|
Courtesy by :Gappingvoid |
கடந்துபோன அத்தனை தருணங்களிலும் ஏதோ ஒரு வடிவில் வாசனையாக விரும்பத்தக்க
அல்லது வெறுத்து ஒதுக்க நம்மிடம் ஆயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. விபரம் அறிந்த வயது
முதலாகவே அதீதமாக நட்பின் வாசனைகள் இவ்வாறு என்னை தோண்டி துரத்தி, கொண்டாடி, கொன்று
மகிழ்ந்திருக்கின்றன. அறியும் அப்பருவத்தில் முதன்முதலாய் தொடங்கி இன்றுவரை என்னுடன்
ஒரு வாசனையாக வரும் நண்பனும் மாப்பிளையுமான ஓ.ஆர்.பி. ராஜாவும். அவனைக்காட்டிலும் இன்னும்
அதீத நெருக்கத்தையும் அன்பையும் எப்போதும் ஒளித்துவைத்தபடி ஒரு சிறிய புன்னகை கொண்டு
என் சிரமங்களை விசிறிவிடும் அவனது சித்தப்பாவும் நான் எப்போதும் பாசமாக அழைத்து மகிழும்
சத்தியமூர்த்தி என்ற முழுப்பெயர் தொலைத்து யாவருக்கும் சத்தியான எனது சத்தி அத்தான்.
இப்படியாக மிக நெருக்கமாக நமது அந்தரங்கங்களை அறிந்த மனிதர்கள் வாழ்வின் பாதைகளில்
அடங்காத நினைவுகளோடு பயணிக்க வைப்பவர்கள் குறிஞ்சிப்பூக்களென சிலரே.
வியாபார மாயவலைக்குள் தந்திரமான சிலரால் நான் சிக்கிக்கொண்டபோது
அதிலிருந்து மீளும் முயற்சியில் மேலும், மேலும் சிக்கி ஒரு கட்டத்தில் என் தற்கொலைக்கான
கடைசி நிமிடம் வரை வந்திருந்தேன். மனைவி, மகன்கள், கடன் கொடுத்து காப்பாற்ற முயற்சித்த
நண்பர்களின் அன்பு என விடாப்பிடியாக மீண்டும், மீண்டும் வழிதவறி விழுந்த கிணற்றுத்
தவளையாய் இலக்கற்ற ஒரு பயணம் நோக்கி தொடர்ந்து வட்டமடித்தேன். ஒரு வழிப்பயணத்தில் வந்து
அறிமுகமான வயதில் சிறியோனாய் இருந்தும் அறிவில் பெரியோனாய் இருக்கும் வசந்த் எனக்கு
வியாபாரம் தொடர்பான அத்தனை புத்தகங்களையும் அறிமுகம் செய்து கிணற்றில் இருந்து பெரும்
கடலுக்குள் தூக்கிப்போட்டான்.
ஒரு பக்கம் கடன், மறுபக்கம் குடும்பம், இவ்விரண்டுக்கும் சேர்த்த
எதிர்காலம் என வாழ்க்கை கடலின் தீராத திசைகளால் மென்மேலும் அழுத்தம் கூடிப்போன தருணத்தில்,
காப்பாற்றிக்கொண்டிருக்கிறான் என நினைத்த நண்பன் இன்னுமொரு பிரச்சினைக்குள் தள்ளிவிட்டுப்போனான்.
இன்னும் மேலதிக நெருக்கடிகள் கூடிப்போன தருணத்தில் இருந்த சொற்ப நட்பும், உறவும் விலகி
மீண்டு வரமுடியாத ஆழத்துக்குள் போயிருந்தபோது கடந்த மூன்றரை வருடங்களாக ஒவ்வொரு இரவிலும்
எனக்கு ஆறுதல் சொல்லி தன் வெற்றியோடு என் வெற்றிக்கும் பாடுபட்ட கிடைத்தற்கரிய கேபிள்
சங்கர் எனும் ஆளுமை. அவர் செல்லும் இடமெல்லாம் எனையும் கூட்டிச்சென்று என்னை சஞ்சலத்தில்
இருந்து மீட்டெடுத்தார்.
இப்படியான நெருக்கடிகளில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள்
தொடர்ச்சியாக பணம் அனுப்பி எனது கவுரவத்தை காப்பாற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் சொந்த
ஊருக்கே திரும்பிப்போக முடிவெடுத்தபோது எனது கடனில் பெரும்பகுதியை ஏற்றுக்கொண்டிருக்கும்
தொழிலதிபரும், நண்பருமான முத்து என்னை விடாப்பிடியாக சென்னையில் தக்கவைக்க அத்தனை உதவிகளையும்
செய்து தருவதாக வாக்களித்து தடுத்து நிறுத்தினார்.
மூன்றரை ஆண்டுகளில் ஏகப்பட்ட படிப்பினைகள்,
ஏகப்பட்ட வியாபார திட்டங்கள் என நான் தொடர்ந்து என்னை செதுக்கி வந்ததில் பங்குதாரர்களை
எதிர்பார்த்து எதிர்பார்த்து வெறுத்துப்போய். முதலீட்டார்களின் தாமதம் என் மனநிலையோடு
பிள்ளைகளின் கல்விக்கான பொருளாதார நிலையையும் கலைக்கத் துவங்கிவிட்டது. எனவே சில காரனங்களுக்காக
துனிச்சலாக தனியனாக கிடைத்த பொருளாதார உதவிகளையும், வசந்த் செய்துகொடுத்த இணையப் பக்கம்
துணையோடும் வரும் சித்திரை முதல் நாள் முதல் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றை துவக்க
இருக்கிறேன்.
துவங்குவதற்கு முன்பாகவே தொலைபேசியில் அழைத்து ஆதரவு கொடுத்த
அண்ணன் பாஸ்டன் ஸ்ரீராம் அவர்களை இத்தருணதில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
நல்ல முதலீட்டாளர்களுக்காக முயற்சி மேற்கொண்ட நரேனுக்கும் எனது
நன்றிகள்.
இந்த நிறுவனம் கண்டிப்பாக ஜெயிக்கும் என உற்சாகப்படுத்தி துவங்கவைத்த
கேபிள் சங்கருக்கு எனது வந்தனங்கள்.
எனது அத்தனை தொந்தரவுகளையும் பொருத்துக்கொண்ட தம்பிகள் வசந்த்,
செய்யது இருவருக்கும் எனது வந்தனங்கள்.
அலுவலகம் அமைக்க எல்லா உதவிகளையும் செய்வதாக சொல்லி தெம்பூட்டிய
தம்பி விந்தைமனிதன் ராஜாராமனுக்கு எனது நன்றிகள்.
தோழி கவுசல்யா, நண்பர் பழனி, நண்பர் ராஜமாணிக்கம், நண்பர் மணிகண்டன்,
தம்பி சிவக்குமார், தம்பி சரவணன், தம்பி நந்தா, தம்பி ரமேஷ் ஆகியோருக்கு அன்பும்,நெகிழ்ச்சியும்..
கடந்த மூன்றரை ஆண்டுகளாக இணையவழி கிடைத்த நட்புகளே என்னை செம்மைப்படுத்தி
வந்திருக்கின்றன. எனவே உங்கள் அன்பும், ஆசிர்வாதமும் எப்போதும் எனக்கு உண்டு எனத்தெரியும்
என்பதால் எவ்வித விழாவும் இல்லாமல் நேரடியாக இதனையே அறிவிப்பாகவும் ஆரம்பமாகவும் உங்கள்முன்
வைக்கிறேன்.
வாழ்வின் இன்னொரு தருணம் 14.04.2013 முதல் ஒரு புதிய வாசனையை
நிரப்பும் என்ற நம்பிக்கையோடு….