28 மார்., 2011

திருவண்ணாமலை ...


எனக்கு கடவுள்கள் மேல் நம்பிக்கை கிடையாது. மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க முடியாத காலத்தில் கடவுள்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். கடவுள்களைப் பற்றிய எனது பார்வை எப்போதும் இப்படிதான் இருக்கும். லாஜிக் இல்லாத எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் கோவில்களில் கடவுள் இல்லை என்று புரிந்துகொண்டபின் நம்மை இயக்கும் அந்த Super Nature மேல் ஓர் ஆர்வம் வந்து அதற்காக ஆன்மீகத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். ஆன்மீகத்திலும் ஆயிரம் குருமார்கள் ஆயிரக்கணக்கான வழிமுறைகள்.

ஒரு வழியாக அலசி ஆராய்ந்ததில் "வாழ்க வளமுடன்" வேதாத்ரி மகரிஷியின் கொள்கைகள் ஏற்புடையதாக இருக்க அகத்தாய்வு மூன்றாம் நிலை வரை பயின்றேன். அதே காலகட்டத்தில் ஓஷோவை படிக்கவும் ஆரம்பித்தேன், அது அப்படியே ஜே.கே வரை பயணித்தது. இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் சென்னை ஹிக்கின் பாதம்ஸில் ஒரு புத்தகத்தை காண நேரிட்டது. அதன் பின்னட்டையில் இப்படி எழுதி இருந்தது "எனக்கு சுடும் அதிகாரம் இருந்தால், நான் முதலில் சுடுவது ஆசிரியர்களாய்த்தான் இருக்கும்’” என. அதனைப் பார்த்ததும் உடனே வாங்கிப்படித்தேன். அந்தப்புத்தகம் என்னுள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. அவர் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவரின் புத்தகங்கள் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது.

ஆனாலும் நான் அடிக்கடி திருவண்ணாமலை செல்லும் பழக்கம், நான் இப்போது தீவிர கடவுள் மறுப்பாளனாக இருக்கும்போதும் தொடர்கிறது. எப்போதும் நான் கிரிவலம் சென்றதில்லை. பொதுவாகவே பழமை வாய்ந்த கோவில்களாக இருந்தால். அதனுள் சென்று முழுவதுமாக சுற்றிப்பார்த்துவிட்டுதான் வருவேன். ஆனால் திருவண்ணாமலை நான் தனியாக சென்றால் மலையில் ஏறிவிட்டு வந்துவிடுவேன். நண்பர்களுடன் சென்றால் மட்டுமே கோவிலுக்குள் சென்று வருவேன்.



புதிய நண்பர்களை திருவண்ணாமலை அழைத்துச்சென்றால் போகும் வழியிலேயே ஒருமுறை செஞ்சிக்கோட்டையில் ஏறச்சொல்லி பழகிக்கொள்ளச்சொல்வேன். அது மறுநாள் காலை திருவண்ணாமலை மலையில் ஏறுவதற்கு உதவியாக இருக்கும். செஞ்சிக்கோட்டை போன்ற மிகச்சிறந்த புரதான சின்னங்களை நமது அரசு சரியாக பராமரிக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. பெரும்பாலும் காதலர்களும், விலைமாதர்களும் ஒதுங்கும் இடமாகத்தான் அது இருக்கிறது. இலவசங்களால் மக்களை வளைக்கும் அரசுக்கு எது போனால் என்ன கவலை.

திருவண்ணாமலை மலை என்பது முறையான பாதைகள் இல்லாத மலை. பக்கத்தில் இருக்கும் பர்வத மலையில் குறிப்பிட்ட தூரம் வரைக்கும் படிக்கட்டுகள் அமைத்து இருப்பார்கள். அதற்குமேல் சிறிது தூரம் பாறைகள் வழியில் கடந்தால், அதன்பிறகு செங்குத்தான மலையும், ஆபத்தான வளைவுகளும் இருக்கும் என்றாலும் பர்வதமலையை பொறுத்தவரைக்கும் ஆட்கள் தொடர்ச்சியாக ஏறவும் இறங்கவுமாக இருப்பார்கள். மலை மீது ஒரு மண்டபம் இருக்கிறது. வழி நெடுக பெட்டிக்கடைகள் இருக்கிறது. அதனால் ஓய்வு எடுத்துக்கொண்டு மேலேற முடியும். ஆனால் திருவண்ணாமலையைப் பொறுத்தவரை கார்த்திகை தீபம் நாட்களில் மட்டுமே ஆட்கள் மிகுதியாக இருப்பார்கள். மற்ற நாட்களில் தீவிரமான பக்தர்களைத்தவிர வேறு யாரும் மலையேற மாட்டார்கள். அதனால் முன் அனுபவம் இருக்கும் நபர்களுடனோ அல்லது மலையடிவாரத்தில் இருக்கும் நபர்களுடன் ஒருமுறை ஏறினால், ஒரு சிறந்த மலையேற்ற அனுபவத்தை உங்களால் பெற முடியும்.

ஒருமுறை நாங்கள் ஐந்து நண்பர்கள் இப்படி மலையின் உச்சியை அடைந்தபோது, ஒரு நண்பன் இப்ப ஒரு டீ சாப்பிட்டா நல்லாருக்கும் என சொன்னான். நாங்கள் அவனை கிண்டல் செய்தோம். ஆனால் சிறிது நேரத்தில் மேலேறி வந்த உள்ளூர்வாசி எங்களுக்கு அருமையான சுக்கு காப்பி வைத்துத்தந்தார். அவர் அங்கு ஏற்கனவே தவமிருந்த சுவாமி நாராயண குருவின் சீடராம். தினசரி மலையில் ஏறிவந்து அவர் தவம் செய்த இடத்தை சுத்தம் செய்து வழிபாட்டு செல்வாராம். பிறகு அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்..

கடவுள் என்கிற விசயத்தையும் தாண்டி சில ஆன்மிகத்தலங்கள் நமக்கு சில மாற்று அனுபவங்களை தரவே செய்கிறது..

23 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்லதொரு மிகவும் அனுவபூர்வமான பகிர்வுக்கு என் நன்றிகள்.

//கடவுள் என்கிற விசயத்தையும் தாண்டி சில ஆன்மிகத்தலங்கள் நமக்கு சில மாற்று அனுபவங்களை தரவே செய்கிறது..//

மிக்க மகிழ்ச்சி. தரப்பட்டுள்ள மாற்று அனுபவங்கள் என்ற முதல்படியில் கால் வைத்துள்ளீர்கள். கடவுளை உணரத்தான் முடியும். ஆனால் காண முடியாது. அடுத்தடுத்த இதுபோன்ற நிகழ்வுகள் உங்களுக்கும் சில உண்மைகளை With or Without LOGIC எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

நிகழ்காலத்தில்... சொன்னது…

வேதாத்திரி மகானின் வழி கடவுள் வழிபாட்டில் உள்ள இரகசியங்களை நமக்கு உணர்த்தும். கட-உள் என்பதையும் விளக்கும்.

மலையேற்ற அனுபவம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. திருவண்ணாமலை மலையேறுவது எப்போது வாய்க்கும் என காத்திருக்கும்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு. படங்களுடன் செய்திகள் நிறைந்திருக்கிறது.
நீங்கள் கடவுளை கும்பிட வேண்டும் என்பதில்லை. கலையை இயற்கையை ரசிக்கலாம்.
நன்றி.

Chitra சொன்னது…

செஞ்சிக்கோட்டை போன்ற மிகச்சிறந்த புரதான சின்னங்களை நமது அரசு சரியாக பராமரிக்கவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. பெரும்பாலும் காதலர்களும், விலைமாதர்களும் ஒதுங்கும் இடமாகத்தான் அது இருக்கிறது. இலவசங்களால் மக்களை வளைக்கும் அரசுக்கு எது போனால் என்ன கவலை.


..... ஒரு ஐரோப்பிய மனிதரை சந்தித்து பேசி கொண்டு இருந்த பொழுது, அவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. "ஒரு கலாச்சாரத்தை, அதன் மக்கள் எவ்வளவு தூரம் மதித்து ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, அவர்கள் தங்கள் வரலாற்றை பெருமையாய் நினைப்பதிலும், வரலாற்று சின்னங்களை பேணி காப்பதிலும் தெரிந்து கொள்ளலாம்"

iniyavan சொன்னது…

தலைவரே,

எப்படியோ ஆன்மீகத்துக்குள்ள நுழைஞ்சிட்டீங்கள்ள? சந்தோசம்.

அப்படி வாங்க வழிக்கு.

தமிழ் உதயம் சொன்னது…

மிக அற்புதமாக சொல்லி இருக்கிறிர்கள்.

CS. Mohan Kumar சொன்னது…

நல்ல பதிவு செந்தில்

Madhavan Srinivasagopalan சொன்னது…

கடவுளை காண்பது முடியுமா ?-- ம்ம்ம் பதில் சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லைதான்..

ஆனால்.. ஆன்மிகம் என்பது மக்களை நல்ல வழியில் அழைத்துச் செல்லவே.. -- மக்களின் மனதில் மகிழ்வு பொங்கவே.

எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

படங்களுடன் மிக அற்புதமாக சொல்லி இருக்கிறிர்கள்.

vinthaimanithan சொன்னது…

:))))))))))))

மல மல மல மல்லேய் மல்லேய்
மல்லேய் மருதமல்லேய்!

பெயரில்லா சொன்னது…

திருவண்ணாமலை பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

எனது கவிதைகள்... சொன்னது…

எங்க ஊரைப் பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி.

அனுபவபூர்வமான பதிவு,

உண்மைவிரும்பி.
மும்பை.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்களின் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துகிறேன்....

கடவுள் என்று ஒன்றை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் உலகம் அத்தனையும் கடவுளின் ரூபங்களாக கண்டால் உலகமே சொர்கம்தான்...

settaikkaran சொன்னது…

அழிந்து வருகிற பல பழமைச்சின்னங்களைப் பாதுக்காக்க, சில தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வருகிறபோதும், அரசின் சிவப்பு நாடா காரணமாக அவர்களது முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதாகவும் அண்மையில் ஒரு ஆர்வலர் சொன்னார். அந்த ஆதங்கத்தை இங்கும் காண்கிறேன்.

புகைப்படங்களும், இடுகையும் அருமை!

தமிழ்க்காதலன் சொன்னது…

அருமையான பதிவு செந்தில், இதில் மனதால் பேசிய விதம் அருமை. அனுபவங்கள் மனிதனை நிறைய யோசிக்கத் தூண்டுகின்றன. சிலவற்றை சொல்லிப் புரிவதை விட, அனுபவிக்கும் போதுதான் சரியாக உணர முடியும்.

மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் இயற்கையின் ஆனந்தம் அழகாய் இருக்கும். அதை இறை என்றாலும் சரி, இயற்கை என்றாலும் சரி,

வாழ்வின் ஆதாரங்கள் தன்னை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

நன்றி.

ஹேமா சொன்னது…

படங்களோடு உங்கள் எண்ணங்களோடு ஒத்துப்போகிறேன்.என்னதான் கடவுளை நம்பமாட்டோம் என்று சொன்னாலும் சில நேரங்களில் மனம் பேசுகிறது !

போளூர் தயாநிதி சொன்னது…

எங்க ஊரைப் பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி.

Nagasubramanian சொன்னது…

திருவண்ணாமலை எனக்கு பிடித்த வழிபாட்டு இடங்களில் ஒன்று. இன்னும் மலை ஏற்றம் போனதில்லை. விரைவில் செல்ல முடிவு செய்துள்ளேன்.

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

இறைவன் படைத்த இயற்கை மனிதன் படைத்த காமராவில் இன்னும் அழகாகத் தெரிகிறது. ஆன்மீக வாதிகள் அடிக்க வரும் முன் ஓடி விடுகிறேன்

rajan சொன்னது…

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை , நம் ஆழ்மனம் தான் கடவுள் என்பது என் தனிப்பட்ட கருத்து ,நாம் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று ஆழ்மனதில் தினமும் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்கும் , அதை போல அது நடத்து முடித்தது போல காட்சிகளாக மனகணில் பதிவு செய்தால் அது கண்டிப்பாக நடக்கும் , ஆனால் இந்த கலை எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது , ஆகையால் கடவுள் விழிபாடு வந்து இருக்கலாம் , சாமி கும்பிடுபோது அனைவரும் கண்களை முடிகொண்டு தனக்கு நடக்கவேண்டிய விஷியத்தை மனதுக்குள் வேண்டிகொள்வார்கள் , அது அழ்மனிதில் பதியும் , முயற்சி இருதால் நிச்சியம் அது நடக்கும் .அதைப்போல பிரச்சனை உள்ள ஒரு மனிதன் தன் பிரச்சனைகளை யாரிடமாவது பகிர்த்து கொண்டால் அவனுக்கு மன அறுதல் கிடைக்கும் , சிலர் யாரிடம் பகிர்த்து கொள்ள மாட்டார்கள் , அது போல உள்ளவர்கள் மனதுக்குள கடவுள் முன்பு பகிர்த்து கொள்ளும் போது மன அழுத்தம் குறையும் .
இது ஒரு உளவியல் சார்த்த விஷியம் . தஞ்சை பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு ஆகிவிட்டது ஆனால் இன்னும் நம்மால் அது அப்படி கட்டப்பட்டது என்று நிச்சியமாக சொல்ல முடியவில்லை , நம்மை விட அறிவில் சிறதவர்கள் நம் முனோர்கள் ஆகையால் கோயில் கட்ட கடவுள் விழிப்பட நிச்சியம் காரணம் இருக்கும் , அது இதுவாக இருக்கலாம் என்பது என் கருத்து. [ இது என் சொந்த கருத்து ]

நன்றி
ராஜன் .சென்னை .

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>எனக்கு கடவுள்கள் மேல் நம்பிக்கை கிடையாது. மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க முடியாத காலத்தில் கடவுள்கள் மீது எப்படி நம்பிக்கை வைக்க முடியும். கடவுள்களைப் பற்றிய எனது பார்வை எப்போதும் இப்படிதான் இருக்கும். லாஜிக் இல்லாத எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

நீங்க நம்ம கட்சி

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

திருவண்ணாமலை சிவனால் மாற்றம் வருமோ,அல்லது கிரிவலம் சுற்றி வந்தால் மாற்றம் வருமோ தெரியல,ஆனால் எதோ ஒரு மனதிருப்தியை அங்கு உணர்ந்திருக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

திருவண்ணாமலை சிவனால் மாற்றம் வருமோ,அல்லது கிரிவலம் சுற்றி வந்தால் மாற்றம் வருமோ தெரியல,ஆனால் எதோ ஒரு மனதிருப்தியை அங்கு உணர்ந்திருக்கிறேன்.