அறிமுகமற்ற முகங்களுடன்
தொடங்கியது நம் நட்பு
நலம் விசாரித்தல்
கொடுக்கல் வாங்கலென
விரிவான பின்னும்
முகங்கள் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தன..
குடும்பத்தின் அதீத சுமைகளை
தோள் மாற்றி சுமந்த கணங்களில்
நாம் ஒருவருள் ஒருவர் இடமாறினோம்
வாரம்
மாதம்
வருடமென
வாய்ப்பளிக்காத
நாட்கள் கடந்தன..
இத்தனை எளிய
இணைய உலகில்
உன் முகம் காட்ட
நீ விரும்பவில்லை
அல்லது
துணியவில்லை..
நேற்று முன்னிரவில்
என் செல்பேசிவழி வந்தாய் நீ
சென்னைக்கு வந்திருக்கிறேன்
ரோகினி லாட்ஜ்
அறை எண் 305
என்றாய்..
ரோகிணியின்
305
கதவை தட்டியதும்
திறந்த நீ சொன்னாய்
உன் காலணிகளையும்
முகத்தையும்
கழட்டி வைத்துவிட்டு
வா! உரையாடலாம்..