25 ஜூலை, 2013

தனிமையின் இசை…

Photo : KRP Senthil
ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம் அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தது. தனிமை எனக்கு மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம் என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளை கொண்டாடுபவன் நான்.

வெளியே பெய்யும் மழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது. இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம். அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம் என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன். மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடானான உறவில் இருந்து பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையை பிடிக்கும் உத்வேகத்தை அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடி அக்குடையை அடைந்த கணத்தில்தான் நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது.

ஒரு அசாதரமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பராவாயில்லை என சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள் வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு. அதன்பின் சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும் சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது. உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம்.
உன் வேலை மாறுதல் கடிதம் வந்த மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில் ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாக பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுது களைத்திருந்தன. மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன் என்று ஒரு சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வது போல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம். அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள். தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தாய் அத்துடன் ஒரு சிறிய கடிதம் திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை மதிப்பவன் நான்.

இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால் அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தக்கத்தை அதிகப்படுத்திருந்ததால், கடைத்தெருவுக்கு மாலையில் சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர் கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும் என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள். உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.


மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது.

14 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெளியே பெய்யும் மழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது.//

என்ன காதல் மெய்படவில்லையா அண்ணே, சோகமா இருக்கீங்க போல, சில வேளைகளில் தனிமையும் சுகம்தான் அண்ணே...!

கவியாழி சொன்னது…

உங்களின் மௌன மொழியும் கேட்கிறது.அருமை செந்தில்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

.. வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது. ...

தனிமையில் தான் என்னவொரு சுகம்.. ஆனால் சிலநேரங்களில் மட்டும்...

rajasundararajan சொன்னது…

அடடா! இதுவல்லவோ எழுத்து!

அந்தக் கல்லா இளைஞனின் சுவார்க்கிறுக்கெழுத்தினை வாசித்தமட்டில் நான் அழுதுவிட்டேன். கண்ணீரோடுதான், பிறகு, கற்றவர் உங்கள் எழுத்தினூடாகக் கடந்தேன்.

பிற்றைக் காட்சியில், உறவுகளைக் குடைக்குள் விட்டு அவள் நனைவதாகக் காட்டியது பொருத்தம். வழிதவறிய தவளையாக இருந்தும் பாடுகிறவனே கவி, கலைஞன்.

மழை என்பது அன்புதானே?

dheva சொன்னது…

Awesome :-)))))

நாடோடி இலக்கியன் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சூப்பர்.

Unknown சொன்னது…

அனைவருக்கும் மிக்க நன்றி...

@ MANO நாஞ்சில் மனோ

@ கவியாழி கண்ணதாசன்

@ சங்கவி

@ ராஜா சுந்தர்ராஜன்

@ தேவா

@ நாடோடி இலக்கியன்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில் - தனிமையில் இனிமை காண இயலும் - நடை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

மிக்க நன்றி சீனா ஐயா..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணா உங்கள் எழுத்து நடையின் ரசிகன் நான்.
அருமை. தனிமையிலும் இனிமை காணலாம்.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நன்றி குமார்..

கலாகுமரன் சொன்னது…

தவளை,மெழுகுவர்த்தி,குடை,மழைத்துளி,இருட்டும்.. பேசுகிறது. எப்படி தனிமையை நேசிக்க கற்றுகொண்டான் என்பதை அழகா சொல்லி சென்றவிதம் பிடித்திருந்தது. குடைக்குள் வந்த அவள் அவனுக்காக அவனின் நினைவாக மழையில் நடந்து செல்கிறாள். டச்சிங் !

ஜீவன் சுப்பு சொன்னது…

//எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம் என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், // கிளாஸ் ...!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-