நாங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் மன்றம் ஒன்றை வைத்திருந்தோம். நான் கமலின் ரசிகன் என்றாலும், நண்பர்கள் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் என்பதால் அந்த ரசிகர் மன்றத்தில் என்னையும் மன்ற ஆலோசகராக இணைத்துக்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் தனியாக பிரிவதற்கு முன் நாகப்பட்டினம் மாவட்டம்தான். அப்போது அதன் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் தாயுமானவன் எங்கள் நண்பர் என்பதால் எங்கள் கிளை மன்றத்தின் தலைவராக இருந்த சபா.ரவியை ஒன்றியத் தலைவராக நியமிக்கும்படி அன்பாக(கொஞ்சம் மிரட்டியும்) பதவியை வாங்கிக் கொண்டோம்.
ரஜினி படங்களின் முதல் ஷோ டிக்கெட் எங்களுக்கு கணிசமாக கிடைக்கும் அதனை நாங்கள் ரவியை மிரட்டி வாங்கி அதிக பணத்திற்கு விற்றுத்தான் எங்கள் தண்ணி செலவுகளை சமாளிப்போம். இப்படியாக கையில் காசு இல்லையென்றால் உடனே ஒரு பாட்டுப் போட்டி நடத்துவதாக அறிவிப்போம். ஊரில் இருக்கும் பெரும்பாலான பாடகர்கள் தங்கள் சங்கீதத் திறமையை நிரூபிக்க நான்கைந்து பாடல்கள் வரைக்கும் பாடுவார்கள். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்திவிடு எத்தனை பாடல்களை வேண்டுமானாலும் பாடிக் கொ(ல்ல)ள்ளலாம் என அனுமதித்து விடுவோம். வருமானம் முக்கியம் அல்லவா!.
குறைந்தது இருபது பேருக்காவது பரிசு கொடுப்போம். முதல் பரிசு முதல் கடைசிப் பரிசு வரைக்குமே ஒரே மாதிரியான பரிசுதான். எல்லாமே கட்சித் தலைவர்களின் போட்டோக்கள்தான். பரிசு எதா இருந்தா என்ன? பாடிக் கிடைத்த பரிசு என்பதால் உற்சாகமாக வாங்கிச்சென்று விடுவார்கள். மாற்றுக் கட்சித்தலைவர்களின் படங்களாக இருந்தால் அவர்களுக்குள் மாற்றிக்கொள்வார்கள். என்ன நூறு பேர் பாடினால் பத்து பேர்தான் உருப்படியாக பாடுவார்கள். மற்றவர்களின் நாராசத்தை காமெடியாக எடுத்துக்கொள்வதால் நிகழ்ச்சி களைகட்டும்.
என் நண்பன் ஒருவன் எல்லா பாட்டு போட்டியிலும் குறைந்தது பத்து பாடல்களாவது பாடுவான். ஆனால் ஒரு பாட்டுக்கும் அவனுக்கும் பரிசு கிடைக்காது. அவனிடம் நான் இந்த முறை உனக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன் இருநூறு ரூபாய் வெட்டு என வாங்கிக்கொண்டேன். வாக்கு கொடுத்தபடி நடுவர்களை சரிக்கட்டி சிறப்பு பரிசாக அவனுக்கு ஒரு நடிகையின் படத்தை வாங்கிக்கொடுத்து கொடுக்கச்சொன்னோம். அந்தப் பரிசை அவன் மிகபெருமையாக வாங்கிப்போய் வீட்டில் மாட்டி வைத்து. அவனின் தகப்பனார் அதனை தெருவில் வீசியெறிய, அதற்காக கோபித்துக்கொண்டு ஒரு மாதம் அவன் பாட்டி வீட்டில் தங்கினான். நாங்கள் பரிசாகக் கொடுத்தது படுக்கவர்ச்சியான சில்க் ஸ்மிதாவின் படம்.
நடுவர்கள்தான் பாவம். மேடையில் நாங்கள் உட்கார வைத்திருக்கிறோம் என்கிற சரித்திர பெருமைக்காகவே பொறுப்பாக மதிப்பெண் போட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். எந்த அளவுக்கு பொறுப்பு என்றால், இருவருக்கு ஒரே மதிப்பெண் போட்டு பரிசை யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல், இருவர் பெயரையும் சீட்டெழுதி குலுக்கிப் போட்டு ஒருவருக்கு கொடுத்ததில் மற்றவர் கோபமாகி நடுவர்களுடன் கட்டிப்புரண்டு சண்டையெல்லாம் நடந்திருக்கிறது. பரிசுகள் முதல் மேடை, மைக் செட் வரை ஸ்பான்சர்கள் பிடித்து விடுவதால் லம்பாக வசூல் செய்யும் தொகையை அந்த வாரம் முழுதும் படம் பார்க்கவும் தண்ணி செலவுக்கும் பொதுக்காசாக பயன்படுத்துவோம்.
இப்படியாக வரும் பணம் ஒரு மாதத்திற்குள் கரைந்து விடுவதால் லம்பாக பணம் பன்ன ஏதாவது வழி இருக்கா? என யோசனை செய்தபோது, நாம் ஏன் ஒரு பரிசுக் குலுக்கலை நடத்தக்கூடாது? என ஒரு நண்பன் ஆலோசனை கூறவே, அடடா இது அருமையான யோசனையாச்சே! என ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சரி, பரிசுப்போட்டி வைக்கலாம் என்றால் அதற்கு ஏதாவது காரணம் வேண்டாமா? என காரணத்தைத் தேடி ஆளாளுக்கு மண்டையை குழப்பிக் கொண்டபோது. நம்ம ரஜினி மன்றத்தின் தல ரவி ரஜினியின் பிறந்த நாள் வருது. அதுக்கு போஸ்டர் அடிக்கணும். எல்லாரும் காசு குடுங்க என ஒரு கோரிக்கையை வைத்தான். உடனே எனக்கு ஒரு ஐடியா வந்தது. எப்படியும் போஸ்டர் அடிக்கப் போகிறோம். நாம் ஏன் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பரிசுப்போட்டியை நடத்தகூடாது எனக்கேட்டேன். எல்லோருக்கும் ஐடியா பிடித்துப்போக, உடனே களத்தில் இறங்கிவிட்டோம்.
ஐந்து ரூபாய் டிக்கெட்டுகள் ஐந்தாயிரம் அடித்தோம். முதல் பரிசாக அறை பவுனில் ஒரு ஜோடி தோடுகள். இரண்டாவது பரிசாக கால் பவுனில் ஒரு மோதிரம். மூன்றாம் பரிசாக ஒரு ஹீரோ சைக்கிள் என மொத்தம் இருபத்தி ஐந்து பரிசுகள் என அறிவித்தோம். மொத்த பரிசுத்தொகை மற்றும் செலவுகள் பத்தாயிரத்திற்க்குள் வரும் என கணக்குப் போட்டு. எல்லா டிக்கெட்டுகளும் விற்றால் Rs.25000 கிடைக்கும் அதில் பத்தாயிரம் போனால் மீதிக்காசு மூன்று மாத செலவுக்கு தாராளமாக வரும் என்பதால் அனைவரும் உற்சாகமாக வேலை செய்தோம்.
ரஜினியின் பிறந்த நாள் நெருங்கி வந்து விட்டது. ஆனால் டிக்கெட் விற்பனையோ இரண்டாயிரத்தை தாண்டவில்லை. பரிசுக்கும், செலவுக்குமே காணாதே என எல்லோரும் குழம்பி நிற்க. நான் சில பேருடன் ரகசியமாய் ஒரு திட்டம் போட்டேன். அவர்கள் சம்மதிக்க இருந்த பணத்துக்கு பரிசுபொருட்கள் வாங்கி வந்துவிட்டோம்.
நண்பர்கள் அனைவரும் விழா மேடையில் பரபரப்பாக இயங்க நான், செங்குட்டுவன், அன்பு மாப்பிள்ளை. சத்தி அத்தான் என நால்வர் மட்டும் குலுக்களுக்கான அடிக்கட்டுகளை தனித்தனியாக பிரித்து ஒரு குடத்திற்குள் போடும் வேலையை பார்க்கிறோம் என ஒரு ரகசியமான இடத்திற்கு ஒதுங்கினோம். அங்கு போனவுடன் விற்ற டிக்கெட்டுகள் எல்லாவற்றையும் தூரவைத்து விட்டு, விற்காத டிக்கெட்டுகளின் அடிக்கட்டுகளை மட்டும் குடத்தில் நிரப்பினோம். முதல் பத்து பரிசுகளைத் தவிர மற்ற பரிசுகளின் மொத்த மதிப்பே ஆயிரம் ரூபாயை தாண்டாது என்பதால் பதினொன்றில் இருந்து இருபத்திஐந்து பரிசுகளுக்காக விற்ற அடிக்கட்டில் எங்களுக்கு வேண்டிய ஆட்கள் யார் யாரெல்லாம் வாங்கியிருக்கிறார்கள் என ஒரு லிஸ்ட் எடுத்து அவர்களின் அடிக்கட்டு நம்பர்களை மட்டும் என் உள்ளங்கையில் எழுதிக்கொண்டேன்.
மேடையில் ரஜினிக்கான பிறந்தநாள் வீர வசனங்களை சிறப்பு அழைப்பாளர்கள் பேசிய பிறகு, பரிசுக் குலுக்கல் ஆரம்பமானது. அடிக்கட்டு சீட்டுகள் போடப்பட்ட குடம் வந்ததும், அதனுள் கைவிட்டு நன்றாக கலக்கி ஒவ்வொரு பரிசுக்கும் ஒரு சிறுமி அல்லது சிறுவனை அழைத்து எடுத்து தரச் சொன்னோம். அதில் போடப்பட்டவை அனைத்துமே விற்காத டிக்கெட்டுகள்தான் என்பதால் முதல் பத்து பரிசுகளுக்கும் ஆள் வரவில்லை எனவே நீங்கள் உங்கள் அடிக்கட்டுகளை காட்டி நாளை எங்கள் மன்றத்தில் வாங்கிக்கொள்ளுங்கள் என அறிவித்தோம். பதினொன்றில் இருந்து இருபத்திஐந்து வரைக்குமான பரிசுக்கான சீட்டுகள் எடுக்கப்பட்டபோது அந்த சீட்டுகளின் எண்ணுக்குப் பதில் என் கையில் ரகசியமாய் எழுதி வைத்திருந்த எண்களை அறிவித்ததும் அதற்குரிய பரிசுகளுக்கு ஆள் வந்து பெற்றுக்கொண்டனர்.
அன்று இரவு பரிசுகளை எடுத்துக்கொண்டு எல்லோரும் மன்னார்குடிக்கு கிளம்பினோம். முதல் பத்து பரிசுகளில் சைக்கிளைத் தவிர மற்றவை அனைத்தும் மிகச்சிரியவை மேலும் சைக்கிளுக்கும் அதற்க்கான கடைக்காரரின் கூப்பன் மட்டும்தான் எனவே யாருக்கும் எங்கள் தந்திரம் தெரியவில்லை. மன்றத்தலைவன் ரவிக்கு தெரிந்து எங்கள் தலைவர் பெயரில் இப்படி நடக்க விடமாட்டேன் என சண்டைக்குவரவும். அவனை அவனின் வேறொரு சொந்த விசயத்தை( வேறென்ன பொண்ணுங்க மேட்டர்தான்) வெளியில் சொல்லிவிடுவோம் என மிரட்டி பணியவைத்தோம்.
மன்னார்குடி வந்து பரிசுப்பொருட்களை கடைக்காரர்களிடம் திரும்பக் கொடுத்துவிட்டு( வாங்கும்போதே அந்த கண்டிடனுடன்தான் வாங்கியிருந்தோம்) எல்லோரும் உற்சாக பானம் அருந்திவிட்டு ரோட்டில் நடந்த வரும்போது நான் சிகிரெட் பற்றவைக்கத் தடுமாறவே, நண்பர் எனக்கு நடுச் சாலையில் வைத்து பற்றவைக்க முயற்ச்சி செய்ய, அப்போது சைக்கிளில் வந்த ஒருவர், முட்டாள்களா! ஓரமா நில்லுங்கடா என்றார். அவருக்கு நாங்கள் ஒரு குருப்பாக வந்திருக்க்றோம் எனத்தெரியவில்லை.
நான் எங்களை கவனிக்காது முன்னே சென்றுகொண்டிருந்த நண்பர்களை விசிலடித்து நிறுத்தினேன். இதற்குள் எனக்கு சிகிரெட் பற்றவைத்த நண்பர், சைக்கிளில் வந்தவனை அடிக்க ஆரம்பிக்க, ஓடி வந்த நட்ப்புகளும் சேர்ந்துகொண்டு அவனை துவைத்தெடுத்தோம். அந்த மாதம் முழுதும் சூப்பர் ஸ்டாரால் எங்களுக்கு உற்சாகமாப் போனது.
அதற்கடுத்து பொங்கலுக்கு இன்னொரு பரிசுப்போட்டிக்கு ஏற்ப்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம். முதல் பரிசாக ஐந்து லிட்டர் பால் கறக்கும் பசுமாடு. இரண்டாம் பரிசாக மூன்று லிட்டர் பால் கறக்கும் பசுமாடு, மூன்றிலிருந்து பத்து பரிசுகள் பெண் ஆடுகள். டிக்கெட் விலை பத்து ரூபாய், எனத் தேர்வு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யத்துவங்கியபோது அனைவரும் ஒரு அடிதடி வழக்கில் சிக்கினோம்..
சேட்டைகள் தொடரும் ...
11 கருத்துகள்:
ரொம்பவே சுவாரசியமாக இருக்கு..:-)
இது போலவே சுவரஸியமாக தொடரட்டும்.......
//சேட்டைகள் தொடரும் ...//
இதை இத்தனை நாள் கவனிக்காம இருந்திருக்கிறேனே? :-)
நாங்களும் ரசிகர்மன்றம் வச்சு விட்டமின் ’எம்’ நிறையா சாப்பிட்டிருக்கோம். அதுவும் புதுசா ஆரம்பிச்சா, நல்ல மகசூல்! :-))
அப்பவே ஜீப்புல ஏத்தியாச்சா:))
"நான் கமலின் ரசிகன் என்றாலும்"
: (
பாட்டுப்போட்டியும் சில்க் ஸ்மிதாவும் சிரிச்சு .....!
நல்லாருக்குண்ணே...தொடரட்டும் :)
அட அட அட நடத்துங்க தலைவரே
ஒரு கைதியின் டைரி ;-)
ஏம்ப்பா, கேஆர்பி ரசிகர் மன்றம் ஆரமிச்சி நாமளும் கல்லா கட்டுவமா? எத்தினி பேரு வர்றீங்க?
//ஏம்ப்பா, கேஆர்பி ரசிகர் மன்றம் ஆரமிச்சி நாமளும் கல்லா கட்டுவமா? எத்தினி பேரு வர்றீங்க?//
அப்ப ஏற்கனவே இல்லையா?
கருத்துரையிடுக