இப்ப வருவார்.. அப்ப வருவார் .. வரவே மாட்டார் என பலகாலமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய வதந்திகள் வந்துகொண்டே இருக்கும். குறிப்பாக தன் படங்கள் ரிலீசாகும் சமயங்களில் இது சற்று பலமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் எந்திரன் வெளியானபோது இத்தகைய செய்திகள் ஒன்று கூட வெளிவரவில்லை. மேலும் தன் இரண்டாம் மகள் திருமனத்திற்கு ரசிகர்களுக்கு தனியாக விருந்து வைப்பேன் என்று சொன்னவர் இன்றுவரை செய்யவும் இல்லை. ஆனால் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என நண்பர் சில விசயங்களை சொன்னார். நம்புவதற்கு கடினமான விசயமாக இருந்தாலும் அவர் சொன்ன சில விளக்கங்களை கேட்டபின் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.
ரஜினி..
ரஜினி பெங்களூரில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடியபோது இத்தனை உயரமாக வளர்வார் என அவரே நம்பவில்லை. சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்தால் போதும் என நினைத்தவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர்கள் தமிழ் ரசிகர்கள். சாதாரணமாக நடிப்பை தரும் நமக்கு இத்தனை சிறப்பு கிடைத்தது கடவுள் அருளால்தான் என தீவிரமாக நம்புகிறவர் ரஜினி. அதே போல் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஆவலும் அவருக்கு நிரம்ப உண்டு. ஆனால் மக்களே தன்னை அரசியலுக்கு அழைக்க வேண்டும் என விரும்புகிறார். அதாவது தான் சம்பாதித்த பணத்தை செலவழிக்காமல் மக்களின் பணத்தை அவர்களுக்கு நியாயமான வழியில் செலவழிக்க விரும்புகிறார். எந்திரன் படம் கலாநிதி சகோதரர்களோடு ஒரு பெரிய நெருக்கத்தை ஏற்படுத்த அவரின் அரசியல் பிரவேசமும் தயாராகி விட்டது. அதைப்பற்றி பார்க்கும் முன் இப்போதைய அரசியல் நிலவரத்தை பார்ப்போம்..
தி.மு.க
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற வேலையில் கூட்டணியை தக்கவைத்துக்கொள்ளும் நெருக்கடிக்கு கட்சி தள்ளப்பட்டு விட்டது. காரணம் காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் போக்கு, அவர்கள் அ.தி.மு.க கூட்டணியை விரும்புகின்றனர். சோனியா, ஜெ யுடனான கூட்டணியை விரும்ப மாட்டார் என்றாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போதைக்கு தி.மு.க வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது ஆனால் கூட்டணி மாறினால் ஆட்சியும் மாறும். கலைஞரின் இன்னொரு முக்கிய தலைவலி குடும்பத்தினரை திருப்திபடுத்துவது. ஸ்டாலினுக்கு அதிகாரத்தை முழுவதுமாக அளிப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை அடுத்த ஆட்சியும் தி.மு.க வே வெற்றிபெற்று கலைஞர் முதல்வர் பதவியை தொடர்ந்து வகித்தால் இப்போதைய நிலையே நீடிக்கும் ஆனால் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கொடுத்தால் கட்சியின் தலைமை பொறுப்பை அழகிரிக்கு கொடுக்க வேண்டும், இது ஸ்டாலினுக்கு சிக்கல். இப்படி இருக்க கலைஞர் ஒருவேளை இறக்க நேரிட்டால் அப்போது ஒரு பெரிய அரசியல் குழப்பம் நிச்சயம் ஏற்படும் அப்போது இரு சகோதரர்களையும் சமாதனம் செய்யும் அளவுக்கு கட்சியில் யாரும் இல்லாததால் நிச்சயம் இரு கோஷ்டியாக மாறுவார்கள். அப்போதும் ஸ்டாலின் கட்டுபாட்டில் கட்சி வந்தால் மாறன் சகோதரர்கள் அமைதி காப்பார்கள். அவர்களும் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பார்கள். ஒரு வேலை கட்சி அழகிரியிடம் சென்றால் அப்போதுதான் நான் மேலே சொன்ன ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழும், அதுவும் மாறன் சகோதரர்கள் பின்னணியோடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு ரஜினி வருவார்.
அ.தி.மு.க
இந்த முறை தி.மு.க பொறுப்பேற்றபோது ஜெ க்கு எதிராக எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இன்றைக்கு வரைக்கும் டாஸ்மாக்கிற்கு மிடாஸ் தொடர்ந்து சரக்குகளை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் தயாநிதி. இவர்தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான இறுக்கத்தை குறைக்க உதவி செய்தவர். தொழில் என்று வந்தால் மாறன் சகோதரர்கள் அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அரசியலில் தி.மு.க வில் இருந்தாலும் தங்கள் சேனலில் எல்லா கட்சிகாரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாறன் சகோதரர்களைப் பொறுத்தவை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக பாதிப்புகள் வராது. ஜெயை பொறுத்தவரை தனக்கான எல்லா விசயங்களும் இந்த ஆட்சியில் கிடைத்தாலும் இதை தக்கவைக்க ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதற்காக எப்பாடு பட்டாவது காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க கூட்டணியை ஏற்படுத்திவிட்டால் ஏற்கனவே ம.தி.மு.க, கம்யுனிஸ்டுகள் பலத்தோடு பெரும்பான்மை கிடைத்து கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும். அதற்கான சில தியாகங்களுக்கும் அவர் தயாராகி விட்டதாகவே தெரிகிறது.
தே.மு.தி.க
தமிழகத்தில் கணிசமான ஓட்டு வங்கியை தன்னிடம் வைத்திருக்கும் விஜயகாந்த் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றால் தேர்தல் கமிசனில் தகுதியை இழந்துவிடும். மேலும் இவருக்காக கைக்காசை போட்டு உழைத்த தொண்டர்கள் வேறு கட்சிக்கு மாறிவிடுவார்கள். இரண்டு திராவிட கட்சிகளையும் விடுத்து காங்கிரஸ், பா.ம.க , மற்ற உதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத்தான் இவருக்கு ஆசை. ஒரு வேளை இந்த கூட்டணி ஜெயித்தால் விஜயகாந்துக்கு முதல்வர் பதவி காங்கிரசுக்கு ( யாருக்கு கொடுப்பார்கள்) துணை முதல்வர் பதவி என்றொரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் மத்தியில் காங்கிரசுக்கு தேவையான பலம் திராவிட கட்சிகள்தான் தரமுடியும் என்பதால் இந்த கூட்டணி நிறைவேற வாய்ப்பில்லை. எனவே அ.தி.மு.க கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடும் நிலைமைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் இக்கூட்டணியில் சேரும் பட்சத்தில் இவருக்கான சீட்டுகள் குறைந்து பெட்டிகள் அதிகரிக்கலாம்.
காங்கிரஸ்
அடுத்த பிரதமர் கிட்டத்தட்ட ராகுல்தான் என உறுதியாகிவிட்ட நிலையில் ராகுல் காந்தியின் யோசனைகள்தான் காங்கிரசில் முக்கியத்துவம் வகிக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகளின் வருகைக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இப்போது காணாமல் போய்விட்ட நிலையில் அதற்கு புத்துயிர் ஊட்டி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டம் ராகுலிடம் இருக்கிறது. இப்போதிருக்கும் கோஷ்டி பூசலே பழைய தலைவர்களால்தான் என்பதால் புதிய ரத்தம் பாய்ச்ச இளையவர்களை பதவிக்கு கொண்டு வந்து திராவிட கட்சிகளுக்கு இணையாக மாற்ற ஆலோசனைகள் அவருக்கு பறந்து கொண்டிருக்கின்றன. சோனியாவிடமும், ராகுலிடமும் கலைஞரை விடவும் மாறன் சகோதர்களுக்கு நெருக்கம் அதிகம். இந்த நெருக்கம்தான் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆட்சியை கலைப்போம் என தயாநிதியை உள்துறை செயலாளரிடம் கோபப்பட வைத்து. சோனியா தி.மு.க வுடன்தான் கூட்டணியை விரும்புகிறார் என்றாலும். 2016 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் என்ற ராகுலின் கனவையும் அவர் மதிக்கவே செய்கிறார். இதற்க்கு முன்னோட்டமாக பீகார் அரசியல் களத்தை பயன்படுத்த போகிறது காங்கிரஸ். பீகாரில் மூன்றாம் இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலை தனித்தே சந்திக்கவிருக்கிறது, அங்கு தனக்கு கிடக்கும் செல்வாக்கினை கணக்கில் வைத்து தமிழகத்திலும் தன்னை நிலை நிறுத்தும் எண்ணத்தில் அது இருக்கிறது.
மாறன் சகோதரர்கள்
கலைஞரின் மூளை என்று சொல்லப்பட்டவர் முரசொலி மாறன். இவருக்கு பிறந்த பிள்ளைகள் எப்படி இருப்பார்கள், இன்று தொழில் உலகில் மிகப்பெரிய இடத்தை தொட்டிருக்கும் மாறன் சகோதரர்கள் முதலில் நேசிப்பது தொழிலைத்தான் அதற்கடுத்துதான் குடும்பம், அரசியல் இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் நினைத்த நேரத்தில் சந்திக்கும் வல்லமை இவர்களுக்கு உண்டு. இவர்கள் நினைத்தால் மொத்த தமிழக எம்.எல்.ஏ க்களையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வர முடியும், ஆனாலும் தாம் ஒரு தி.மு.க காரனாகவே இருப்பதை விரும்புகிறவர்கள். இவர்களுக்கு கட்சியில் இருக்கும் ஒரே தலைவலி அழகிரி மட்டுமே. எதிர்காலத்தில் கட்சி அழகிரியின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் தமக்கென்று ஒரு செல்வாக்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்போது இவர்கள் ரஜினி என்கிற ஆயுதத்தை கையிலெடுப்பார்கள் அப்போது காங்கிரஸ் கட்சியும் இவர்கள் பின்னால் நிற்க 2016 தேர்தலில் இவர்கள்தான் முக்கியத்துவம் வகிப்பார்கள். ரஜினியும் இப்படிப்பட்ட ஒரு அரசியல் பிரவேசத்தைதான் விரும்புவதால் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை பொறுப்பு மாறன் சகோதரர்கள் பின்னணி என இவர் முதல்வராக பொறுப்பு ஏற்பது என்பது மிக சரியாக சொன்னால் வரும் தேர்தகளில் தி.மு.க ஜெயித்து அதன்பின் கலைஞர் எடுக்கும் முடிவோ அல்லது அவர் மறைவுக்குப்பின் தி.மு.க வின் நிலைமை பொறுத்தோ அமையும்.
இன்றைய தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..