30 செப்., 2010

தேசிய அடையாள அட்டை திட்டம் - இன்னொரு சொதப்பலா...?


தேசிய அடையாள அட்டை பத்தி பேசுறதுக்கு முன்னாடி அதுக்கு முன்னோடி திட்டமான வாக்காளர் அடையாள அட்டை பத்திய என் அனுபவத்த பாப்போம்..

வாக்காளர் அடையாள அட்டை பற்றி எல்லோருக்கும் தெரியும். விஷயம் என்னன்னா எல்லா விஷயத்துக்கும் ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுற தேர்தல் கமிசன், இந்த அடையாள அட்டை விசயத்தில் செய்யும் சொதப்பல் இந்தியாவே அறியும்,.

1990 என்று நினைக்கிறேன் அப்போதுதான் முதல்முதலில் புகைப்படம் எடுத்தார்கள், ஆனால் அப்போது எனக்கு மட்டும் அட்டை வரவில்லை, போய் தாலுக்கா ஆபிசுல கேளுன்னு பத்திவிட்டாங்க, அங்க போய் எவன கேக்குறது, போங்கடா எனக்கு வேற வேலை இல்லையா என பேசாம இருந்திட்டேன் ( அப்பல்லாம் எனக்கு இவ்வளவுதான் விழிப்புணர்வுதான் இருந்துச்சு). அப்புறம் வந்த எலக்சன்ல ஒட்டர் லிஸ்டுல பேரு இருந்தா போதும்னு குத்த அனுமதிச்சாங்க, நானும் சந்தோசம் தாமரைக்கு ஒரு குத்து குத்தினேன்,.

அப்புறம் சிங்கப்பூர் போய்ட்டதால மத்த எலக்சன்ல குத்த முடியல, ஒரு வழியா 2004 ஆம் ஆண்டு ஊருக்கு வந்த பின்னாடி சென்னையில செட்டிலாயிட்டேன், என்னோட மனைவியோ ஒரு ரேசன் கார்டு வாங்கிடுங்க, இங்க சினிமா தியேட்டர தவிர எங்க போனாலும் அத கேக்குறாங்க என்றாள், நானும் உடனே எனக்கு இருந்த செல்வாக்கை வச்சு ரேசன் கார்டு வாங்கிட்டேன். அந்த அப்ளிகேசன்ல கேஸ் இருக்கா? ன்னு கேட்ட இடத்துல, இருக்கு, அடிசனல் கூட இருக்குன்னு எழுதி தொலைச்சுட்டேன், ரேசன் கார்டு வந்த பின்னாடி, நம்மகிட்டே ஒரு சிலிண்டர்தாங்க இருக்கு, இன்னொன்னு அம்மாவோடது இனிமே அடிசனல் அப்ளை பன்ன முடியாதே என்றாள். அப்புறம் தம்பி குமார் இன்னொன்னு கொடுத்தார்,.

இந்த நேரத்துல வாக்காளர் அடையாள அட்டைக்கு போட்டோ எடுத்தாங்க, நாங்களும் கால் கடுக்க நின்னு போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு வந்தோம், மறுநாள் போனா எங்களுது மட்டும் இல்லை. என்னையா இப்படி பண்றீங்கன்னு சத்தம் போட்டேன், சார் இன்னொரு வாட்டி எடுத்துருவோம்ன்னு சொல்லி மறுபடியும் எடுத்தாங்க, ஆனால் மறுநாள் அந்த எடத்துக்கு போய் வாங்க போனாக்க         அங்கன யாருமே  இல்லை, எங்கதான் போய் இருப்பாங்கன்னு விசாரிச்சா நீங்க போய் கலெக்டர் ஆபிசுல வாங்கிக்கோன்னு அனுப்பிட்டாங்க, அங்க போய் யாரு வாங்குறது அதனால போங்கடா வெண்ணைகளா நான் ஓட்டே போடலேன்னு விட்டுட்டேன், அதக்கப்புறம் வந்த எலக்சன்ல பான் கார்ட கொடுத்து சூரியனுக்கு ஒரு ஓட்ட குத்தினேன்.

அப்புறம்  தி.நகர்ல குடிவந்த பிறகு ஒரு சென்ரல் எலெக்சன் வந்தது. அப்ப அடையாள அட்டை கொடுக்க வீடு வீடா வருவோனாங்க, ஆனா  யாரும் வரல, சரி நாமாவது பக்கத்துல இருக்கிற அலுவலகத்துக்கு போவோம்னு போனா, அங்க பெரும்பாலும் ஆளே இருக்கிறது இல்ல, அந்த  தடவ காங்கிரஸ் கூட்டணிய புறக்கணித்ததால், ஒட்டு போட வேண்டான்னு முடிவு பண்ணிட்டேன்,.

கிட்டத்தட்ட இருவது வருடமா அடையாள அட்டை குடுக்குது தேர்தல் கமிசன், அந்த போட்டவ பாத்திங்கன்னா, செத்தவன எடுத்தமாதிரி எடுத்திருப்பாங்க, உங்க அட்டையில நீங்க குடுத்த விபரம் எல்லாம் சரியா இருக்காது, இந்த ஒரு விசயத்த கூட ஒழுங்கா செய்யாத தேர்தல் கமிசன், இத்தன கண்டிசன் போடுறதா பாத்தா சிரிப்பாணியா வருது, போன  எலக்சன்ல ஈழ பிரச்சினை பத்தி நோட்டிசு அடிக்க கூடாதுன்னு கண்டிசன் போட்டிருக்கு, கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு, அதனை கட்டுப்படுத்த கமிசனுக்கு யாரு அதிகாரம் கொடுத்தான்னு தெரியல, 

எனக்கு தெரிஞ்சு நெறைய பேரு ஒட்டர் ஐடியே வச்சுகுறது கிடையாது, அய்யா தேர்தல் கமிசன் கணவான்களே முதல்ல இத சரிபண்ணுங்க அப்புறம் தேர்தல் நடத்தலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மல்டி பர்பஸ் கார்டுன்னு ஒன்னு கொண்டு வந்தார், சமிபத்திய இடைகால பட்ஜெட்டுலகூட அதுக்கு அறுநூறு கோடி ஒதுக்கினாங்க, அத கொடுத்தா போதும் அப்புறம் 90 சதவீதம் அக்கபோரே பண்ண முடியாது. ஆனா நேத்தைக்கு நம்ம மம்மோகன்ஜி சொல்றாரு நூறு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கேன்னு. இது 2010 பிப்ரவரிலேயே தொடங்கப்பட்ட திட்டம், ஆனால் இப்பதான் முறைப்படி அறிவிச்சிருக்காங்க..


நந்தன் நிகிலேணி - திட்டக்குழு தலைவர்
சமீபத்தில் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் என் குடியிருப்பை மறந்துட்டாங்க, கீழ் வீட்டில் குடியிருப்பவர் அது எப்புடி நம்மல கணக்கெடுக்காம போவலான்னு என்கிட்டே சண்டை போட்டாரு, நீ தி.மு.க ஆளுதானே அங்க போயி கேளுய்யான்னே, போயிட்டு கொஞ்சம் அப்ளிகேசன் கொண்டு வந்து கொடுத்தாரு. ஆன அத கொண்டுபோய் கொடுத்தப்புறம் இன்னும் அக்னாலெட்ஜ்மென்ட் வரல, அத வச்சுதான் இந்த தேசிய அடையாள அட்டையே கொடுப்பாங்களாம், இப்ப நான் இந்தியா சிட்டிசனான்னு தெரியல, நான் மட்டும் இல்ல. ரொம்ப பேரு அப்பிடித்தான் இருக்கோம். ஒரு காமன்வெல்த் போட்டிய கூட ஒழுங்கா நடத்த தெரியாத வெண்ணைங்க இந்த நூறு கோடில நூறு கோடி மக்களுக்கு எப்புடி ஐடி கார்டு தந்து அத ஒருங்கிணைக்க போறானுங்கன்னு தெரியல.

யாரவது அறிவாளிக வந்து விளக்கமா சொல்லுங்கப்பு..... 

தொடர்புடைய சுட்டிகள் ....



29 செப்., 2010

இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...


நம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..

கேபிள் சங்கர்  இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...

இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாதுஎன்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..

அவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம் அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..

மேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...
 
அவரிடம் பேச: 9840332666

வங்கி கணக்கு விபரம் :
A/C NAME : SANWAS INFOTECH
A/C NO : 0077 0501 0890
ICICI BANK, ASHOK NAGAR BRANCH 

அனைவரும் இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...

26 செப்., 2010

வியாபாரம் - பொருளின் தரம் - விற்பனை தந்திரம் எது முக்கியம்.


நீங்கள் பயன்படுத்தும் ஒரு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அது தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லது அதிகம் பிரபலமான பொருளை சற்று தரத்தில் குறைவாக இருந்தாலும் வாங்குவீர்களா?.. இதற்க்கு உங்களிடம் இரண்டு விதமான பதில்கள் இருக்கும். இங்கு பொதுவாகவே அது எத்துனை தரமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் இல்லையென்றால் அதன் விற்பனை நினைத்த அளவிற்கு இருக்காது என்பதே உண்மை.

இப்ப இந்த விளம்பரம் எவற்றுக்கெல்லாம் தேவை என்றால் அது எல்லாவற்றுக்கும் தேவை என்பேன். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் அதில் சிறந்த தகவல்களையோ அல்லது சிறந்த இல்லகியத்தையோ எழுதுகிறீர்கள் ஆனால் உங்களை வாசிப்பவர் என்று பார்த்தால் அது ஒரு இருபது பேரில் இருந்து ஐம்பது பேருக்குள் மட்டுமே இருப்பார்கள். இதுவும் தமிழ்மணம், இன்லி போன்ற திரட்டிகளில் நீங்கள் இணைத்தால் மட்டுமே சாத்தியம். இப்போது உங்களுக்கு ஏன் மொக்கை பதிவுகள் ஓட்டு வாங்குகின்றன என்பதை விளக்க தேவையில்லை என நினைக்கிறேன். அது உங்களுக்கே புரியும். காரணம் இது பற்றி சமீபத்தில் சிபி.செந்தில்குமார் வரை சொல்லியிருக்கிறார்கள்.

இத்தாலியில் இரண்டு புகழ் பெற்ற சாக்லேட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்று மிகுந்த தரமாக இருக்கும் ஆனால் அதன் பேக்கிங் அவ்வளவு நன்றாக இருக்காது. இன்னொன்று தரம் குறைவாக இருக்கும் ஆனால் அதற்கு பேக்கிங் அசத்தலாக இருக்கும். இரண்டுமே நன்றாக போகிறது சொல்லப்போனால் இரண்டுமே ஒரே விலை. இப்ப தரமான சாக்லேட்டுக்கு விளம்பரம் மற்றும் பேக்கிங் நன்றாக செய்தால் விலை அதிகம் இருந்தாலும் இதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். சென்னை சரவணபவன் ஓட்டலில் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அவர்கள் விரைவு உணவகம், அமர்ந்து சாப்பிடும் உணவகம், பணக்காரர்களுக்காக அதிக விலையுடன் கூடிய ஏசி உணவகம் என மூன்று விதமாக வைத்திருக்கிறார்கள். இதில் விரைவு உணவகத்தில் விற்கும் உணவும், அமர்ந்து சாப்பிடும் உணவகத்தில் விற்கும் உணவும் ஒரே மாதிரியான தயாரிப்பு ஆனால் விரைவு உணவகத்தில் விலை குறைவாக இருக்கும். காரணம் எல்லா விதமான வாடிக்கையாளர்களையும் அவர்கள் விட்டுவிட விரும்பவில்லை.

தினகரன் பத்திரிக்கை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 2005 ஆண்டு கலாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கை வாங்குவதற்கு முன் தி.மு.க காரர்கள் மட்டுமே வாங்கிப்படித்த பத்திரிக்கை அது. அதன்பிறகு ஒரு ரூபாய்க்கு அதனை விற்று பரபரப்பாக்கி இன்றைக்கு தமிழின் No.1 நாளிதழ் அதுவாகவே மாறிவிட்டது. இன்றைக்கு மூன்று ரூபாய் ஆக மாறிவிட்டது. ஆனால் இனி அதனை படிப்பவர்கள் தொடர்ந்து படிக்கவே செய்வார்கள். தனி நபர் வலைப்பக்கம் என்றாலும் அல்லது மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் உங்களை சரியாக கொண்டு சேர்க்கும் உத்தி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களால் வெற்றிபெறவே முடியாது. இன்றைக்கு உங்கள் குழந்தைகள் தொலைகாட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்கித்தர அடம்பிடிக்க காரணம் அந்த பொருட்களை விளம்பர படுத்த பெரியவர்கள் சிந்தித்ததுதான்.

இப்ப தரம் இருக்கு, விளம்பரம் செய்து பெரிய அளவில் விற்பனை ஆகிறது, உங்கள் விளம்பரங்களை குறைக்க வேண்டுமா என்றால், உங்களுக்கு ஒரு போட்டியாளர் வராதவரைக்கும் குறைக்கலாம். ஆனால் போட்டியாளர் வந்துவிட்டால் மீண்டும் முன்னைவிட பலமாக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். ஹமாம் சோப் அந்த உத்தியைதான் கையாள்கிறது. இன்றைக்கு இந்துஸ்தான் லீவரின் பொருட்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துவதில் பெருமளவு இருக்கிறது. எத்தனை பேருக்கு ஒரே நிறுவன பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம் என்கிற விவரம் தெரியும். நான் பொதுவாகவே சோப் மற்றும் அன்றாட உபயோக வாங்கும்போது எது இலவசங்களுடன் அல்லது தள்ளுபடி விலையில் வருகிறதோ அதையே வாங்குவேன். காரணம் விளம்பரத்திற்காக விலையில் சமரசம் செய்துகொள்ளும் தருணம் அது. நாம்தான் அதனை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காதி கிராப்டில் கிடைக்கும் நிறைய பொருட்கள் மிக தரமானவை ஆனால் பெரும்பான்மையாக விவரமான ஒருசிலரே பயன்படுத்துகின்றனர். இங்கு விளம்பரம் கிடையாது. தரமும் இருக்கும் ஆனால் சந்தை வாய்ப்பு வெகு சொற்பமே.

கோகோ கோலா, பெப்சி பற்றி பேசுவோம். டாஸ்மாக் பானங்களை குடிப்பவர்களுக்கு அறிவுரை கூறும் நண்பர்கள் இதனை பற்றி அறியாமல் இருப்பது ஆச்சர்யமே. முழுக்க உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்கள் இவை . இதனைத்தான் நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். ஒரு லிட்டர் பெப்சியோ, கோக்கோ, இன்னபிற வஸ்துகளோ, அது தயாரிக்க ஆகும் செலவு வெகு சொற்பமே. ஆனால் விளம்பரம் செய்தது மக்களை அடிமையாக்கி இன்று உலகம் முழுதும் அது விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. குடிக்கும் பாலில் அது கேட்டுப் போகாமல் இருக்க யூரியா கலக்கிறார்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு அதில் இருக்கும் அழுக்கை நீக்க பயன்படுத்துகிறார்கள். பாலுக்கு பற்றாக் குறை கடுமையாக இருக்கிறது, ஆனால் அப்படி பற்றாக்குறை இருக்கும்போதே நிறைய நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. காரணம் சொல்லவேண்டியதில்லை.

"சரக்கு முறுக்கா இருந்தா பத்தாது; செட்டியாரும் முறுக்கா இருக்கணும்"
என்கிற சொலவடை தமிழில் இருக்கிறது..

அடுத்த கட்டுரையில் மாணவர்கள் ஆரம்பித்திருக்கும் நிறுவனம் பற்றி சொல்கிறேன்.

திலீப சுடர்!

இந்தக் கவிதையை படைத்தது தம்பி வழக்குரைஞர் இரா.சாமிதுரை. இவர் எண்திசை எனும் வலைபக்கத்துக்கு சொந்தக்காரர்...

திலீபா !....
உமக்காக .,
ஊமைகள் அழுகிறோம்!!
இதயமற்ற  தேசத்திலிருந்து...
அந்த தேசத்தின் மன்னிப்புகளையும் ஏந்தி.

கால்நூற்றாண்டுக்கு முன்னர்
காந்தியம் புதைக்கப்பட்ட
கல்லறையின் முன்பு
தேசமென கருதி
நீ மண்டியிட்டு வேண்டினாய் !

நெருப்பை நீர் கொண்டு அணைக்க 
உன் ஊன் உருக்கி
பெருமடல் எழுதினாய்!

செவிப்பறைகள் கிழிய
நீ எழுப்பிய அழுகுரல்
என்தேசம் எங்கும் ஒலித்தது!
என் இதயமற்ற தேசத்தின்
செவிகள் ஏற்கனவே இறந்திருந்தது.

நீ  துப்பாக்கியில்
ரோஜாக்களை நிரப்பி 
புறாக்களை ஏந்தினாய!

புத்தன் பிறந்த என் தேசமோ
சிறகுகளைகொய்து
சமாதானத்தை புதைத்தது.


காந்தி பெயர் ஒட்டிக்கொண்ட
மரித்த பிணங்களிடம் வரங்கேட்டாய்!
தன் உடல் தாண்டி சிந்தை வரை
முசொலினின் வார்ப்பை தழுவிய
நேருவின் வாரிசு 
உன் உயிரை காணிக்கை கேட்டது.

மெல்ல நீ இறந்து கொண்டு இருந்தாய்...
காந்தியம் அடைக்கப்பட்ட
சவப்பெட்டியின் மூடியில்
ஒவ்வொரு நாளும் ஒரு ஆணி
அறையப்பட்டுக்கொண்டிருந்தது.

நெருப்பு
நீரை எரித்தது!
முழுவதுமாய் ஒருநாள் நீ எரிந்துபோனாய்.

 உன் உயிர்பிரிந்த நாளில் ...
 முழுவதுமாய்இறந்து கிடந்தது -
 நீ  ஆதரித்த
அனாதை காந்தியமும்.

25 செப்., 2010

ஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...

நாளை (26.09.2010) தியாகி திலீபனின் நினைவு தினம் அவருக்கு என் வீரவணக்கம்....

வீரமறவன் நீ... 
தியாக தீபமாய் தன்னையே 
எரித்துக் கொண்டவன் நீ...
அகிம்சை தேசத்துக்கு உன்னையே 
கோரிக்கையாய் வைத்தவன் நீ...

நீ புலி ...
பசி துறந்து பலியான புலி ...

திலீபா நீ விதைக்கப்பட்டாய் 
எம் மனங்களில்,
இந்திய தேசத்தின் மீது மாறாத 
நம்பிக்கை கொண்டவன் நீ,
அன்றைக்கும், இன்றைக்கும், 
என்றைக்கும் உதவாது இந்தியா,

அன்று உன்னை மட்டும் இழந்தோம்,
இப்போது லச்சங்களில் இழந்தோம் 
இன்னும் 
இன்னும் 
இழப்பதற்கு 
தயாராய் இருக்கிறோம்,
ஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி 
ஒருநாள் உண்மையாகும்.

இத்தாலி அன்னையை 
ஏற்றுக்கொள்ளும் அடிவருடிகள்..
ஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,
முள்ளிவாய்க்கால் 
முடிவல்ல ஆரம்பம்..

ஈழம் நிச்சயம் வந்தே தீரும்..
திலீபா உனக்கு என் வீரவணக்கம்.

திலீபனின் வீர உரை ...


காசி ஆனந்தன் இரங்கல் கவிதை .....





24 செப்., 2010

சாருவை வெறுப்பேற்ற என்ன செய்யலாம்..?




1. ஜெயமோகன்தான் உலகின் சிறந்த இலக்கியவாதி என்று சொல்வது.

2. நித்யானந்தாவுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார் என எழுதுவது.

3. அவரது வங்கி கணக்கிற்கு பத்து ரூபாய் மட்டும் அனுப்புவது.

4. அவரை சக பதிவர் என்று அழைப்பது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன... 

22 செப்., 2010

வீரப்பதேவர்...

வீரப்ப தேவருக்கு 
தினமும் ஒரு பஞ்சாயத்து..
வாய்க்கா, வரப்பு தகாராறு 
புருஷன், பொண்டாட்டி பிணக்கு 
அங்காளி, பங்காளி பிரச்சினை என 
தீர்த்துவைக்கும் வழக்குகள் ஏராளம் 
முறுக்கிய பெரிய மீசையும் 
கட்டு சிட்டான ஆகிருதியும் 
கட்டைக் குரலும் கொண்ட அதிகார பெரிசு 
அவர்...

பஞ்சாயத்து முடிந்த மறுநிமிடம் 
பிராது கொடுத்தவர் தந்த சாராய விருந்தை 
ஏற்றுக்கொண்டாலும் 
நியாத்தின் பக்கம்தான் தேவர்..

உள்ளூர் பிரச்சினை முதல் 
உலகப் பிரச்சினைவரை 
அவருக்கென்று தனிப்பட்ட கருத்து இருக்கும் 

இதற்க்கு நேர்மாறாக 
தேவரின் வீட்டில்...

21 செப்., 2010

வியாபாரம் - வெளிநாட்டு வேலையும், சென்னை தேநீர் கடையும்...

பொதுவாகவே படித்த, படிக்காத அனைவருக்குமே வெளிநாட்டு வேலைதான்  முதல் தேர்வாக இருக்கிறது.. அதற்கு காரணம் அங்கு கிடைக்க கூடிய அபரிதமான பணம் என்ற கற்பனையே.. உண்மையில் வெளிநாடுகளில் வியாபாரம் செய்தால் மட்டுமே அத்தகைய நிலையை நாம் அடைய முடியும், அல்லது முதல் தர நிலையில் இருக்கும் படிப்பாளிகளுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கும். அதிலும் தனி ஆளாக இருந்து சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டுக்கு அனுப்பியதை உரியவர்கள் சரியான வகையில் முதலீடாகவோ, சேமிப்பாகவோ மாற்றியிருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றபடி குடும்பத்தினருடன் அங்கிருந்து சம்பாதிப்பது அந்த நாட்டு குடிமகனின் வாழ்க்கையை வாழ்வதைப் போலத்தான். இது பொதுவாகவே எல்லா நாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் பொருந்தும். 


சிங்கப்பூருக்கு படிக்காத ஒருவர் கட்டிட வேலைக்கோ, அல்லது சாதாரண தொழிற்சாலை ஊழியராகவோ செல்லவேண்டும் எனில் குறைந்த பட்ச தொகையாக ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும். இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தொழில்நுட்பம் படித்தவர்கள் இரண்டு லட்சம் வரைக்கும் கொடுத்துதான் வேலைக்கு வருகிறார்கள். இது நிச்சயமாக அங்குள்ள முதலாளிகளுக்கும், இங்கிருக்கும் ஏஜெண்டுகளுக்குமானது. இவ்வளவு பெரிய தொகையை பெரும்பாலும் வட்டிக்கு வாங்கியே கொடுப்பதால் அவர்கள் இந்தக் கடனில் இருந்து மீளவே இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும். அதன்பிறகுதான் சேமிப்பே. இதில் விதிவிலக்காக கணினியியல் வல்லுனர்கள் அதிகம்பேர் பணம் தராமல் வருகின்றனர்.

இதற்க்கு நிகரானதுதான் அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ, ஐரோப்பிய நாடுகளுக்கோ, வல்லுனர்கள் வேலைக்கு செல்வதும், இதற்க்கு உதாரணம் தேவையில்லை, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் காத்து கிடக்கும் நம்ம ஆட்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும், அவர்கள் அனைவரும் உயர்ந்த படிப்புகளை படித்துவிட்டு இந்திய தேசத்துக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருவதற்காய் பாடுபட வரிசை கட்டுபவர்கள். மற்றபடி மலேசியா மற்றும் அரபு தேசங்களுக்கு நாற்பதில் ஆரம்பித்து எண்பதினாயிரம் வரை செலுத்த வேண்டும். காரணம் அங்கு சொற்ப சம்பளமே கிடைக்கும்.

இதற்கும் சென்னை தேநீர் கடைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்...

நான் சென்ற வருட இறுதியில் ஒரு தேநீர் கடைக்காரரை எங்கள் நிறுவனத்துக்காக சந்திக்க வேண்டி வந்தது. வழக்கமாக எங்கள் நிறுவன சேவையை பெறவேண்டும் என்றால் ஒரு லட்சம் முன்பணமாக கொடுக்க வேண்டும். ஒரு சாதாரண தேனீர்க்கடை வைத்திருப்பவர் எங்கள் சேவையைப் பெற வருகிறார் என்றால் அது நிச்சயமாக சுவாரஸ்யமான ஒன்றாகத்தான் இருக்கும் என நினைத்து நானும் அவரை சந்திக்க ஆர்வமாக  இருந்தேன். 

அவரை சென்று பார்த்தேன். அவர் சென்னையின் பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட முப்பது தேனீர்க் கடைகளுக்கு சொந்தக்காரர். அவர் ஒவ்வொரு கடையையும் அங்கிருக்கும் தேநீர் தயாரிக்கும் வல்லுனரிடம் பங்குதாரர் முறையில் கடையை கொடுத்து நடத்த சொல்லியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வருவாயில் தேநீர் தயாரிப்பாளர் மற்றும் வேலை செய்பவர்கள் சம்பளத்தை எடுத்துக் கொள்வது மீதமிருக்கும் லாபத்தில் இவருக்கு எழுபது சதமும், தேநீர் தயாரிப்பாளருக்கு முப்பது சதமும் எடுத்துக் கொள்வது. வியாபார மொத்தமும் அன்றைக்கு இரவே கணக்கு பார்த்து மறுநாள் காலையில் இவர் வரும்போது கொடுத்துவிட வேண்டும்.

இதில் ஓவொரு கடையும் சராசரியாக அவருக்கு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானத்தை தந்து வருகிறது. எந்தக் கடையிலாவது வருமானம் வருவதில் குளறுபடி இருந்தால் இவரே பத்து நாளைக்கு கல்லாவில் அமர்வார், பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டு அதில் தேநீர் தயாரிப்பவர் முறைகேடு ஏதும் செய்திருந்தால் அன்றைக்கே அவரை வேலையை விட்டு அனுப்பி விடுவார். அதன்பிறகு வேறொரு ஆளுக்கு வாய்ப்பை வழங்குவார். அவர் எங்கள் நிறுவனத்தை அழைத்ததே அதையும் மீறி கடைக்கு தினசரி ஐநூறு ரூபாய் வரை திருடுகிறார்கள் அதனை கண்டுபித்து அல்லது திருட முடியாதவாறு ஒழுங்கு படுத்தி தரவேண்டும் என்பதற்குதான்.. 

அதனை நான் பதினைந்து நாட்களுக்குள் கண்டுபிடித்து அதனை சரி செய்து கொடுத்தேன்.. ஆனால் எனக்குள் இந்த முதலாளியின் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து அவரை தனியாக சத்தித்து இதனைப் பற்றிக் கேட்டேன். மதுரை மாவட்டத்தில் ஓரளவுக்கு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு ஊரில் இருக்கும் குறைந்த அளவு விவசாய நிலத்தையும் கவனித்துக் கொண்டு, அங்கு ஒரு தேநீர் கடையும் வைத்திருந்திருக்கிறார், மகனின் வெளிநாட்டு ஆசையால் வட்டிக்கு பணம் வாங்கி அவனை அனுப்பி வைக்க, அவன் சம்பாதிப்பதைக் கொண்டு அடைக்க முடியாமல் போய் நிலத்தையே எழுதிக் கொடுக்கும் நிலைவந்து மீதம் கிடைத்த ஐம்பதினாயிரம் பணத்துடன் ஐந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருக்கிறார், வந்த இடத்தில் ஒரு சிறிய தேநீர் கடையை விற்க போகிறார்கள் எனத் தெரிந்து இருந்த பணம் அதற்கு சரியாக இருக்க அதனை நடத்த ஆரம்பித்து இருக்கிறார். இவரின் நடவடிக்கையும், இவர் போடும் தேநீரும் வியாபாரத்தை பெருக்க கடை  அந்தப் பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலம் ஆக, பக்கத்துக்கு தெருவில் தேநீர் கடை வைத்திருந்தவர் வியாபாரம் குறைந்து இவரிடம் வந்து தன் கடையை விற்கப் போகிறேன் யாராவது ஆள் இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.

இவரும் சொல்கிறேன் என அனுப்பிவிட்டார், ஆனால் இவரிடம் வேலை பார்த்தவர் இந்தக் கடையை நாமே வாங்கி நடத்தலாமே என ஆலோசனை சொல்லியிருக்கிறார். எப்படிப்பா ஒரு கடைக்கே நமக்கு முடியல, இன்னொரு கடையை நம்மால் நடத்த முடியுமா எனக் கேட்க, அவரோ முதலாளி நம்ம கடையவிட அது பெரிய கடை, வாடகையும், முன்பணமும்  நம்ம கடை அளவுக்குத்தான் அங்கும், மேலும் எல்லா சாமான்களும் ஒரு விலைபோட்டு எடுத்துக் கொள்ளலாம், நாம் இப்போது நடத்தும் கடையை நான் பார்த்துக் கொள்கிறேன் புதிய கடையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், ஊரில் என் மச்சான் நன்றாக தேநீர் தயாரிப்பான் அவனை வரவழைத்து அந்தக் கடையில் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, இந்த யோசனை பிடித்துப் போய் இரண்டாவது கடையையும் எடுத்து நடத்த அது நன்றாக போகவே, முதல் கடையை பார்த்துக் கொள்பவருக்கு பங்குதாரர் அடிப்படையில் இன்று வரை அவருக்கு மட்டும் வருமானத்தில் அவரின் சம்பளம் போக ஐம்பது விழுக்காடு கொடுப்பதாகவும் சொன்னார்.

அதன்பிறகு இது பற்றி யோசித்து நகரின் வெவ்வேறு பகுதிகளில் கடையை ஆரம்பித்தோ, வாங்கியோ இன்று வரைக்கும் ( அவரை நான் சந்தித்த நாள்) முப்பது கடைகள் இருக்கின்றன என்றார். மேலும் அவரின் மகனை ஊருக்கு வரவழைத்துவிட்டதாகவும், ஊரில் பெரிய அளவுக்கு நிலம் வாங்கியிருப்பதாகவும் சொன்னார். இப்போது இன்னோவா காரில் வலம் வரும் அவர், ஒரு நிதி நிறுவனம் ஒன்றும் நடத்துகிறார். ஆக ஒரு கடையில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வருமானம் வந்தால் ஒரு மாதத்துக்கு முப்பது கடைக்கு பதினெட்டு லட்சம் வருமானத்தை தருகிறது. ஒரு கடையை கைமாற்றினால் குறைந்தது மூன்று லட்சத்துக்கு போகும் முப்பது கடையும் தொண்ணூறு லட்சத்துக்கு போகும். ஐந்து வருடத்துக்கு முன் ஐம்பதினாயிரத்துடன் சென்னை வந்த அவரின் சொத்து இன்றைய தேதிக்கு கோடிகணக்கில்.

இப்போது சொல்லுங்கள் வெளிநாட்டில் வேலைக்குப் போய் உங்களால்   நீங்கள் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் இப்படி ஒரு நிலையை அடைய முடியுமா என்று. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வியாபாரம் ஆரம்பிப்பது மிக எளிது. ஆனால் நாம்  வெளிநாட்டில் கழிவறை சுத்தம் செய்கிறோம் கட்டிட வேலை பார்க்கிறோம், அல்லது மேல் மட்டமாக நேரம் காலம் பார்க்காது  உழைக்கிறோம். இங்கு இந்தியாவில் நம் வீட்டு வேலையை நாம் பார்ப்பதற்க்கே கவுரவம் பார்க்கிறோம். கொஞ்சம் மனதை விசாலமாக திறந்து நம் தேசத்தை பார்ப்போம். இங்குதான் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துமா என்பது சந்தேகமே.. ஏனெனில் மிகுந்த உத்வேகம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எனக்கு வேலை பார்க்கத்தான் விருப்பம் என்று சொல்பவர்களுக்கு இது பொருந்தாது.

அடுத்த கட்டுரையில் வியாபாரத்துக்கு விற்பனை தந்திரம் முக்கியமா? பொருளின் தரம் முக்கியமா என்பதைப் பற்றி அலசுவோம்....

20 செப்., 2010

தீராக்காதல் - 5 - கீதாஞ்சலி.....

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்.


காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான். 


அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி,

/என்ன மாப்புளே இந்த நேரத்துலே/ என்றார்.. 

அவரை பார்த்ததும் நான் அழுதேன், /

என்னடா முட்டாளா நீ/ 

எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பெரும் உன்னைநம்பிதானே இருக்காங்க,( என் அக்காவும், அக்கா கணவரும் ஒரு விபத்தில் இறந்ததால், அவர்களின் இரு குழந்தைகளும் எங்கள் பராமரிப்பில்தான் இருந்தன) கண்ணனோ (என் அண்ணன்)குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்க்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம் என் டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார். 

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி.. 

அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, .. 

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்.. 

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான். பொதுவாக நான் யாருக்காவது இறக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர். 

1995 ஆம் ஆண்டு ஊருக்கு வந்தபோது பெங்களூர் சென்றேன். அங்கு கீதாஞ்சலி அடிபட்டு இறந்த இடத்தில் சாலையோரம் இரண்டு நாள் இருந்தேன். காலை முதல் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே திரிந்தேன். அப்போது ஒரு நண்பர் அறிமுகமானார், அவர் வாழ்வின் இன்னொரு கோணத்தை புரிய வைத்தார். 

இப்படியாக நகர்ந்த வாழ்க்கையில் என்னையும் இரு பிள்ளைகளையும் மட்டுமே உலகம் என நினைத்து வாழும் மனைவி. என் தொழிலில் எத்தனயோ தோல்விகள், நம்பிக்கை துரோகங்களை சந்தித்து இருக்கிறேன். சில சமயங்களில் பத்து ரூபாய் கூட இல்லாமலும் இருந்திருக்கிறேன். ஆனால் என்னை சரியாக புரிந்துகொண்டு எனக்கு மிகவும் ஆறுதலாக இருப்பவள் என் மனைவி. சூழ்நிலையால் அனேகமாக தினமும் தண்ணி போட்டுதான் வீட்டுக்கு வருகிறேன். நள்ளிரவுக்கு பின் வரும் எனக்கு கதவு திறந்து விடும் அவள் கேட்க்கும் ஒரே கேள்வி சாப்டீங்களா என்பது மட்டுமே. என் திருமணத்துக்கு முன்பே இந்தக் காதலை அவளிடம் சொல்லிவிட்டேன்.

இடையில் ஒரு நாள் சிங்கப்பூரில் இருந்தபோது எங்கள் திருமண நாள் கடந்து போனதை மறந்து விட்டேன். அடுத்த வாரத்தில் போன் செய்தபோது அவள் நினைவு படுத்தினாள். அவளுக்கு உடனே ஒரு வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தேன்.அது ஹேராமில் கமல் சொல்வது.

"நான் என்றோ செய்த புண்ணியம் 
நீ எனக்கு மனைவியாக அமைந்தது"
"நீ என்றோ செய்த பாவம் 
நான் உனக்கு கணவனாக அமைந்தது."
இதை எழுதிக் கொண்டிருக்கிற வினாடி வரைக்கும் இதுதான் உண்மை. இதுவரை படித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள். இது என்னுடைய சொந்தக் கதைதான். இதனை தொடராக தமிழ்குறிஞ்சி இணைய பக்கத்தில் எழுதி இருக்கிறேன். என்னை பற்றி அதில் ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன். நேரமிருந்தால் அங்கு சென்று படியுங்கள். முப்பது அத்தியாங்கள் அதில் இருக்கிறது.

தொடர்ந்து எட்டு பதிவுகளாக மீள் பதிவுகளாக பதிவேற்றியிருக்கிறேன். நான் பிரபலம் ஆகாத போது எழுதியது அதனால்தான் நிறைய பேருக்கு தெரியவில்லை. நாளை முதல் வழக்கம் போல் எழுதுவேன். 

தீராக்காதல் - 4 - கீதாஞ்சலி ....


என் 
மதுக்கோப்பைகளில்
நிரம்பி வழிகிறது உனக்கான காதல் ...

மெல்ல மெல்ல 
அது என்னை கொல்லத் துவங்க ...

எனக்கு தெரிந்ததில் 
இதுதான் 
மிக ரசனையான தற்கொலை ...

எனக்கு அடுத்த ஒரு வாரத்தை தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது, இப்போது போல் அப்போதெல்லாம் போன் கூட பேசமுடியாது. அவள் அழுதது என் கண்முன் வந்துகொண்டேயிருந்தது, அவளின் நெருக்கத்திற்கு பிறகு நான் தண்ணி அடிப்பதை முற்றாக விட்டுவிட்டதால் நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க நூல் நிலையம் போக ஆரம்பித்தேன். மேலும் நண்பர்கள் வற்புறுத்தினால் மஞ்சள் காமாலையை காரணம் சொல்லி தப்பித்துவிடுவேன், அதனால் அவர்களும் என்னை மாலை வேளைகளில் கூப்பிடுவதை தவிர்த்தனர். எனவே எப்போதும் புத்தகங்களுடன் வாழ ஆரம்பித்தேன். 

ஒரு வாரம் கழித்து எனக்கு அவளிடமிருந்து கடிதம் வந்தது, எனக்கு சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பேன், அதில் நவம்பர் இருபதாம் தேதி மன்னார்குடி வருவேன் எனவும் மறுநாள் மாலை வழக்கம்போல் கோவிலில் சந்திப்போம் எனவும், வந்து எனக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தாள். முடிவில் With Thousand Warm of Kisses என எழுதி கையெழுத்து போட்டிருந்தாள். அந்த சந்தோசத்தை எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனி உற்சாகத்துடன் நடமாட ஆரம்பித்தேன். பத்தொன்பதாம் தேதி அன்று காலை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையான ஜுரம் அடித்தது உடனே மன்னார்குடி அழைத்து வந்தார்கள். அங்கு எனக்கு டைபாய்டு என அட்மிட் செய்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு இருபத்திஒன்றாம் தேதி அவளை பார்க்கமுடியவில்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது. அதனால் நண்பன் ராஜசேகரை விட்டு விசாரிக்க சொன்னேன், அவனும் விசாரித்துவிட்டு அவள் மன்னார்குடி வந்தமாதிரி தெரியவில்லை என்றான். 

ஆனால் என்னை பார்க்க அஞ்சலியின் தோழி சுமதி வந்தாள், வந்து என்னைபார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள், நான் இருந்தது தனி அறை என்பதாலும், காலை பத்துமணிக்கு மேல் என்பதாலும் யாரும் இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என்ன ஆச்சும்மா, ஏன் அழுவுறே என சமாதானபடுத்தினேன், அவள் அழுகையை நிறுத்தவில்லை, அழட்டும் என மௌனமாக இருந்தேன், மெல்ல அவளை ஆசுவாசபடுத்திக்கொண்டு அண்ணே அஞ்சலி நம்மை எல்லாம் ஏமாத்திட்டு போய்ட்டான்னே.. என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,.எனக்குள் எதுவோ உடைந்தது, .......................................... 

சுமதி போனபிறகு அப்படியே பைத்தியம் பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.. என்னைப்பார்க்க வந்த நண்பனிடம் அஞ்சலி வீட்டின் முகவரி சொல்லி எப்படியாவது என்ன நடந்தது என விசாரிக்க சொன்னேன், 

பெங்களூரில் பத்தொன்பதாம் தேதி ஊருக்கு கிளம்புவதற்குமுன் கடைசி நேரத்தில் தனக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு கிருஷ்ணகுமாரின் அம்மா, மற்றும் அஞ்சலியின் மூத்த சகோதரி, கிருஷ்ணகுமார் என்ற குட்டிபையனுடன் கிளம்பியிருக்கிறார்கள், மெயின் ரோட்டில் சாலையை கடக்கையில் சாலையின் நடுவில் நின்று மறுபுறம் கடக்கையில் அந்த குட்டிபையனை யார் அழைத்துவருகிறார் என தெரியாமல் கடந்துவிட அந்த குட்டிபையனோ போகிற வருகிற கார்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கேயே சாலைநடுவில் நிற்க, மறுபுறம் கடந்த அஞ்சலி அதனை கவனித்துவிட்டு அவசரமாக சாலையின் குறுக்கே ஓடி அவனை காப்பாற்ற முயன்ற பொது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திரிக்கிறது, அவள் சாகும்போது கடைசியாக சொன்ன பெயர் குமார்..... அந்தக் குட்டிப் பையனுக்கு எதுவும் ஆகவில்லை.

இதனை நண்பன் வந்து சொன்னபோது நான் அழவேயில்லை, என் உயிரில் கலந்த அவள் இறந்துவிட்டாள், என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... 

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபின், நான் எங்கும் செல்லவில்லை, எந்த நேரமும் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், நான் யாருடனும் பேசுவதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை என நண்பனிடம் அம்மா வருத்தப்பட்டது, அவன் பிடிவாதமாக என்னை வெளியில் அழைத்துசென்றான், அன்று இரவு நிறைய குடித்தேன்.. அத்தனை நாள் இரவுகளில் அன்று இரவுதான் போதையில் தூங்கினேன், அதன்பிறகு குடி என்னுடன் ஒட்டிகொண்டது, குடிக்காமல் என்னால் தூங்க முடியாது, வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக மாட்டு கொட்டகையில் தூங்க ஆரம்பித்தேன்... 

இப்படி ஒருநாள் காலையிலேயே நண்பன் செழியனுடன் குடித்தபோது, ஓவராக குடித்துவிட்டு அஞ்சலியை பற்றி புலம்ப அவனோ நீ 
\"ஏழு சுவரங்களுக்குள்\" 
என்ற பாட்டு கேட்டிருக்கிறாயா என்றான், அதில்
 \'எனக்காக நீ அழுதாள் இயற்கையில் நடக்கும்\',\'
 நீ எனக்காக உணவு உன்ன எப்படி முடியும்\' 
என்றொரு வரி உண்டு தெரியுமா? என்றான் அதுக்கு இப்ப என்னடா என்றபோது, நீ அஞ்சலியை நெஜமாகவே காதலிச்சியா? என்றான், ஆமாண்டா... அத எதுக்கு கேக்குறே என்றேன். இல்லடா நீ நிஜமா காதலிச்சிருந்தா அப்பவே செத்திருப்பே, ஆனா நீ இப்ப எங்களுக்காக நடிக்கிறே.. உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்.. என் போதை வடிந்துவிட்டது, வீட்டிற்கு வந்து நெடு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்... 

தற்கொலை செய்து கொள்ளவேண்டும், அதுவும் இன்றைக்கு இரவே என முடிவெடுத்தேன்.. 

மாலையில் மன்னார்குடி சென்று ஒரு பாட்டில் விஷமும், இன்னொரு பாட்டில் பிராந்தியும் வாங்கிகொண்டேன், கடைசியாக ஆத்மநாதன் அத்தானை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என அவரைப்பார்க்க சென்டருக்கு போனேன்.. அவர் வீட்டிற்கு சாப்பிட போனதாக சொன்னார்கள், அவருக்காக காத்திருந்தேன்,, என் நினைவுகள் முழுதும் அஞ்சலி மட்டுமே இருந்தாள், இன்னும் சில மணி நேரத்தில் அவளுடன் கலந்துவிடப்போகிறேன், அந்த நினைப்பே என்னை ஒரு ஏகாந்தத்திற்கு இட்டுசென்றது... வகுப்பின் பெஞ்சில் படுத்து கண்மூடினேன் என் கண்களுக்குள் அஞ்சலி சிரித்தாள்... அப்படியே தூங்கிவிட்டேன்.......

அப்படி ஒரு உறுதியான முடிவு எடுத்த என்னை.. எது உங்களுக்கு இதனை எழுதுகிற அளவுக்கு உயிரோடு வைத்தது என்பதை நாளை சொல்கிறேன்......

19 செப்., 2010

தீராக்காதல் - 3 - கீதாஞ்சலி....

சொல்லிவிட்டு பெய்வதில்லை 
எப்போதும் மழை ..
அது காதலைப்போல் 
வரமாய் வரும் ..

இப்போதும் பெய்கிறது
பெருமழை அவ்வப்போது,
உடன் நனைய
நீதான் இல்லை...

உடைந்து அழும் கண்களின் 
உப்பு 
மழையில் கலந்து 
கடலெல்லாம் உப்பாச்சு.. 

அன்று அவள் இனிமேல் நமக்குள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு போனபிறகு நான் நீண்ட நேரம் கோவிலிலேயே இருந்தேன்.. சில வருடங்கள் நட்பாகவே பழகியிருக்கலாம், அவசரப்பட்டுவிட்டோமோ எனத்தோன்றியது, கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன்.. 

மறுநாள் காலை என்னால் எழுந்திருக்க முடியவில்லை.. உடம்பெல்லாம் அனலாக கொதித்தது, லெட்ச்மணன் டாக்டர் வந்து பார்த்துவிட்டு சாதாரண சொரம்தான் என ரெண்டு ஊசி குத்திவிட்டு போனார், அம்மா மதியம் கொடுத்த கஞ்சிதான் ஓரளவு சாப்பிட்டது, ஆனால் சொரம் நின்றபாடில்லை விட்டுவிட்டு வர ஆரம்பித்தது, மறுநாள் பூரி வீட்டு தாத்தா பார்த்துவிட்டு மஞ்சள் காமாலை மாதிரி இருக்கு என்றார். 

அடுத்தநாள் முதல் மன்னார்குடியில் மஞ்சள்காமாலைக்கு மருந்து சாப்பிட ஆரம்பித்தேன், இப்படியாக இரண்டு வாரம் ஓடிவிட்டது.. உடல் மெலிந்து விட்டது.. உடம்பு நார்மல் ஆக மூன்று வாரம் ஆனது. வீட்டில் இருக்க போரடிக்கவே ஒருநாள் மாலை நேரம் கிளம்பி மன்னார்குடி வந்தேன், கோவிலுக்கு போனால் தேவலைபோல் போலிருந்தது, அங்கு சென்று நான் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்திருந்தேன், மனம் எவ்வளவுதான் மறுத்தாலும் அஞ்சலி முகத்தையே காட்டியது. 

அப்போது தன் குடும்பத்துடன் அஞ்சலி கோவிலுக்கு வந்தாள், என்னை அங்கு கண்டதும் தலைகுனிந்தவாறே சென்றாள். எனக்கு ஏண்டா இன்னைக்கு கோவிலுக்கு வந்தோம் என்று ஆனது.. அங்கேயே படுத்துவிட்டேன், சிறிது நேரம் கழித்து என்னை யாரோ எழுப்பினார்கள், அவள் அஞ்சலியின் தோழி சுமதி, அஞ்சலி என்னை பார்க்க வருவாள் என்றும் வீட்டுக்கு போய்விடவேண்டாம் என சொல்லிவிட்டு சென்றாள், நானோ வந்து என்ன சொல்ல போகிறாள், இனி கோவிலுக்குகூட வரவேண்டாம் என்பாள், அதைக்கேக்காமலே போய்விடலாம் என நினைத்தேன், ஆனால் மனசு அவளை பார்க்க துடித்தது. 

சிறிது நேரம் கழித்து வேர்க்க விருவிருக்க அங்கு வந்தாள், என்னை பார்த்தவுடன் கண்கலங்கியது, எப்படி இருக்கு உடம்பு,சார்கிட்டே கேட்டேன், மஞ்சள் காமாலை என்றார், இப்ப பரவாயில்லையா என்றாள், நான் மௌனமாக தலையாட்டினேன், என் கையை பிடித்துக்கொண்டு என்மேல் கோபமா? சாரி குமார் நான் அன்னைக்கு அப்படி எடுத்தெறிஞ்சு பேசியிருக்கக்கூடாது. நீங்க உங்க விருப்பத்த சொன்னீங்க நான் நாசுக்காக மறுத்திருக்கலாம், உங்ககிட்டே இருந்து அதை எதிபார்காததால் கோபப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சுடுங்க என்றாள். 

வெளியே நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது. சுமாராக தூறல் போட ஆரம்பித்தது, நான் அவளை மழை வந்துவிட்டது சீக்கிரம் வீட்டுக்கு போ என்றேன், பரவாயில்லை அப்புறம் போய்க்கிறேன் என்றாள். இப்ப உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என ஆரம்பித்தாள்.

நான் பெங்களூரில் இருக்கையில் பக்கத்து வீட்டில் ஒரு குட்டிப்பையன் இருந்தான் அவன் பெயர் கிருஷ்ணகுமார், நாங்க அவனை குமார் என்றுதான் கூப்பிடுவோம், என்மேல் மிகுந்த பாசமாக இருப்பான். என் பள்ளி நேரம் போக எப்போதும் நான் அவனுடன்தான் இருப்பேன், மூன்று வயதுதான் ஆகிறது. நான் இங்கு வந்தவுடன் அவனை மறக்க முடியவில்லை. போன் போட்டு பேசவேணும், ஆனால் அப்பா நெறைய பில் ஆகுதுன்னு சத்தம் போடுவார். இந்த நேரத்துலதான் உன் அறிமுகம் கிடைத்தது. இந்த ஊரே பிடிக்காம இருந்த எனக்கு நீ ஒரு நல்ல டைவர்சனா இருந்தே, ஆனா நீ திடீர்னு லவ் பண்றேன்னு சொன்னப்ப, அத என்னால உடனடியா ஏத்துக்க முடியாம அன்னைக்கு நான் அப்படி பேசிட்டேன், ஆனா தூக்கத்துல உன் பேரை சொல்லி உளறியிருக்கேன், நான் அந்த குட்டிபையனை மறக்க முடியாமல் இருக்கிறேன் என அம்மா எல்லோரிடமும் சொல்லி சிரிக்கிறார், இப்ப என்னால் உன்னை விட்டு விலக முடியாது என புரிந்துவிட்டது, ஆனால் காதல் வேண்டாம் நாம் நண்பர்களாகவே இருப்போம், நீ முதலில் ஒரு வேலை தேடிக்கொள் அல்லது சிங்கப்பூர் போ, இரண்டு வருடத்துக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்றாள். 

திடீரென பெருமழை பெய்தது.. கரண்ட் கட்டாகியது, கோவில் கனத்த இருளுக்குள் மூழ்கியது.. அவள் என் தோளில் சாய்ந்தாள், எங்கள் கண்ணீர் இருவர் தோளையும் நனைத்தது.. எனக்கு உலகமே சுற்றியது. ஒரு பெரிய இடி இடித்தது நாங்கள் சுய நிலைக்கு வந்தோம். அதன்பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை, சிறிது நேரத்தில் வீட்டுக்கு கிளம்பலாம் மழை விடுகிற மாதிரி இல்லை அதனால் நனைந்துகொண்டே போகலாம் என்றேன். சிறிது தூரம் அவளுடன் சென்றேன். நீ எப்படி வீட்டுக்கு போவாய் என்றாள், நான் பாத்துகிறேன் என்றேன், அன்று விடிய விடிய மழை பெய்தது ஊர் வரைக்குமே நனைந்து கொண்டுதான் வந்தேன், 

இன்று வரைக்கும் மழை வந்தால் நனைந்துகொண்டுதான் செல்கிறேன்....

அதன்பிறகு எங்கள் சந்திப்பு அடிக்கடி நடந்தது, ஆனால் இருவருமே கவனமாக காதல் பற்றிய பேச்சை தவிர்த்து வந்தோம். என்றாலும் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உணர ஆரம்பித்தோம். ஒரு நாள் எனக்கு மூன்று பேன்ட் சட்டைகளுக்கான துணிகளை தந்தாள், அதனை தைப்பதற்கான பணத்தையும் தந்தாள். நான் மறுத்தபோது உனக்கு டிரஸ் பற்றிய அறிவு இல்லை, அதனால்தான் எப்ப பாத்தாலும் இஷ்டத்துக்கு டிரஸ் பண்றே, நான் செலக்ட் செஞ்சத போட்டுபாரு உனக்கே அது புரியும் என்று பிடிவாதமாக கையில் திணித்தாள். 

உண்மையில் அந்த ஆடைகள் அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நட்பு எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது.., என்னுடைய நண்பர்கள் அதனை காதலாகத்தான் பார்த்தார்கள், அவளுடைய வீட்டிலும் நாங்கள் கோவிலில் சந்திப்பது தெரிந்து கேட்டிருக்கிறார்கள், அவளோ வெறும் நட்புதான் என சொன்னதற்கு, அவர்களோ இது பெங்களூர் இல்லை, வேண்டுமானால் வீட்டிற்கு வரவழைத்து பேசு, கோவிலில் வேண்டாம் என கண்டித்து இருக்கிறார்கள். அதனால் சந்திப்புகளை குறைத்துகொண்டோம். 

ஒருநாள் என்னை அவசரமாக பார்க்கவேண்டும் அதனால் கோவிலுக்கு வா என்றாள். அங்கு சென்றதும், இன்னும் இரண்டு நாளில் குடும்பத்துடன் பெங்களூர் செல்லவிருப்பதாகவும், அங்கு தன் சகோதரியின் நிச்சயம் நடப்பதாலும், மேலும் தீபாவளி நேரம் என்பதால் அங்கு பதினைந்து நாட்கள் தங்கவிருப்பதாகவும் சொன்னாள், நான் நீ பதினைந்து நாட்களுக்குள் வரவில்லை என்றால், நான் அங்கு வருவேன் என்றேன். இல்லை குமார் நிச்சயம் வந்துவிடுவேன், அதற்குள் எதாவது செய்து குழப்பிவிடாதே, திரும்பி வந்தபிறகு நான் நிச்சயம் என் வீட்டிற்கு அழைத்து உன்னை அறிமுகப்படுத்துவேன் என்றாள். 

நான் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தேன், என்ன குமார் எதாவது சொல்லு என்றாள். அஞ்சலி இனி என்னால் உன்னை பிரியமுடியாது, உனக்கு அப்படி எதாவது எண்ணம் இருக்கா என்றேன், ஏன் லூசு மாதிரி பேசுறே, அப்படின்னா நான் உங்கிட்டே சொல்லிட்டு போகிற அவசியம் இருக்காது என்றாள். நானோ இல்லை அஞ்சலி என் மனசுக்குள்ள ஏதோ தப்பா தெரியுது, அதனால்தான் உன்கிட்ட வெளிப்படையா கேட்டேன் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தாள், மெல்ல அவள் அழ ஆரம்பித்தாள், நான் ஏய் என்ன இது நான் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சுக்கோ என்றேன். அவளோ இல்லை குமார் எனக்கே மனசு சரியில்லை, எனக்கும் போக விருப்பம் இல்லை, அதனால் அப்பாகிட்டே நீங்க முன்னால போங்க, நான் மாமா வீட்டில் அங்கு வரும்போது அவர்களோடு வருகிறேன் என்றேன். அப்பா என்னை கடுமையா திட்டிட்டார். என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை அதான் மனசு சரியில்லை என்று சொல்லும்போதே விசும்ப ஆரம்பித்தாள். 

என்னால் அவளை சமாதானபடுத்த முடியவில்லை. எல்லாம் சரியாயிடும் அழாம போய்ட்டுவா என அனுப்பிவைத்தேன்,உடம்ப பாத்துக்க, பத்திரமா இரு என திரும்ப திரும்ப சொன்னாள், எல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போம்மா என்றேன், கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வச்சுக்க என்றாள். நான் மறுத்து விட்டேன், ப்ளீஸ் குமார் வாங்கிக்க என கெஞ்சினாள், எனக்கு என்னமோ போலிருந்தது, இதற்க்கு மேல் விட்டால் அவள் மேலும் அழ ஆரம்பிப்பாள் என வாங்க்கிக்கொண்டு அனுப்பினேன், சைக்கிளை தள்ளிக்கொண்டே மெதுவாக நடந்து போனாள், தெருமுனை சென்றவுடன் திரும்பவும் என்னைப்பார்க்க வந்தாள், குமார் என்னை மறந்துடமாட்டியே என்றாள், எனக்கு திகைப்பாக இருந்தது என்ன ஆச்சு இவளுக்கு....? இல்லம்மா நீ என் உயிர் நீ இல்லாம என்னால் வாழமுடியாது பதினைந்து நாட்களுக்குள் ஒன்னும் ஆகாது போய்ட்டுவா என மீண்டும் தெருமுனைவரை அழைத்து சென்று அனுப்பி வைத்தேன். 

அன்றைக்கு தெரியவில்லை அன்றுதான் அவளை நான் கடைசியாக சந்திப்பேன் என்று....

அதனை நாளை சொல்கிறேன் ....

18 செப்., 2010

தீராக்காதல் -2 - கீதாஞ்சலி....

                                        

"\\யாயும் ஞாயும் யாரா கியரோ 

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.//" 
-செம்புலப் பெயனீரார். 

"\\ What could my mother be 
to yours? What kin is my father 
to yours anyway? And how 
did you and I meet ever? 
But in love our hearts are as red 
earth and pouring rain: 
mingled 
beyond parting.//" 

இந்த குறுந்தொகை கவிதையைத்தான் நான் அவளுக்கு கடிதமாக அனுப்பினேன், மேலும் கடிதத்தில் இதைதவிர வேறு எதுவும் எழுதவில்லை. ஏனென்றால் என் காதலை இதைவிட எப்படி சிறப்பாக சொல்லமுடியும். என் மனதை படித்த கவிதை இது. 

மனம் பதைபதைக்க என்ன சொல்வாளோ என்ற பதட்டத்துடன் சென்றேன். கோவிலுக்குள் நுழைந்தவுடன் அவளை பார்க்கும்போது கோபமாகத்தான் அமர்ந்திருந்தாள்.. சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.. இதற்குமேல் நடந்தவற்றை உரையாடலாக தருகிறேன்.. 

\'\'உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே குமார்\'\' 

\'\' அதான் சொல்லிட்டேனே\'\' 

\'\'நமக்குள்ள இது எப்படி ஒத்துவரும்ன்னு நெனைக்கிறே\'\' 

\'\'ஏன் ஒத்துவராது?\" 

\" எதுவுமே ஒத்துவராது\'\' 

முதல்ல நீங்க தேவர், நாங்க வேளாளர். அப்புறம் உங்க ஊரு பரவாக்கோட்டை, அந்த பேரை சொன்னாலே அப்பா சம்மதிக்கமாட்டார், அப்பிடி ஒரு பேரு வாங்கியிருக்கிங்க, எதுக்கெடுத்தாலும் வெட்டு, குத்துதான்.. அதனால இது நமக்கு சரிப்பட்டு வராது குமார்.. 

\" நீயா எல்லாத்தியும் முடிவு பன்னிர்றதா? அஞ்சலி\" 

\"என்ன இப்பவே அதிகாரம் தூள் பறக்குது.. முதல்ல எனக்கு உன்னை புடிக்கணும் தெரியுமா?\" 

\'\' அப்ப புடிக்காமதான் இவ்வளவு நாளும் பழகினியா?\" 

\" பாத்தியா நீயும் சராசரிதான்னு நிருபிச்சுட்டே.. நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கு?\'\' 

\'\' என்னை விரும்புகிறாயா? இல்லையா? அத மட்டும் சொல்லு அஞ்சலி..\" 

\"இல்லை குமார் அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை\" 

\"அத சொல்லிட்டு போ.. அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணாத\"\' 

\" ஏன் கோபப்படுறே நியாயமா எனக்குதானே கோபம் வரணும்\" 

\" நான் உன்னை விரும்புகிறேன் அவ்வளவுதான். புடிச்சா பேசு இல்லாட்டி போய்கிட்டே இரு அஞ்சலி\" 

\'\'ரொம்ப பேசுறே குமார், உன்னோட ஊர் குணத்த என்கிட்டே காட்டாத\" 

\" இப்ப என்னை என்னதான் பண்ண சொல்றே\" 

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள்.. பிறகு 

ஒன்றை நீ புரிஞ்சுக்கணும் ஒரு நல்ல நண்பனாக நீ இருக்கமுடியும் ஆனால் வாழ்க்கை முழுக்க ஒன்னோட வாழனும்னா அது கஷ்டம், ஏன்னா முதல்ல என்னோட வீட்டுல இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க, அவங்கள எதுத்துக்கிட்டு என்னால எதுவும் பண்ண முடியாது, இவ்வளவு நாள் அப்பா, அம்மாவ பிரிஞ்சு இருந்தாச்சு, இனிமே என்னால அவங்கள பிரிய முடியாது. 

அப்புறம் முக்கியமா இது நமக்கு வயசில்லை, உன்னை பொறுத்தவரை இன்னும் அஞ்சு வருசமாவது போவனும், சும்மா வெட்டியா பொழுது போக்குற உன்னை நான் எப்படி நம்ப முடியும். அதனால இன்னையோட நாம எல்லாத்தியும் முடிச்சிக்கலாம், நான் உன்னை சராசரிக்கும் மேல் இருப்பாய் என நினைத்தேன், ஆனால் நீ அப்படி இல்லை, இதற்க்கு பிறகும் வெறும் நட்போட உன்னால் என்கூட பழக முடியாது, இப்ப நான் உன்னை நான் பாத்து பேசுறது கூட நீ எனக்கு எழுதுன லெட்டர்தான் அந்த கவிதை அற்புதம். இதையே ஒரு அஞ்சு வருடம் கழித்து கொடுத்து இருந்தா நல்லா இருந்திருக்கும். அப்படின்னு சொல்லிட்டு இனி நான் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என சொன்னாள்........ 

நானோ முதல்ல நீ எனக்கு அட்வைஸ் பன்றத நிறுத்து, என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும், நான் என் விருப்பத்த சொன்னேன், உனக்கு பிடிக்கலேன்னா, சொல்லிட்டு போ, இனிமே உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லேன்னு சொன்னா எப்படி, அப்புறம் ஒரு அஞ்சு வருஷம் போகட்டும், அப்ப உனக்கு பிடிச்சுருந்தா பாக்கலாம், இல்லேன்னா நட்பா இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை என்றேன். 

இல்ல குமார் இனிமே அப்படி இருக்கமுடியாது, உன்ன பார்க்கிரப்பல்லாம் நீ இதைபத்திதான் பேசுவே, இனிமே நமக்குள்ள நட்பு மட்டும் இருக்காது, எனவே தயவு செய்து என்னை மறந்திடு. ஒரு சிறப்பான வாழ்க்கை உனக்கு உண்டு, வேன்னா ரெண்டு வருஷம் போவட்டும், நீ முதல்ல உன் எதிர்கால வாழ்க்கைக்கு இப்பவே திட்டமிடு. அதற்கு அப்புறமும் நீயும் நானும் இதே மனநிலையில் இருந்தால் அப்ப பாக்கலாம் என்றாள். 

நான் எதுவுமே பேசவில்லை, கனத்த மௌனத்துடன் தலை தொங்கி அமர்ந்திருந்தேன், என்தலையை நிமிர்த்தி, ப்ளீஸ் புரிஞ்சுக்கப்பா என்றாள். நான் பதில் சொல்லவில்லை, என் வலது கையை எடுத்து தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துகொண்டாள், என் கை நடுங்கியது. அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது, மெல்ல என் கையை விடுவித்து ஒரு சிறிய சங்கினை கொடுத்தாள், என்னைப்பற்றி நீ நெனைக்கிற போதெலாம் இதபாரு உனக்கு சில விசயங்கள் புரியும், அயம் வெரி வெரி சாரி குமார் உன்னை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று சொல்லிவிட்டு விறுவென நடந்துவிட்டாள். 

நான் அமர்ந்திருந்தேன் அவள் தூரமாய் சென்று மறையும்வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன், என் உயிர் என்னைவிட்டு பிரிகிறமாதிரி இருந்தது, எனக்கு ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது.. 

நீ 
அமர்ந்து போன இடங்களில் 
உதிர்ந்து போன மல்லிகை மொக்குகளை 
மெல்ல எடுத்து நான் 
பாட புத்தகங்களில் பாதுகாத்து வைத்தது 
தெரியாது 
உனக்கு தெரியாது.. 

நீ 
நடந்து போன பனிப்பாதைகளில் 
நசுங்கிப்போன பசிய புற்களை 
அன்பாய் பார்த்து 
தடவிகொடுத்தபின் மெல்ல நிமிர்கிற அவற்றிடம் 
உனக்காக நான் மன்னிப்பு கேட்டது 
தெரியாது 
உனக்கு தெரியாது.. 

மன்மத சாட்டையாய் 
நீண்டு கிடக்குமுன் கூந்தல் 
பின்னழகில் உரச உரச நீ 
நடந்து போகையில் 
என் மனக்காடுகளில் 
தீப்பிடித்து எறிந்த கதை 
தெரியாது 
உனக்கு தெரியாது.. 

ஓர் 
இராப்பிச்சைகாரனாய் 
உன்னை மட்டுமே பின் தொடர்ந்து வரும் 
எனக்கு 
கோயிற் குளத்து மீன்களுக்கு 
ரொட்டி துண்டுகளை பிய்த்து போடுகிற மாதிரி 
சின்ன சின்ன புன்னகைகளை 
நீ 
பிச்சை இட சம்மதிக்கிறாய் 
மெல்ல 
மெல்ல.. 
ஓர் வானவில் போல் 
நம் காதல் வளர ஆரம்பிக்கிறது.. 


இறுதியில் 
நீ போகிறாய் 
திரும்பித் 
திரும்பி பார்த்தபடி 
நீ போகிறாய் 
போகப் போக பார்த்துக்கொள்ளலாம் 
என்றவள் போகிறாய் 
போகப் போக பார்த்தாயா 
நான் நிற்கிறேன் 

மெல்ல 
மெல்ல.. 
ஓர் வானவில்போல் 
வளர்ந்த நம் காதல் 
இதோ உடைந்த வளையல் துண்டாய் 
புழுதியில் கிடக்கிறது... 

என் மனதை அப்படியே படம் பிடித்த இந்த கவிதை எழுதியவரை நான் மானசீகமாக வணங்கினேன்.. 

இத்தோடு முடிந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும், ஆனால் விதி வலியது. எங்களை அது ஒரு கை பார்த்துவிட்டே சென்றது, அவள் மீண்டும் என்னை தேடிவந்தாள் இதற்க்கு அப்புறம் நடந்தவற்றை நாளை சொல்கிறேன் .....