேணும், அதை நான் தருகிறேன், இப்ப அவனை விடப்போறியா? இல்லையா? என்று என்னிடம் கோபமாக கேட்டார். வேறு வழியின்றி நானும் அவரை விட்டுவிட்டேன். இன்றுவரைக்கும் என் பணமோ, மெசினோ வந்து சேரவில்லை, அந்த நபரும் மன்னார்குடியில் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். என்ன நான் என் தந்தையுடன் இன்றுவரைக்கும் சரியாகப் பேசுவது கிடையாது. நான் ஊருக்கு கடந்த ஒரு வருடமாகப் போவதும் கிடையாது.

இப்படிப்பட்டவரின் மகனான என்னை பெரும்பாலும் லண்டனுக்குப் பணம் கட்டி ஏமாந்தவர்களும், சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்புகிறேன் எனச்சொல்லி பணம் வாங்கிகொண்டு காலம் தாழ்த்துபவர்களிடம் இருந்து பணம் பெற்றுத்தரச் சொல்லியும்தான் நிறைய பஞ்சாயத்துகள் வரும். நிறைய பேருக்கு பணம் திருப்பி வாங்கித்தந்தும் இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக ஒரு வெறுப்பில் என் பழைய தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதால், இப்போது யாருக்குமே என்னை தொடர்பு கொள்ளும் வழிமுறைகள் இல்லை என்பதாலும் கொஞ்சம் நிம்மதியாக நான் உண்டு என் வேலை உண்டு என்றே இருந்தேன். கடந்த வாரம் என் நண்பர் என்னை வழியில் பார்த்துவிட்டு தனது அக்கா மகளுக்கு ஒரு பிரச்சினை நாங்கள் குடும்பத்தினர் மட்டுமே போகிறோம். நீங்களும் வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் எனக் கெஞ்சவே நான் வேறு வழியில்லாமல் அவருடன் போனேன். போகும்போதே என்னிடம் விபரங்களை சொல்லிக்கொண்டே வந்தார். அதாவது தனது அக்கா மகளின் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும், நான்கே நாட்கள்தான் மாப்பிள்ளை வீட்டில் வாழ்ந்தது எனவும், மறுபடி எடுத்த சமாதான நடவடிக்கைகளில் உடன்பாடு ஏற்ப்படவில்லை அதனால் இன்றைக்குப் பேசி பிரிச்சு வச்சுடலாம் என்றார். நான் அதெப்படிங்க முடியும்ன்னு கேட்டேன், அவரோ இல்லைங்க, அக்கா பொண்ணு இனிமே அந்த மாப்பிள்ளையோட வாழ முடியாதுன்னு சொல்லிடுச்சு, அப்படியே வாழ வச்சா நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லுது, அதனாலதான் சொல்றேன் பிரிச்சு வச்சிரலான்னு என்றார். சரி நான் அங்க போய் என்ன பேசணும் என்று கேட்டேன். அவரோ மாப்பிள்ளை வீட்டில் இரண்டு லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிருக்காங்க, நாங்க பொண்ணுக்கு போட்ட நகைங்க, எங்க பொண்ணு வீட்டுக்கு வரும்போதே கையோட எடுத்து வந்துருச்சு, நாங்க சீர் செஞ்ச சாமான்கள மட்டும் திருப்பி எடுத்துகிட்டா போதும், மற்றபடி அவங்க கல்யாண செலவைக் கேட்டா ஏதாவது கொடுக்கலாம் என்றார்.

மாப்பிள்ளை வீட்டாருடன் நான் மட்டுமே சென்று பேசினேன், முதலில் அவர்கள் கூறிய குறைகளைப் பொறுமையாக கேட்டேன். அவர்கள் தரப்பில் முதலிரவில் பெண் ஒத்துழைக்கவில்லை எனவும், மறுநாள் காலை மாப்பிள்ளை தன் அன்னையிடம் இதுபற்றிச் சொல்லவும், அவரின் அன்னை பெண்ணைக்கூப்பிட்டு உனக்கு யாரோடவாவது காதல் எதாச்சும் இருக்கான்னு கேட்க, அதற்கு பெண் கோபமாகி வீட்டை விட்டுப் போய்விட்டது எனவும், அதற்கடுத்த சமாதான முயற்சிகள் பலனற்று பெரிய விரிசலை உண்டு செய்துவிட்டதாகவும், இனி வாழவைக்க முடியாது எனவும் சொல்ல, பிரச்சினையை அவர்களே முடிவுக்கு கொண்டு வருவது அறிந்து, சரிங்க முடிச்சிக்கிறது அப்படின்னு வந்திட்டீங்க, இப்ப என்ன பண்ணலாம் எனக்கேட்டேன். 

பொதுவாகவே திருமணம் ஆன ஏழு வருடங்கள் கழித்து இம்மாதிரி விவாவகரத்து வழக்குகள் இருவருக்குள்ளும் வந்தால் மட்டுமே மாப்பிள்ளை தரப்பில் பெரிதாக பாதிப்பு இருக்காது, ஆனால் ஒரு வருடத்திற்குள் இப்படி பிரச்சினை என்றால் மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளே தள்ளும் அளவிற்கு சட்டம் பெண்கள் பக்கம் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆனால் இந்தப்பெண் நான் கோர்ட்டுக்கெல்லாம் வர விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டதால் இதனை எந்த அளவு சுமூகமாக முடித்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவு உங்களுக்கு நல்லது என சொல்லிவைத்தேன். அவர்களும் அதைக்கேட்டு கல்யாண செலவைக் கொடுக்க வேண்டாம், அவர்கள் வீட்டு சீரை இப்போதே எடுத்துப்போகட்டும், நாம் ஒரு வக்கீல் முன்னிலையில் இந்த விசயத்தை சமாதானமாக எழுதிக்கொள்ளலாம் என முடிவாகி பெண் வீட்டார் தரப்பில் சாமான்களை எல்லாம் ஏற்றி முடித்தபின் ஒரு பெரிய தகராறு உருவானது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் எரிச்சலில் இருந்த என் கோபம் தலைக்கு ஏறிப்போய் நான் இரு தரப்பையும் பார்த்து எச்சரித்து பெண் வீட்டாரை கொஞ்சம் கடுமையாகப் பேசி அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலை மாப்பிளை வீட்டார் தரப்பில் எனக்குத் தொடர்பு கொண்டு முதல்நாள் நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு நான்தான் இதை முடித்துவைக்க வேண்டும் எனகேட்க, நான் பெண் வீட்டாரை அழைத்துப்பேசி நேற்று வெள்ளியன்று (17.12.2010) இரவு, மாப்பிள்ளை, பெண் இருவரையும் அழைத்து மீண்டும் ஒருமுறை வாழ விருப்பமா எனக்கேட்டு அவர்கள் இருவரும் தங்களுக்குச் சம்மதமில்லை என்றதும், மனம் ஒப்பாததால் இருவரும் பிரிந்துகொள்கிறோம், இருவருக்கும் மறுமணம் செய்து கொள்ள நேர்ந்தால் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை செய்துகொள்ளமாட்டோம் எனவும், விரிவாக எழுதி கையெழுத்து வாங்கிகொண்டு பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். 

எல்லாம் முடிந்து மணப்பெண்ணின் தாயார், மணப்பெண்ணின் தாலியை என்னிடம் ஒப்படைத்து மணமகன் வீட்டில் கொடுக்க சொன்னார். தாலி செண்டிமெண்ட் பார்க்காத, தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான், ஆனால் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...

35 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம்.

அன்பரசன் சொன்னது…

//அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...//

உருக்கம்ணே..

பெயரில்லா சொன்னது…

தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான்//

senthil sir உங்களோட எத்தனையோ பதிவு படிச்சு இருக்கேன் ஆன இது மாதிரி மனசு ஏதும் தாக்கம் கொடுத்ததில்ல...
நீங்க ரொம்ப கிரேட் சார்
அருமையா பதிவு

iniyavan சொன்னது…

இந்த மாதிரி வேலைகளுக்கு எல்லாம் போகாதீங்க செந்தில்.

THOPPITHOPPI சொன்னது…

கொஞ்சம் தாக்கம் ஏற்படுத்திய பதிவு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ல் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது..//
அது தான் தாலி செண்டிமெண்ட் போல .......

சௌந்தர் சொன்னது…

இப்போத்து இருக்கும் ஜோடிகள் எல்லாம் இப்படி தான் அண்ணா இரண்டு பேர் வாழ்கையும் வீண் தான்.

இனி சாப்பாட்டில் ஏன் உப்பு போடவில்லை என்று கேட்டால் கூட விவாகரத்து தான் நடக்கும் போல

Unknown சொன்னது…

//ல் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது..//

தாலி என்பது அந்த பெண்ணின் பிற்கால நீண்ட
வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்று உங்கள் மனதிற்கு தோணியிருக்கும். தப்பு பண்ணிட்டமோ என்ற எண்ணம் உஙகள் மனதில் கட்டாயம் வந்திருக்கும் அதனால் தான் நீஙகள் மதிக்காத தாலி உங்கள் கைகளை நடுங்க வைத்திருக்கும். எப்படியாயினும் பிரித்து வைத்தல் என்ற நிகழ்வை நாம் விரும்புவதில்லையே..

கமல் பட வசனம் போல மிடில் கிளாஸ் மனச்சாட்சி நமக்கெல்லாம்...

Unknown சொன்னது…

//இப்போத்து இருக்கும் ஜோடிகள் எல்லாம் இப்படி தான் அண்ணா இரண்டு பேர் வாழ்கையும் வீண் தான்//.

Unknown சொன்னது…

தங்கள் தந்தையார், உஙகள் நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார்?
உங்கள் தந்தையாரை உங்களுக்கு பிடிக்குமா, ஏனெனில் ஊருக்கும் ரொம்ப நல்லவர்-னு பேர் எடுத்த தந்தையை மகன்களுக்கு பிடிக்காது என்று சொல்வார்கள்.
சொத்து சம்பாரிக்காமல், வெறும் பேர் வச்சு என்ன பண்ணுவது இது மகன் தரப்பு வாதம்.

எப்படியோ வலையுலக சண்டைகளை தீர்த்து வைக்கும்
உங்களின் பணி; இப்போது விவாகரத்து பஞ்சாயித்து என நீண்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்..

Chitra சொன்னது…

தாலி செண்டிமெண்ட் பார்க்காத, தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான், ஆனால் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...


......ம்ம்ம்ம்...... என்னத்த சொல்ல.....

தமிழ் உதயம் சொன்னது…

உண்மையில் இது தர்மசங்கடமான நிலைமை.

அம்பிகா சொன்னது…

ஒரு உறவை முடித்து வைப்பதென்பது ஒருவிரும்பத்தாகாத நிகழ்வே! :-(((

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

//ஆனால் ஒரு வருடத்திற்குள் இப்படி பிரச்சினை என்றால் மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளே தள்ளும் அளவிற்கு சட்டம் பெண்கள் பக்கம் ஸ்ட்ராங்காக இருக்கிறது.//

இது போல் நிறைய நடக்கிறது.

test சொன்னது…

//அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது..//
அருமை!

vinthaimanithan சொன்னது…

அய்யோ! நா அப்பீட்டாயிக்கிறேன் சாமீ! இங்க ஒரே 'செண்டி' மழையா பேயுது... என் ஒடம்புக்காவாது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செண்ட்டிமெண்ட்டல் போஸ்ட்

ஈரோடு கதிர் சொன்னது…

அந்த ஐந்து லட்ச மெசின் மேட்டரை இன்னும் எப்படி ஜீரணித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இருதரப்பையும் சமாளித்து ஒரு முடிவை எட்ட வைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருந்திருக்க முடியாது. தனிப்பட்ட திறமை பாராட்டுதலுக்குரியதே!

vinthaimanithan சொன்னது…

//அந்த ஐந்து லட்ச மெசின் மேட்டரை இன்னும் எப்படி ஜீரணித்துக் கொண்டிருக்கிறீர்கள்?//
கதிரண்ணே... இதுக்கே இப்டி சொல்றீங்களே! இவரு ர்ர்ரொம்ப நல்லவரு...எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்கிற மனுசன்!

நா எந்தக் கதையைச் சொல்ல எதை விட!

ஹேமா சொன்னது…

வார்த்தைகளைக்
கட்டிப்போட்ட பதிவு செந்தில் !

ப.கந்தசாமி சொன்னது…

மனிதர்களுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு அறவே காணாமற்போயிற்று.இது மிகவும் கொடுமை.

a சொன்னது…

//
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் எரிச்சலில் இருந்த என் கோபம் தலைக்கு ஏறிப்போய் நான் இரு தரப்பையும் பார்த்து எச்சரித்து பெண் வீட்டாரை கொஞ்சம் கடுமையாகப் பேசி அனுப்பி வைத்தேன்.

//
அப்படியே மன்னார்குடிக்கு போய் அங்க சுத்திகிட்டு இருக்கும் ய ஏமாத்து பார்ட்டிய ரெண்டு மாத்து வேண்டியதுதானே???

கோவி.கண்ணன் சொன்னது…

கடைசிவரைவயில் மணமுறிவுக்கான காரணம் தெரியவில்லையெ

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கொடுமை...

rajasundararajan சொன்னது…

//தாலி செண்டிமெண்ட் பார்க்காத, தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான், ஆனால் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...//

மனுசன்யா நீ!

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

"மாப்பிள்ளை, பெண் இருவரையும் அழைத்து மீண்டும் ஒருமுறை வாழ விருப்பமா எனக்கேட்டு அவர்கள் இருவரும் தங்களுக்குச் சம்மதமில்லை என்றதும், மனம் ஒப்பாததால் இருவரும் பிரிந்துகொள்கிறோம், இருவருக்கும் மறுமணம் செய்து கொள்ள நேர்ந்தால் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை செய்துகொள்ளமாட்டோம் எனவும்மாப்பிள்ளை, பெண் இருவரையும் அழைத்து மீண்டும் ஒருமுறை வாழ விருப்பமா எனக்கேட்டு அவர்கள் இருவரும் தங்களுக்குச் சம்மதமில்லை என்றதும், மனம் ஒப்பாததால் இருவரும் பிரிந்துகொள்கிறோம், இருவருக்கும் மறுமணம் செய்து கொள்ள நேர்ந்தால் ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை செய்துகொள்ளமாட்டோம் எனவும்"

எத்தனை முறை அவர்கள் இருவரின் மனது ஒத்து போயிருக்கிறது பாருங்கள் , இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ , இந்த ஒற்றுமையை ஒரு படி உயர்த்தி வாழ வைத்திருக்கலாமோ , உங்கள் பேச்சு திறமை மீதுள்ள நம்பிக்கையில் கேட்கிறேன் , அவர்களிடம் மீண்டுமொருமுறை பேசலாமோ

மாணவன் சொன்னது…

//தாலி கட்டாத திருமணத்தை செய்தவன் நான், ஆனால் நேற்று அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...//

நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள் உணர்வுகளுடன்....

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி


யார மன்னார் குடியில தூக்கணும் சொல்லுங்கண்ணே தூக்கிடுவோம்

ங்கொய்யால நம்மகிட்டேவா!?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அந்தத் தாலியை கையில் வாங்கியபோது மட்டும் என் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்க்க, கைகள் லேசாக நடுங்கியது...//
என்ன செய்ய அது நம்ம பாரம்பரியம் ஆச்சே..

வைகை சொன்னது…

இந்த மாப்பிள்ளை மறுநாளே அம்மாவிடம் சொல்லி பெரிது படுத்தியிருக்க வேண்டாம்! என்ன செய்வது விதி வலியது!

நசரேயன் சொன்னது…

கட்ட பஞ்சாயத்து ஆள் கை வசம் இருக்கு ?

Butter_cutter சொன்னது…

நன்று வசிகர வார்த்தைகளால் கட்டிபோட்டுவிடீர்கள்

Santhappanசாந்தப்பன் சொன்னது…

மாப்பிள்ளை பையன் ரொம்ப அவசர குடுக்கை போல... இருவருக்குமான பிரச்சனைக்கான காரணம் இது ஒன்றுதான் என்றால், ரொம்பவே கொடுமை..!

Tirupurvalu சொன்னது…

U just check with girl she was in love .I saw 2 cases like this in 1 case lady had a kid also but refuse to live with husband and ran with her old lover .2nd story is worst story lady not sex with husband more than 1 year once her lover back from aboard she ran to her old lover .Old lover refuse then she back to husband asked excuse and living with him

தமிழ்க்காதலன் சொன்னது…

செந்தில் உங்களின் வெள்ளை மனசு அழகா வெளிப்பட்டிருக்கு. மிகவும் ஆழமா யோசிக்க வைக்குது... உங்களுக்கு ஒரு கேள்வி... இந்த பிரிவுக்கு ஒரு நியாயமான காரணம் இல்லாமல் எப்படி...? உண்மையான பிரச்னையை அலசாமல் விட்டாச்சோ, எதனால் மனம் ஒட்டாமல் போனது...?
முதலிரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்பது எந்த அளவுக்கு சரியான, உண்மையான காரணம் எனத் தோன்றுகிறது..? ஆனாலும்..... உங்களின் முடிவில்..... விழிகளில் கனம்.