எங்கள் ஊரில் வருடாவருடம் காமன் பண்டிகை நடக்கும், பெரும்பாலும் அது வசூல் சம்பத்தப்பட்ட பண்டிகை, காமன் தகனம் முடிந்த மறுநாள் புலிவேடமிட்டு வசூல் செய்வார்கள் இதைப்பற்றி நண்பன் ராஜா தன்னுடைய ப்ளாக்கில் விரிவாக எழுதியுள்ளான்.
விஷயம் காமன் பண்டிகை பற்றியது அல்ல, அதனால் ஏற்ப்பட்ட விளைவுகள் பற்றியது, காமன் பண்டிகை கடைசி நாளில் இரு சிறுவர்களுக்கு ரதி, மன்முதன் வேடமிட்டு எறிந்த கட்சி, எரியாத கட்சி என இரண்டு பிரிவாக பாட்டு பாடுவார்கள், முடிவில் காமனை தகனம் செய்வார்கள், தகனம் முடிந்தவுடன் புலிவேடம் போட ஆரம்பிப்பார்கள், அப்போது நாங்கள் இரவில் வேடிக்கை பார்க்க போவோம், புளியங்கொட்டைகளை ஊறவைத்து, அவித்து தின்பதற்கு எடுத்துபோவோம், எனக்கு ஐந்து வயதாக இருக்குபோது இப்படி ஒருநாள் இரவு பார்த்துவிட்டு வந்ததும் எனக்கும் அப்படி புலிவேடம் போட வேண்டும் என ஆசையாக இருந்தது.
அறுவடை முடிந்து அப்போதுதான் ஒருவாரம் முன்புதான் வைக்கோல்போர் போட்டிருந்தார்கள்.குப்பையில் கிடந்த சாம்பலை தண்ணீர்விட்டு உடம்பெல்லாம் பூசிக்கொண்டேன். வைக்கோல்போரில் இருந்து சிறிதளவு வைக்கோலை புடுங்கி அதன் அருகிலேயே போட்டு கொளுத்தினேன், கையில் ஒரு தட்டை எடுத்து தாளம் தட்டிக்கொண்டு வைக்கோல்போரை சுற்றி ஆட ஆரம்பித்தேன் தீ மளமளவென பரவி மொத்த வைக்கோல்போரும் ஏறிய ஆரம்பித்தது. நான் பயந்து ஓடி ஒளிந்துகொண்டேன்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் போட்டு அனைவரும் வந்து தீயை அனைப்பதற்க்குள் வைக்கோல்போர் முழுவதும் எரிந்துவிட்டது, அப்போதுதான் பக்கத்து வீட்டு பரமசிவம் மாமா செந்தில்தான் அந்த இடத்தில் இருந்தான், அவன்தான் ஏதாவது செய்திருப்பான் என்று சொன்னதும் என்னை தேடி கண்டுபிடித்து இழுத்துவந்தனர், என்னை எல்லோர்முன்னும் கொண்டுவந்ததும் எல்லோரும் என் வேசத்தை பார்த்து சிரிக்க எனக்கு அவமானம் ஆகிவிட்டது, அதன்பிறகு இன்றுவரை அதைபோன்று ஒரு வைக்கோல்போர் எங்கள் வீட்டில் நாங்கள் போட்டது இல்லை, படிப்படியாக நிலங்களை விற்றுவிட்டோம்.
சின்ன வயது குறும்புகள் எப்போதும் நினைவகலாதவை. நான் வீட்டிற்கு கடைசி பிள்ளை என்பதால் செல்லம் அதிகம், அதனால் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை, எப்போது பார்த்தாலும் ஏதாவது செய்துகொண்டிருப்பேன் அந்த வயதில் எனக்கு அடிபடாத நாளே கிடையாது, பத்தாம் வகுப்புக்கு பிறகு பெரிய செட்டுகளுடன் நட்பு ஏற்பட்டு, இரவுகளில் வயல்காடுகளுக்கு சென்று சமைத்து சாப்பிடுவோம், அதிலும் குரவர்களிடம் பணம் கொடுத்தால் அவர்கள் நரி, காட்டுப்பூனை போன்ற விலங்குகளை பிடித்து கொடுப்பார்கள் அதனை சுட்டு சாப்பிடுவோம், யார் வீட்டு வெள்ளாமையாக இருந்தாலும் எங்களுக்கு தேவை என்றால் ஆட்டைய போட்ருவோம், மறுநாள் நாங்கதான் என தெரிந்தாலும் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், ஏனெனில் சாப்பிடும் அளவுக்கு மட்டுமே எடுத்து வருவோம்,
இப்போது உள்ள பிள்ளைகள் தொலைக்கட்சிகளில் தங்களை தொலைக்கிறார்கள், சின்ன வயதில் உடல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், மூளை விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவதால் சீக்கிரத்தில் சுயநலம் வந்துவிடுகிறது, கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் தெரியாமல் ஒரு தலைமுறையே வளர்வது கவலை அளிக்கிறது, நம்முடைய சேனல்களும் அவர்களின் மூளையை தொடர்ந்து மழுங்கடிக்கும் வேலையைத்தான் செய்கிறது.
எந்த சேனலை திறந்தாலும் அரைகுறை ஆடைகளுடன் சினிமா பாட்டிற்கு அபிநயம் பிடிக்கும் போட்டிகளை வைத்து தங்கள் குழந்தைகளை பெற்றோரே கொண்டு வந்து அவர்கள் பிள்ளைகள் தோற்கும்போது அழுது புரள்கிறார்கள், போட்டியைவிட பெற்றோர்கள் அடிக்கும் கூத்து வேதனையை அளிக்கிறது, மெல்ல மெல்ல மேலை நாடுகளைபோல் மாறிவருகிறோம்.
எதிர்கால சந்ததிகள் கிராமங்களில் கூட இப்படி மாறிவருவது கவலை அளிக்க கூடிய விஷயம், சின்ன வயதில் சொந்தமாக சிந்திக்கக்கூடிய ஆற்றலை கிராமங்களில் நிறைய பார்க்கலாம், அதனால்தான் கிராமங்களில் பிறந்தவர்கள் சாதனை பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்கள், ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கிராமங்களில் நகர குழந்தைகளைவிட அதிக நேரம் டிவி பார்க்கிறார்கள்.
நாம்மால் முடிந்த ஒரு சிறிய மாற்றத்தை எங்கள் சொந்த கிராமத்தில் ஏற்படுத்த வேண்டும் என நானும் நண்பர்களும் சில திட்டங்கள் வைத்துள்ளோம், அது நன்றாக போகும் பட்சத்தில் மற்ற கிராமங்களுக்கும் அதனை கொண்டு செல்லவிருக்கிறோம்,
இந்தியாவின் எதிகால தூண்கள், கடந்தகால சிற்பிகள் இரண்டும் கவனிப்பாரற்று இருக்கின்றனர், இளைய சமுதாயத்தை உயர்த்தும் அதே வேலையில் முதியோர்களையும் நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம், இந்த தேசத்தை கட்டியெழுப்பிய சிற்பிகளை முதியோர் இல்லங்களில் சென்று சேர்க்கிறோம், மனதளவில் குழந்தைகள் ஆகி விடுகிற முதியோர்களை அற்பமாக பார்க்கிறோம்,
எல்ல இடங்களிலும் முதியோர்களுக்கு என சலுகைகள் தரப்படுவது இல்லை, நமக்கும் நாளை வயசாகும், நம் தகப்பனுக்கு நாம் செய்ததைதான் நாளை நம் மகன் நமக்கும் செய்வான் என்பதை மறந்து விடுகிறோம்.
இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக