தேவதை கதைகள் "அலமேலு" பாகம் -2
அதன்பிறகு இரண்டு வாரம் கழித்துதான் நான் தனஞ்செய் வீட்டுக்கு போனேன். அங்கு அந்த பெண் அலமேலுவை அன்றுதான் பார்த்தேன். அந்த பெண்ணின் பெயர் அலர்மேல் மங்கை சுருக்கமாக அலமேலு ஆகிவிட்டது. முகத்தில் எப்போதும் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. உங்களுக்கு இந்த வீடு வசதியாக இருக்கிறதா என கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே என்றது. எனக்கும் அது புரிந்தது ஏனென்றால் அந்த வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தது. எனக்கு நிறைய ஆடைகள் எடுத்து தந்தார் என எடுத்து வந்து காட்டியது. அவ்வளவும் நல்ல விலை உயர்ந்த ஆடைகள். வேறு குறைகள் இருக்கிறதா என்றேன். அவர் தினமும் தண்ணி அடிக்கிறார் தயவு செய்து அதை குறைக்க சொல்லுங்கள், மற்றபடி என்னிடம் மிக குறைவாகத்தான் பேசுவார். எனக்கு இங்கு இருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லண்ணே என சமைக்க போய்விட்டது. அன்று இரவு அங்குதான் சாப்பிட்டேன், அருமையாக சமைத்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் இருந்து பேசிய கருணாமூர்த்தியும் அங்கு இந்திய பணிபென்னை அழைத்துகொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் தான் தனன்ஜெயிடமும், அலமேலுவிடமும் பேசியாதாகவும், அந்த பெண் அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.
ஒரு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் தனஞ்செய் என்னை அழைத்தார், நானும் வேலைப்பளு காரணமாக அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. சரி வீட்டுக்கு வருகிறேன் என்றேன். ஆனால் அவரோ கோவிலுக்கு வாருங்கள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார். அங்கு போனவுடன் தனக்கு அலமேலுவை மிகவும் பிடித்திருக்கு எனவும் அவளை தான் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இதில் அலமேலுவுக்கு விருப்பமா என்றேன். இல்லை நண்பா அதை நீங்கள்தான் கேட்டு சொல்லவேண்டும் என்றார். இன்னைக்கே முடிவு பண்ணிடலாம் வாங்க வீட்டுக்கே போவோம் என வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில் எதனால் இந்த முடிவை எடுத்தீங்க என்று கேட்டேன். இடையில் அலமேலுவுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை, கடுமையான காய்ச்சல் இருந்தது, நான்தான் மருத்துவமனைக்கு கூட்டிசென்றேன். வீட்டிற்கு வந்தும் அவளால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை, நான்தான் அவளுக்கு கஞ்சி வைத்து கொடுத்தேன், அந்த நாட்களில் நான் வீட்டை வழக்கம்போல் குப்பையாக்கி விட்டேன். அப்போதுதான் தெரிந்தது, எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன் மேலும் அந்த நாட்களில்தான் அவளின் கதையை கேட்டேன் அது என்னை மிகவும் பாதித்தது. நான் ஏன் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளக்கூடாது என முடிவு செய்தேன். என்னால் அவளிடம் நேரிடையாக கேட்கமுடியவில்லை. அதனால்தான் உங்களை கேட்க சொல்கிறேன் என்று அலமேலுவின் கதையை சுருக்கமாக சொன்னார்.
அலமேலுவும் தாயை இழந்த பெண், சொந்த சித்தியே அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாழ்கைபட்டாள். ஆரம்பத்தில் மிகவும் பாசமாக இருந்த சித்தி தனக்கு இரண்டு குழந்தைகள் வந்ததும், பாசம் குறைந்து போனது அலமேலு நன்றாக படிக்கும் பெண். ஆனால் வெட்டு வேலை மற்றும் காணி வேலைகளை அலமேலுதான் செய்யவேண்டும். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு என நிறுத்திவிட்டனர், மேலும் அப்போது தன தூரத்து உறவினர் பேச்சை கேட்டு தன்னை பணிபென்னாக சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டனர். காசு அனுப்பினால் போதும் நன்றாக இருக்கிறாயா என கேட்டதில்லை. வந்து இரண்டு வருடம் ஆகிறது இதுவரை ஊருக்கு வரச்சொல்லி சொன்னதில்லை. மேலும் தான் சந்தோசமாக இருந்தது இந்த உடம்பு சரியில்லாத நேரத்தில்தான், இத்தனை வருட காலத்தில் தன்னை பாசமாக பார்த்து கொண்டது நீங்கள்தான் என அழுதாள். எனக்கு என்னமோ போலாகிவிட்டது அப்போதே அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என்றார்.
வீட்டிற்கு வந்து அலமேலுவிடம் கேட்டதும் உடனே தனஞ்செய் காலில் விழுந்து அழுதது. எனக்கு அதன் சந்தோசம் புரிந்தது, தனன்ஜெயிடம் அதுக்கு சம்மதம்தான். எனக்கு அவசரமாக ஒரு வேலை இருக்கு நான் மறுபடி வந்து பார்த்துக்கொள்கிறேன் என கிளம்பினேன். ஒரு காதல் பூக்கும்போது நமக்கென்ன வேலை? உடனே அலமேலு அண்ணே என ஏன் காலிலும் விழ முயற்சி செய்ய, நான் பதறி தடுத்தேன், உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது என என் கையை பிடித்துக்கொண்டு அழுதது. இல்லம்மா உங்க நல்ல மனசுக்கும், தனன்ஜெய்யின் நல்ல மனசுக்கும் அமைந்த வாழ்க்கை. நான் அடுத்தவாரம் வாரேன் என பிடிவாதமாக சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்தியபோதும் கிளம்பிவிட்டேன். இப்போது அவர்களுக்கு தேவை தனிமைதான்............
அதன்பிறகு இரண்டே வாரங்களில் தனஞ்செய் ஊருக்கு கிளம்பிவிட்டார். அங்கு சென்று தந்தையிடம் பேசியதில் அவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்து அவர் சம்மதம் கேட்கவே. தான் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டேன் எப்படியாவது போய்க்கோ என பத்து லட்ச ரூபாயை கையில் தந்து அனுப்பி இருக்கிறார். அதனை கொண்டு பொய் அலமேலு வீட்டில் கொடுத்து பெண் கேட்டிருக்கிறார். பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை உடனே சம்மதித்து விட்டார்கள். அப்புறம் நான்தான் அலமேலுவை ஊருக்கு அனுப்பி வைத்தேன். கோவிலில் வைத்து தாலிகட்டி இரண்டே வாரங்களில் கூட்டி வந்துவிட்டார்.
வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்து அவர்கள் அதற்கடுத்த ஆறு மாதத்தில் அமேரிக்கா சென்று விட்டனர். எப்போதாவது மெயில் அனுப்புவார்கள். அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெயில் வந்தது, அதன்பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக தொடர்பு இல்லை.
இந்த கதையில் அவர்களின் உண்மையான பெயர்களே பயன்படுத்தி இருக்கிறேன். படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்குமானால் தொடர்பு கொள்வார்கள் என நம்புகிறேன்..
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது .......