அன்று அவள் இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு போனபிறகு நான் நீண்ட நேரம் கோவிலிலேயே இருந்தேன்.. சில வருடங்கள் நட்பாகவே பழகியிருக்கலாம், அவசரப்பட்டுவிட்டோமோ எனத்தோன்றியது, கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன்..
மறுநாள் காலை என்னால் எழுந்திருக்க முடியவில்லை.. உடம்பெல்லாம் அனலாக கொதித்தது, லெச்மணன் டாக்டர் வந்து பார்த்துவிட்டு சாதாரண சொரம்தான் என ரெண்டு ஊசி குத்திவிட்டு போனார், அம்மா மதியம் கொடுத்த கஞ்சிதான் ஓரளவு சாப்பிட்டது, ஆனால் சொரம் நின்றபாடில்லை விட்டுவிட்டு வர ஆரம்பித்தது, மறுநாள் பூரி வீட்டு தாத்தா பார்த்துவிட்டு மஞ்சள் காமாலை மாதிரி இருக்கு என்றார்.
அடுத்தநாள் முதல் மன்னார்குடியில் மஞ்சள்காமாலைக்கு மருந்து சாப்பிட ஆரம்பித்தேன், இப்படியாக இரண்டு வாரம் ஓடிவிட்டது.. உடல் மெலிந்து விட்டது.. உடம்பு நார்மல் ஆக மூன்று வாரம் ஆனது. வீட்டில் இருக்க போரடிக்கவே ஒருநாள் மாலை நேரம் கிளம்பி மன்னார்குடி வந்தேன், கோவிலுக்கு போனால் தேவலைபோல் போலிருந்தது, அங்கு சென்று நான் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்திருந்தேன், மனம் எவ்வளவுதான் மறுத்தாலும் அஞ்சலி முகத்தையே காட்டியது.
அப்போது தன் குடும்பத்துடன் அஞ்சலி கோவிலுக்கு வந்தாள், என்னை அங்கு கண்டதும் தலைகுனிந்தவாறே சென்றாள். எனக்கு ஏண்டா இன்னைக்கு கோவிலுக்கு வந்தோம் என்று ஆனது.. அங்கேயே படுத்துவிட்டேன், சிறிது நேரம் கழித்து என்னை யாரோ எழுப்பினார்கள், அவள் அஞ்சலியின் தோழி சுமதி, அஞ்சலி என்னை பார்க்க வருவாள் என்றும் வீட்டுக்கு போய்விடவேண்டாம் என சொல்லிவிட்டு சென்றாள், நானோ வந்து என்ன சொல்ல போகிறாள், இனி கோவிலுக்குகூட வரவேண்டாம் என்பாள், அதைக்கேக்காமலே போய்விடலாம் என நினைத்தேன், ஆனால் மனசு அவளை பார்க்க துடித்தது.
சிறிது நேரம் கழித்து வேர்க்க விருவிருக்க அங்கு வந்தாள், என்னை பார்த்தவுடன் கண்கலங்கியது, எப்படி இருக்கு உடம்பு,சார்கிட்டே கேட்டேன், மஞ்சள் காமாலை என்றார், இப்ப பரவாயில்லையா என்றாள், நான் மௌனமாக தலையாட்டினேன், என் கையை பிடித்துக்கொண்டு என்மேல் கோபமா? சாரி குமார் நான் அன்னைக்கு அப்படி எடுத்தெறிஞ்சு பேசியிருக்கக்கூடாது. நீங்க உங்க விருப்பத்த சொன்னீங்க நான் நாசுக்காக மறுத்திருக்கலாம், உங்ககிட்டே இருந்து அதை எதிபார்காததால் கோபப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சுடுங்க என்றாள்.
வெளியே நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது. சுமாராக தூறல் போட ஆரம்பித்தது, நான் அவளை மழை வந்துவிட்டது சீக்கிரம் வீட்டுக்கு போ என்றேன், பரவாயில்லை அப்புறம் போய்க்கிறேன் என்றாள்.
நான் பெங்களூரில் இருக்கையில் பக்கத்து வீட்டில் ஒரு குட்டிபையன் இருந்தான் அவன் பெயர் கிருஷ்ணகுமார், நாங்க அவனை குமார் என்றுதான் கூப்பிடுவோம், என்மேல் மிகுந்த பாசமாக இருப்பான். என் பள்ளி நேரம் போக எப்போதும் நான் அவனுடன்தான் இருப்பேன், மூன்று வயதுதான் ஆகிறது. நான் இங்கு வந்தவுடன் அவனை மறக்க முடியவில்லை. போன் போட்டு பேசவேணும், ஆனால் அப்பா நெறைய பில் ஆகுதுன்னு சத்தம் போடுவார். இந்த நேரத்துலதான் உன் அறிமுகம் கிடைத்தது. மன்னர்குடியே பிடிக்காம இருந்த எனக்கு நீ ஒரு நல்ல டைவர்சனா இருந்தே, ஆனா நீ திடீர்ன்னு லவ் பண்றேன்னு சொன்னப்ப, அத என்னால உடனடியா ஏத்துக்க முடியாம அன்னைக்கு நான் அப்படி பேசிட்டேன், ஆனா தூக்கத்துல உன் பேரை சொல்லி உளறியிருக்கேன், நான் அந்த குட்டிபையனை மறக்க முடியாமல் இருக்கிறேன் என அம்மா எல்லோரிடமும் சொல்லி சிரிக்கிறார், இப்ப என்னால் உன்னை விட்டு விலக முடியாது என புரிந்துவிட்டது, ஆனால் காதல் வேண்டாம் நாம் நண்பர்களாகவே இருப்போம், நீ முதலில் ஒரு வேலையை தேடிக்கொள் அல்லது சிங்கப்பூர் போ, இரண்டு வருடத்துக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்றாள்.
திடீரென பெருமழை பெய்தது.. கரண்ட் கட்டாகியது, கோவில் கனத்த இருளுக்குள் மூழ்கியது.. அவள் என் தோளில் சாய்ந்தாள், எங்கள் கண்ணீர் இருவர் தோளையும் நனைத்தது.. எனக்கு உலகமே சுற்றியது. ஒரு பெரிய இடி இடித்தது நாங்கள் சுய நிலைக்கு வந்தோம். அதன்பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை, சிறிது நேரத்தில் வீட்டுக்கு கிளம்பலாம் மழை விடுகிற மாதிரி இல்லை அதனால் நனைந்துகொண்டே போகலாம் என்றேன். சிறிது தூரம் அவளுடன் சென்றேன். நீ எப்படி வீட்டுக்கு போவாய் என்றாள், நான் பாத்துகிறேன் என்றேன், அன்று விடிய விடிய பெய்தது ஊர் வரைக்குமே நனைந்து கொண்டுதான் வந்தேன், இன்று வரைக்கும் மழை வந்தால் நனைந்துகொண்டுதான் செல்கிறேன்,
அதன்பிறகு எங்கள் சந்திப்பு அடிக்கடி நடந்தது, ஆனால் இருவருமே கவனமாக காதல் பற்றிய பேச்சை தவிர்த்து வந்தோம். என்றாலும் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உணர ஆரம்பித்தோம். ஒரு நாள் எனக்கு மூன்று பேன்ட் சட்டைகளுக்கான துணிகளை தந்தாள், அதனை தைப்பதற்கான பணத்தையும் தந்தாள். நான் மறுத்தபோது உனக்கு டிரஸ் பற்றிய அறிவு இல்லை, அதனால்தான் எப்ப பாத்தாலும் இஷ்டத்துக்கு டிரஸ் பண்றே, நான் செலக்ட் செஞ்சத போட்டுபாரு உனக்கே அது புரியும் என்று பிடிவாதமாக கையில் திணித்தாள்.
உண்மையில் அந்த ஆடைகள் அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது.., என்னுடைய நண்பர்கள் அதனை காதலாகத்தான் பார்த்தார்கள், அவளுடைய வீட்டிலும் நாங்கள் கோவிலில் சந்திப்பது தெரிந்து கேட்டிருக்கிறார்கள், அவளோ வெறும் நட்புதான் என சொன்னதற்கு, அவர்களோ இது பெங்களூர் இல்லை, வேண்டுமானால் வீட்டிற்கு வரவழைத்து பேசு, கோவிலில் வேண்டாம் என கண்டித்து இருக்கிறார்கள். அதனால் சந்திப்புகளை குறைத்துகொண்டோம்.
ஒருநாள் என்னை அவசரமாக பார்க்கவேண்டும் அதனால் கோவிலுக்கு வா என்றாள். அங்கு சென்றதும் இன்னும் இரண்டு நாளில் குடும்பத்துடன் பெங்களூர் செல்லவிருப்பதாகவும், அங்கு தன் சகோதரியின் நிச்சயம் நடப்பதாலும், மேலும் தீபாவளி நேரம் என்பதால் அங்கு பதினைந்து நாட்கள் தங்கவிருப்பதாகவும் சொன்னாள், நான் நீ பதினைந்து நாட்களுக்குள் வரவில்லை என்றால், நான் அங்கு வருவேன் என்றேன். இல்லை குமார் நிச்சயம் வந்துவிடுவேன், அதற்குள் எதாவது செய்து குழப்பிவிடாதே, திரும்பி வந்தபிறகு நான் நிச்சயம் என் வீட்டிற்கு அழைத்து உன்னை அறிமுகப்படுத்துவேன் என்றாள்.
நான் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தேன், என்ன குமார் எதாவது சொல்லு என்றாள். அஞ்சலி இனி என்னால் உன்னை பிரியமுடியாது, உனக்கு அப்படி எதாவது எண்ணம் இருக்கா என்றேன், ஏன் லூசு மாதிரி பேசுறே, அப்படின்னா நான் உங்கிட்டே சொல்லிட்டு போகிற அவசியம் இருக்காது என்றாள். நானோ இல்லை அஞ்சலி என் மனசுக்குள்ள ஏதோ தப்பா தெரியுது, அதனால்தான் உன்கிட்ட வெளிப்படையா கேட்டேன் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தாள், மெல்ல அவள் அழ ஆரம்பித்தாள், நான் ஏய் என்ன இது நான் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்கோ என்றேன். அவளோ இல்லை குமார் எனக்கே மனசு சரியில்லை, எனக்கும் போக விருப்பம் இல்லை, அதனால் அப்பாகிட்டே நீங்க முன்னால போங்க, நான் மாமா வீட்டில் அங்கு வரும்போது அவர்களோடு வருகிறேன் என்றேன். அப்பா என்னை கடுமையா திட்டிட்டார். என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை அதான் மனசு சரியில்லை என்று சொல்லும்போதே விசும்ப ஆரம்பித்தாள்.
என்னால் அவளை சமாதானபடுத்த முடியவில்லை. எல்லாம் சரியாயிடும் அழாம போய்ட்டுவா என அனுப்பிவைத்தேன்,உடம்ப பாத்துக்க, பத்திரமா இரு என திரும்ப திரும்ப சொன்னாள், எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போம்மா என்றேன், கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வச்சுக்க என்றாள். நான் மறுத்து விட்டேன், ப்ளீஸ் குமார் வாங்கிக்க என கெஞ்சினாள், எனக்கு என்னமோ போலிருந்தது, இதற்க்கு மேல் விட்டால் அவள் மேலும் அழ ஆரம்பிப்பாள் என வாங்க்கிக்கொண்டு அனுப்பினேன், சைக்கிளை தள்ளிக்கொண்டே மெதுவாக நடந்து போனாள், தெருமுனை சென்றவுடன் திரும்பவும் என்னைப்பார்க்க வந்தாள், குமார் என்னை மறந்துடமாட்டியே என்றாள், எனக்கு திகைப்பாக இருந்தது என்ன ஆச்சு இவளுக்கு....? இல்லம்மா நீ என் உயிர், நீ இல்லாம என்னால் வாழமுடியாது பதினைந்து நாட்களுக்குள் ஒன்னும் ஆகாது போய்ட்டுவா என மீண்டும் தெருமுனைவரை அழைத்து சென்று அனுப்பி வைத்தேன்.
அன்றைக்கு எனக்கு தெரியவில்லை அன்றுதான் அவளை நான் கடைசியாக சந்திப்பேன் என்று.
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக