மன ஆழங்களில் புதையுண்டு
மறைந்தே போனவள்
நேற்றிரவு கனவில் வந்தாள்
மறக்கவே முடியாது என்றுதான்
நானவளை நினைத்திருந்தேன்..
எப்போதும் போலவே
உதடு சுழித்தும்
உள்ளங்கை பொருத்தியும்
விளையாட்டு காட்டினாள்..
நொடிக்கொரு முறை
"நேரமாச்சு வீட்டுக்குப் போவணும்"
என்றாள்..
"எந்த பிரச்சினை வந்தாலும்
எதிர்த்து நின்னு
கட்டிப்பியா?"
என்று
கட்டிக் கொண்டாள்..
எப்போதும் போலவே
அவளே
பேசிக்கொண்டிருந்தாள்
நேரில் மட்டுமல்ல
கனவில்கூட
கட்டபட்டிருந்தது என் வாய்..
கனவைக் கொன்று
அலறியது அலைபேசி
உடைந்த குரலில்
உதிர்ந்த வார்த்தைகள்
ஒரு துக்க செய்தியைப் பகிர்ந்தன
ஒற்றைக் கண்ணீர்த்துளியை
முற்றுப்புள்ளியாக்கி..
'இனி கனவில் மட்டும்தான்
அவளை'...