"ஈரோட்டில் இருந்து ஜாபர் பேசுறேன் அண்ணே, என்னைத் தெரியுதா?" என்றார்.
"வணக்கம் ஜாபர், சொல்லுங்க" என்றேன்.
"அண்ணே ஈரோடு சங்கமத்துல சில பதிவர்களை பாராட்டி கவுரவிக்கலாம் என முடிவு செய்துள்ளோம், அதில் நீங்களும் ஒருவர்!, அதனால அவசியம் வந்துடுங்க" என்றார். கூடவே " சென்னையில் இருந்து கேபிள், ஜாக்கி, லக்கி, அதிஷா வருவதாக சொல்லியிருக்கின்றனர், எனவே நீங்களும் வந்தால் சந்தோசமாக இருக்கும்" என்றார். நான் வருவதாக உறுதியளித்துவிட்டு மாலை கேபிளை சந்தித்தபோது அவர் அன்றைய தேதியில் உடான்ஸ் பரிசளிப்பு விழா இருப்பதால் தன்னால் வர இயலாது என்றார். தேதியை மாத்திக்கலாமே என்றபோது, இல்லை தலைவரே அதனை முடிவெடுக்கும் அதிகாரம் ஆதியிடமும், பரிசலிடமும் இருக்கிறது. உடான்ஸ் சார்பாக நடத்தப்படுவதால் ஜோசப் இல்லை, அதனால் நான் இருந்தே ஆகவேண்டும் என்றார்.
தம்பிகள் மெட்ராஸ்பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், மோகன்குமார், ஆனா மூனா செந்தில், தம்பி ரமேஷ்குமார் என சனிக்கிழமை கோவை எக்ஸ்பிரசில் வண்டியேறினோம். வழியெங்கும் கலாட்டாவுடன் ஈரோடு வந்து சேர்ந்து ஒரு டாக்சி பிடித்து ராஜராஜேஸ்வரி லாட்ஜுக்குப் போனால், அங்கு யாருமே இல்லை. அங்கிருந்து ஜாபருக்கு போன் போட்டால், அண்ணே நேராக மண்டபத்துக்கு வந்துடுங்க என்றார்.
மண்டபத்தில் அபி அப்பா, விந்தைமனிதன், வாசு அண்ணன், மணிஜி, ஜாக்கி, செல்வம், மயில், சங்கவி என சிலர் இருந்தனர். சரக்கு தந்த உற்சாகத்தில் அபிஅப்பா எனக்கு ஒரு முத்தம் தந்தார், அது பலருக்கும் தொடர்ந்தது. விந்தைமனிதன் மிக உற்சாகமாக இருந்தார். அதன்பின் எல்லோரும் சாப்பிடப்போனோம். வழக்கமாக இம்மாதிரியான நிகழ்வுகளில் மெனுப்படிதான் பரிமாறுவார்கள். ஆனால் நாம் கேட்டதெல்லாம் கிடைத்தது. இட்லி, தோசை, முட்டை தோசை, ஆம்லேட், கலக்கி என ஹோட்டலில் இருப்பதுபோன்ற உணர்வை தந்தது மிகுந்த ஆச்சர்யம். இதுக்கே ஈரோட்டுக்காரர்களுக்கு ஒரு சிறப்பு வந்தனம்.
அன்று இரவு மீண்டும் லாட்ஜ் வந்து பிரபாவும், ஆனா முனாவும் தங்கள் உற்சாக பானத்தை தொடர் விரும்பியதால், நான் தனியாக ரூம் எடுத்துக்கொண்டேன். நால்வர் தாங்கும் அறையான அதில் மோகன்குமார், சிவகுமார், ரமேஷ் ஆகியோருடன் தங்கினோம். சிறிது நேரத்தில் ஆரூரான் வந்து நீங்கள் எப்படி பணம் கொடுக்கலாம் என சண்டைபோட்டு பணத்தை திருப்பித்தந்தார். அவர் அன்பை மறுக்கமுடியாமல் பணத்தை வாங்கிக்கொண்டேன். இரவு நெடுநேரம் சங்கவி எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார், நீண்ட நாள் பழகிய ஒரு நண்பருடன் பேசிய உணர்வைத் தந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விடவும் அதிகம்பேர் வருவதால் மறுநாள் நிகழ்வை சரியாக நடத்தவேண்டும் என்கிற கவலை அவரிடம் அதிகம் இருந்ததை உணர்ந்தேன். இரவே கார்த்திகை பாண்டியன், தருமி ஐயா உள்ளிட்ட மதுரை நண்பர்களும் வந்துவிட்டனர்.
மறுநாள் காலை எங்களை எழுப்பியது "வம்பை வெலைக்கு வாங்குவோம்" மணி( ஆனா ஆளு படு சாந்தம்) மற்றும் நாய் நக்ஸ் ( இந்தப் பெயருக்கு ஒரு வரலாறு இருக்காம்) வந்து எழுப்பினார், அவருடன் தமிழ்வாசி பிரகாஷ் வந்திருந்தார். நாய் நக்ஸ் நக்கீரன் சரியான ஜாலி பார்ட்டி, தன்னைப் பற்றி எதை எழுதினாலும் லிங்க் கொடுக்காமல் போடக்கூடாது என கட்டளை போட்டார். வரவேற்பு அறைக்கு வந்தபோது ஜாக்கி, உ.த அண்ணன் இறங்கிவந்தனர். பின்னால் வந்த அபி அப்பாவும், விந்தைமனிதனும் செந்தில் இப்பத்தான் ஊரில் இருந்து இப்பத்தான் வர்றீங்களா எனக்கேட்டு எங்களை அதிர்சிக்குள்ளாக்கினர்(மொதநாள் இரவு அவ்வளவு மப்பு).
காலை மண்டபத்துக்குள் நுழைந்ததும் அதிஷா,லக்கி, அரவிந்தன், சீனா ஐயா என வரிசையாக நண்பர்கள் வர ஆரம்பித்தனர். உடனே எல்லோரையும் சாப்பிட அழைத்தனர். முதல்நாள் இரவு போலவே காலையிலும் கேட்டதெல்லாம் கிடைத்தது. தாமோதர் சந்ரு, கதிர் அண்ணன், பாலாசி, சங்கவி, ஆரூரான், ஜாபர் என அனைவரும் பக்கத்தில் இருந்து உபசரித்தனர்.
அதன்பிறகு தமிழ்மண சூப்பர் ஸ்டார் சிபி.செந்திகுமார் வந்து சூறாவளியாக சுழன்று அனைத்து பதிவர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து தள்ளினார். அப்போது நான் அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டபோது கண்டுகொள்ளாமல் நழுவினார், ஆனால் விழா முடிந்தவுடன், சாரி தலைவரே சரியா கவனிக்கலை என புகைப்படம் எடுத்துக்கொண்டார். எப்படி தலைவரே இவ்வளவு எழுதித் தள்ளுறீங்க என கேட்டதும். அண்ணே என் வீட்டில் இணைய இணைப்பு கூட இல்லை. நான் செல்போனில் பதிவு செய்து சினிமா விமர்சனம் எழுதுவாக சொன்னார்கள், ஆனால் என் செல்போனை பாருங்கள் என அரதப் பழசான நோக்கியாவை காட்டினார். அவரின் எல்லாப் புகழுக்கும் மூலகாரணம் ஜாக்கிதான் எனச்சொன்னபோது சத்தமாக சிரித்தார் # ஜெய் ஜாக்கி. மேலும் வானம்பாடிகள், பாலபாரதி, தேனம்மை, காவேரி கணேஷ், ஷர்புதீன் என அறிமுகமான பலர் வந்திருந்தனர்.
விழா துவங்கும்முன் ISR செல்வகுமாரின் "யாதுமானவள்" குறும்படம் திரையிடப்பட்டது. விழா துவங்கியதும் ஆரூரனின் சங்கமத்துக்கான ஏற்பாடுகள் பற்றிய உரை மற்றும் வரவேற்பு உரை முடிந்தபின் கதிர் சிறப்பு விருந்தினரைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார். அதன்பின்பு வரிசையாக பாராட்டு பெறுபவர்கள் அழைக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகபடுத்தும் ஆடியோ, வீடியோ தொகுப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. விருது பெறுபவர்களை பற்றி கதிரும், அருள்மொழியும் செய்தி வாசிப்பினைப் போல அறிமுகப் படுத்திய விதம் மிக சிறப்பு. இந்த AV க்காக என்னிடமும் என்னைப்பற்றிய தகவல்களும் படங்களுக்கும் கேட்டிருந்தனர், என்னைப் பற்றிய தகவல்களை மட்டும் கொஞ்சமாக அனுப்பிவிட்டு போட்டோ அனுப்பவில்லை. அதற்கு காரணம் நான் சற்று தனிமை விரும்பி அதனால் நான் மட்டும் தனியாக அல்லது மற்றவர்களுடன் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதுவுமே என்னிடம் இல்லை. அதனை கதிரிடம் சொன்னதும் அவர் கண்டிப்பாக படம் தந்தே ஆகவேண்டும் என்றார். ஆனால் நான் தரவே இல்லை. ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவர்கள் என் படங்களை எங்கோ தேடிக் கண்டுபிடித்து ஒளி பரப்பினார்கள். என்னுடன் விருதுபெற்ற அனைவரையும் விடவும் நான் மிகச் சாதாரணமான ஆள். இந்த விருது சமூக வலைத்தளத்தில் என்னை இன்னும் சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தியிருக்கிறது. என்னோடு சேர்ந்து கவுரவிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இந்த இணைப்பில் காணலாம்.
விழா முடிந்தவுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. முதலில் அசைவப்பிரியர்களுக்கான பந்தி. மிக அருமையான வீட்டு சாப்பாட்டைப்போல் இருந்தது. வழக்கமாக மிக குறைவாக சாப்பிடும் நான் ஒரு செம கட்டு கட்டினேன். அதன்பிறகு சைவ பட்சிகளுக்கு, அதிலும் நேர்த்தியான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதன்பிறகு நண்பர்களுடன் முடிந்தவரை ஒவ்வொருவராக சந்தித்து அளவளாவினேன். நான் பேச விரும்பிய கோமாளி செல்வாவை சந்திக்கமுடியாத அளவு பிசியாக இருந்தார். நம்ம தலை வாலைப் பார்த்து நான் கே.ஆர்.பி என்றவுடன் போச்சு போங்க எனக்கு அறிமுகமா? என கட்டிப்பிடித்துக்கொண்டார். தல எல்லோருடனும் மிகுந்த சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.
அதன்பிறகு மோகன்குமார் அண்ணன் செல்வகுமார், அன்பழகன், உ.த அண்ணன் அனைவரும் காரில் சென்றுவிட, மணிஜி,வாசு,ஜாக்கி, மயில் என அவர்களும் தங்கள் வண்டியை பூட்டினர். நான் அரவிந்தன் அண்ணன், சிவக்குமார், ஆனா முனா , பிரபாகரன் அனைவரும் ஒரு சிறு ஷாப்பிங் முடித்துவிட்டு அறைக்கு வந்து சிறு உறக்கம் முடித்து ரயிலடி வந்து ஆனா முனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு லைட்டாக சரக்கடிக்கலாம் என முடிவு செய்துவிட்டு வெளியில் வந்தால், அங்கு ஒரு இண்டிகாவை தள்ளிவிட சொல்லி ஒருவர் ரிக்வெஸ்ட்ட நாங்கள் அதனை சத்தமாக தள்ளிக்கொண்டுபோனபோது அருகில் இருந்த இட்லி கடையில் சுவாரஸ்யமாக டின்னரை லவட்டிக் கொண்டிருந்தது அபிஅப்பா, விந்தைமனிதன் & கோ. ரயிலுக்கு நேரம் குறைவாக இருந்ததால் திரும்பவந்து அவர்களை பார்க்கலாம் என கிளம்பினோம் ஆனால் திரும்பிவந்து பார்த்தபோது அவர்கள் எஸ்கேப். அதன்பிறகு பாருக்கு சென்று நான், ஆனா முனா, ரமேஷ் மூவரும் ஆளுக்கு ரெண்டு லார்ஜ் அடித்தோம், பிரபா தலைவலி என ஒதுங்கிக்கொள்ள, பக்கத்து ஓபன் ரெஸ்டாரண்டில் டின்னர் முடிந்ததும் ரயிலுக்கு நேரமாகவே, கிளம்பும் நேரத்தில் அவசரமாக தொத்திக்கொண்டோம். இரவு பத்தரைமணி வாக்கில் வாசு அண்ணன் தான் பத்திரமாக வீடு வந்ததாக குறுஞ்செய்தி அனுப்பினார். கேபிள் போனில் உடான்ஸ் விழா சிறப்பாக நடந்ததாக சொன்னார். விந்தைக்கு ஒரு போன் போட்டால் அவர் ரயில் நிலையத்தில் இருப்பதாக சொன்னார். அவருடன் இந்தமுறை சரியாக அளவளாவ முடியவில்லை.
இரவு மேல் பர்த்ததில் படுத்தவுடன் மனம் ஒரு ரிவர்ஸ் கியர் அடித்து நிகழ்ச்சியை அசைபோட்டது. கிட்டத்தட்ட 240 பேரை வரவேற்று, தங்கவைத்து, உபசரித்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஈரோட்டு சகோதரர்களுக்கு என் வந்தனம். சிறப்பு அழைப்பாளர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இந்த விழாவுக்கு வரும்வரை இதை ஒரு வழக்கமான பாராட்டு விழாவாக நினைத்ததாகவும் ஆனால் ஆடியோ, வீடியோவை பார்த்து நெகிழ்ந்ததாகவும் சொன்னார். தொடர்ந்து அனுமதிக்கட்டணம் இல்லாமல் மிகச்சிறப்பாக ஈரோட்டில் புத்தக கண்காட்சியை நடத்திவரும் சாதனையாளரான அவர் எங்களை பாராட்டியபோது. நான் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த ஒருவர் மகி என்கிற மகேந்திரன். இவரின் மனசு கோடியில் ஒருவருக்குத்தான் வரும். பாராட்டுக்கள் மகி.
விழாவினை மிகச்சிறப்பாக தொடர்ந்து நடத்திவரும் ஈரோடு வலைப்பதிவாளர் குழுமம் விரைவில் அறக்கட்டளையாக மாறவிருப்பதாக கதிர் அறிவித்தார். வாழ்த்துக்கள் சகோதரர்களே...