காற்று
லேசாகத்தான் வீசுகிறது, ஜனவரியிலேயே வெயில் தன் உக்கிரத்தை கூட்டி
வைத்திருக்கிறது. நான் காத்திருக்கிறேன். வெயில் நகர்த்தும் மரத்தின் நிழல்
என்னையும் இடம் மாற்றுகிறது.நான் இப்படி காத்திருக்கும் 18 ஆவது ஆண்டு
இது. இப்படியே இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கவேண்டும் என்பதும்
தெரியவைல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் இம்மாதிரி நிற்கப் போகிறேன் என்பதும்
தெரியவில்லை. என் அறிவு இதனை முட்டாள்த்தனம் என எள்ளி நகையாடினாலும் மனசு
தன் போக்கில் என்னை இத்தனை வருடங்களாக இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறது.
பொதுவாக
எனக்கு பெண்களை பிடிக்காது. அதற்கான காரனம் நிறைய இருக்கு. என் சிந்தனை
மேலோங்கி நான் என்னுள் ஒரு பகுத்தறிவாளனை உருவாக்கி முடித்தபோது முதலில்
பரிதாபப் பட்டது பெண்களின் நிலை கண்டுதான். பெரியாரை, பாரதியை எவ்வளவு
பிடிக்குமோ அவ்வாறே கள்ளுண்டு பாட்டெழெழுதிய அவ்வையையும் பிடிக்கும். இந்த
சமூகத்தின் விலங்காக வீட்டுக்குள் வேலை செய்ய, பிள்ளை பெற்று, வளர்த்து
ஊழியம் செய்யும் ஒரு வேலைக்காரியாக இருப்பதை இவர்கள் ஏன் இன்னும் உணரவில்லை
என அவர்கள் மேல் கருணையும், வருத்தமும் இருந்தது. ஆனால் அது எவ்வளவு பெரிய
தவறான முடிவு என்பதை உணர்ந்த கணம் என் அறிவு என்னை ஏகடியம் செய்தது.
பாரதியும், பெரியாரும் ஏன் அவ்வையும் எனக்கு அன்னியமானார்கள்.ஆனால் நான் அழுதேன். எத்தனை நாள் அழுதேன் எனத் தெரியாமல் அழுதேன். எப்போது தனிமை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அழுதேன். அழுவது ஆண் மகனுக்கு அழகில்லை எனும் கொள்கை படைத்த எனக்கு அழுவதுதான் ஆறுதல் என்பதால் கண்ணில் நீர் வற்றும் வரைக்கும் அழுதேன்.
அவளை விடவும் அதிக காதலை இப்போது
எனக்கு தருகிற, என் குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு தேவதையை
காலம் எனக்கு கொடுத்திருந்தாலும். ஒரு விடையில்லாத கேள்வியுடன் காலம் என்னை
துரத்தியபடியும் இருக்கிறது.