27 ஏப்., 2012

வேறொருத்தன் கடுதாசி...


நான்
ஒன்பதாம் வகுப்பு 'ஏ' பிரிவு
அதே வகுப்பில் 'சி' பிரிவில்
பிரியா..
பார்க்க வசீகரமாக இருப்பாள்
பிரியா!


எல்லோருக்கும் அவள்மேல்
ஒரு கண்..
எனக்கு ஒரு படி மேலேறி
காதல்..


பத்தாம் வகுப்பில்
என் பிரிவில் வந்தாள்
பிரியா..
என்னுடன் படிக்கும்
ராஜாராமனுக்கும் அவளுக்கும்தான்
படிப்பில் போட்டி
முதல் இடத்துக்கு
முட்டிக்கொள்வார்கள் இருவருமே..


நான் படிப்பில் சாதாரணன்
விளையாட்டில் மெடல்கள்
குவிப்பவன்.


அவள் ஆண்டுவிழாக்களின்
கதாநாயகி...
பாரதமாதா வேஷத்தில்
பார்த்த கண்ணும் பூத்துப் போகும்


ராஜாராமனுக்கும்
அவள் மேல் காதல் வர
கடிதம் தந்து
தூதனுப்பினான் என்னை..


படிக்காமலே
கிழித்தெறிந்து அறைந்து போனள்
பிரியா...
காலங்கள் சென்றும்
கரையாமல் கண்ணுக்குள்...


ஆடிமாசத்து அம்மன்கொடைக்கு
பொண்டாட்டி புள்ளைங்களோடு
நானும்..
புருஷனோடு அவளும்...


குசலம் விசாரிக்கத்தான்
அவள் வீட்டுக்கு நான்...
தேநீர், பிஸ்கட்டுக்குப் பின்


"ஏன் பிரியா அன்னிக்கு அறைஞ்சே?"


அக்கம்பக்கம் பார்த்து
அருகில் வந்தவள்
முன்னுச்சி மயிர் கலைத்து
மெதுவாய்ச் சொன்னாள்


"காதலிக்கும் பெண்ணுக்கே
வேறொருத்தன் கடுதாசி...
சிரிச்சுக்கிட்டே நீட்ட
வெக்கமாயில்லையாடா உனக்கு?"

13 ஏப்., 2012

காதலாகி.. கசிந்துருகி.. கண்ணீர் மல்கி ...


காத்திருக்கும் யுகங்களை 
வந்து நிறைக்கும் 
பெருமழையென 
நீ கெஞ்சும் 
கொஞ்சல் நிமிடங்களுக்காய் 
யுகம் 
யுகமாய் 
காத்திருக்கலாம்..

அப்படியே 
அள்ளித் தின்னலாம் போல 
அவ்வளவு அழகு 
அவ்வளவு காதல் 
கோபத்தின் விளிம்பில் 
விடைக்கும் உனது மூக்கும் 
மன்னிக்க நினைக்கும் உனது கண்களும் 
மூச்சு வாங்கும் உன் மார்புகளும் 
மரபுகளை கடக்க துடிக்கும் மனதை 
காதலே ஆள்கிறது..

சமயங்களில் 
கவனிக்காமல் 
கடந்து போய்விடும் 
உன்னை 
என்னை 
இந்தக் காதல் 
வெகுவாய்த்தான் 
அலைகழிக்கிறது..

ஒரு முத்தம் 
இதயத்தை நிறுத்தி 
இன்னொன்று உயிர்ப்பிக்கும் 
அதிசயம் 
காதலால் மட்டுமே சாத்தியப்படுகிறது..

தனித்த 
இரவின் பயணங்களில் 
வழித்துணையாய் வரும் 
பிறை நிலாவென 
கூடவே வருகிறது 
உன் காதலும்..

எல்லாக் காதலும் 
கவிதையாய் ஆரம்பிக்கிறது 
பாடலை பரிசளிக்கிறது 
இலக்கியமாய் மாறி 
பின் 
இதிகாசமாகிறது
அது 
தோற்றாலும் 
ஜெயித்தாலும்.. 

11 ஏப்., 2012

சாத்தானே கடவுளானான்...


கடவுள் ஓய்வெடுக்க நினைத்த கணத்தில் 
சாத்தான் தன் வேலையைத் துவங்கினான் 
முதலில் மதங்களை படைக்க எண்ணினான் 
ஒவ்வொரு மதமாக 
ஒவ்வொரு விதமாக 
மதங்கள் 
தூதர்கள் 
கடவுள்கள் 
என 
சாத்தான் தன் வேலையை திறம்பட 
முடித்திருந்தபோது 
கடவுள் கண் விழித்தார் 
உலகம் நொடியில் மாறியிருக்க 
சாத்தான் அழிக்க இயலாத அளவுக்கு 
பல்கி பெருகியிருப்பதை உணர்ந்தார் 
பூகம்பம் 
சுனாமி 
பெரும்போர் 
எல்லாம் தொடர்ந்தது 
மனிதனே கடவுளாக அவதாரம் எடுத்தான் 
இனி தன்னால் எதுவும் முடியாதென 
பெருங்குரலெடுத்து அழுத நேரத்தில் 
கோடானுகோடி சந்ததிகளில் 
ஒன்று 
தன்னை நித்யானந்தா என அறிவித்தது..