ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம்
அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு
பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்று கொண்டிருந்தது. தனிமை எனக்கு
மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம்
என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளைக்கூட ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுபவன்
நான். சொற்ப மதுவுடன் கூடிய தனிமை ஒரு வரம்.
வெளியே பெய்யும் பெருமழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று
எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது.
இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம்.
அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம்
என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன்.
மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடனான உறவில் இருந்து
பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல
பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையைப் பிடிக்கும் உத்வேகத்தை
எனக்குள் அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடோடி அக்குடையை அடைந்த கணத்தில்தான்
நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது!.
ஒரு அசாதரனமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பரவாயில்லை
எனச் சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள்
வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு
பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு.
அதன்பின்
சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும்
சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது!.
உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம். காதலை சொல்லமுடியாமல் தவிப்பது கூட விரும்பி அனுபவிக்கும் ஒரு சுகம்தான் என அப்போது தெரியவில்லை. காலத்தை தேவன் சுகமாக வைத்திருக்கிறான், சமயங்களில் அவன் பைத்தியக்காரனாகவும் மாறித்தான் விடுகிறான்.
ஒரு உச்சி வெயில் பொழுதில் உனக்கு வேலை மாறுதல் கடிதம் வந்த செய்தியை தோழி மூலம் அறிந்துகொண்டேன். மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில் ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாகப் பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுதுக் களைத்திருந்தன. மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன் என்று உன் சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வதுபோல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம். அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள். தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தாய் அத்துடன் ஒரு சிறிய கடிதம், திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை மதிப்பவன் நான்.
இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால்
அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருந்ததால்,
மாலையில் கடைத்தெருவுக்கு சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத
ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர்
கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட
நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம்
நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும்
என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள்.
உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.
மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை
சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.
வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிருக்கிறது.
4 கருத்துகள்:
ஆஹா... அற்புதம் அண்ணா...
அருமை அண்ணா...
வழி தவறிய ஒற்றைத் தவளை தனிமையில் என் அழுகையைப் பாடிக் கொண்டிருந்தது... அருமை... அருமை...
அழகான புனைவு .வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
எல்லாம் சரி தான்... கூடவே ஒரு அரக்கனுடன் - தேவையா...?
அருமையான புனைவு! வர்ணணைகள் சிறப்பு!
கருத்துரையிடுக