10 ஆக., 2009

ராமசாமி அத்தியாயம் - 26


தேவதை கதைகள் "செல்வி" பாகம் இரண்டு ....

செல்வி அண்ணி, கணேசன் அண்ணனின் ஒன்றுவிட்ட அக்கா மகள். செல்வி மதுரையில் படிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. செல்வி குடும்பத்தில் அவர்தான் மூத்தவர் அதனால் மிகவும் பாசமாக வளர்க்கப்பட்டவர். அதனால் இவர்கள் காதல் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் செல்வி வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்தது. தன் பெண் சிரமப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில் செல்வியின் அப்பா கண்டித்தார், ஆனால் செல்வியின் பிடிவாதமே ஜெயித்தது. கணேசன் அண்ணனுக்காக ஒரு கட்டத்தில் விஷம் அருந்திவிட்டார். அதன் பிறகே அவர்களின் திருமணம் எல்லோரின் சம்மதத்துடனே விமரிசையாக நடந்தது.

ஆனால் திருமணத்திற்கு பின் செல்வியின் அப்பா சொன்னது மாதிரியே மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் வாழ்கை நடத்த வேண்டியிருந்தது. கணேசன் அண்ணனுக்கு ஒரு நிரந்தர வேலை இல்லை, இருந்தாலும் டியுசன் எடுப்பதால் அவர் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டும். தான் விரும்பி ஏற்றுகொண்ட வாழ்க்கை என்பதால் தன் வீட்டினருக்கு தன் சிரமத்தை சொல்லாமலே, சந்தோசமாகவே வாழ்க்கை நடத்தினார். கணேசன் அண்ணன் இந்த காலகட்டத்தை தன் வாழ்வின் சந்தோசமான தருணம் என என்னிடம் சொல்லியிருக்கிறார். தான் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் எளிமையாக தன்னோடு வாழ்ந்துதான் பெருமை என அடிக்கடி சொல்லியிருக்கிறார். இந்த காதலுக்கு அடையாளமாக சுஜன் பிறந்தவுடந்தான் செல்வி என்னை என் உண்மையான நிலையை எடுத்து சொல்லி சிங்கபூருக்கு கிளம்ப சொன்னார். ஆனால் இரண்டுமுறை விசா கிடைக்கவில்லை என்றவுடன் மிகவும் சோர்ந்துபோனேன், அப்போதெல்லாம் ஆறுதலாக இருக்கவில்லை என்றால் தன்னால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்பார்.

அது உண்மைதான் அண்ணியின் கடுமையான உழைப்பு நான் கண்கூடாக கண்ட உண்மை. எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும் அழகும் இருக்கும். சட்டென யாரையும் நம்பிவிடக்கூடிய அப்பாவி அவர். மிகுந்த பாசக்காரர், இரக்ககுணம் மிக்கவர். அதே வேலை தன் மிகவும் அன்பு செலுத்திய ஒருவர் பேசாமல் போனால் மிகுந்த மனவருத்தம் அடைவார். எனக்கு தெரிந்தவரை கடவுளின் மேல் மிகுந்த ஆத்மார்த்தமான பக்தி கொண்டுள்ள சிலரில் அவரும் ஒருவர். மிகவும் புத்திசாலியான பெண், நல்ல நிர்வாகத்திறமை உள்ள அண்ணி வேலைக்கு சென்றிருந்தால் இந்நேரம் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பார். அவரிடம் பிடிக்காத சிலவிசயங்கள் எனக்கு உண்டு, தன் உடல்நிலையை பற்றி கவலைப்பட மாட்டார், மற்றவர்களின் உடல்நிலை சரியில்லை என்றவுடன் தீவிர அக்கறை காட்டும் இவர் தனக்கு பார்ப்பதில்லை, அடுத்து யாராயிருந்தாலும் வலிய சென்று அவர்களுக்கு உதவுவது, அதன்பின் வருத்தம் ஏற்பட்டு புலம்புவது. அண்ணி இவையிரண்டையும் அவசியம் மாற்றிக்கொள்ளவேண்டும்.

அடுத்து அண்ணியின் சமையில், ஆரம்பத்தில் எங்களை சோதனை சாலை எலிகளாய் பயன்படுத்தி சமையல் கற்றுகொண்டவர், இன்று மிகபிரமாதமாக சமைப்பார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைக்கும் அண்ணியின் சமையலை அண்ணன் குறை கூறும் நாளில் எனக்கு சிரிப்பாக இருக்கும். எனக்கு அந்த குடும்பத்தில் தனியான இடம் உண்டு, அண்ணனின் சொந்த தம்பியாக என்னை மதிக்கும் அதே வேளையில் ஒரு நல்ல நண்பனாகவும் என்னை மதிப்பார். அண்ணி தன் பிள்ளைகளுள் ஒருவராகவே என்னை பார்க்கும், நான் மிகுந்த சிரமத்துக்கு ஆளான போதெல்லாம் ஆறுதல் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி என்னை ஜெயிக்க வைக்க பாடுபடுபவர். என்னை பொறுத்தவரை அவர் என் அன்னை.

அண்ணி மேல் அண்ணனும், அண்ணன் மேல் அண்ணியும் கொண்ட காதல் அற்புதமானது, எத்தனையோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன, எத்தனையோ சண்டைகள் வந்திருக்கின்றன அதற்கெல்லாம் நானும் சுஜனும்தான் சாட்சி, ஆனால் மறுநாளே ஒன்றும் நடக்காதது போல் பேசிகொள்வார்கள், நமக்கே வெறுப்பாக இருக்கும் அட சண்டைபோட்டால் சில நாளாவது நீடிக்க வேண்டாமா?....

அண்ணன் மிகவும் கொடுத்துவைத்தவர், ஏனென்றால் சம்பளம் எடுத்தவுடன் அது அண்ணி கைக்கு போய்விடும் அதன்பிறகு அண்ணன் செலவுக்கு வாங்கிகொள்வதொடு சரி, எல்லா நிர்வாகமும் அண்ணிதான் பார்த்துகொள்ளும், வீட்டிலும் சும்மா இருக்காது, டியுசன் எடுக்கும், டிரஸ் தைத்து கொடுக்கும், இவரின் டிசைனுக்காகவே பிரத்யோகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இப்போது ஒரு கடை வைத்திருக்கிறார்கள், இரவு வெகு நேரம் தூக்கம் முழிப்பார், இதன் காரணமாகவே இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.


இவர்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இப்போது ஸ்ருதி பள்ளிக்கு செல்கிறது, அதன் மழலை கலந்த பேச்சு அற்புதம், இரண்டு குழந்தைகளும் என்னை அவர்களின் நண்பனாக கருதி என்னை பாடாய் படுத்துவார்கள், வாழ்க்கையில் சந்தோசமான தருணங்கள் சில உண்டென்றால் அது அந்த தருணம்தான். அந்த நேரங்களில்தான் என் சிரமங்களை மறந்து இருக்க முடிந்திருக்கிறது.


நல்ல காதல் எப்போதும், அதற்க்கு மிகசிறந்த உதாரணம் அண்ணன், அண்ணியின் வாழ்க்கை. எனக்கான ரோல் மாடல் இவர்கள்தான். ஒரு அற்புதமான தாய்மையை அண்ணியிடம் கண்டிருக்கிறேன், பாரபட்சமற்ற அன்பு அது. கோபமோ, அன்போ உடனடியாக உணர்ச்சிகளை கொட்டிவிடும்.
அண்ணனும், அண்ணியும், சுஜனும், ஸ்ருதியும் நீண்ட ஆயுளோடு எழ வளங்களையும் பெறவேண்டும் என எல்லாம் வல்ல எம் குருவிடம் எப்போதும் பிரார்த்திக்கிறேன்.
இந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது.....

கருத்துகள் இல்லை: