22 நவ., 2013

சில சுவாரஸ்யங்கள் - 22.11.2013...

அரசாங்க அலுவலகங்களுக்கு ஒரு வேலை விசயமாகப் போனால் அங்கிருக்கும் அதிகாரிகள் நேர்மை பற்றி உங்களிடம் பேசினால் கனிசமாக எதிர்பார்க்கிறார் என்பது பொருள்!. தொகை படிந்தவுடன் நேர்மையாக எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து விடுவார்கள். ஒருவேளை நாம் பேரம் பேசத் துவங்கினால் அந்த வேலையைச் செய்ய எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டும் என்று ஆரம்பித்து பட்டியல் போட்டு தமக்கு அதில் கிடைக்கப்போகும் சொற்ப லாபத்தை குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகளிடம் எதாவது வேலை விசயமாக சென்றால் இப்படி  நிறைய சுவாரஸ்யங்கள் கிடைக்கும். சமீபத்திய சுவரஸ்யம், பட்டா மாற்றம் ஒன்றிற்காக விண்ணப்பித்தபோது நடந்தது. நான் கிராம் நிர்வாக அதிகாரியின்  சிப்பந்தி ஒருவரால் ஓரங்கட்டப்பட்டேன். முதலில் அவர் என்னைப்பற்றி விசாரித்தார். நான் சென்னை வாசி என்றதும் ஊருக்கு வந்து போகும் செலவெல்லாம் இருக்கும்ல அதானல் ரூ.3000 கொடுங்க முடிச்சு கொடுத்துடறேன் என்றார். யோசித்து சொல்கிறேன் என வந்துவிட்டேன்.

..........................................................................................................
நாளிதழில் ஒரு விளம்பரம் பார்த்தேன்:

அதாவது டாஸ்மாக்கில் அதிகவிலை விற்றால் புகார் கொடுக்க ஒரு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லா டாஸ்மாக்கிலும் பியருக்கு ரூ.10-ம், குவாட்டருக்கு ரூ.5-ம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். போய் பிடிங்க ஆபிசருங்களா!
.....................................................................................
சமீபமாக முகநூல் பக்கம் பழியாய் கிடக்கிறேன். யார்? எதை எழுதினாலும்? படிக்கிறேனோ! இல்லையோ!! கண்டிப்பாக Like செய்துவிடுவேன். காரனம் தமிழ்மணம் ஓட்டு அரசியல் போல் அங்கும் மொய், முறைவாசல் என சரியாக செய்யவில்லை என்றால் நம்மையும் அவர்கள் சீண்டமாட்டார்கள்.

முகநூல் என்பது Social Network என்பதை விடவும், மிகப்பெரிய இலவச Business Marketing Space எனவே இதில் சிறு பொருள் வியாபாரிகள் முதல் மிகப்பெரிய Corporates வரைக்கும் கடை விரிக்கிறார்கள்.  அதே அளவு ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள்.

..............................................................................................................

கவிதை எபடியெல்லாம் எழுதலாம் என்கிற விதிமுறைகளை உடைத்தது புதுக்கவிதை வடிவங்கள்தான். சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் மூத்த கவிஞர்கள், புதுக்கவிதை என்பதே கிடையாது எல்லாம் உரைவீச்சுதான் என்பார்கள். முகநூல் பக்கம் போனால் அது உண்மைதான் என்பது தெரியும்.

சுமாரான கற்பனைகளை ஒரு பாரா எழுதி குத்து மதிப்பாக வார்த்தைகளின் முடிவில் ஒரு எண்டர் தட்டினால் கவிதை கிடைத்துவிடும்.

(உம்) : அன்பே எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பூக்களாய் நீ இருக்கிறாய்..

இதனை முதன் முதலாக காதல் செய்கிறவர்கள் அல்லது கவிதை எழுதுகிறவர்கள் எழுதினால்:

அன்பே
எத்தனைமுறை
பார்த்தாலும்
சலிக்காத
பூக்களாய்
நீ
இருக்கிறாய்..

கொஞ்சம் கவிதை புத்தகம் படிக்கிற அல்லது 25 வயசுக்கு மேல் காதல் வருகிறவர்கள் எழுதினால்:

அன்பே
எத்தனைமுறை பார்த்தாலும்
சலிக்காத பூக்களாய்
நீ இருக்கிறாய்..

ஆனால் முகநூலில் இப்படி ஒரு கவிதை வந்தால் பூக்களாய் என்று சொல்லிவிட்டு, பின் ஒருமையில் நீ என்று வருகிறதே என நான் உட்பட யாரும் கேள்வி கேட்காமல் Like செய்துவிடுவோம்.
.............................................................................................................

முகநூலில் காலை வணக்கம், இரவு வணக்கம் சொல்வதையெல்லாம் கடமை உணர்ச்சியுடன் செயல்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டில் தினசரி தேதிகள் கிழிக்கும் நாட்காட்டி இல்லை போல. ஏனென்றால் நிறைய பேர் அங்கிருந்துதான் தத்துவங்களை உருவி தான் பயன்பெற முடியாவிட்டாலும், உலகம் பயனுற வேண்டி டைப்புகின்றனர்.
.............................................................................................................

19 நவ., 2013

எப்படி கொள்ளையடிக்கிறார்கள்?....

கருத்து என்பது எல்லோருக்கும் பொதுவனாதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அதில் நியாயம், அநியாயம் பார்ப்பதுமில்லை. இப்படித்தான் கருத்தியல் பற்றிய நமது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. ஆனால், ஓட்டுப்போட்டு நமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறோம், நமக்கான அலுவல்கள் செய்ய நாமே வரிகள் மூலம் சம்பளம் கொடுத்து வேலை செய்ய ஆட்களை நியமிக்கிறோம். ஆனால் நிலமை தலை கீழாக மாறிவிடுகிறது. பதவிக்கு வந்தவுடன் அவர்கள் அரசர்களாக மாறி விடுகிறார்கள். அலுவலர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் மக்கள் என்பவர்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. பிணத்தை எடுக்கவும் பணம் இருக்கனும். இப்படி ஒரு நிலமை மாறவே மாறாதா? என பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அதாவது நடுத்தர, ஏழை வர்கத்திற்கு எப்போதும் இருக்கும் ஆதங்கம். ஆனால், அவர்கள் இல்லாத கடவுளிடம் முறையிட்டு வழமைபோல் அலுவலர்களிடம் கும்பிடு போட்டு நியாயமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கே கை கட்டி நிற்பார்கள். இவர்கள் முறையிடும் அதே கடவுள்தான்(ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வஸ்து இருந்தால்) அலுவலர்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான் எனும் அறியாமையில் இருந்து அவர்கள் தம்மை எப்போதும் மீட்டெடுக்க விரும்பாதவர்கள். இதற்கான அடிப்படை என்பது சுயநலத்தால் பின்னப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் மாதிரி நம் ஊர் மாறாவே மாறாதா? என எம்போன்ற வெளிநாட்டு பெருமை வாசிகள் பக்கம் பக்கமாக வாசித்தாலும். இந்த நிர்வாக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பது எந்த இடியாப்ப சிக்கல்களும் இல்லாத தெளிவான சிண்டிகேட் கூட்டணி என பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் கடைக்கோடி அறிவாளி வரைக்கும் புரியாத ஒன்று. தமிழக அரசியல் கட்சிகளில் மேல் மட்டத் தலைகள் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிமார்கள், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள், மாவட்டம், வட்டம், ஒன்றியம், அப்புறம் மத்திய அரசியல் கட்சியின் மேல் மட்டங்கள் என இவர்களின் மொத்த எண்ணிக்கையே தமிழக அளவில் மொத்தமாக ஒரு 1 லட்சத்தை தாண்டாது. அதன்பின் அரசு எந்திரங்களை சுற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை ஒரு 3 லட்சம் என்றாலும் கிட்டத்தட்ட 7.50 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வெறும் 4 லட்சம் பேர் அதிகாரத்தை செலுத்தி வளம் கொழிக்கின்றனர். இங்கு சகலத்துக்கும் காசு வைத்தால்தான் வேலை. இது நீதித்துறையில் ஆரம்பித்து ஒரு கிராம நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி வரைக்கும் நீள்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை என்பது புகார் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறது. இப்படி அவர்கள் மிகவும் துணிச்சலாக பணம் வைத்தால்தான் வேலை செய்வேன் என்பதற்கும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற மற்ற துறை ஆட்கள் உதவுவதும். அதற்கு மேல் அரசியல்வாதிகள் துணையாக இருப்பதும் ஒரே கொள்கை அடிப்படையில்தான்!.

ஆனால் பொதுமக்களாகிய நாம் பக்கத்து வீடுகளை சகித்துக்கொள்வது இல்லை. அவர்களின் வளர்ச்சியை பொறாமைக்கண் கொண்டுதான் பார்க்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்புவரைக்கும் கூட கிராம அளவில் அம்மக்களிடம் ஒற்றுமை நிலவியது. ஒரு பிரச்சனை என்றால் ஊர் கூடி முடிவெடுப்பார்கள். அது படிப்படியாக ஜாதி மோதல்களுக்கு மட்டும்தான் என குறுகி விட்டது. தெருவில் இருக்கும் நல்லவர்கள் யாரையாவது நாம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கிறோமா? மாறாக அதே தெருவில் எந்த வேலைக்கும் செல்லாமல் ரவுடித்தனம் செய்கிற, எதோ ஒரு அரசியல் கட்சியில் அல்லக்கையாக இருக்கிற ஒருவரைத்தானே தேர்ந்தெடுக்கிறோம். பின் எப்படி அவன் நேர்மையானவனாக இருப்பான் என்பார் கேபிள் சங்கர். கேட்டால் கிடைக்கும் எனும் ஒரு அமைப்பை சுரேகாவும், கேபிளும் ஏற்படுத்தி ஒரு சிறிய மாற்றத்தை நமக்கு காட்டியிருக்கிறார்கள். இப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கப்பட்டு அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள். இதேபோல் தமிழகம் தழுவி நிறைய சிறிய அமைப்புகள் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பகுதிகளில் மாற்றத்தை கொண்டுவர போராடுகிறார்கள். இணைய உலகில் சவுக்கு சங்கர், வினவு தளம் தவிர வேறு யாரும் துணிச்சலாக அரசு எந்திரத்தை விமர்சிப்பது இல்லை. ஈழ விவகாரத்தில் அம்மக்களின் போரட்டம் ஏன் ஆரம்பித்தது, பின் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள். இறுதி யுத்தத்தில் எதனால் அவர்கள் தோற்றார்கள் என ஈழத்தின் மொத்த வரலாறையும் அறியாதவர்கள்தான் இப்போதும் ஈழ மக்களையும், இங்கிருக்கும் உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்துகிறார்கள். ஈழ ஆதரவு போராளிகள் பணம் வாங்கிக்கொண்டு போராடுவதாக கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி பணம் வந்ததற்கான ஒரு ஆதரத்தைக் கூட இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் யாரென பார்த்தால் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என அறிந்தே அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கூலி பெறாத விசுவாசிகளாக முழங்குகிறார்கள். தெருநாய்கள் கூட உணவிட்டவருக்குத்தான் வாலாட்டும். நேர்மையாக இருப்பவர்களையும், தன்னால் இயன்றவரைக்கும் சமூகத்தில் யாருக்காவது உதவி செய்பவர்களையும் கேலி பேசும் இந்த அற்பர்களுக்கும் சேர்த்துதான் நாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோம். அறிந்தே பிழைகள் செய்யும் இம்மக்களை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்???

இங்கு நல்லவர்களே இல்லையா? என்றால். இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் நேர்மையானவராக நல்லக்கண்ணு ஐயாவும், தமிழருவி மணியனும் என இரண்டு பேரை மட்டுமே அடையாளம் காட்டுகிறார்கள். அதிகாரிகளில் சகாயம், அஸ்ரா கார்க் போல சில நூறு பேர்களாவது இருப்பது ஆறுதல். நாம் ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே நமக்கு வேலை செய்ய வந்தவர்களிடம் நாம் வேலை வாங்கமுடியும் இல்லாவிட்டால் நம் முதலாளிகளுக்கு நாம் சம்பளம் கொடுப்பது தொடரவே செய்யும்.

17 நவ., 2013

ராவண தேசம் - விமர்சனம்...

ராஜிவ் கொலைக்குப் பிறகு ஈழம் சம்பந்தமான படங்களுக்கு என்ன மாதிரியான நிர்பந்தங்கள் இருந்திருக்கின்றன என நமக்குத் தெரியும். ஈழ ஆதரவு படம் என்றால் மத்திய, மாநில அரசுகளும், ஈழ எதிர்ப்பு, சிங்கள ஆதரவு படங்கள் என்றால் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பும் சம்பந்தப்பட்ட படங்களுக்கான சிக்கலை ஏற்படுத்தின. முதன் முறையாக அப்படி எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் வந்திருக்கும் படம். அதற்குக் காரனம் படத்தின் இயக்குனர் சாதுர்யமாக யார் பக்கமும் சாயாமல் படத்தின் முதல் பாதியை நகர்த்தியிருப்பதுதான்.
 

நாயகன் அஜெய் நூத்தகி( இவர்தான் படத்தின் இயக்குனரும்) நாயகி ஜெனிபரின் காதல் காட்சிகளோடு படம் துவங்குகிறது. முல்லைத்தீவு பகுதியில் கதை நடப்பதாக காட்டியிருக்கிறார்கள். ஆந்திரா பக்கம் வயல்வெளிகள், கடல் சூழும் ஒரு இடத்தில் படமாக்கியிருப்பார்கள் போல, கிடைத்த பட்ஜெட்டில் போடப்பட்ட செட், நாடக பாணி நடிகர்கள், கற்பனையான காட்சிகள் என சுமாராகவே படம் நகர்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் பதுக்கல் செய்யும் ஒரு வியாபாரி என்பது  மிகையான கற்பனை. அதே போல் ஒரு விடுதலைப்புலி தளபதி உயிர் தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த தனது போராளி ஒருவரை விட்டு தன்னை சுட்டுத்தள்ளச் சொல்வதும் அபத்தமான கற்பனையே. இதன் மூலம் இயக்குனர் இப்படத்தில் போராட்டம் சம்பந்தமான விசயங்களின் மேல் எந்தக் கவனமும் கொள்ளவில்லை என்று தெரிகிறது. சிங்கள ராணுவம் பற்றிய காட்சிகளில் மட்டும் அவர்கள் பெண்களை பாலியல் வண்முறைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதையும், அப்பாவிகளை கொடுமைப் படுத்துகிறாகள் என்பதையும் காட்டியிருக்கிறார். மற்றபடி புலிகளின் காவல் பரண்கள் எல்லாம் பட்ஜெட்டின் வெளிப்பாடு. முதல் பாதிக்கான ஒரே ஆறுதல் சிறுவனின் பாத்திரப்படைப்பும், சில காட்சிகள் படமாகப்பட்ட விதமும். மேலும் புலிகளின் கொடி பறக்கும் காட்சிகள் சென்சாருக்கு தப்பியிருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாகம்தான் இப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. முள்ளி வாய்க்கால் மீது ராணுவம் தாக்குதலை துவங்கும் முதல் நாள் இரவு அன்று நாயகன், நாயகி, வயதான தம்பதிகள், கடை வைத்திருக்கும் குமரன் தம்பதியினர், குழந்தையுடன் ஒரு தம்பதியினர், நாயகனின் நண்பர்கள் இருவர் என ஒரு படகில் இந்தியாவின் ராமேஸ்வரம் நோக்கி கிளம்புகின்றனர். சுற்றுப்பாதையில் முதல் இரண்டு நாள் எவ்வித பிரச்சினையும் இன்றி படகு நகர்கிறது. பாட்டுப் பாடுகின்றனர், காதல் காட்சிகள் இருக்கின்றது. குமரனின் பந்தாவான பேச்சு, அவரின் தம்பட்டம் என நகரும் படகுப் பயணம் மூன்றாம் நாள் இலங்கை நேவிக்கு சொந்தமான கப்பலைப் பார்த்ததும் அனைவரும் படகுக்குள் பதுங்குகின்றனர். அசதியில் அனைவரும் தூங்கி விடுவதால் நேவியிடம் இருந்து தப்பித்தாலும் திசை குழம்பிவிடுகிறது. இதன்பிறகு திசை மாறும் படகால் அடுத்தடுத்த நாள்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். பட்டினி, தண்ணீர் இன்றி கடல் நீரை குடிக்கவேண்டிய அவலம், மழை, மரணம் என நம்மையும் துன்பக் கடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.  இக்காட்சிகள் உலகம் முழுதும் அகதியாய் கடலில் பயணித்து கரைசேர முடியாத அத்தனை பேருக்குமானது, சமீபத்தில் மியன்மரில் இஸ்லாமியர்கள் இப்படி நூற்றுக்கணக்கில் இறந்து போனார்கள். ஈழத்தில் இருந்து பனிரெண்டு கடல் மைல் தொலைவில் இருக்கும் ராமேஸ்வரம் வருவதற்கே எம் இனம் இத்தனை துயரங்களை கடக்க வேண்டியிருக்கிறது என்றால், உலகம் முழுதும் அவர்கள் சென்று சேர எத்தனை இடர்களை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கும்போது மனம் பதறுகிறது.

                                                                   
இறுதியில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மீனவர்களால் காப்பற்றப்பட்டு எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதோடு படம் முடிகிறது. படத்தை நம்முடைய ஈழ ஆதரவு, வெறுப்பு போன்ற கருத்துக்களையும், காட்சியமைப்புகளில் ஆங்காங்கே காணப்படும் அமெச்சூர் தனத்தையும் தள்ளிவைத்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் பத்து நாள் கடல் பயணம், அதீத சோகம் என லேசாக போர் அடித்தாலும், நடித்த நடிகர்கள் அனைவரும் கடலில் ஒவ்வொரு நாளும் கடக்கும்போது அதிகமாகும் உடல் வேதனையை சரியாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

16 நவ., 2013

விடியலை நோக்கி- ஈழம்...

நடந்துவரும் காமன்வெல்த் மாநாட்டின் மூலம் அடுத்த இரண்டு வருட காலங்களுக்கு அதன் தலைவராக மாறப்போவதால் இலங்கை மீதான சர்வேதேச அழுத்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என நம்பி ராஜபக்சே கண்ட பகல் கனவு இப்போது அவருக்கே எதிராக மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் அரங்கேறியவண்ணம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த மட்டில் தமிழக அளவிலான அழுத்தம், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்துக் கட்சிகளும் எதிர்நோக்கும் விதமாகவே முன்னெடுக்கப்பட்டது.  தமிழக காங்கிரஸ் இம்முறை தமிழர் நலனுக்கு ஆதரவாக தன்னைக் காட்சிப்படுத்துவதன் மூலம் தன் மீதான களங்கத்தை மறைக்க முயன்றது. பிரதமருக்குப் பதில் குர்ஷித் கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் தமிழக மக்களின் பாரிய அழுத்தம் கொடுத்த வெற்றிதான். இதுவரை ஊடகம் தோறும் ஈழப் பிரச்சினையால் எப்போதும் தமக்கு பின்னடைவு இல்லை என முழங்கிய காங்கிரஸ் கட்சியின் சோனியா விசுவாசிகள், இம்முறை அடக்கி வாசித்தனர். தமிழகத்தில் விஜயகாந்த் மட்டுமே தன் கருத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தன் சார்பாக ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிராக மாறுவதால் தமது ஜாகையை டெல்லிக்கு மாற்றும் அதீத ஏற்பாடுகளில் அவர் இருக்கிறார். ஆனால் அதே டெல்லியில் ஈழத் தமிழனுக்காக வாய் கிழியப் பேசிய அவர் தமிழ்நாட்டில் மட்டும் மவுன விரதம் கடைப்பிடிக்க காங்கிரஸ் மீதான அவரின் தீராத நம்பிக்கை ஒரு காரனமாக இருக்கலாம்.

கடந்த ஒன்பது வருடங்களாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க தமிழர்கள் மத்தியில் பலத்த வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினைதான், தான் ஆட்சியமைக்க உதவியது என்பதை உணர்ந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் தமிழகம் சார்ந்த ஈழ ஆதரவு போராட்டங்களை கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். கட்சத் தீவு மீட்பு, சட்டமன்றத் தீர்மானங்கள் என நம்பிக்கை தரும் விதமாகத்தான் நடந்துகொண்டார். ஆனால் இரண்டு வருடம் கடந்துவிட்ட நிலையில் இப்போது தமிழக அளவில் ஈழ ஆதரவு போராட்டங்களை அவர் அனுமதிக்க மறுக்கிறார். கருணாநிதியை விடவும் ஜெயலலிதா இவ்வியசயத்தில் லட்சம் மடங்கு மேலானவர். கருணாநிதி ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது டெல்லியில் பதவிக்கு பேரம் பேசிய கொடுமையான மனதைக் கொண்டவர். விடுதலைப் புலிகள் மீதான தனிப்பட்ட வெறுப்பை அவர் சாகும் வரைக்கும் தமிழர்களுக்கு எதிராகவே உமிழ்கிறார். தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை ஆதரிக்கும் அடிமட்ட தொண்டர்கள் சமீபமாக விழிப்புணர்வுடன் பேசிவருவது ஆறுதலை அளித்தாலும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் தலைமைக்கு எதிராக திருப்பினால்தான் அவர்களுக்கும் மக்களிடம் பயம் வரும்.

முதல்நாள் தீர்மானம் மறுநாள் முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பு எனும் முடிவுகளை ஜெயலலிதா என்கிற ஒற்றை ஆளுமையால்தான் எடுக்க முடியும் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார். இவ்விசயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக பகைத்துக்கொள்ள விரும்பாத போக்கை காட்டினாலும்  தமிழ் ஆர்வலர்கள், தமிழக மக்கள் மத்தியில் உச்சியில் நிறுத்தப்பட்டிருந்த அவர் மீதான பெருமிதம் சடாரென ஒரே நாளில் கீழிறங்கிவிட்டது. உடனே ஒரு அறிக்கையுடன் தன் டெசோ அமைப்பை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. ஞானதேசிகன் எனும் ஒரு நபர் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவருகிறார். முள்ளிவாய்க்கால் முற்றமே தேவையில்லாத ஒரு விசயம் என்று சொல்கிறார். ஜி.கே. வாசன் தவிர்த்து வேறு எந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களும் எப்போதும் தமிழர் விரோத போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர். ஒரு வகையில் தமிழக காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்களே குழிவெட்டுவதுதான் ஆச்சர்யம்.

யாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து பிரதமர் அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்ததன் மூலம் மாநாட்டின் முதல் நாள் ராஜபக்சே முழங்கிய இலங்கை கடந்த நான்காண்டுகளாக அமைதிப்பூங்காவாக திகழ்கிறது எனும் கோஷம் எவ்வளவு பொய்யானது என்பதை உலகமே பார்க்க உதவியது. சேனல் 4 ஊடகம் ஈழம் வரைக்கும் சென்று உலகத்திற்கு அங்குள்ள நிலமையை காட்டினாலும், இங்கிருந்து சென்ற தந்தி மற்றும் புதிய தலைமுறை ஊடகங்கள் இந்திய அரசின் பிரதிநிதிகள் போலத்தான் செயல்படுகின்றன. இந்த காமன்வெல்த் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை, ராஜபக்சே தான் எப்போதும் தீர்வு கான விரும்பாத ஒரு நபர் என உலகிற்கு தெரியவைத்திருக்கிறார். அதேபோல் தமிழக மக்கள் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் நாடாளுமனறத் தேர்தலில் அவர்கள் முன்னால்தான் நிற்க வேண்டிவரும் என்பதால் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருகின்றனர்.

உலகளாவிய அழுத்தம் இன்னும் தீவிரமாக இலங்கை அரசின் மேல பாய்வதற்கு உலகளாவிய தமிழர்களுடன், தமிழகத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களும் தமது தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் தமிழர்களுக்கு ஒரு பொது வாக்கெடுப்புக்கான சாத்தியத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். இன்னும் உலகெங்கும் தமது சொந்த மக்களை அகதியாக வாழ்வதை தன் பசப்பு வார்த்தைகளால் மூடி மறைத்து விட முடியும் என்பதை ராஜபக்சே எத்தனை காலம் சொல்ல முடியும். மாற்றம் வந்தே தீரும். அதிலும் வெகு விரைவில் வரும். கொல்லப்பட்ட லட்சக்கனக்கான உயிர்களுக்கு ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும்

15 நவ., 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் - காட்சி மாறும் அரசியல்...

2009 மே 18 ல் ஈழத்தில் நடந்த இன அழிப்பை கண்டித்துத் தமிழ் ஆர்வலர்கள் கடுமையான போரட்டத்தை நடத்தியபோது முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் துவங்கி, சீமான், அமீர் கைது படலம், பிரபாகரன் படத்திற்குத் தடை, மாணவர்களுக்குக் கால வரையற்ற விடுமுறை என எல்லாப் போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு நசுக்கினார் கலைஞர். மெரினாவில் நான்கே மணிநேரம் அவர் நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஈழமே கிடைத்துவிட்டதாக அவர் தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டினர். காங்கிரஸ் தலைமையின் நோக்கம் அறிந்து விசுவாசம் காட்டிய கலைஞரை 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 63 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்ததைக்கூடப் பா.ம.க வின் தயவால் சமாளித்த தி.மு.க, பா.ம.க, விசிக கூட்டணியை அமைத்து படுதோல்வியைத் தழுவியது. விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக மாறினார். ஜெயலலிதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். அதுவரை கொட்நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத வெற்றி அது. கலைஞர், சோனியா இருவரின் மீதான வெறுப்புதான் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரனமானது. சீமான், வைகோ, தா.பா என அனல் பறந்த பிரச்சாரம் வடிவேலு, குஷ்பூ இருவருக்கும் கூடிய கூட்டத்தால் மாறவில்லை. 

மேலும் படிக்க : ஜில் மோர்.காம்

12 நவ., 2013

புரட்சி என்பது...

ஒன்றுபடு, 
போராடு., 
வெற்றிபெறுவோம்..,
புரட்சியின் விதி வரையறுக்கப் 
படாதவை..

எல்லா இடங்களிலும் 
நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி 
பின் 
நசுக்கப் படும் புரட்சி ..

மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி 
புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு 
பிடிக்காத வார்த்தை புரட்சி.. 

எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும் 
பணக்காரனுக்கு அஜீரணத்தாலும் ..

கடவுள், பக்தன் 
முதலாளி, தொழிலாளி 
அரசு, மக்கள் 
எப்போதும் லாபம் 
தரகர்களுக்கு மட்டும் ..

உன் குடும்பத்தின் 
பட்டினி போக்கிப் 
பின் 
வீதிக்கு வா..
போராடு...
சிறை செல் ..
மரித்துப் போ ..
சுவரொட்டியில் சிரி..

சே..
மாவோ.. 
லெனின் ...
மார்க்ஸ் ....
பெரியார் ...
கொள்கைகளை வீதியில் முழங்கு 
குல தெய்வத்துக்கு 
கெடா வெட்டு ..
 
உன் சகோதரன் போராடினால்
குற்றம் சொல்லி
’கட்டு’ ரை எழுது
நீதான் செவப்பு
மற்றெல்லோரும் கருப்பென சொல்
ஒரு மதத்தை இழிவு செய்ய
இன்னொரு மதவாதிகளிடம்
கையேந்து...

இனி 
ஆயுதம் துணை வராது 
அரசாயுதம் அழிக்கும் உன்னை,
அறிவுப் புரட்சி செய் 
அனுதினமும் தொழில் செய் 
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..

புரட்சி என்பது
மாற்றத்தைக்  கொண்டு வர 
முதலில் நீ மாறு...