5 மார்., 2009

"ராமசாமி" அத்தியாயம் 6

மூன்று மாதத்துக்கு முன்பு ஒரு மழைநாளில் என் பையனை பள்ளியில் விடப்போனேன், அது காலை நேர அவசரத்தில் எல்லோரும் அலுவலகத்துக்கு பறக்கும் நேரம். தெருமுனையில் திரும்புகையில் கவனமாக திரும்பவேண்டும் அப்போது தன் இரு குழந்தைகளை தன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துவந்த ஒருவர் வேகமாக திருப்பியபோது வண்டி சறுக்கி கீழே விழுந்துவிட்டார், நான் உடனடியாக என் வாகனத்தை சாலையின் குறுக்காக நிறுத்திவிட்டு ஓடிச்சென்று தூக்கினேன், என்னைபோல் பலரும் உதவிக்கு வந்தனர், ஒன்றும் பெரிய அடியில்லை, குழந்தைகள் அழக்கூட இல்லை. ஆனால் அந்த தந்தையை எங்களால் நிதானத்துக்கு கொண்டுவர வெகு நேரமானது. "என் குழந்தைங்க" என்ற வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருந்தார். அப்புறம் அவர் இல்லத்திலிருந்து மனைவி வந்தவுடன்தான் ஆசுவாசமானர். அன்றைக்குத்தான் தெரிந்தது ஒரு தகப்பனின் நிலைமை. தன் குழந்தைகளுக்கு ஒன்று ஆனதும் நிலைகுலைந்துவிட்டார்.

சென்றவாரம் எனக்கும் அப்படி ஒரு நிலைமை வந்தது. என் மனைவி நிறைமாதமாக இருந்தாள். மார்ச் பதினொன்றாம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக டாக்டர் சொல்லியிருந்தார். பிப்ரவரி 25 ஆம் தேதியன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றோம், என் மனைவி வலி இருக்கிறது என்றாள், டாக்டரோ தேவைப்பட்டால் அட்மிட் செய்கிறமாதிரி இருக்கும் என சொன்னார். அப்போது என் கையில் வெறும் 1500 ரூபாய் மட்டுமே இருந்தது. சரி அட்மிட் செய்கிற மாதிரி இருந்தால் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் அன்று வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

வீட்டிற்கு வந்ததில் இருந்து என் மனைவி சற்று தளர்ந்தே இருந்தாள், என்னை கூப்பிட்டு பணம் இருக்கிறதுதானே என்றாள். நானோ அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னேன். ஆனால் உண்மையில் என்னிடம் சுத்தமாக காசு இல்லை. இதைபோல பலமுறை இருந்திருக்கிறேன்.

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தபிறகு ஒரு வருடம் வீட்டில் சும்மாதான் இருந்தேன், அப்போது ஒருநாள் படம் பார்க்கபோகனும் இரண்டு ரூபாய் பணம் வேணும் என அம்மாவிடம் கேட்டேன், அம்மா தன்னிடம் இல்லை என்று சொன்னது, ஆனால் சற்று நேரத்தில் வந்து கேட்ட அண்ணனுக்கு நூறு ரூபாய் கொடுத்தது. நான் கோபப்பட்டு வெறும் ரெண்டு ரூபாய்தானே கேட்டேன், இல்லை என்று சொல்லிவிட்டு அவனுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறாயே என சண்டைபோட்டேன், அவன் சம்பாதித்து கொடுத்தான், அதனால் கொடுக்கிறேன் என்று சொன்னது அன்று முதல் வீட்டில் பத்து பைசா வாங்கியது கிடையாது.

அப்புறம் சென்னை வந்தவுடன் சில நாள் கழித்து கடைசி நிலத்தையும் விற்று அண்ணனுக்கு எல்லா பணத்தையும் கொடுத்துவிட்டு என்னிடம் வெறும்எட்டாயிரம் மட்டுமே தந்தார்கள் இன்றுவரைக்கும் அதுதான் எனக்கு கிடைத்த சொத்து, ஆனால் இன்றுவரை எல்லோருக்கும் நான்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

அப்புறம் சிங்கபூரிலிருந்து வந்தவுடன் நண்பனின் துரோகத்தால் செய்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு கணக்கு கூட கேட்காமல் ஊருக்கு வந்தேன். வந்த இடத்தில் அக்காள் மகனின் மரணத்தால் திருமணம் தள்ளிபோனது. திருமணத்துக்கு கடன் வாங்கிய பணத்தை அவனுக்காக செலவழித்துவிட்டேன். திருமணம் மற்றவர்களின் நிர்பந்தத்தினால் அவசரமாக வெறும் 1200 ரூபாய் செலவில் முடிந்தது. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே என்னையும் மனைவியையும் அம்மா வீட்டைவிட்டு போகசொன்னது. கையில் ஒரு வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்ககூட காசில்லாமல் நண்பரின் வீட்டில் மனைவியை விட்டுவிட்டுதான் சிங்கப்பூர் சென்றேன்.

ஒரு வருடத்தில் கடனை அடைத்துவிட்டு கையில் ஒரு லட்ச ரூபாய் காசோடு ஊர் கிளம்பியபோது என் தோழி கண்மணி தன்னையும் தொழில் பங்குதாரராக சேர்த்துகொள்ளசொல்லி பணம் கொடுத்தது. வந்து பயண முகவாண்மை ஆரம்பித்தேன், நன்றாக போய்க்கொண்டு இருந்தபோது சனியனாக வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ் என்பவன், சென்னை அண்ணா சாலையில் பிச்சைகரனைபோல எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தவனை அழைத்துசென்று பணம் கொடுத்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றேன்.

மொரிசியஸ் செல்ல 1000 டாலர் கடனாக கேட்டான், ஒரு வாரத்தில் திருப்பி தருவதாக சொன்னான்( இன்றுவரை தரவில்லை) அப்புறம் அங்கு தேங்காய் தேவைப்படுகிறது அனுப்பலாம் ஆனால் என்னிடம் பணம் இல்லை என்றான். நான் என் தோழியிடம் அறிமுகபடுத்தினேன். அதோடு என் விஷயத்தை முடித்துவிட்டான் (இதனைப்பற்றி வேறொரு அத்தியாத்தில் விரிவாக எழுதுகிறேன்).

இன்றைக்கு நான் கிட்டத்தட்ட மறுபடியும் நடு ரோட்டுக்கு வந்துவிட்டேன். வியாபாரம் சுத்தமாக இல்லை வங்கியில் கடன் வாங்கி சிங்கபூரில் வாங்கிய மெசினை ரமேஷ் விற்று தின்றுவிட்டான். ஒவ்வொரு மாதமும் வங்கிக்கே 22500 ரூபாய் பணம் கட்டவேண்டும், மேற்கொண்டு வீடு மற்றும் அலுவலக வாடகை செலவு மற்ற செலவுகள் சேர்த்து மாதம் 50000 ரூபாய்க்கு மேல் தேவைப்படும்என்னால் மாதம் 25000 ரூபாய்க்குமேல் சம்பாதிக்க முடியவில்லை, எனவே மேலும் மேலும் கடன் வாங்குகிறேன்.
இந்த சூழ்நிலையில் என் மனைவியின் உடல்நிலை பலவீனமாக இருக்கிறது எனவும் அதனால் முடிந்தவரை ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் சொன்னார். என் மனைவியின் தயார் இங்கு சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார்கள், ஆனால் அவர்களால் உதவி பண்ணமுடியாது என சொல்லிவிட்டார்கள், வேலைக்கு ஆள் தேடினேன் அவர்களும் சரி வரவில்லை. இந்த சூழ்நிலையில் என் உடன் பிறவா சகோதரனின் தாயார் என் வீட்டிற்கு வந்தார். என் நிலைமையை பார்த்தவிட்டு நான் தங்கியிருந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு தேவையான அனைத்தும் அவரே செய்தார். என் மனைவிக்கு சிசேரியன் செய்யவேண்டும் என்றுதான் டாக்டர் சொன்னார், ஆனால் சுகபிரவசவம் ஆனது, அதற்கு முழு காரணம் அம்மாதான். என் மனைவியை தன் மகளைபோல் பார்த்துகொண்டர். வீட்டின் எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.

இந்த நேரத்தில்தான் கடந்த 27.02.2009 அன்று அதிகாலை என் மனைவிக்கு வலி எடுத்தது. உடனடியாக முருத்துவமனையில் சேர்த்தோம். என் கையில் வேறு 500 ரூபாய் மட்டுமே இருந்தது. அப்போது அம்மா தன் கையிலிருந்து 20000 ரூபாயை தந்து செலவை பார்த்துக்கப்பா என்றார். என் மனதுக்குள் அழுதேன். எனக்கு எத்தனையோ சொந்தங்கள் உண்டு. அவர்களில் ஒருவர் கூட என் அருகில் இல்லை.

என்னை பெற்ற தாய் ஒருவர் என்றாலும் என்னை பெறாத தாய் மூவர் சிங்கபூரில் இருக்கும் செல்வி அண்ணி, மதுக்கூரில் இருக்கும் மகாலட்சமி அண்ணி, இப்போது எங்களோடு கூட இருக்கும் தமிழ்செல்வி அம்மா. இவர்களை என் மரணத்திற்கு பிறகும் மறக்க முடியாது. இம்மூவரும் என் வாழ்க்கையின் இக்கட்டான காலகட்டத்தில் என்னைக்காப்பற்றியவர்கள்.
ஒரு தகப்பனாக என் பிள்ளைகளை இதுவரை வறுமை அறியாமல் வளர்த்துவருகிறேன். நான் வாழ்வில் நிறைய அனுபவங்களை பெற்றவன், ஆனால் தொடர்ந்து ஏமாந்துதான் போயிருக்கிறேன். இனியாவது ஒரு நல்ல சீரான பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.

அடர்ந்து இருள் படர்ந்து
அழகாய் இருக்குது காடு
கடந்து வெகு தூரம் செல்லவேண்டும்
கொடுத்த வாக்குகள் நிறைய உண்டு
காப்பதற்கு......
ராபர்ட் பிரஸ்ட்.....
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

கருத்துகள் இல்லை: