உலக
சினிமாக்கள் பற்றி அதிகம் எழுதும் ஜாக்கி சேகர் பொதுவாகவே சமீப காலமாக
அதிகம் எழுதுவதில்லை. வேலைப்பளு அதிகமாகிவிட்டதாக அவர் தன் முகநூல்
பக்கத்தில் இதனைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவரின் சமீபத்திய பதிவான MIRACLE IN CELL NO .7-2013/உலகசினிமா/கொரியா/அப்பாவி அப்பா. படித்தபோது நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும் என
குறித்து வைத்துக்கொண்டேன். ஆனால் முகநூலில் விதூஷ் இதனை Must watch என குறிப்பிட்டு இருந்தார். படத்தை
கொஞ்சம் பார்க்கலாம் என அதன் இணைப்பில் சென்று பார்த்தேன். ஆனால் என்னால் வேறு எந்த
வேலையையும் பார்க்க முடியவில்லை. மிக அழகான திரைக்கதை என்னை படத்தோடு
ஒன்றவைத்து விட்டது.
Lee Yong-gu எனும் அப்பா பாத்திரம் ஆறு
வயதுடையவரின் மன வளர்ச்சி கொண்டது. அதே ஆறு வயது மகளுடன் அவர் வசித்து
வருகிறார். புத்திசாலியான மகளுடன் சந்தோசமாக வாழும் அவர், கார் பார்க் அட்டெண்டராக வேலை
பார்த்து வருகிறார். ஒரு நாள் வேலை முடித்து வரும் வழியில் ஒரு சிறுமி
விபத்தில் சிக்கிவிட அவளை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் சிறுமி இறந்து
விடுகிறாள். சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருக்கின்றன. மேலும்
இறந்த சிறுமியின் தந்தையான போலீஸ் கமிஷனருடன் முன்பு ஷாப்பிங்
காம்ப்ளெக்சில் வைத்து நடந்த தகராறு காரனமாக தன்னை பழி வாங்கவே அவர் மகளை
கொன்று விட்டதாக எண்ணி போலீஸ் அவருக்கு எதிராக வழக்கை முடித்து விடுகின்றனர்.
தண்டனைக்
கைதியாக சிறைக்கு வரும் Lee Yong-gu வை அச்சிறையின் ஏழாம் எண் அறையில்
அடைக்கின்றனர். அங்கு ஏற்கனவே இருக்கும் ரவுடிகள் இவரின் கேஸ் ரிப்போர்ட்டை
படித்துவிட்டு சிறுமியை கற்பழித்தவன் என அடித்து உதைக்கின்றனர். பின்னர்
ரவுடிகளின் தலைவனை ஒரு சந்தர்ப்பத்தில் இவர் காப்பாற்றுகிறார். அவர்கள்
அப்போதுதான் இவரின் மனநிலையை புரிந்துகொள்கிறார்கள். பதிலுக்கு இவருக்கு
எதாவது உதவி செய்ய வேண்டும் என ஆதரவற்றோர் பள்ளியில் படிக்கும் அவரின்
மகளையே சிறைக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கு அவரின் மகளுக்கும்
Lee Yong-gu க்கும் இருக்கும் பாசப் போராட்டம் அவர்களின் இதயத்தையும்
உருக்குகிறது. ஆனால் உயர் அதிகாரியால் சிறுமியை இவர்களுடன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிறுமியை மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்துக்கே அனுப்பி வைக்கப்படுகிறாள். Lee Yong-gu ஐ
தனியறையில் அடைத்து கட்டிப்போடுகின்றனர். அன்று இரவு நடக்கும் தீ விபத்தில் சிக்கிக்கொள்ளும் அந்த உயர்
அதிகாரியை காப்பாற்றுகிறார். அதன்பின் உயர் அதிகாரி ஒரு புறமும் சிறையில்
இருக்கும் நண்பர்கள் ஒருபுறமும் இவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள்.
அவர்கள் மீண்டும்
அவ்வழக்கை நீதிமன்றதில் விசாரிக்க கோருகிறார்கள். சிறுமி Ye-sung ஐ
சிறையின் உயர் அதிகாரி தன் சொந்த பொறுப்பில் வளர்க்கிறார். சிறையின் உயர்
அதிகாரி என்பதால் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து விடுமுறைகளில் சிறுமியை
சிறைக்கு அழைத்து வந்து அறை எண் 7- ல் விடுகிறார். சிறையில் இருக்கும்
மொத்த கைதிகளும் Lee Yong-gu ஆதரவாக மாறுகிறார்கள். இறுதியில் என்ன முடிவு
கிடைக்கிறது என்பதுதான் படத்தின் திருப்பம்.
அப்பாவாக
நடித்த Ryu Seung-ryong ம் அவரின் சிறுவயது மகளாக நடித்த Park Shin-hye
அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார்கள். நிஜமான தந்தை மகளுக்கான உறவைப்போல்
வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள்
படமாக்கப்பட்டிருக்கிறது. தெளிவான திரைக்கதை நம்மை படத்தோடு
கட்டிப்போடுகிறது. படத்தின் இறுதிக் காட்சிகளில் என்னால் கண்ணீரை
கட்டுப்படுத்தவே முடியவில்லை. படத்தில் குறைகள் இருக்கு ஆனால் அதையெல்லாம்
மீறி படத்தில் இருக்கும் உயிரோட்டம் படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது என
ஜாக்கி அண்ணன் எழுதியிருந்தார். படம் வெளியாகி ஏகப்பட்ட வசூலையும்,
விருதுகளையும் குவித்து இருக்கிறது. படத்தை Lee Hwan-kyung
இயக்கியிருக்கிறார்.
A story about love between a mentally ill father and his lovingly
adorable daughter. Which is his father, accused of murder and rape. This is must watch movie.
படத்தை பார்க்க( with English sub title) : Miracle in Cell No. 7