31 ஜன., 2009

''ராமசாமி'' அத்தியாயம் 3

காதலில் எத்தனையோவகையை பார்த்துவிட்டோம் ,அதனை போதாகுறைக்கு சினிமாவும் கற்பனைக்கு எட்டியவரை காட்டியாயிற்று.. இது ஒரு மாணவனுக்கு டீச்சர் மேல் உண்டான காதல், ஆனால் இதில் டீச்சர் ஒன்றும் அறியாத அப்பாவி.. ஏனென்றால் நண்பனுக்கு வந்தது ஒருதலைக்காதல் ..

நம்ம நண்பனின் பெயர் கம்பன்,வெளியூரில் இருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்தவன். அவன்தான் நம்ம ஹீரோ, தொடர்ந்து அவனைப்பற்றி பேசுறதுக்கு முன்னால என்னோட சுயபுராணம் கொஞ்சம் ...

நாங்க அப்போது +2 படித்துகொண்டிருந்தோம் , பத்தாவது முடித்தவுடன் நான் கட்டிடவியல் படிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அப்பாவோ சுத்துப்பட்டுல நம்ம ஊருக்குதான் கம்ப்யூட்டர் வந்திருக்கு அதனால் அதைத்தான் படிக்க வேண்டும் என பிடிவாதமாக சேர்த்துவிட்டார், எனவே நமக்கு பிடிக்காமலே சேர்ந்த படிப்பு அது, அதனால் கொஞ்சம் கவனகுறைவாகவே இருப்பேன் , அதனால் டீச்சருக்கு என்னையும் நண்பன் கணேசயும் சுத்தமா புடிக்காது , போதாகுறைக்கு எங்களோட சீனியர் ஒருத்தனும்(பேரு மதி ) படித்தான், அவனோட கிளாஸ்மேட்தான் நம்ம டீச்சர், இந்தமாதிரி ஒரு நிலைமைக்கு என்ன காரணம்ன்னா அப்ப கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவங்க ரொம்ப கொறைவு , ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபோல் அவங்க எங்க ஊரு என்பதாலும் மேலும் கம்ப்யூட்டரில் டிப்ளோமா செஞ்சதால் டீச்சரா போட்டுட்டாங்க, அவங்களுக்கு தெரியுமா கூடப்படிச்சவனுக்கே சொல்லிகொடுக்க வேண்டியிருக்குன்னு அதனால அவனமட்டும் வாங்க, போங்கன்னு சொல்வாங்க, எங்கள நீ, வான்னு சொல்வாங்க போதாதா.. அதை அடிக்கடி சொல்லி கிண்டல் செய்வோம், அதனால் நாங்க ரெண்டு பேரு கிளாஸ்ல இருக்கிற மாதிரியே நெனைக்க மாட்டங்க, எங்களுக்கும் அது ரொம்ப வசதியா போய்ட்டதால சிகிரெட் புடிக்கனும்னா வெளிய வந்துருவோம்,

இப்படி போய்க்கிட்டிருந்த வகுப்புல நம்ம திருநாமத்த(பேரு) கொண்ட நண்பன் ஒருவன் நம்ம ஹீரோ டீச்சர காதலிக்கிற விசயத்த போட்டு ஒடைச்சான், நமக்கு ஒரு கிலோ அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்த்துச்சு , அப்புறம் என்ன கொஞ்ச நாளைக்கு நம்ம மக்களோட செலவெல்லாம் அவனோடதுதான், என்ன நம்ம கையும் , வாயும் சும்மா இருக்காது , சுவர் விளம்பரம், ரேடியோ விளம்பரம் , போஸ்டர் ஒன்னுவிடாம போட்டு விட்ருவோம் , மேலும் அவன கூப்பிட்டு விசாரித்தபோது , விசாரணை என்றால் எங்க ஸ்கூல் பாத்ரூம்தான் போலீஸ் ஸ்டேஷன் அங்கதான் முதலில் சும்மா விளையாட்டா கேட்டோம், முதலில் சத்தியம் செய்து மறுத்த அவன், ரெண்டு தாங்கு தாங்கினவுடன் ஒத்துக்கொண்டான், மேலும் தன்னோட அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவார்ன்னு சொன்னான் போதாதா, விடுங்கடா நான் காதலிக்கவே இல்லை என்று கதறும் வரைக்கும் கறந்துக்கிட்டுதான் விட்டோம் ,

ஆனா இது கடைசிவரைக்கும் டீச்சருக்கு தெரியாம போய்ட்டுது , நாங்க பன்ற சேட்டை தங்காம எனக்கும் கணேசுக்கும் ரெகார்ட் மார்க் கொறைச்கிட்டங்க, அதனால கணேஷ் அவங்ககிட்டே போய் நீ என்னோட ரெகார்ட் மார்க்கதான் குறைக்கமுடியும் தியரில நான் பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டா வேலைய விட்டுட்டு போவியான்னு சவால் விட்டான் , அதுக்கு அவங்க அவனை மொறச்சுக்கிட்டே போய்ட்டாங்க, நான்கூட என்னடா இப்பிடி சொல்லிட்டே இதல்லாம் ஆவுற கதையாடா விட்டுட்டு வாடான்னு அழைச்சிக்கிட்டு வந்திட்டேன், ஆனால் அவனோ சொன்னபடி செய்து காட்டினான், மார்க்லிஸ்ட் வாங்க வந்தபோது அந்த டீச்சர் எங்களிடம் மன்னிப்பு கேட்டாங்க.,

அப்புறம் நாங்க கணக்குல பெயிலயிட்டதால் மேலே படிக்கல, பிறகு சிங்கப்பூர் போயிட்டு வந்தபிறகு அவங்கள போய்பார்த்தேன் ரொம்ப அன்பா விசாரிச்சாங்க , இவங்கள போய் நோகடிசுட்டோமே என வருத்தப்பட்டேன்,

+2 முடிந்த பின் எப்பவாவது என் அத்தை பெண்ணை பார்க்க அவர்கள் வீட்டிற்கு போவேன், அப்படிதான் ஒருநாள் அது என்னிடம் கடிதம் ஒன்றை காட்டியது, அது நம்ம ஹீரோ கம்பன் அதற்க்கு எழுதிய கடிதம், அதில் சிக்கல் என்னவென்றால் அந்த கடிதம் ஒரு பதில் கடிதம் போல எழுதப்பட்டிருந்தது, அதற்கும் அந்த கடிதம் பார்த்து ஒரே குழப்பம், எங்க மாமாவுக்கு தெரிந்தால் பிரச்சினை பெரிதாக்கி அவனை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார் என்பதால், நானே அந்த கடிதத்தை வாங்கிகொண்டு கம்பன் வீட்டிற்கு சென்றேன், அவனை தனியே அழைத்துசென்று விசாரித்தால், முதலில் நான் அந்த கடிதத்தை திருடிக்கொண்டு வந்ததாக சொன்னான், பிறகு ரெண்டு போட்டவுடன் அந்த பெண்ணும் தனக்கு கடிதம் எழுதியது அதனால்தான் நான் பதில் போட்டேன் என்று சொன்னான், அந்த லெட்டர கொடுடா என்றால் தரமுடியாது என சொன்னான் ,

நமக்குதான் நம்ம நண்பன பத்தி தெரியுமே, தருகிறாயா இல்லை உங்க அப்பாகிட்டே சொல்லட்டுமா என்றவுடன் நடுங்கிக்கொண்டு வந்து கொடுத்தான், இதை யாருடா உனக்கு கொடுத்தது என ரெண்டு போட்டேன் , அதற்க்கு அவன் எங்களுடன் படித்த பாஸ்கரன் கொடுத்தான் எனவும் , தொடர்ந்து கடிதம் கொடுப்பன் நானும் பதில் எழுதி கொடுப்பேன் , இடையில் அவன் எதற்கு புரோக்கர் மாதிரி என நானே எழுதினேன் , அது உன்கையில் மாட்டிவிட்டது என அழுதான், மேலும் தன் வீட்டாருக்கு தெரிய வேண்டாம் என மன்றாடினான், நானும் அவனை இந்த கடிதமெல்லாம் பாஸ்கர் உன்னிடம் விளையாண்டிருக்கிறான், அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்,

இந்த பாஸ்கர் என் மாமாவின் மூத்த பெண்ணின் கணவர் வைத்திருக்கும் கடையில் வேலை செய்தான், அவனிடம் சென்று விசாரித்தேன் , அவனும் முதலில் மறுத்தான் , படையல் ஆரம்பித்தவுடன் ஒப்புக்கொண்டான், அவனும் கம்பனும் ஒரே ஊர் அதனால் கம்பன் அடிக்கடி என் அத்தை பெண்ணை பற்றி விசாரிக்கவும் , சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன் அவன் இந்த அளவு போவான் என்று தெரியவில்லை என மன்னிப்புக்கேட்டான் , அப்பல்லாம் நான் விஜயகாந்த் மாதிரி, மன்னிப்பு என்னோட அகராதியில் கிடையாது, பாஸ்கர் தன் வாழ்நாளில் அப்படி அடி வாங்கியிருக்க மாட்டான், அடி பின்னி எடுத்திட்டேன்

இனி அந்த கடையிலும் வேலை பாக்ககூடாது என துரத்திவிட்டேன், இப்போது எல்லாருக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் , அவர்களும் என்னைபோல் நினைத்து பார்ப்பார்களா? ஆட்டோகிராப் சேரனைபோல் ஒரு தடவை எல்லோரையும் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்...

28 ஜன., 2009

''தேசியம் வெங்காயம்"

என்னால் எந்த செய்தியும் படிக்க முடியவில்லை ..

ரத்தம் கொதிக்கிறது , இந்திய அரசாங்கத்தின் துணையோடு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்தும் படுகொலைகளை பற்றிய செய்திகள் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது,

விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள் ?
எதற்க்காக இன்னும் பின் வாங்குகிறார்கள் ?
உண்மையில் அவர்களின் பலம் குறைந்துவிட்டதா?
இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க,

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து... தாங்கமுடியலே ...
என் உறவுகள் படும் அவலம்கண்டு சாப்பிடவே முடியவில்லை...
இதற்க்கு முடிவுதான் என்ன... ?

அட தமிழ்நாட்டு அறிவிலிகளே .. விடுதலைப்புலிகளை பற்றி அவதூறு பேசும் மடையர்களே ... அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும் ... எத்தனையோ வாய்ப்பு கிடைத்திருக்கும்.... ஐரோப்பிய நாடுகளில் அவர்களால் சொகுசாக வாழ்க்கை நடத்தியிருக்க முடியும் ...

அதனைவிடுத்து எதற்காக உயிரைகொடுத்து போராட வேண்டும் ..
அந்த சகோதர, சகோதரிகளுக்கும் நம்மைபோல் வாழ ஆசை இருக்காதா என்ன?

திரு.ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலையில் இன்னும் அவிழ்க்கபடாத மர்மங்கள் இருப்பதாக செய்திகள் வரும்போது அதையெல்லாம் காங்கிரஸ்காரன் படிக்கிறது இல்லையா?

நானும் ஒரு காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன்தான் ...
அதற்காக கண்ணைமூடிக்கொண்டு எதைவேண்டுமானாலும் பேசலாமா..
ஒரு இன உணர்வு வேண்டாம் .. நமக்கெல்லாம் சொரணை வேண்டாம்..

அட இலங்கையில் தமிழன் தனிநாடு கேட்கிறது தப்புன்னே வச்சுக்குவோம்..
அவங்களுக்குள்ளே அதை தீர்மானித்துக்கொள்ள விடவேண்டியத்தானே..
இந்திய அரசாங்கத்துக்கு தலையிட உரிமை இருக்குன்னு சொன்னா ...
ரெண்டு பக்கமும் நடுநிலையா பேசு..

பாகிஸ்தான் கிட்ட பேச வாக்கு இல்லாத .. காங்கிரஸ்காரன் இலங்கைக்கு மட்டும் ஏன் ஓடி.. ஓடிப்போய் உதவுரே ...

இலங்கை தமிழனின் பூர்வீக நாடு .. சிங்களன் வந்தேரியவன் ...

தமிழ்நாட்டு மக்களே .... தமிழனுக்காக அழவேண்டாம் ......
மனிதநேயம் கொண்டு பாருங்கள் ....

மக்களே இப்படியே விட்டோம்ன்னு வச்சுக்கோங்க... அப்புறம் நாமளும் சொந்த நாட்டுலேயே பிச்சைதான் எடுக்கணும்...
சுதந்திர போராட்ட காலம் தொட்டு இன்றுவரை இந்திய இறையாண்மைக்கு தமிழனால எதாவது பாதிப்பு வந்திருக்கா?

கர்நாடகா தண்ணி தரமுடியாதுன்னு சொல்றான் .. கேரளாகாரன் கடலுக்கு போகலாம், ஆனா தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமட்டோம்ன்னு சொல்றான்.
ஆனா நம்மால ஹோகனேக்கல் திட்டதகூட நிறைவேத்த முடியல..
இவ்வளவிற்கும் அது நம்ம எடத்துல இருக்கு...

தயவு செய்து வரும் தேர்தலில்
காங்கிரஸ் ,தி.மு.க. , ௮.தி.மு.க. ,தே.மு.தி.க, பா.ம.க போன்ற காட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்....

இவர்கள் நம்மையும் அடகு வைத்துவிடுவார்கள் ....

தமிழனை அழிக்க இந்தியாவே ஆயுதம் அனுப்பும்போது ...
தேசியமாவது ... வெங்காயமாவது.....

இனி என் ஆயுள் உள்ளவரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்..

தமிழ்குறிஞ்சி

25 ஜன., 2009

''ராமசாமி'' அத்தியாயம் 1

நான் நான்கு வயதுவரை அம்மாவிடம் பால் குடித்தவன் , என்னை மறக்கவைக்க எவ்வளவோ முயற்சி செய்தனர் ,காம்பில் வேப்பன்னை தடவி வைத்துதான் மறக்கடித்தனர் .

நான்தான் வீட்டில் கடைசி அதனால் செல்லம் அதிகம் ,நான்கு சகோதரிகள் ,ஒரு சகோதரன் , ஆனால் போகபோகத்தான் தெரிந்தது அண்ணனுக்கே அதிக முன்னுரிமை என்று.. ஆனால் என்னோட உலகம் வேறாக இருந்தது .. எப்போதும் விளையாட்டுதான் .. அவனுடைய வீடு இருக்கும் தெருவில் அனேகமாக எல்லோரும் மாமாக்கள் வீடுதான் .. எல்லாவீட்டிலும் என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தனர் , ஏன்னா நான் ஏறாத மரம் கிடையாது , தம்பிதான் மறுக்காம உதவி பண்ணும் என்று சொல்லியே எல்லாவேலையும் என்னிடம் வாங்கிவிடுவார்கள் . தேங்கா , மாங்கா , முருங்கைக்காய் பறிக்கிறது ,கடைகன்னிக்குப்போறது இப்படியாக வீட்டில் எந்த வேலையும் செய்யாத நான் .. எல்லோர் வீட்டிற்கும் வேலைக்காரன் ஆகிப்போனேன் ..

அப்பல்லாம் நான் ஒன்னாப்பு படிக்கயில என்னக்கு மட்டும் ஒரு பலக வேணுன்னு அடம்புடிப்பேன் , என்னோட கட்ட டீச்சரும் (நாங்க இப்படித்தான் கூப்புடுவோம் )எனக்கு ஒரு பலகைய கொடுப்பாங்க, அப்பல்லாம் உக்கார பலகைதான் கொடுப்பார்கள் ..என்னோட விருப்பத்துக்குதான் ஸ்கூலுக்கு போவேன் , வீட்டுக்கு வரணும்ன்னு நெனச்சா உடனே பைய தூக்கிட்டு கெளம்பிடுவேன் .. அப்படிதான் ஒரு நாள் வீட்டுக்கு வர்றப்ப என்னோட தாய்மாமா டேப்பன் (எல்லோரும் அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள் ) பாத்துட்டு அடி பின்னி எடுத்துட்டார் , அதன்பிறகு ஒழுங்கா பள்ளிக்கு போக ஆரம்பிச்சேன் ..

அப்புறம் நான் அஞ்சாப்பு படிக்கயில என்னோட செட்டுங்க ரொம்ப பெருசு , வயசு வித்தியாசம் இல்லாம எல்லோரும் விளையாடுவோம் ..அப்படிதான் ஒருமுறை நாங்க எல்லோரும் சேந்து காசு சேத்தோம், பொதுவான ஒரு எடத்துல உண்டியல் புதைத்து வைக்கப்பட்டது , ஆனால் திடீரென உண்டியல் ஒருநாள் காணாமல் போனது ..

என்னோட மாமா வீட்டு தோப்புல வெளியூருல இருந்து பிழைப்புதேடி வந்த ஒரு குடும்பம் இருந்தது , அந்த வீட்டு பையன் நான்தான் அந்த உண்டியல திருடியதாகவும் அதை தன் கண்ணால் பார்த்ததாகவும்சொன்னதால் ,எல்லோரும் என்னை கூட்டி பஞ்சாயத்து வைத்தனர் ,
நான் எவ்வளவோ மறுத்தும் ,சத்தியம் செய்தும் யாரும் என்னை நம்பவில்லை ,
என்னோட அம்மாவும் , சத்தி வீட்டு தாத்தாவும் (சத்தி அத்தான் பத்தி பின்னாடி சொல்றேன் ) மட்டும் நம்பினார்கள்.
ஆனாலும் என் சேக்காலிங்க நம்பாததால் , அம்மாவே அவர்களுக்கு கணக்கு சொன்ன இருவது ரூபாயும் கொடுத்தாங்க ..

அதன்பிறகு என் செட்டுங்க யாரும் என்கிட்டே பேசுறது கிடையாது . நான் கடைக்கு போகும்போதெல்லாம் என்னைபாத்து ''திருடன் போறான்னு " கத்துவாங்க ,

ஸ்கூல் விட்டுவந்து அவங்களோட விளையாட முடியாது , அத தவிர்ப்பதற்காக,ஸ்கூல் விட்டவுடன் நூலகம் செல்ல ஆரம்பித்தேன் , அப்படித்தான் நான் படிப்பாளி ஆனேன் ,

இப்படி சில மாசம் போன பின்னாடி ஒரு நாள் ஸ்கூல்ல இருக்கும்போது என்னோட அப்பா மற்றும் என்னை நான்தான் திருடினேன் என்று சொன்ன பையன் , அவனோட அப்பா ,அம்மா மற்றும் அவனோட தங்கச்சி எல்லோரும் வந்து என்னை ஹெட்மாஸ்ட்டர் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க , அங்க என்னை திருடன்னு சொன்ன பையன் அவனோட தங்கச்சிய நான் கருக்கருவளால் (கதிர் அறுக்கும் அருவாள் ) வெட்டிவிட்டேன் என்று சொன்னான் , ஆனால் என் வகுப்பு ஆசிரியரோ அவனை விசாரித்து கேட்டபோது அவன் நான் காலை பதினோரு மணி அளவில் வெட்டியதாக சொன்னான் , அப்போது நான் பள்ளியில் இருந்ததால் அவன் என்மேல் பொய் சொல்கிறான் என்று தெரிந்து அவனோட அப்பா ,அம்மா அவன செமையா சாத்துனாங்க ..

அப்புறம் இது என்னோட செட்டுங்களுக்கு தெரிஞ்சு அவங்களும் அவன புடிச்சு அடிச்சப்பதான் தானே திருடிவிட்டு என் மேல் பழிசுமத்தியதை ஒப்புக்கொண்டான். என் சேக்காலிங்க என்கிட்டே மன்னிப்பு கேட்டு மறுபடியும் செட்டுல சேத்துகிட்டங்க ..,

ஆனாலும் என்னோட ஆர்வம் லைப்ரரி மேல மாறிப்போனதால் என் மாமா அவரோட உறுப்பினர் அட்டையை கொடுத்து , என்னையும் உறுப்பினராக சேத்துவிட்டார் ..

இன்னைக்கு வரை தீவிர படிப்பளியாக நான் மாற காரணமான அந்த பையனுக்குதான் நன்றி சொல்லணும் ...

அடுத்த அத்தியாயம் என்னோட முதற்காதல் பத்திதான் .....

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழிலும் வெளியாகிறது"



"ராமசாமி"..

ராமசாமி சில குறிப்புகள் ....

ராமசாமி ஒரு சாதாரண ஆசாமி , சில நேரங்களில் அவன் உங்களைகூட பிரதிபலிக்கக்கூடும் ,அவன் சந்தித்த ,அனுபவித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளபோகிறான் ...

அவனால் எல்லாவற்றையும் சொல்லமுடியாது ,ஏனெனில் அதில் மற்றவர்களின் அந்தரங்கமும் சம்பந்தபடுவதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேரிடுகிறது ...

என்றாவது அவனை நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் உங்களிடம் அதைப்பற்றி அவன் சொல்லக்கூடும் ..

தற்சமயம் சென்னைவாசியான அவன் பிறந்தது மன்னார்குடி அருகில் உள்ள பேரூர் (பெரிய ஊர் ) ஒன்றில் ..

தற்போது முப்பத்தேழு வயதாகும் அவனுக்கு நேர்ந்த சம்பவங்களின் தொகுப்பு இது ..

இதைபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருந்தால் அதனை எனக்கு எழுதுங்கள்.. இந்த கதையின் ஊடாக அதனையும் பயன்படுத்த முடியும் ..

இவன் வாழ்கையில் அதிகம் பாதித்த மூன்று விசயங்கள் 1.ஜோசியம் 2.நட்பு 3.காதல் ..

இவன் கருவானபோதே ஜோசியக்காரன் , இவன் பிறந்தால் சகோதரனுக்கு ஆகாது அதனால் மாற்றுமனைக்கு மாறவேண்டும் என்று சொன்னதால் , இவன் அம்மாவின் அப்பா தற்காலிகமாக அவர் இடத்தில் வீடு கட்டி கொடுத்தார் , ஆனால் அதுவே 2003 வரை ராமசாமியின் சொந்தவீடு ..

2003 க்கு அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்கிறீர்கள்?

இனி ராமசாமியே உங்களோடு பேசப்போகிறான் ....

இடைஇடையே நானும் வருவேன்..

22 ஜன., 2009

நானும் கடவுளும்

நான் பிறக்குமுன்பே ஜோசியக்காரன் நான் பூர்விக வீட்டில் பிறந்தால் அண்ணனுக்கு ஆகாது என்று சொன்னான் என்பதற்காக எங்கள் சொந்த வீட்டை விட்டு அம்மாவின் அப்பா கொடுத்த (சும்மாதான்) இடத்தில் வீடு கட்டிக்கொண்டு (இதுவும் தாத்தாவின் உபயம்தான்)வந்துவிட்டார்கள்..

பிறந்து ஒரு வருடத்தில் என்னை பழனி முருகனுக்கு தத்து கொடுத்துவிட்டனர் (அப்பவே தண்ணி தெளிச்சு விட்டாச்சு).
அதனால் அப்பாவோ ,அம்மாவோ நான் தப்பு செய்யும்போது அடித்தால் ..ஐயோ முருகா ..நீ பார்த்துக்கோ .. என்று சாபம் கொடுப்பேன் ..

கொஞ்சம் வால் முளைத்தவுடன் ..என்னுடைய வீட்டை சுற்றியும் இருக்கிற அநேக வீடுகள் மாமன் ,மச்சான் வீடுகள்தான் அங்கு உள்ள பெண்டுகளுடந்தான் எப்போதும் விளையாடுவேன் (அப்பா ,அம்மா விளையாட்டெல்லாம் இல்லங்க ) பெரும்பாலும் கோவில் கட்டி அதற்க்கு கும்பாபிஷேகம் ,திருவிழா பண்ணுவோம் .. வீட்டில் காசு கேட்டு தொந்தரவு செய்வதால் நல்லா பாட்டு விழும் .. மற்றபடி தேவையான பொருட்களை அவங்கவங்க தெறமைக்கு தக்கன மாதிரி ஆட்டைய போட்டுட்டு வருவாங்க ...

அஞ்சாப்புக்கு (ஐந்தாம் வகுப்பு ) பிறகு செட்டு மாறிடுச்சு ..அப்புறம் பம்பரம் ,கபடி ,தட்டுகோடு ,கிட்டிபுள்ளு ,விளயடுரதுக்கே நேரம் சரியாபோகும் ..இடையில் ஜூனுக்கு பிறகு ஆத்துல தண்ணி வந்துரும் ..அப்புறம் என்ன ஸ்கூல் விட்டு வந்தவுடன் நேரா ஆத்துக்குதான் அங்க போனவுடன் டவுசர கழட்டி கரையில் போட்டுவிட்டு இருட்டரவரைக்கும் ஒரே கும்மாளம்தான் ...நம்மளோட தோஸ்துல தஞ்சாவூரானும் ஒருத்தன் www.thanjavuraan.blogspot.com

சிங்கப்பூர் வந்தபிறகும் அடிக்கடி கோவிலுக்கு போவதுண்டு ,மறுபடியும் ஒரு ஜோசியக்காரனின் அறிவுரைப்படி சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயனுக்கு விரதம் இருக்கும்படி அம்மாவின் கடிதம் வந்தது ..

சிங்கபூரில எப்படி விரதம் இருக்கிறது ..ரொம்ப கஷ்டம் ...சீனங்க கீரையிலகூட நெத்தலி போட்டுத்தான் சமைப்பாங்க ..எனவே காலையில இருந்து சாப்பிடாம இருந்துட்டு சாயந்தரம் தேக்கா வந்து காளியம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயனை வணங்கிவிட்டு கோமள விலாசில் சைவ சாப்பாடு சாப்பிட்டு விரதம் முடிப்பேன் ஆனால் சனிக்கிழமை லீவாக இருந்து நண்பர்களை சந்திக்க நேர்ந்துவிட்டால் விரதத்தை ஒருவாரம் ஒத்தி வைத்துவிடுவேன் இப்படியாக பதினோரு வாரம் இருக்கவேண்டிய விரதம் மாதக்கணக்கில் நீண்டது ..

1995-ல் ஊர் வந்தவுடன் அம்மா வேண்டுதலின்படி எங்க ஊர் மாரியம்மனுக்கு காவடி எடுத்தேன் ..எனக்கு நண்பர்கள் அதிகம் ..அதிலும் சிங்கப்பூர் ரிட்டன் வேறு .. எல்லோருக்கும் தண்ணி ..பட்டை.,பிராந்தி ,விஸ்கி ஆறாக ஓடியது .. தண்ணில அவங்க போட்ட ஆட்டத்துல மாரியம்மனே அன்னைக்கு ஊரே விட்டு ஓடியிருக்கும் ..

அதன்பின் என் நண்பன் சபா.ரவி அவனுக்கு ஜோசியம் பாக்கனும்னு என்னையும் கூட்டிக்கிட்டு போனான்.. எனக்கும் பாத்துருவோமே அப்படின்னு என்னோட புக்கையும் எடுத்துட்டு போனேன் ..அவரோ உனக்கு நேரம் பிரமாதமா இருக்கு ஆனாலும் ஒருமுறை குரு கோவிலுக்கு போயிட்டுவான்னார் .. இந்த ஜோசியக்காரர் நீ அக்கா மகளைத்தான் திருமணம் செய்வாய் என்று சொல்லி ,அது எங்க வீட்டுல பெரிய புயல உண்டு பண்ணுச்சு (எனக்கு நாலு அக்கா அதில ரெண்டு அக்காவுக்கு கட்டிகொடுக்கிற வயசுல பொண்ணுங்க ..கேக்கனுமா )...

என்னோட இன்னொரு கூட்டாளி கணேச அழைச்சுக்கிட்டு ஆலங்குடி கோவிலுக்கு போனோம் .. அங்கு முறைப்படி அர்ச்சனைக்கு வேண்டிய அனைத்தும் வாங்கிக்கொண்டு வரிசைகட்டினோம் ..எங்கள்முறை வரும்போது வாசலில் ஒரு டாட்டா சுமோ வந்து நின்னது ..உடனே அர்ச்சனை செய்த ஐயரில்ஒரு ஆள் அவர்களை நோக்கி ஓடினார்.,

அவர்களை அழைத்துவந்து தலையில் பரிவட்டம் கட்டி ..மாலை ஒன்றை கழுத்தில் போட்டுவிட்டு அரைமணிக்கும் மேலாக அவர்களுக்கு மட்டும் அர்ச்சனை நடந்தது ..கடைசியில் டாட்டா சுமொக்காரன் ஒரு பத்து ரூபாயை தட்டில் போட்டான் .. எனக்கு பத்திக்கொண்டு வந்தது ..உடனே என் அர்ச்சனை சாமான்களை நண்பனிடம் கொடுத்துவிட்டு எனக்கு தலைவலிக்கிறது என சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டேன்..

அர்ச்சனை முடிந்து வந்த நண்பன் என்னிடம் தந்த பொருட்களை வாசலில் இருந்த பிச்சைகாரனிடம் அப்படியே கொடுத்தேன் ..பதறிய என் நண்பன் என்னடா பண்றே வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போகவேண்டாமா என்றான் ...மௌனமாக மறுத்துவிட்டு ஊர் வந்தேன் ..

ஆலங்குடியிலேயே தெரிந்துவிட்டது கடவுள் கோவிலில் இல்லை என்று ..
சரி எங்கிருக்கிறார் என்று தேடியபோது நண்பன் அறிமுகப்படுத்தியது ''வாழ்க வளமுடன் '' என்ற வேதாத்திரியின் அறக்கட்டளையை ..
அங்கு படிப்படியாக தியானம் பழகினேன் ..அகத்தாய்வு மூன்றாம் நிலைவரை பயிற்சி எடுத்துக்கொண்டேன் ..

அங்கிருந்து என் கடவுள் மறுப்பு கொள்கை தீவிரமானது ..பெரியாரை படிக்க ஆரம்பித்தேன் ..நண்பன் வால்காவிலிருந்து கங்கைவரை என்ற புத்தகம் தந்தான்..என் வாழ்கையை புரட்டிபோட்டது அந்த புத்தகம் ..

அதன்பின் ஜி.கே , யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி , ஓஷோ புத்தகங்கள் இன்னொரு பாதையை காட்டியது ...

என் திருமணமே சந்தர்ப்பவசத்தால் நான் விரும்பியபடி நடந்தது ..
தாலி கட்டாமல் ,ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டேன் ...

இன்றுவரை கடவுள் தேடல் தொடர்கிறது ...

சமீபத்தில் திருவண்ணாமலை சென்றோம்(பன்னீர்அண்ணன் ,ராஜா ,இளங்கோ ) மலை உச்சியில் தீபம் ஏற்றும் இடத்துக்கு ஏறினோம் ..அங்கு ஒரு சித்தரின் சீடன் எங்களுக்கு தேனிர் போட்டுதந்தார் ,சில மூலிகைகளும் தந்தார். .

நான் கடவுளை காண்பேனா ...?

"இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழிலும் வெளியாகிறது"
www.tamilkurinji.com

17 ஜன., 2009

''சி.சிவசேகரம்'' கவிதை

திரு.சி .சிவசேகரம் அவர்களின் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது..

நாம் ஒவொருவரும் ஈழத்தை எப்படி பார்க்கிறோம் என்பதை காட்டும் கண்ணாடி இந்த கவிதை ...
கவிதை முகத்தில் அறைகிறது .... என்ன செய்ய போகிறோம் ................

என் முகத்தில் எதைக் காண்கிறாய் என் வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒரு தாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தான்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுபாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைசாவடி அதிகாரி
இன்னும் விற்று முடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்து செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைபட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தால் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என் வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடிதுரைத் தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை என கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியகரதனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை என பதறினாள் ஒரு தாய்
பால்க் கான கியூ வரிசையை என்றால் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வடக்கை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டால் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி. ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்று கிடந்தது
ஒரு அகதியின் பிணம்

16 ஜன., 2009

உணர்ச்சிக் கவிஞர் ''காசி ஆனந்தன்'' கவிதைகள்


முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்

பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்


வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு .


சாமி..

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்..
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;

போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.

அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது

மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…நீ என்றேன்
கைதட்டினான்

பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.

கோடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.

திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன

கொலை..
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு

அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி..
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

அடி ..

கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.

ஆணாதிக்கம்..
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

வேலி..
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

காலம்..
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை..
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்..
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்..
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

புலமை..
கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!

பால்..
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்

அரண்..
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.

தேர்தல்..
மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.

குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

ஏழ்மை..
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்

கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்

மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?

குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்.


15 ஜன., 2009

''தமிழீழம்'' ஒரு பார்வை

தற்போதைய இலங்கை நிலவரம் யாருக்கும் மிகச்சரியாக தெரியாத சூழ்நிலையில் , செய்திகளில் நாம் அறியும் நிலவரம் மிகுந்த கவலை அளிக்கிறது , விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிங்கள அரசாங்கத்துக்கு ஆதரவு தரும் காங்கிரஸ் அரசாங்கம் மனிதபிமான அடிப்படையில்கூட வாய்திறக்க மறுக்கிறது , ஆறரைகோடி தமிழ்நாட்டு மக்கள் உள்ளக்குமுறலை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறார்கள் ,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார் .
தமிழீழ மக்களுக்கு ஆதரவாக போராட இந்த வழிமுறையை மட்டுமே கடைபிடிக்கக்கூடிய நிர்பந்தத்தை அரசாங்கம் நமக்கு ஏற்படுத்தி விட்டது (இல்லை என்றால் திரு.சீமான் மற்றும் கொளத்தூர் மணி மாதிரி மற்றவர்களும் கம்பி என்னவேண்டும் அல்லவா ). ஆனால்,
திருமாவின் போராட்டத்துக்கு ஒருவேளை அரசு செவிசாய்க்காமல் போகுமே ஆனால் நிலைமை என்ன ஆகும் என நினைக்கையில் பெரும் கவலையாக இருக்கிறது ,
தமிழக முதல்வர் விரைந்து ஒரு நல்லமுடிவை எட்டவேண்டும் , மேலும் திருமா அவர்களை சமாதனப்படுத்தி உண்ணாநிலையை கைவிடசொல்லவேண்டும் ,
புலிகளின் போர்த்தந்திரம் உலகம் அறிந்த ஒன்று , அவர்கள் மரணத்தை வென்றவர்கள் ,நிச்சயம் இது தமிழீழம் அடைவதற்கான இருதிப்போராகத்தான் இந்த போர் அமையும் , இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இலங்கை இராணுவம் பெருத்த உயிர் இழப்புகளை சந்தித்தபின்னும் மீதம் உள்ளவர்களையாவது பாதுகாக்காமல் முல்லைத்தீவை கைப்பற்றியே தீருவேன் என்று கொக்கரிக்கிறது , என்னை பொறுத்தவரை மனித உயிர்கள் (அது சிங்களனோ ,தமிழனோ ) முக்கியம் வன்முறை எப்போதும் தீர்வு ஆகாது அது மென்மேலும் வளர்ந்து ஆரம்பித்தவனையே அழித்துவிடும் அப்படியொரு நிலைமைதான் இலங்கைக்கு வந்திருக்கிறது ,
எப்படியிருந்தாலும் இந்த விடுதலை போராட்டத்தின் மூலகாரணம் இந்தியா தமிழர்களுக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆதரவுதான் , ஆனால் அதே இந்தியா இப்போது சிங்கள அரசாங்கத்துக்கு எல்லாம் கொடுக்கிறது .
தமிழர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள் , நாளை தனிநாடு ஒன்று உருவானால் அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள் ஆனால், நிச்சயம் இலங்கை அரசால் நமக்கு எப்போதும் தலைவலிதான் ,
ஒருவேளை தமிழீழம் அடைந்தபின் சிங்கப்பூர் அரசாங்கம் அமைந்தபோது திரு .Lee kuan yew அவர்கள் எடுத்த அமெரிக்க ஆதரவைபோல் புலிகளும் எடுத்தால் அதுவும் இந்தியாவுக்கு பெருத்த பின்னடைவாகத்தான் இருக்கும் ,
திரு.ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை ஒன்றை மட்டுமே காரணம் காட்டுவது , தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு உதவாது ,
இந்தியா பாகிஸ்தான் அரசாங்கத்தால் சந்திக்கும் எண்ணற்ற பிரச்சினைகள் ,இழப்புகள் இவற்றிர்க்கெல்லாம் இன்றுவரை வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடுகிறோம் , சமிபத்திய மும்பை தாக்குதல்களில் எத்தனைபேரை நாம் இழந்திருக்கிறோம் ,
திருமதி .இந்திராகாந்தி அவர்களை படுகொலை செய்யப்பட்டபோது எத்தனை அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் .
இதெல்லாம் சாதரணமாக போய்விட்டது ஆனால் , அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் தெம்பில் புலிகளை அழிக்க உதவுவதாக நினைத்துக்கொண்டு ,
அப்பாவிகள் சாவதை அனுமதிப்பது நல்லதில்லை ,
எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் என்றொரு கட்சி இல்லாமல் போய்விடும் . இன்னும் சிலமாதத்தில் தேர்தலை சந்திக்கபோகும் காங்கிரஸ் இப்போதாவது திருந்தாவிடில் , ஒரு ஓட்டுகூட அவர்களுக்கு கிடைக்கபோவதில்லை . எனவே மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே காங்கிரசை கழட்டிவிடுங்கள் ,
உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம் ...........

நன்றி..

12 ஜன., 2009

'' மகா லீலா '' சிவமணி


டிரம்மர் சிவமணி அவர்களின் ''மகாலீலா'' இசை ஆல்பம் இன்று வாங்கி வந்தேன்.
இதற்குமுன் இளையராஜாவின் ஆல்பங்கள் இரண்டு மட்டுமே எனக்கு மிகவும் பிடிக்கும், இசைக்கு மொழி கிடையாது ... நான் ரசித்த இசைக்கு மிக நீண்ட பட்டியல் உண்டு , அவைகளைப்பற்றி பின்னர் விரிவாக பேசுவோம்.
இப்போது மகா லீலா பற்றி ..,
எனக்கு நீண்ட நாளாகவே சிவமணி நீண்ட நாளாக ஒரு ஆல்பம் வெளியிடவில்லையே ! என்கிற வருத்தம் இருந்தது, ஏனெனில் இதற்கு முன் DRUMS ON FIRE, மட்டும்தான் கேட்டுருக்கிறேன் ( வேறு எதாவது ஆல்பம் வெளியிட்டு இருந்தால் தெரிவியுங்கள் நண்பர்களே )அதனை மொத்தமாக தீர்த்துவிட்டது இந்த இசைதொகுப்பு ,சிவமணி நமக்கு கிடைத்த அற்புதங்களில் ஒன்று , இவரை சினிமாவில் முதலில் டி .ஆர் தான் அதிகமாக பயன்படுத்தியவர் , அடுத்து இளையராஜா ,ஆனால் ரஹ்மான்தான் மிக அதிகமாக பயன்படுத்தியவர் ,
சமிபகாலமாக கிரிக்கெட்டினால் எல்லோருக்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒலிக்கும் அந்த இசைவட்டில் பன்னிரெண்டு விதமான தலைப்புகளில் நம்மை இன்னொரு உலகத்துக்கு கூட்டிச்செல்கிறார் ...
வாங்கும்போது விலை சற்று அதிகம் என்று நினைத்தேன் Rs.250 ஆனால் கேட்டபின்பு குறைத்து கொடுத்துவிட்டோமே என்று வருந்துகிறேன் ,
எனவே தயவுசெய்து இணையத்தில் தரவிரக்காமல் வாங்கி பயனடையும்படி கேட்டுக்கொள்கிறேன் ....
அதுதான் சிவமணிக்கு நாம் தரும் மரியாதை .......

நன்றி..

9 ஜன., 2009

'' பெட்ரோல் தட்டுப்பாடு ''

சென்னையில் எல்லா பெட்ரோல் பங்குகளையும் மூடிவிட்டனர் , பரவலாக தமிழ்நாடு முழுக்க அப்படிதான் , அனைத்து இந்திய லாரி உரிமையாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே போராட்டத்தை அறிவித்து விட்டனர் , ஆனால் இதுவரை அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது , மேலும் உரிமையை ரத்து செய்வோம் என்று அறிவிக்கிறது , சென்னையில் அனைத்து காய்கறிகளும் கடுமையான விலை விற்கிறது ,ஆட்டோக்கள் வைத்துதான் கட்டணம் , கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது ,ஆனால் விலை ஏறும்போது உடனே விலை ஏற்றுகிற அரசு , இறங்கும்போது குறைக்க மறுக்கிறது ,
நமது பொருளாதார நிர்ப்பந்தங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் மன்னராட்சி போல செயல்படுகிறார்கள் , தமிழக அரசியல்வாதிகளுக்கு தற்போது திருமங்கலம் இடைதேர்த்தல்தான் முக்கியம் ,
அங்கு இலங்கையில் தமிழன் சாகிறான் , அதைப்பற்றியும் நமக்கு கவலை இல்லை , நாலு நாளைக்கு இந்த அரசியல்வதிகளைப்பற்றி பேசுவோம் , அப்புறம் அடுத்த பிரச்சினை வந்துவிடும் , நாடு எங்கோ போகிறது , யாருக்கும் நிற்ககூட நேரமில்லை , ஓடிக்கொண்டே இருக்கிறோம் , நின்று யோசிக்கவிட்டால் நமக்கு எப்படியும் புரிந்துவிடும் என்று அரசியல்வாதிகளும் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் ,
வாழ்க ஜனநாயகம்! வாழ்க மக்களாட்சி!! ....

நன்றி ..

3 ஜன., 2009

கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது: திருமா கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு .திருமாவளவன்
விடுதலைப் புலிகள் பின்வாங்கிய நிலையில் கிளிநொச்சியை கைப்பற்றி உள்ளதாக கொக்கரிக்கின்றனர். கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்றும், தமிழ் இனத்திற்கு மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்துவிட்டதாகவும் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சவும், தமிழின துரோகக்கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறேழு நாடுகளின் படைத் துணையோடு ஆறேழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளோம் என்று கொக்கரிக்கின்றனர். இந்த நிகழ்வால் புலிகள் வீழ்ந்துவிட்டதாகவும், போர் ஓய்ந்துவிட்டதாகவும் கருதிவிட முடியாது. சிங்கள படையினரை விரட்டியடித்து பலப்பகுதிகளை கைப்பற்றுவதும், பின்னர் கைவிடுவதும் புலிகளின் வரலாற்றில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளே ஆகும். ஆகவே, பின்வாங்கல் என்பது பின்னடைவு ஆகாது. சிங்கள இனவெறியர்களின் இந்த கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சை துரோகமே முதன்மையானதாகும். விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத சிங்கள அரசு இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது. வெட்கக்கேடாகும். தாம் எதிர்பார்த்தது நடந்துவிட்டதெனவும், தமது கனவு பலித்துவிட்டதெனவும் இந்திய அரசும் மகிழ்ச்சியடையலாம். பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச்சமூகத்தால் மன்னிக்க முடியாது. தமிழ் இனத்தின் முதுபெரும் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் இந்திய தலைமை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முறையிட்டு ஒருமாத காலம் உருண்டோடிவிட்டது. வெளி விவகாரத்துறை அமைச்சர் விரைவில் கொழும்பு சென்று அதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என உறுதியளித்தும் கூட இது வரையில் அதற்கான முனைப்பு ஏதுமில்லை என்பதில் இருந்து இந்திய அரசின் உள்நோக்கம் என்னவென்பது வெளிபட்டிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்களின் இத்தகைய தமிழன துரோகத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. கடைசித் தமிழன் என்கிற கடைசி புலி உள்ளவரையில் அங்கே விடுதலைப் போர் தொடரும் என்பதில் ஐயமில்லை இனப்பகையும், துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. "மரபு வழி போர்' முறையிலிருந்து "கொரிலா போர்' முறைக்கு புலிகள் மாறும் நிலை ஏற்படுமே தவிர கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை சிங்கள அரசை தாங்கிப் பிடிக்கும் இந்திய அரசுக்கு காலம் விரைவில் உணர்த்தும் என்று கூறியுள்ளார்.