13 ஜூன், 2013

இரவுகள்...

சுவர் ஓவியம் @ Pinang Malaysia
உலகில் பெரும்பாலோருக்கு இரவு என்பது ஓய்வுக்கான நேரம். ஆனால் என்போன்ற தனிமை விரும்பிகளுக்கு அது வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கைக்கு எதிராகவே  நீ எப்போதும் இருக்கிறாய் என்பான் நண்பன். அவனுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அது அவனை ஒரு நிறுவனத்தின் மேலாளராக உயர்த்த மட்டுமே உதவியது. தனிமை மிகப்பெரிய வரம், இரவும் அப்படித்தான். இரண்டும் ஒரு சேர கிடைத்தால் நாம் இறைவனாய் மாறலாம்.

ஊரில் இருந்தபோது காதலித்தவள் அகாலமரணம் அடைந்த இக்கட்டான தருணத்தில் நள்ளிரவில் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு செல்வதுண்டு என்னைப்போலவே தனித்திருக்கும் பேய்கள் இருந்தால் அதனுடன் கொஞ்சம் அளவளாவி வரலாமே என்று தோனும். ஆனால் அப்போது பேய்களும் என்னை புறக்கணித்தன. மெல்லிய மதுவின் போதையில் என் தனித்த அழுகை வானுலகு சென்ற என் காதலியை ஒருபோதும் எட்டியதில்லை. தற்கொலை செய்து பார்க்கலாமா? எனும் ஆர்வம் மேலோங்கிய காலம் அது. அப்போதே போயிருக்கலாம் இத்தனை அவலங்களை கடந்து வாழும் இப்பேய் வாழ்வுக்கு அது உத்தமம் என இப்போது புரிகிறது. ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதையைப்போல் வாழ்வென்னும் அடர்ந்த இருள்படர்ந்த இக்காட்டை கடந்து வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு. சமீபத்தில் ஊருக்கு போனபோது அந்த சுடுகாட்டை சுற்றி நிறைய வீடுகள் இருந்தன.

சிங்கப்பூரில் இருந்தபோதும் தொடர்ந்து இரவு நேர வேலைகளை மட்டுமே விரும்பி செய்ததுண்டு. ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் பேய் இருப்பதாக சொல்லி இரவு நேர வேலைக்கு யாரும் வருவதில்லை என்றபோது நான் அங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக  தனியாளாக இரவு வேலை பார்ப்பேன். ஆனால் அங்கும் நானும், அப்பேயும் எங்கள் தனிமைக்குள் சந்தோசமாகவே இருந்தோம்.

எங்கு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் நண்பர்கள் இல்லாத தனித்த பயணங்களையே விரும்புவேன். எப்போதும் சகபயணியிடம் பேச விரும்பாத ஆள் நான். ஆனால் எல்லா பயணங்களும் அப்படி அமைந்து விடாது. சில நபர்கள் நம்மை வறுத்தெடுப்பார்கள். அப்படியான சில பயணங்களில் நான் வழியில் இறங்கி வேறு வண்டி மாறுவேன். சில சமயங்களில் மொத்த இரவையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் கழித்ததுண்டு. இரவு நேர பேரூந்து நிலையங்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவக்களம். பலதரப்பட்ட பெரும்பாலும் ஏழ்மை பாரம் சுமக்கும் உன்னதமான மனிதர்களை சந்திக்கலாம். இங்கிருக்கும் இரவு நேர டீக்கடைகளில் விடிய விடிய இளையராஜா இசைக்க ஐந்தாறு டீயும் மனதிற்கு நெருக்கமான விலாசங்கள் தேவைப்படாத சில மனிதர்களும் வாழ்வில் எல்லோருக்கும் கிட்டாத ஒன்று.


சில வருடங்கள் முன்பு வரைக்கும் இரவு நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை செய்திருக்கிறேன். இரவை தன் சிறிய வெளிச்சங்களால் விரட்டிப்பாயும் வாகனங்கள். சில்லிடும் காற்று. வழியில் நிறுத்தும் காவலர்கள். சம்யங்களில் முகம் தெரியாத நபர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வழிநெடுக ஏதும் பேசாமல் கடைசியில் மனம் நிறைய நன்றிகளுடன் அவர்கள் விடைபெறும் தருணம். இவற்றை வயது காரணமாக இப்போது அனுபவிக்க முடிவதில்லை.

சென்ற மாதம் அப்பா தன் இறுதி நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அவ்விரவில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் இறந்து கொண்டிருந்தார். விடியற்காலை அவரின் மூச்சு முற்றிலும் அடங்கியபோது ஒரு தனித்த அழுகுரல் மெல்ல மெல்ல எங்கள் வீட்டை பலரின் அழுகுரல்களுடன் அந்நாள் முழுதும் நிரப்பின. தன் வாழ்வை தான் விரும்பியபடி அவர் வாழ்ந்து முடித்திருப்பாரா என்பதுதான் என் அப்போதைய கேள்வியாக இருந்தது.


சில நெருங்கிய உறவுகளின் இறுதி நேரத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். இருபதாவது வயதில் மாமா ஒருவர் தலையில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் 21 நாட்கள் கோமாவில் இருந்தார். அவரின் இறுதி நாளில் நான் மட்டுமே உடன் இருந்தேன். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவர் நினைவு திரும்பினார். அவரின் விழிகள் என்னிடம் எதுவோ சொல்ல ஆசைப்பட்டன. ஆனால் கண்ணீர் வழியும் அவரின் விழிகளில் என்னால் எதுவுமே படிக்க முடியவில்லை. இரவு 8 மணிக்கு அவர் இறந்து போனார். மறுநாள் காலை அவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இரவுகள் எப்போதும் ஆசானாகவே இருந்து என்னை வழிநடத்தட்டும்.

4 கருத்துகள்:

கவிதை வானம் சொன்னது…

நல்ல திகுலுடன் அனுபவப் பதிவு அருமை

ராஜி சொன்னது…

ஒரு அஸ்தமந்த்திற்கு பின் ஒரு விடியலா?!

rajamelaiyur சொன்னது…

உங்களுக்கும பேய்க்கும் கெமிஸ்ட்ரி சரியா வரல போல ????

சுரேகா சொன்னது…

என்ன சொல்றது....?

அப்பட்டமான உண்மை!

இரவு, தனிமை, எண்ணம்
அப்படியே ஒத்துப்போகுதே?

என் பயணங்களை வைத்து பல கதைகள் செதுக்கியிருக்கிறேன்.

தனிமை கொடுத்த தைரியத்தில் பல பேய்களுக்கு பேயாய் இருந்திருக்கிறேன்.

நண்பன் என்று பெருமைப்படுகிறேன்.

தூள் தலைவரே!