25 ஜன., 2014

காலம்...

காற்று லேசாகத்தான் வீசுகிறது, ஜனவரியிலேயே வெயில் தன் உக்கிரத்தை கூட்டி வைத்திருக்கிறது. நான் காத்திருக்கிறேன். வெயில் நகர்த்தும் மரத்தின் நிழல் என்னையும் இடம் மாற்றுகிறது.நான் இப்படி காத்திருக்கும் 18 ஆவது ஆண்டு இது. இப்படியே இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கவேண்டும் என்பதும் தெரியவைல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் இம்மாதிரி நிற்கப் போகிறேன் என்பதும் தெரியவில்லை. என் அறிவு இதனை முட்டாள்த்தனம் என எள்ளி நகையாடினாலும் மனசு தன் போக்கில் என்னை இத்தனை வருடங்களாக இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறது.

பொதுவாக எனக்கு பெண்களை பிடிக்காது. அதற்கான காரனம் நிறைய இருக்கு. என் சிந்தனை மேலோங்கி நான் என்னுள் ஒரு பகுத்தறிவாளனை உருவாக்கி முடித்தபோது முதலில் பரிதாபப் பட்டது பெண்களின் நிலை கண்டுதான். பெரியாரை, பாரதியை எவ்வளவு பிடிக்குமோ அவ்வாறே கள்ளுண்டு பாட்டெழெழுதிய அவ்வையையும் பிடிக்கும். இந்த சமூகத்தின் விலங்காக வீட்டுக்குள் வேலை செய்ய, பிள்ளை பெற்று, வளர்த்து ஊழியம் செய்யும் ஒரு வேலைக்காரியாக இருப்பதை இவர்கள் ஏன் இன்னும் உணரவில்லை என அவர்கள் மேல் கருணையும், வருத்தமும் இருந்தது. ஆனால் அது எவ்வளவு பெரிய தவறான முடிவு என்பதை உணர்ந்த கணம் என் அறிவு என்னை ஏகடியம் செய்தது. பாரதியும், பெரியாரும் ஏன் அவ்வையும் எனக்கு அன்னியமானார்கள்.

தாங்களாகவே விரும்பி ஒரு வாழ்க்கையை வாழ்வதோடு நில்லாது தன் மகளை, மருமகளை சுற்றத்தை சமூகத்தை அப்படி வைத்திருப்பதில் பெரும்பங்கு பெண்களிடம்தான் இருக்கிறது. தன் சேவையை காரனம் காட்டியே ஆண்களை அவர்கள் செக்கு மாடாக்குகிறார்கள். பெண்ணிற்கு ஆண் எப்போதும் எதிரியல்ல அவன் சுலபமாக பழக்கிவிட முடிகிற நாய்க்குட்டி. திருமணம் ஆன பிறகு வாழ்நாளெல்லாம் அட்டைக் கத்திகளாக மாறி வீட்டில் எலியாகவும் வெளியில் புலியாகவும் நடிக்க பழகிவிடுவார்கள் ஆண்கள். ஆனால் ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணை எப்போதும் சகித்துக்கொள்ளவே முடியாது.

இப்படி பெண்களின் மேல் ஒரு ஒட்டு மொத்த அபிப்ராயத்தை கொண்டிருந்தவனை ஒரு பெண் தன் நாய்க்குட்டியாக மாற்றி விட்டாள். நான் இதனை ஒருமுறை அவளிடமே சொல்லி சிரித்தபோது, அவள் சொன்னாள் “நாய்க் குட்டியாக மாறியது, நானா? நீயா?” என்று. உண்மைதான் எந்த குறிக்கோளும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிற ஆள் நான். இன்றைக்கு திட்டமிடுதல் எனபதை அடிப்படை விதியாக, அடுத்த பத்தாண்டுகளுக்கு நான் என்னென்ன செய்ய வேண்டும், பிரச்சனைகள் எங்கெங்கு எப்படி வரக்கூடும், வந்தால் எப்படி சமாளிக்கலாம் என எனது தினசரிகள் கட்டமைக்கப்பட்டவையாக மாறிவிட்டிருக்கின்றன. ஆனால் வாழ்வின் நிஜமான தரிசனத்தை உணர்ந்தது அப்போதுதான். இந்த பரபரப்பான உலகில் எந்தக் கவலையும் படாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா?. நான் வாழ்ந்தேன். எத்தகைய நிகழ்வுகளையும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் எனக்கு கவனம் இருக்குமே தவிர நடந்த விசயத்திற்க்காக எப்போது வருத்தமோ, சந்தோசமோ கூட இருக்காது. எல்லாமே எனக்கு சம்பவங்கள்தான். அவள் என்னை நேசிக்க அவளுக்கு ஒரே ஒரு காரனம் மட்டுமே போதுமானதாக இருந்தது. என் வெளிப்படையான, யாருக்கும் பயப்பாடாத பேச்சு. இதே பேச்சுதான் நிறைய பேரை என்னிடம் இருந்து விலக்கியும் வைத்திருக்கிறது. ஆணின் கம்பீரம் பிரச்சனைகளை சமாளிப்பதும், எதிர்கொள்வதும்தான் அது உன்னிடம் இருக்கு என்பாள். நான் கண்ணாடியில் என்னை பார்க்கும்போதெல்லாம் அவள் சொன்னது மீண்டும் மீண்டும் என காதுகளில் கேட்கும். பெண்களை பிடிக்காத ஒருவன் இப்போது ஒரு பெண்ணின் பாராட்டில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் என் கண்கள் என்னையே கேலி செய்யும்.

நான் சுயமாக இருந்தேன். காலம் என்னை அப்படி வைத்திருந்தது. ஆனால் எப்போது அவளை சந்தித்தேனோ அப்போது முதல் நான் என்னை படிப்படியாக இழந்து விட்டிருக்கிறேன். அவளே பலமுறை இதனை என்னிடம் கேட்கவும்  செய்திருக்கிறாள். ”நீ ஏன்? இப்பொதெல்லாம் நான் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறாய்!. “ நீ இப்போது எனக்காகவே சிந்திக்கிறாய், பேசுகிறாய், இதில் மறுப்பு சொல்வதற்கு என்ன இருக்கு” என்றபோது என் தோளில் தன் முகம் புதைத்துக்கொண்டாள்.

எங்கள் காதலுக்கு ஜாதி, அந்தஸ்து இப்படி நிறைய இடர்பாடுகள் வரலாம் என எதிர்பார்த்தோம். மெல்ல கணங்களோடு வாழ்ந்த என் இருப்பு, எதிர்காலம் பற்றி யோகிக்க துவங்கியது அப்போதுதான். ஆனால் காலம் ஒரு மிகச்சிறந்த ஆசான், கொலையாளி, நம்பிக்கை துரோகி என்பதை நான் அப்போது உணரவில்லை. ஏனெனில் நம்பிக்கை என்பதே தெளிவின்மை என்று தீர்மானமாக இருந்தவனை அதே தெளிவற்ற நம்பிக்கையோடு இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருப்பதும் காலம்தான். ஒன்று தெரியுமா? நான் எதற்காகவும் அழுததே இல்லை.

ஆனால் நான் அழுதேன். எத்தனை நாள் அழுதேன் எனத் தெரியாமல் அழுதேன். எப்போது தனிமை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அழுதேன். அழுவது ஆண் மகனுக்கு அழகில்லை எனும் கொள்கை படைத்த எனக்கு அழுவதுதான் ஆறுதல் என்பதால் கண்ணில் நீர் வற்றும் வரைக்கும் அழுதேன்.

காலம் அழுவதில் இருந்து என்னை விடுவித்து இன்னொரு வாழ்விற்கு கொண்டு வந்து சேர்த்தாலும். என் மனசில் இன்னும் தீராத வலி ஒன்று எப்போதும் இருக்கிறது. அவள் கடைசியாக என்ன நினைத்திருப்பாள்.எங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஆயிரம் கற்பனைகள் வைத்திருந்தவள், தன் கடைசி மூச்சு பிரியும்போது நிச்சயம் அதனை எனக்காக இங்கு விட்டு வைத்திருப்பாள். காலம் என்னை நாத்திகனாகவே இன்னும் வைத்திருந்தாலும், பதினெட்டு ஆண்டுகளாக விபத்து நடந்த அந்த இடத்தில் நான் வந்து நாளெல்லாம் காத்திருக்கும்போது என் பகுத்தறிவு கானாமல்தான் போய்விடுகிறது.

அவளை விடவும் அதிக காதலை இப்போது எனக்கு தருகிற, என் குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு தேவதையை காலம் எனக்கு கொடுத்திருந்தாலும். ஒரு விடையில்லாத கேள்வியுடன் காலம் என்னை துரத்தியபடியும் இருக்கிறது. 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகச்சிறந்த ஆசான் எல்லாவற்றையும் மாற்றி விடும்... நாத்திகனாகவோ, ஆத்திகனாகவோ அல்ல... மனிதத்தை உணரும் மனிதனாக...!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காலம் எல்லாவற்றையும் கடக்க செய்யும்! மிக அருமையான கருத்துரைகள். நன்றி!