30 ஜூன், 2010

நிர்வாணா - பக்தியில்லாமல் அடைந்த கடவுள் தன்மை 18+..

Courtesy by TED


தொன்மை வாய்ந்த இந்து மதத்தில் கடவுளை அடைய ஏராள வழிகள் ஏராள குருமார்கள் உண்டு . நாம் படித்த, பார்த்த, கேட்ட கதைகளில், உண்மைகள் பற்றி ஆராய்வதே இல்லை, காரணம் கடவுளே நமது பலமும், பலவீனமும். சாதரணமாக கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ போவதில் ஆரம்பித்து அதனை பின்பற்றுவது சாதாரண பக்தி. 

தீவிர பிரார்த்தனை, சேவை மனப்பான்மையுடன் கூடிய கிருத்தவர்கள் பாதிரியாராக மாறிவிடுவதுண்டு, இஸ்லாத்தில் இமாம்களாகவும் இன்னும் சில படிகள் மேலே போய் சூபிக்களாகவும் ஆகின்றனர். 

பொதுவாகவே இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் தியானம் சாத்தானின் வேலையாக பார்க்கப்படுகிறது. இந்து மற்றும் பவுத்த மதங்களில் தியானம் முதல் படியாகவும், தவம் இறைவனை அடையும் அல்லது இறையுடன் கலக்கும் வழிமுறையாகவும்  இருக்கிறது. 

இன்று மனிதன் அறிவில், அறிவியலில் வளர்ந்த முற்போக்கான காலத்தில் கூட சாதி சொல்லி கடவுளையே பிரித்து வைக்கும் முட்டாள்தனமும், நான்தான் உயர்ந்தவன், நானே கடவுளுக்கு பூஜை செய்யும் அதிகாரம் உள்ளவன் என்று பார்ப்பனர்கள் இன்று வரை சொல்ல நம்மை கீழே வைத்து பார்க்கும் கடவுள் நமக்கு எதற்கு என யோசிக்காது, கோவில்களில் சிறுபிள்ளை விளையாட்டென கற்சிலைக்கு நடக்கும் கூத்துகளை படித்த மனிதர்களே அரங்கேற்றும் கொடுமை இந்து மதத்தில் அதிகம். என்றாலும் தியானம், யோகா இரண்டும் மதம் கடந்த நல்ல விசயம்..

இங்கு டாக்டர் ஜில் போல்தே டைலர் எந்த கடவுள் நம்பிக்கையும் கொள்ளது, தியானமோ,தவமோ செய்யாது ஒரு பரவச நிலையை (Enlightenment) அடைந்திருக்கிறார். தன் பரவச நிலையை புத்தரின் சொல்லான நிர்வாணா என்று சொல்லி பகிர்ந்து கொள்கிறார். பூஜை புனஸ்காரங்களும், ஆசாரங்களும், கடுமையான கடவுள் பக்தியும், வருத்திகொள்ளும் தவமும் கொண்ட சித்தர்களும் அடைய விரும்பிய பரவச நிலையை இதைபோல் எந்த முயற்சியும் செய்யாது ஒரு பெண்மணி அடைந்திருக்கிறார்.

வெகு சிலரே அதிலும் புத்தர் அவரின் வழிவந்தவர்கள், ஓஷோ மற்றும் விவேகானந்தர் போன்றோரே பரவசநிலை பற்றி சொல்லி சென்றிருக்கிறார்கள்.. இந்தப் பெண்மணி சொல்வது பொய் என்றும் நிறைய கருத்துக்கள் உண்டு.. புதுக்கோட்டை பக்கத்தில் இருக்கும் மெய்வழிச்சாலை இஸ்லாமிய பெரியவர் ஒருவரால் நிறுவப்பட்டது. ஷிர்டி சாய் பாபாவும் இஸ்லாமியரே.. இவர்களும் பரவசநிலையை அடைந்தவர்களே. 

இன்னொருவர் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர் ஆன்மீகத்தை கடுமையான வலி என சொல்லியிருக்கிறார். தேவைபட்டால் அது உன்னை வந்தடையும் என்றும், நீ அதை தேடாதே என்றும் சொல்லும் அவர் நாம் நம்பும் நிறைய கருத்துகளை உடைத்து சொன்னவர். அவர் எல்லோரிடமும் சொல்வது MAKE MONEY BE HAPPY. இவர் சொன்னதைபோல்தான் இந்தப் பெண்மணிக்கும் நிகழ்ந்திருக்க வேண்டும்.கடுமையான தியானம், யோகா கட்டுப்பாடு இவைகளை பின்பற்றி கிடைக்கும் பரவசநிலையே சரியானது என நண்பர் வசந்த் சொல்வார். 

இங்கு நான்தான் கடவுள் என சொல்லிக்கொண்ட நித்தியானந்தா,கல்கி பகவான் போன்ற பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...

இணைப்புகள்:

29 ஜூன், 2010

பதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்கும் வீடியோ 18+



Courtesy by TED


சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் கற்பழிக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து  போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது..

ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுனிதா கிருஷ்ணன்.

தான் காப்பாற்றிய குழந்தைகளை மனித மிருகங்கள் சில நான்கு வயது என்று கூட பார்க்காமல் சீரழித்த கொடூரம் ஆன்மீகமும், தெய்வத்தன்மையும் நிரம்பியுள்ள நம் தேசத்தில்தான் நடந்திருக்கிறது.. செக்ஸ் அடிமைகளாய் விற்கப்பட்ட அல்லது வறுமை காரணமாய் அல்லது விரும்பியே தொழில் செய்யும் பெண்கள் HIV ஆட்கொல்லி நோயில் விழும்போது அவர்களின் சம்பாத்தியத்தில் வாழும் அத்தனை பேரும் நிராதரவாய் விட்டுப் போகும் கொடூரமும் நம் தேசத்தில்தான் நடக்கிறது.

அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வந்து அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பை தேடும்போது இந்த நாகரிக சமூகம் அவர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது ஏன்.. வாரம் இரண்டாயிரம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு பெண்மணி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்கள் வேண்டாம் என மறுக்கும்போது வருத்தமாயிருக்கிறது..

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது..  நான் அடிப்படை மனித நேயம் விரும்புகிறவன்... இனி சில நாட்கள் என்னை பாதித்த.. என்னை யோசிக்க வைத்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. 

இதுவரை பைசா பெறாத நிறைய விசயங்களை என் பதிவுகளில்  இட்டு நிரப்பி வந்த நான் வாழ்க்கை இப்படியும் இருக்கிறது.. இப்படியும் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. அவற்றுள் பல பதிவுகள் சற்று அப்பட்டமான விமர்சனமாக இருக்கும்..18+ என்று அடையாளமிட்டே எழுதப்போகிறேன்.. 

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகள் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருக்கும்..

இணைப்புகள் :






28 ஜூன், 2010

பிச்சைக்காரர்கள் - பயோடேட்டா

பெயர்                                   : பிச்சைகாரர்கள்   
இயற்பெயர்                        : அது சொன்னாதான் பிச்சை போடுவீங்களா?
தலைவர்                             :  (இது ஒண்ணுக்குத்தான் சங்கம் வைக்கல)  
                                   சங்கம் இருப்பதால்   பணக்கார பிச்சைகாரர்கள்  ..: நன்றி கேபிள் சங்கர்
துணை தலைவர்கள்       :ஒவ்வொரு ஊருக்கும் ஒரு முதலாளி 
மேலும் 
துணைத் தலைவர்கள்         : கடத்தி வந்து விற்பவர்கள், வாடகைக்கு விடுபவர்கள்  
வயது                                   : வயது ஒரு கேடு 
தொழில்                              : பிச்சை எடுப்பதுதான்  
பலம்                                     : இரக்க குணம் படைத்தவர்கள் 
பலவீனம்                             : குழந்தையை காட்டி பிச்சை எடுப்பது
நீண்ட கால சாதனைகள்        : கடவுளை கேலிப் பொருளாக்கியது 
சமீபத்திய சாதனைகள்           : நான் கடவுள், ஸ்லாம் டாக் மில்லியனர்  
நீண்ட கால எரிச்சல்                : எங்களிடமும் மாமூல் 
சமீபத்திய எரிச்சல்                   : அரசின் கைதானை 
மக்கள்                                          : தர்ம பிரபுக்கள் 
சொத்து மதிப்பு                          : வட்டிக்கு விடும் அளவிற்கு  
நண்பர்கள்                                  : சக பிச்சைகாரர்கள் 
எதிரிகள்                                      : பிச்சை போடாமலே திட்டுபவர்கள் 
ஆசை                                           : தினமும் போதை 
நிராசை                                       : மழை வந்தால் வருமானம் இல்லை 
பாராட்டுக்குரியது                    : என்னை ஏன்யா பாராட்டுறீங்க  
பயம்                                             : நலவாழ்வு இல்லங்கள் 
கோபம்                                        : படைத்தவன் மீது (கடவுள் அல்ல )
காணமல் போனவை              :  காணாமல் போனவர்கள்
புதியவை                                    : எல்லாம் பழசுதான் தருகிறார்கள்  
கருத்து                                        : ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு என்னால்  நான்கு நாட்கள் தூங்க முடியவில்லை..
டிஸ்கி                                          : இவர்களில் பெரும்பாலோர் இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்கிறார்கள்.., தவறான ஆள்பவர்களை தேர்ந்தெடுத்ததால் இந்தியா பிச்சைகாரர்கள் தேசமாக விரைவில் மாறும்.. 

27 ஜூன், 2010

கண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..

26 ஜூன், 2010

காலில் மிதிபடும் கடவுள்...

படம் உதவி : சண்முகம் கணேசன் 
அறியப்படாத கடவுளிடம் 
இருக்கின்றன வரங்கள் 
எல்லா வழிமுறைகளிலும் 
முறையிட்டுப் பார்க்கிறோம் 
அசைந்து கொடுக்காத 
கற்சிலையாய், உலோகமாய் 
கடவுள் ..

யாத்திரைகள் செய்து 
படியேறி 
நெரிசல்களின் சிக்கி 
காணிக்கைகளை 
மயிர் உட்பட கொடுத்து 
கடவுள் தரிசனம் 
கரிசனம் காட்டாத 
கடவுள் ..

புரியாத மந்திரங்களின் 
மொழி அறிந்த கடவுளிடம் 
வேண்டுதலை சரியாய் சேர்க்க 
கருவறைக்குள்..?
தீபம் காட்டி 
பிழைப்பவனுக்கும் காணிக்கை..(கையூட்டு அல்ல)

கும்பிடோ ,அர்ச்சனையோ 
காவடியோ ,பலியோ 
தொழுகையோ ,பிரேயரோ
தியானமோ, தவமோ 
நீதான் கடவுளை அடைய 
முயல வேண்டும் 
ஒரு போதும் 
உன்னை அடைய விரும்பாத 
கடவுளிடம்..

எல்லோருக்கும் 
ஏதோ ஒருவகையில் பிழைப்பு 
எனக்கு 
கடவுள் பிழைப்பு..

25 ஜூன், 2010

புறம் பேசுதல் ..


ரகசியங்கள் நிரம்பி வழிகிற 
வாழ்வின் பயணங்களில் 
எதிர்ப்படும் 
உங்களிடம் இருக்கும் கதைகள் 
திசைகளை மாற்றிவிடுகிறது..

எல்லாக் கதைகளிலும் உண்மை 
இருப்பதில்லை 
உண்மையாகவும் நடந்ததில்லை 
எனினும் 
என் மனக்கூட்டில் திரையிடுகிற சோகங்களை 
சுமக்க முடியவில்லை..

பிரதி உபகாரங்களை 
எதிர் பார்க்காவிட்டாலும்  
கேட்கும் மனங்கள் அவசியமாகின்றன 
சில பொழுது போக்கு 
சில வம்பு 
சில கள்ளக் காதல் என 
விரும்பப்படுகின்ற கதைகள் 
சுவாரஸ்யம் கூட்டுபவை 

அவன், இவன் 
நீ, நான் 
எவனுமே சரியில்லை 
டீக்கடை ... சாக்கடை 

இப்படிதான் 
என் கதையும் 
கூட்டியும் ,குறைத்தும்
எனக்குப்  பின்னால் 
பேசப்படும் ..


24 ஜூன், 2010

கீர்த்தனாவும், கெடா வெட்டும்..

எல்லாவற்றையும் வெவரமா  சொல்லணும் பெரிய அத்தைக்கு 
நடு மாமா தண்ணி  போட்டால் மட்டும் தகராறு
பங்காளிக அத்தனை பேருக்கும் ஆளனுப்பி சொன்னா போதும் 
மாமா வகையறாக்களுக்கு நேர்ல போய் கூப்பிடனும் 
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி எல்லாத்தியும் வாங்கி வந்தபெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு 
சித்தி பாவம் எதை சொன்னாலும் கேட்டுக்கும்

இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும் கறி பத்தல 
தண்ணி அடிச்சுட்டு, ரகள செஞ்சு, சவால் விட்ட சொந்தம் 
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருப்பார் 
செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் அதே கொறைதான்..
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல 
ராமாசாமி மாமா மொறைக்க 
கல்யாண வீடு கதிகலங்கி போச்சு..

கூடப் படிச்ச மாமா பொண்ணு கீர்த்தனா  பேசவே இல்ல 
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல 
அதாச்சு வருசம் ரெண்டு ..

நேத்தைக்கு பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்கு போனா 
மாமென்காரனுக்கு  டீ ஊத்திக்  கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல 
கடந்து போன மாமேம்பொண்ணு கீர்த்தனா வெக்கபட்டா பாருங்க 
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு 
குலதெய்வத்துக்கு இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு வேண்டிகிட்டேன் ...
 

டக்கீலா - ஒரே கல்ப் ... உள்ளுக்குள் தீ பரவும் ...


தமிழ் வலையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை கேபிள் சங்கர்.. பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்தமான ஆள்.. எல்லா சினிமாவையும் பார்த்துவிடகூடிய சினிமா வெறியன்.. சினிமா ஒரு மாயவலை அதை திறம்படக் கையாளும் கலையை கொண்ட வெகு சில நபர்களில் இவரும் ஒருவர்.. இவரின் நிதர்சனக் கதைகள் அனைத்திலும் உண்மைகள் நிறைய இருக்கும்.. சற்றே ராவாக இருந்தாலும் உண்மையை அப்பட்டமாகத்தான் சொல்லமுடியும்.. '
அவரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்... - என் பார்வையில்
  


முத்தம்.. 

                உங்களுக்கு ஒரு ராங்கால் வருகிறது அதுவும் தொடர்ந்து வருகிறது... நீங்கள் என்ன செய்வீர்கள், நானென்றால் எரிச்சலாகி பரம்பரையை கூப்பிடுவேன்..இங்கு ஒரு ஆள் ஒரு மொழி தெரியாத பெண்ணின் அழைப்பை அதன் குரல் பதட்டத்தைக்  கண்டு அவளைத் தேடப்போய் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அவளைக் காப்பாற்றி அனுப்புகிறான், அவளோ ஒரு விபச்சாரி அவள் பார்த்த ஆண்களில் வித்தியாசமான இவனுக்கு தன்னால் முடிந்த அந்த பரிசு ,எத்தனை அழுத்தம் .. இப்போதும்  அவன் எச்சிலில் அது கலந்திருக்கும் ... முத்தச்சுவை ...

டக்கீலா...
                 போதை வஸ்துகளில் டகீலாவின் குணம் வித்தியாசமானது, ஒரே கல்பில் அதை அடிக்கணும், முடித்தபின் உள்ளுக்குள் தீ பரவும் பரவசம் ஒரு கடவுள் அனுபவம்.. பதினைந்து நாளில் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியுமா..? காதல் கற்றுக் கொடுக்கும், இந்திய கலாசாரத்தை நேசிக்கும் ஒரு ஸ்பெயின் இளைஞன் எப்படி இருப்பான்.. அவன் தன் வயதை சொன்னபோது ஒரு கணம் எனக்கு வயது கூடிப்போனது .. 

கல்யாணம்.. 
                   இப்படி ஒரு பேரை வைத்துக் கொண்டு கல்யாணம் ஆகாது போனால் தன் பெயர் மீது அதை கூப்பிடுவோர் மீது கண்டிப்பாக ஒரு வெறுப்பு வரும்.. எல்லா ஆண்களுக்கும் இயல்பாகவே இருக்கும் கல்யாணக்  கனவில் அவன் தேவதைகளின்  வடிவங்கள் புனிதமானவை, சந்தர்ப்பங்களை தன் வடிகாலுக்கு தேடிபோகும் கல்யாணம் அங்கும் அதே புனிதத்தை எதிர்பார்க்க என்ன ஆகும்.. வெறுத்துப்  போனான் கல்யாணம் ..

ஆண்டாள்..
                   பெண்களுடன் பேசுவதென்றால் அதற்க்கு தனி தயாராதல் உண்டு, அதுவும் பள்ளி நாட்களில் நம் பெண் சிநேகிதர்கள் சொற்பமே. அதிலும் ஈகோ நிரம்பி வழியும் ஒரு பெண் சிநேகிதிக்கு நாம் இன்னொரு பெண்ணுடன் சிநேகிதம் கொள்வது பிடிக்குமா என்ன? காலங்கள் கடந்தும் அவள் வெறுப்பை சுலபமாக காட்டி செல்கிறாள்.

இரண்டு கிளைமாக்ஸ்.. 
                                            வன்மங்கள் வளர்ந்து கொண்டே இருப்பவை. சாவிலிருந்து மீளும்போதும் வாழ்க்கை தத்துவம் பிடிபடாது மீண்டும் அதே வன்மம் தலைவிரித்தாடும் கோழைத்தனம்.. அந்த காதல் சாகக்கூடாது என நெஞ்சம் பதைபதைக்கிறது ..

தரிசனம்.. 
                 புட்டபர்த்தி போய் இருகிறீர்களா, அல்லது ஏதாவது சாமியார் ஆசிரமம் சென்றதுண்டா.. அங்கு சாமியார் தரிசனம் கண்டதும்.. கண்ணீர் விட்டழும் பக்தர்களைக் கண்டதுண்டா.. ஒரு நாடகத்தை அங்கு திறம்பட நடத்தி நம்மை உள்ளுக்குள் உருகவைப்பார்கள்.. எத்தனை சாமியார் சிறை சென்றால் என்ன..? சாமியார்கள் வந்துகொண்டே இருப்பார்கள் ...

போஸ்டர்.. 
                   எங்கு பார்த்தாலும் தலைவனின், சினிமாவின், வாழ்த்தி, கண்ணீர் விட்டு, புரட்சிக்கு கூப்பிட்டு போஸ்டர்கள் இல்லாமல் இருக்கும் சுவர்கள் அசிங்கம் என்று ஆகிவிட்டது. எல்லாத்துக்கும் விளம்பரம், விபசாரத்துக்கு அழைக்கும் விளம்பரம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்.. கதையல்ல நிஜம் ...

துரை.. நான் .. ரமேஷ்.. 
                                       எப்படி இருந்தாலும் சாய்ந்து கொள்ள தோள் தேடும் பெண்கள் இருக்குவரை, ஆண்கள் கட்டாயம் அயோக்கியத்தனம் செய்வார்கள்.. பொதுவாகவே பெண் தாய்மை கொண்டவள் என்பதால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு சீக்கிரம் அடிமையாகிறாள்.. எத்தனை பிரச்சினை வந்தாலும், எல்லோரும் ஏமாற்றினாலும் இன்னொரு ஆள் ஆறுதல் சொல்ல அனைத்தும் மறந்து மீண்டும் அடிமை ஆகிறாள்..

என்னை பிடிக்கலையா?..
                                        ஒரு நடுத்தர குடும்பத்தலைவனின் சராசரிக் கடமைகள் பிரச்சினை மிகுந்தவை., தன் மனைவி பிள்ளைகளுக்காக அவன் செய்யக்கூடிய  தியாகம் அளவிட முடியாதது, எல்லா இடங்களிலும் அலைந்து, அவமானப்பட்டு அலுத்து இல்லம் திரும்பும் அவனுக்கு நிறைந்த ஓய்வு தேவைப்படும்போது தன் பிள்ளைகளை அவர்தம் விருப்பங்களை, மனைவியுடன் அவசர முயக்கத்தை, அவனால் ஈடுபாட்டுடன் காட்ட இயலாது போகிறது.. அவன் அருமை தெரியா மனைவியின் அருமை பற்றி யாரேனும் புகழ்ந்தால்.., இப்படிதான் முடியும் ...

காமம் கொல்..
                       வாழ்வில் சிலருக்கென்று ஒரு மரியாதை கொடுப்போம்.. சில வேளைகளில் குடும்பத்தினருக்காக, பொதுவாக அப்பாவிற்காக சிலருக்கு மரியாதை கொடுக்க வேண்டிவரும்.. ஒரு புனிதன் தனக்குள் பொங்கி வழியும் காமத்திற்கு வடிகால் தேடும்போது அருவெருப்பைவிட அவன்மேல் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

ராமி,சம்பத்,துப்பாக்கி..
                                        சிங்கப்பூரில் பணி முடிந்து இல்லம் திரும்பிய போலீஸ்காரன் தன் காதலியுடன் கூடிக் களித்தபின் அவள் விளையாட்டாய் அவன் துப்பாக்கியை எடுத்து சுட, எப்பொதும் புல்லட் நிரப்பாமல் வைத்திருந்த அது அன்று நிரம்பியிருக்க காதலன் சொர்கத்துக்கு அல்லது நரகத்துக்கு போனான் காதலி  ஜெயிலுக்கு போனால் இது ஒரு உண்மை சம்பவம். இங்கு அதே கதை திகில் கூட்டி ...

மாம்பழ வாசனை .. 
                            காதல் ராட்ச்சதனமானது, கோழையானது, பயம் வந்தால் ஒளிந்து கொள்ளக் கூடியது.. எத்தகைய பாசத்தையும் முறித்துக்கொள்ளும் காதல் பைத்தியகாரதனமானது .. இந்தக் காதல் பிசாசின் காதல் ..

நண்டு ..
                ஒரு நடுத்தரவாசிக்கு பெரிய வியாதி வந்துவிட்டால் அவர்கள் படும் அவஸ்த்தை சொல்லிமாளாது... நிறைய பேர் சொத்தை இழந்து ரோட்டுக்கு வந்திருக்கின்றனர்.. சில பேர் வழியற்று நெருக்கமானவர்களை தொலைத்துவிட்டு நிம்மதியின்றி வாழ்வை கழிக்கின்றனர்.. அரசாங்க மருத்துவமனைகளில் சென்று சேர்க்க கூட வழியற்றவர்கள் நிறைய உண்டு, ஏனென்றால் அங்கும் கூட சில முக்கிய மருந்துகளை வெளியில்தான் வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதிலும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்க்கு ஐந்தோ, பத்தோ கொடுக்கவேண்டும் இல்லையென்றால் அவர்கள் வேண்டுமென்றே அலட்சியமும், தாமதமும் செய்வார்கள்... அப்படி மாட்டிகொண்ட வயதான பெரியவரின் சரியான பார்வை..

புத்தகம் கிடைக்கும் இடம் :
நாகரத்னா பதிப்பகம்.
3A , டாக்டர் ராம் தெரு,
நெல்வயல் நகர், பெரம்பூர்,சென்னை - 11

டிஸ்கவரி புக் பேலஸ் 
மேற்கு கே.கே.நகர் ,
சென்னை -78

விலை ரூ.50/- மட்டுமே.

23 ஜூன், 2010

நான் - நீ - அவன் - அவள் ..


பிரியங்களை காற்றில் முத்தங்களாக 
ஊதித் தள்ளுகிறாய் ..
தள்ளாடும்  காற்று எங்கெல்லாம்  கொண்டு சேர்க்குமோ..

ரகசியமான சமிக்கைகளில் 
பரிமாறும் செய்திகள் காதல் வளர்த்தாலும் 
எப்படியோ தெரிந்துவிடுகிறது சிலருக்கேனும் ..

மேலவீதியின் இருள்கூடும் அந்தியில் 
காணக் கிடைக்கவில்லை நீ ..

மறுநாள் செய்தியில் ..
நிச்சயம் ஆகி விட்டது உனக்கு 
யாருடனோ ..

ஓடிப்போகலாம் 
சண்டைபோட்டு ஜெயிக்கலாம் 
சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம் ..
ஆனால் 
அவனையே திருமணம் செய்துகொண்டாய் நீ ...

அதே நான் 
அதே காதலுடன் ..

எனக்கும் ஒருத்தி இருப்பாள்
யாரோ ஒருவனின் காதலுடன் ..
அவளிடம் தரும் என் பிரியம் மொத்தமும் உனக்கானது ..

அதுவரை காற்று பரப்பிய நம் கதைகளோடு 
வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன் ..
முத்தங்கள் தீர்ந்த கனவுகளோடு ..

22 ஜூன், 2010

ராகுல் காந்தி - பயோடேட்டா..

பெயர்                                   : ராகுல்ஜி 
இயற்பெயர்                        : ராகுல் காந்தி
தலைவர்                             : இளைஞர் காங்கிரஸ்
துணை தலைவர்கள்       :xxxxxxxxxxxx
மேலும் துணைத் தலைவர்கள்         : மாநில தலைவர்கள்
வயது                                   : 40
தொழில்                              : கட்சியை வளர்ப்பது
பலம்                                     : நேரு குடும்பம்
பலவீனம்                             : வெரோனிகா
நீண்ட கால சாதனைகள்        : இனிமேல்தான் தெரியும்
சமீபத்திய சாதனைகள்           : இளைஞர் காங்கிரஸ் தேர்தல்
நீண்ட கால எரிச்சல்                : வருண் காந்தி
சமீபத்திய எரிச்சல்                   : பிரபாகரன் மர்மம்
மக்கள்                                          : போராடுபவர்கள் அல்ல
சொத்து மதிப்பு                          : 1991 லேயே 2 பில்லியன் டாலர் சுவிஸ் வங்கியில்
நண்பர்கள்                                  : கூட்டணி கட்சியினர் அல்ல
எதிரிகள்                                      : புலிகள், பி.ஜே.பி
ஆசை                                           : பிரதமர் பதவி 
நிராசை                                       : எதுவுமில்லை
பாராட்டுக்குரியது                    : கட்சியை வளர்ப்பது
பயம்                                             : கோஷ்டி அரசியல்
கோபம்                                        : இலங்கை தமிழர்களிடம் காட்டியது
காணமல் போனவை              :  ஸ்பானிஷ் காதலி
புதியவை                                   : ரயில் பயணங்கள்
கருத்து                                        : ஏழைகள் வீட்டில் தங்கி சாப்பிடும் நீங்கள் தண்டகாரன்ய மக்களின் உணர்வுகளை மதிக்காதது ஏன்?
டிஸ்கி                                          : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் ,தெலுங்கானா  போராட்டங்கலின் போதும், 
நக்சல்களின் பிரச்சினைகளிலும் மௌனமாக இருக்கும் நீங்கள் பிரதமர் பதவிக்கு தகுதியான ஆளா?

21 ஜூன், 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் (இறுதி பாகம் )

                      ஏர்போர்ட் வந்தவுடன் எல்லோருக்கும் போர்டிங் செய்தவர்கள் என்னை மட்டும் காத்திருக்க சொன்னார்கள். போர்டிங் முடியப் போகும் நேரம் நான் மறுபடியும் அவர்களை ஏன் காத்திருக்க சொல்கிறீர்கள் என்றேன். அதைப் பற்றி இமிக்ரேசனில் விசாரியுங்கள், உங்கள் பாஸ்போர்ட் இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை என்றனர்.

                            நான் இமிக்ரேசன் அதிகாரியிடம் சென்று கேட்டேன், அவரோ இன்னைக்கு விமானம் தாமதமாக  புறப்படும் எனவே காத்திருங்கள் உங்களுக்கு அப்புறம்தான் பாஸ்போர்ட் தருவோம் என்றனர். நானோ மற்ற அனைவரும் போர்டிங் போடும்போது என்னை மட்டும் ஏன் தாமதப் படுத்துகிறீர்கள் என்றேன். அவரோ பாஸ்போர்ட் இப்ப கொடுத்த நீ ஓடிப் போயிட்டா என்ன பண்றது என்றாரே பார்க்கலாம். எனக்கு கோபம் மூக்குக்கு வந்தது.

                                        யோவ் என்ன நெனக்கிறீங்க என்னைப் பத்தி, ஊருக்கு போகனுன்னு வந்திருக்கேன், ஓடிடுவேன்னு சொன்னா எப்புடி, எனக்கு இப்ப போர்டிங் போட முடியுமா? இல்லையா என்றேன். அவரோ உன் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருக்கிறார்கள் அது ஏன்னு தெரியல அதனால்தான் கடைசி நேரத்தில் உனக்கு கொடுப்போம். நீ எங்களின் மேலதிகாரியுடன் பேசிக்கொள் என்று மேலதிகாரியை அழைக்கப் போய்விட்டார். என் சிம் கார்டில்தான் என் பாஸ்போர்ட் வாங்கி வைத்த அதிகாரியின் தொலைபேசி என் இருந்தது நினைவுக்கு வந்தவுடன், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், ஹோட்டலில் அவர்கள் சிம்  கார்டை பயன்படுத்தவில்லை.

                           மேலதிகாரி வந்து ஏர்லைன்ஸ் நபர்களுடன் பேசினார், பின் என்னைபார்த்து அனேகமாக இன்னைக்கு விமானம் கிடையாது நீ ஹோட்டலில் சென்று தங்கிவிட்டு நாளைக்கு வா என்றார். நானோ என்னால் திரும்பிப் போக முடியாது, நீங்கள்தான் அதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும் என்று கூறினேன். அவர்களோ போர்டிங் போட்டால் மட்டுமே எங்கள் பொறுப்பு இப்போது உனக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றனர்.

                                      நான் அதிகாரியிடம் என்னால் திரும்பிப் போக இயலாது, என் பாஸ்போர்ட் இப்போதே வேண்டும், அதனை எதற்காக அவர்களே வைத்திருந்தார்கள் எனக் கேட்டுவிட்டு கொடுங்கள் என்று சத்தம் போட அவர்கள் பாஸ்போர்ட் கொண்டு வந்து கொடுத்துவிட்டனர். ஆனால் ஏர்லைன்ஸ் ஆட்கள் போர்டிங் கிடையாது விமானம் நாளைக்குதான் என சொன்னார்கள். எனக்கு வந்ததே கடுப்பு மிகக் கோபமாக எல்லோரையும் கத்தினேன். ஒரு அதிகாரி சமாதானம் செய்து போர்டிங் போடசொன்னார். உள்ளே வந்து இமிக்ரேசன் கிளியரன்ஸ் முடிந்து மீண்டும் மோரிசியசுக்குள் வர புதிய விசா தந்தனர். 

                                         அங்கிருக்கும் பயணிகள் அனைவருக்கும் ஏற்கனவே உணவு வழங்கப்பட்டு விட்டன. எனக்கான உணவை சென்று கேட்டதும் , ஏற்கனவே என் மீது பிணக்காக இருந்த ஏர்லைன்ஸ் ஆள். இப்போது முடியாது நீ பிரச்சினை செய்துகொண்டே இருக்கிறாய் இதுக்கு மேல் உன் மீது  இங்கு புகார் கொடுக்க வேண்டிவரும் என எச்சரிக்க. நான் அதைக் கேட்டவுடன் சத்தமாக சிரித்தேன். அவர் என் சிரிக்கிறாய் என்றார். அதற்கான விடை விரைவில் உங்களுக்கு தெரியும் என்றேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக் கொள் என்றார். அப்போது என் அருகில் இருந்த ஒரு பெண்மணிக்கு வலிப்பு வந்து என் மேல் சாய்ந்து விட்டார், நாங்கள் இருவருமே தடுமாறி கீழே விழ அப்புறம் டாக்டர் வந்து பரிசோதித்து எங்களை ஹோட்டலுக்கு அனுப்ப தாமதமாகிவிட்டது.

                                               ஹோட்டலுக்கு வந்தவுடன் நான் எனக்கு உணவு வேண்டும் என்றேன். அவர்கள் உங்களுக்கு காலையில் இருந்துதான் கணக்கு, இப்போது தனியாக பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட அறைக்கு போனதும் முக்கியமானவர்களுக்கு யாருக்கேனும் விமானம் ரத்தானது பற்றி தெரிவிக்கலாம், உங்களுக்கு மூன்று நிமிட அழைப்பு இலவசம் என்றனர். 

                                                 அறைக்கு சென்றவுடன் மூன்று நிமிடம் வருமாறு பார்த்துக் கொண்டு எனக்கு தெரிந்த எல்லோருக்கும் சும்மா போன் செய்தேன். கிச்சனுக்கு கூப்பிட்டு எனக்கான உணவை ஆர்டர் செய்தேன். ரெண்டு லார்ஜும் வந்தது சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலை மற்றும் மதியம் இரண்டு வேலையும் அப்படியே குடிப்பது, கடலில் சென்று குளிப்பது கிச்சனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது இப்படியாக கழிந்தது, இடையில் ஒரு அல்லேலூய கோஷ்டியின் தொல்லை தனிகதை. அன்று மாலை விமான நிலையத்துக்கு செல்வதற்கு தயாராகும்படி போன் வந்தது, தயாராகி ரிசப்சன் சென்றதும் என் பெயரை மட்டும் தனியாக கூப்பிட்டு ஒரு பில்லை நீட்டினர் Rs.12500 க்கு பில் குடித்ததுக்கும், சாப்பிட்டதுக்கும். போன் பேசியதற்கும்.

                                                ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்றேன். இல்லை உங்கள் அனைவருக்கு தனியாக பபே இருந்தது நீ அங்கு வந்து சாப்பிட்டு இருக்கவேண்டும். அங்குதான் உங்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். மேலும் ஒரு மூன்று நிமிட அழைப்பு மட்டுமே இலவசம் மற்றதெல்லாம் காசு அப்புறம் நீ ஆர்டர் செய்த  உணவுக்கான கட்டணம் எல்லாம் நீதான் கொடுக்கவேண்டும் என்றனர். நான் சிரித்துக் கொண்டே நீங்கள் இந்த பில்லை யார் ரூம் புக் செய்தார்களோ அவர்களுக்கு அனுப்புங்கள் என்றேன். அவர்கள் குழம்பி ஏர்லைன்சை கூப்பிட அவர்களும் நீதான் கட்டவேண்டும் என்றனர். நான் என்னால் கட்டமுடியாது என்று போனை வைக்க எல்லோரும் என்னால் தாமதம் ஆக வேறு வழியின்றி ஏர்லைன்ஸ் தான் கட்டுவதாக ஒப்புக் கொண்டு விமான நிலையத்தில் என்னிடம் வசூலித்து கொள்வதாக சொன்னது.

                                                     விமான நிலையத்தில் போர்டிங் இமிக்ரேசன் கிளியரன்ஸ் முடிந்து என்னை தனியாக அழைத்தனர். அங்கு என்னை அலட்சியப்படுத்தி அதற்க்கு நான் சிரித்த அதே ஆள். அவன் முகத்தில் கோபம் பொங்கி வழிய காட்டிக் கொள்ளாது பணத்தை செட்டில் செய் என்றான். நான் ஒன்றுமே பேசாது என் இன்சுரன்ஸ் மற்றும் ட்ரவல்ஸ் விசிடிங் கார்ட் இரண்டையும் கொடுத்தேன். அப்போதுதான் அவனுக்கு புரிந்தது, நான் யார் என சாரி சார் நேற்று அப்படி பேசியிருக்க கூடாது, தயவு செய்து பிரச்சினை வேண்டாம் நீங்கள் நல்லவிதமாக ஊருக்குப் போங்கள் என்றான்.

                                                அவன் அப்படி பெட்டிப் பாம்பாக ஏன் அடங்கினான் என சக பயணிகள் விசாரித்தனர். பொதுவாகவே விமானப் பயணத்திற்கு என தனிக் காப்பீடு உள்ளது. நாட்கணக்கில் அவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஒவொன்றுக்கும் தனித்தனி இழப்பீடு உண்டு. நமக்கான விசயங்களில் என்ன நடந்தாலும் அவர்கள்தான் சரி செய்வார்கள். நான் அதைக் காட்டியதும் அவர் அடங்கிப் போனதற்கு அதுதான் காரணம் என் மேல் ஏர்லைன்சுக்கு க்ளைம் இருந்தாலும் எனக்கு அதற்கான நோட்டிஸ் அனுப்பித்தான் பெற்றுக் கொள்ள முடியும். ஊருக்கு வந்தபின் தாமத பயணத்திற்கு காப்பீட்டு நிறுவனத்தில் நான் க்ளைம் போட்டு வாங்கிவிட்டேன். அப்போது கூட ஏர்லைன்ஸ் ஹோட்டல் பில் பற்றி எதுவும் சொல்லவில்லை.

                                               ஊருக்கு வந்து அந்த ஏஜெண்டை என் அலுவலகத்திற்கு வரவழைத்து சத்தம் போட்டேன், அவனோ தானும் ஏமாந்துவிட்டேன் என்றும் அவர்களின் பணத்தை ஊருக்கு வந்தவுடன் செட்டில் செய்கிறேன் என்று சொன்னான். அடுத்த வாரம் அவர்களை விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வந்து ஒருநாள் சென்னையில் தங்கவைத்து அனுப்பினேன், அவர்கள் அனைவரும் நான் அவர்களுக்கு செலவு செய்த தொகையை ஊருக்கு சென்று அனுப்பி வைப்பதாக சொன்னார்கள், நான் மறுத்துவிட்டு ஊருக்குப் போய் பணத்தை திருப்பி வாங்குங்கள் என்றேன். அதற்குபின் அடிக்கடி தொடர்பில் இருந்தார்கள். பாதிப்பணம் கூட செட்டில் ஆகவில்லை என வருத்தப் பட்டார்கள்.

                                              இன்றுவரை அதில் ஒருவர் மட்டும் தொடர்பில் இருக்கிறார். தற்சமயம் துபாயில் இருக்கிறார் அவர். இன்றுவரை நிறைய பேர் வெளிநாட்டு மோகத்தால் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். நானும் போனவருடம்  மூன்று பேருக்கு சிங்கபூருக்கு செல்ல என் நெருங்கிய நபர் பெயரை பரிந்துரைக்க அதில் பிரச்சினை ஆகி பணம் வராமல் நீதானே அவனை நல்லவன் என்று சொன்னே என மூவரும் தகராறு செய்ய நான் கையிலிருந்து காசு கொடுத்து அனுப்பினேன். 

பயணங்கள் தொடரும் ....

20 ஜூன், 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் ( மூன்றாம் பாகம்)

மறுநாள் காலை ஹோட்டலில் அவர்கள் அனைவரும் ஒரு வாரம் தங்குவதற்கான பணத்தைக் கட்டினேன். மொரிசியசில் ரோஸ்ஹில்ஸ் என்ற இடத்தில்தான் தங்கினோம். அந்த ஹோட்டலில் ஒரு வசதி இருந்தது, ஒரு பெட்டுக்கு தினமும் நூறு ரூபாய் வாடகை, அங்கிருக்கும் பொதுக் கிச்சனில் நாம் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம், சாப்பிட்டுவிட்டு தட்டுகளையோ, பாத்திரங்களையோ கழுவ வேண்டியதில்லை. அப்படியே சிங்கிள் போட்டுவிட்டால் அவர்களே ஆள் வைத்து கழுவிகொள்வார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். அவர்கள் பிரச்சினை முடியும்வரை அவர்கள் கூடவே தங்குவது என முடிவு செய்தேன்.

மொரிசியஸ் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டேன். மொரிசியசின் பிரதான மொழி பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் சொந்த மொழி கிரியோல், இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர், மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். முக்கிய தொழில் கரும்பு விவசாயம். ஆடை தயாரிப்பு மற்றும் சுற்றுலா. அங்குள்ள பொட்டானிக்கல் கார்டனில் 150 ஆண்டுகளுக்கு மேல் வயதான  ஆமைகள் இருக்கிறது, மேலும் இந்தியாவில் இருந்து வருவோருக்கு அங்கு இந்திரா காந்தி நட்ட மரத்தை அவசியம் காட்டுகின்றனர். ஹாலிம் என்றொரு கஞ்சி தெருக்களில் விற்கும் அதனை ஹாட் பிரட்டுடன் சாப்பிடுவார்கள் மிகவும் அருமையாக இருக்கும். பிரியாணிக்கு புளி தொட்டு கொள்ளும் வழக்கமும் உண்டு. கங்கை நீரை கொண்டுவந்து ஒரு மலை குளத்தில் கலந்து இருப்பார்கள். மிகப் பெரிய சிவன் சிலை நான் போனபோது அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஏராளமான பீச்சுகளும் ரிசாட்டுகளும் உள்ளன.
 
மேலும் அங்கு ராணுவம் கிடையாது. போலீசையே அதன் மாதிரி ஒரு அமைப்பாக வைத்திருப்பார்கள். இதற்கு மேல் சொல்வது மெயின் மேட்டரை பாதிப்பதால்...

இரண்டு நாள் கழித்தும் அவர்களை அழைக்க யாரும் வரவில்லை. ஏஜென்டிடம் பேசினால் அவன் என்னை அங்கிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருந்தான். நான் தினமும் காலையில் கிளம்பி விடுவேன். இரவுதான் வருவேன். நான்காம் நாள் அவர்களிடம் உங்கள் ஏஜென்டிடம் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என விசாரித்தேன். ஆளுக்கு தலா மூன்று லட்சம் அட்வான்சும், பிரான்ஸ் சென்ற பிறகு இரண்டு லட்சம்  கொடுப்பதாக பேசியிருக்கிறோம் என்றனர். நான் அவர்களிடம் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள், உடனே ஊரில் இருந்து ஆள் அனுப்பி அவன் மேல் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுங்கள் என்றேன். 

கொடுமை என்னவென்றால் இன்னமும் அவர்கள் அவனை நம்புவதாகவும் எப்படியும் தங்களை அனுப்பி வைப்பன் எனவும், தங்களுக்கு நீண்ட நாள் பழக்கம் உள்ளவன். பகலில் அவனிடம் அவர்கள் பேசியதாகவும், அவன் மொரிசியஸ் ஏஜென்ட் பிரான்சில் இருக்கிறான், இன்னும் இரண்டு நாட்களில் அவர்களை கூட்டிச் செல்வான் என சத்தியம் செய்ததாகவும், நான் செலவு செய்த தொகையை என்  வீட்டில் கொடுப்பதாகவும் சொன்னார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் அவனை நம்பினார்கள்.

எனக்கு அவர்களை நினைத்து பரிதாபம்தான் வந்தது. சரிங்க உங்க நம்பிக்கைய நான் கெடுக்க விரும்பல, ஆனாலும் கொஞ்சம் உங்களுக்குள் யோசனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கடுத்த நாட்களில் நான் பிஸியாகிவிட்டேன். பொதுவாகவே அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். மேலும் அங்கு மதுபான வகைகள் விலை குறைவாக இருக்கும். ஹிந்திப் படங்கள் அங்கு பிரபலம். தமிழ் படங்கள் dvd களாக கிடைத்தது. இப்போது எப்படி எனத் தெரியவில்லை. பொதுவாகவே தமிழ் தெரிந்த ஆட்கள் அரிதாகவே தென்பட்டனர். விசாரித்தபோது இப்போதுதான் அதற்கான அவசியத்தை உணர்கிறோம் என்றனர். இது நடந்து ஆறு வருடங்கள் ஓடி விட்டன. இப்போது எப்படி என படிப்பவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

இப்படியாக நான் ஊர் வரும் நாள் வந்துவிட்டது. அந்த ஐவரும் அன்றுதான் தங்கள் நிலையை உணர்ந்தார்கள். என்னுடனே வரவேண்டும் என பிடிவாதம் பிடித்தனர். ஏர்லைன்சுக்கு பேசினால் சீட் இல்லை என கைவிரித்து விட்டனர். அதைக் கேட்டதும் அழவே ஆரம்பித்து விட்டனர். எப்படியாவது இங்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி கெஞ்சினார்கள். எனக்கு பாவமாக இருந்தது. ஆனால் அன்று மாலை நான் ஊருக்கு கிளம்பியாக வேண்டும். அவர்களுக்கு மேலும் ஒரு வாரத்திற்கான ஹோட்டல் வாடகை கட்டிவிட்டு, சமையல் பொருட்கள் வாங்கி கொடுத்துவிட்டு. ஆளுக்கு நூறு யு.எஸ் டாலர் கொடுத்தேன். மேலும் அங்கு நான் பயன்படுத்திய சிம் கார்டையும் கொடுத்தேன்.ஒரு வாரத்திற்குள் உங்கள் ஏஜென்ட் வரவில்லை என்றால் தயவு செய்து ஊருக்கு வந்துவிடுங்கள், நான் ஊருக்கு சென்று உங்கள் ஏஜெண்டை பிடிக்கிறேன் என விடை பெற்றேன்.

ஆனால் ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சண்டை ஆரம்பித்தது. அதைப் பற்றியும் ஊருக்கு வந்து அந்த ஐவருக்காக நான் அலைந்ததையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

19 ஜூன், 2010

தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்..

சமீபத்தில் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்றொரு கேள்வி எழுப்பப் பட்டு அதற்கான ஆரோக்கியமான பதில்களுக்கு பதில் சும்மா மொக்கை போடுகின்றனர்.

என்னால் தினசரி அந்த மின்னஞ்சல்களை நீக்குவதற்கு எரிச்சலாக இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட மொக்கைகளை உங்கள் தனி மின்னஞ்சல்களுக்கோ அல்லது உங்கள் டிவிட்டரிலோ போட்டுக்கொள்ள வேண்டியதுதானே. ஏன் இங்குவந்து எல்லோரையும் எரிச்சல் படுத்துகிறீர்கள். 

நல்ல விசயங்களுக்கு பயன்படட்டும், மேலும் புதிய பதிவர்கள் வருகை தந்தால் அவர்களை வரவேற்று ஆதரிக்கலாம் என நினைத்து பொறுத்து இருந்தேன். ஆனால் முடியலீங்க..

சரி மொக்கையே போடக்கூடாதா என நீங்கள் கேட்கலாம்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு.. 

நீங்கள் செய்வது ....?

GOOD BYE...

இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் - (இரண்டாம் பாகம்)

அந்த ஐவரும் வந்ததும் அவர்களை என்ன கேட்டாங்க என்றேன்.. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என சொல்லிவிட்டோம், ஒரு ஆபிசர் தமிழில் கேட்டான் அவனோ அரைகுறை நாங்க சொல்றது அவனுக்கு விளங்களை அதனால் அதுக்கு அப்புறம் யாரும் எதுவும் கேட்கலை என்றனர் . எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. அப்ப அந்த இன்டர்போல் அதிகாரி வந்து அந்த ஐவருக்கும் இரண்டு வாரம் கழித்தும், உனக்கு ஒரு வாரத்திலும் திரும்பி போவதாக டிக்கெட்டில் இருக்கு. நீ உனது டிக்கெட்டை இரண்டு வாரம் கழித்து மாற்றிகொள் என்றார். நான் வேண்டுமானால் அவர்களின் டிக்கெட்டை ஒரு வாரம் இருக்கும்படி மாற்றித்தாருங்கள் என சொன்னேன்.

மோரிசியன் ஏர்லைன்சில் சென்று கேட்டால் ஒரு டிக்கெட்டுக்கு Rs.2500 மோரிசியன் பணம் கேட்டனர். அதிகாரி என்னைக் கட்ட சொன்னார். மீண்டும் கடுப்பான நான், நான்தான் எங்களை திருப்பி அனுப்ப சொல்லிவிட்டேனே பின் எதுக்கு இதெல்லாம் என்னால் பணம் கட்ட முடியாது, அது உங்கள் பிரச்சினை என்று சொல்லிவிட்டேன். காரணம் சென்னையில் இருந்து மொரிசியசுக்கு ஆப் சீசனில்  வாரம் ஒரு விமானம்தான் அதனால் எப்படியும் அவர் எங்களை திருப்பி அனுப்ப முடியாது என்று தெரியும், மும்பைக்கு தினசரி ஒரு விமானம் உண்டு, ஆனால் அதற்கு தனிக் கட்டணம் கட்டவேண்டும், அவர்கள் குழம்பிப் போய் மறுபடி கூடிப் பேசினார்.நான் எங்களுக்கு டீ வேணும் என்றேன். ஒரு அதிகாரி டீ வாங்கி வந்தார். பணம் கொடுத்தேன் வேண்டாம் என மறுத்து விட்டார்.

அதன் பிறகு எங்கள் லக்கேஜை எடுத்து வந்து பிரித்து பார்த்தனர். அவ்வளவும் சுடிதார், அதனைப் பார்த்ததும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். அந்த இன்டர்போல் அதிகாரி என்னிடம் வந்து நீ சுடிதார் விற்கப் போகிறோம் என்று சொன்னால் அப்போதே விட்டிருப்போம்,அதை ஏன் எங்ககிட்டே சொல்லல என்றார். பிரச்சினை ஒரு முடிவுக்கு வரட்டும் என சாரி சார் என்றேன் . அவரோ நீ என்னிடம் விவாதம் செய்ததால் உன் பாஸ்போர்ட்டை நாங்களே வைத்துக் கொள்வோம் போகும்போது வாங்கிக்கொள் என்றார். நான் நீங்களே வச்சுகங்க என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

அப்போது அந்த இன்டர்போல் அதிகாரியும், மற்ற இரண்டு அதிகாரியும் தங்களுக்கு சுடிதார் தேவைப்படுவதாகவும், நாளை ஹோட்டலில் தங்கள் மனைவியுடன் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று அவர்கள் மொபைல் எண் தந்தார்கள். ஆச்சர்யமான அதிகாரிகள்.

பிரச்சினை அத்தோடு முடியவில்லை, அந்த ஐவரையும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வைத்துவிட்டு கிளம்பினேன், அவர்களோ அண்ணே இன்னைக்கு எங்களோடு தங்குங்க நாளைக்கு அவங்க ஆள் வந்ததும் போகலாம் என்று கெஞ்சவே என்னை அழைக்க வந்த நண்பர் ஆக்லூ வின் டிரைவரிடம், இன்றைக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை அவர்கள் வீட்டில் வந்து தங்குகிறேன் என அனுப்பிவிட்டேன்.அன்று முழுவதும் அவர்களை யாரும் வந்து அழைக்கவில்லை.

மறுநாள் காலை அந்த அதிகாரிகள் தங்கள் மனைவியுடன் வந்து தங்களுக்கு தேவைப்பட்ட சுடிதார்களை வாங்கிக் கொண்டனர். கேட்ட பணத்தைக் கொடுத்ததுடன், எங்கள் அனைவருக்கும் காலை உணவு வாங்கித் தந்தனர்.நான் முதல் நாள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். அவர்களோ நிறைய பேர் இங்கிருந்து சரக்கு கப்பல்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு திருட்டுத்தனமாக செல்கின்றனர், அங்கு பிடிபடும்போது அவர்கள் மொரிசியசில் இருந்து கப்பலில் ஏறியதாக சொல்வதால் இன்டர்போல் எங்களைக் கண்காணிக்க சொல்கிறது. நீங்கள் ஹோட்டல் புக்கிங் வைத்தில்லை மேலும் சுடிதார் விற்கப் போகிறேன் என்று சொன்னால் அப்போதே விட்டிருப்போம், நாங்கள் எங்கள் கடமையை செய்தோம் என்றனர். எனக்கு இங்கு அலுவலகம் உண்டு என்றேன். அதை ஏன் சொல்லவில்லை என்றனர். எனக்கும் தோணவில்லை மேலும் எதற்காக நீங்கள் என்னை விசாரிக்கிறீர்கள் என தெரியவில்லை என்றேன். இனிமேல் நீ வரும்போது எங்களுக்கு போன் செய்துவிட்டு வா என்றனர். முதல்நாள் அவ்வளவு கடுமையாக பழகிவிட்டு மறுநாள் ஒரு நண்பனைப்போல் நடந்த விதம் வியப்பு .

நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு இரவு மீண்டும் ஹோட்டலில் வந்து தங்குவேன் என உறுதி அளித்துவிட்டு நான் ஆக்லூவுடன் ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டேன். 

அன்று இரவு ஹோட்டல் வந்தால் அவர்கள் ஐவரும் யாரும் வரவில்லை என்றனர். உங்கள் ஏஜென்டிடம் பேசினீர்களா என்றேன். பேசினோம் அவர் இன்னும் இரண்டு நாளில் ஒரு ஆள் வந்து அழைத்துக் கொள்வார் என்று சொன்னார் என்றனர். மேலும் தங்களிடம் காசு இல்லை. அதனால் இரவு சாப்பிடவில்லை என்றனர். நான் அவங்க ஏஜென்டிடம் பேசினேன். அவனோ அண்ணே இன்னும் நீங்க ஏன் அங்க இருக்கீங்க, அவங்கள நான் பாத்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என்றான். எனக்கு பசங்க ஏமாந்துட்டாங்க எனப்புரிந்தது. 

நான் அனைவருக்கும் இரவு உணவு வாங்கித் தந்துவிட்டு படுங்கள் காலையில் பேசிக்கொள்வோம் என்றேன். அவர்களும் சரியாக தூங்கவில்லை, எந்நாளும் தூங்க முடியவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டு போக முடியாது. என் வேலை நிறைய இருக்கு என்ன செய்யப் போகிறேன் ..?.

அதற்குப் பிறகு நடந்தவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.. 

18 ஜூன், 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன்..

மொரிசியஸ் தமிழர்கள் வசிக்கும் நாடுகளுள் ஒன்று. அங்கு எங்களுக்கு ஒரு அலுவலகம் இருந்தது அதை எம் பங்குதாரர்களில் ஒருவரான ராஜாராமன் பார்த்துக் கொண்டதால் எனக்கு அங்கு வேலையில்லை, ஒருமுறை வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டி அங்கு என்னென்ன செய்யலாம் என ஆராய அங்கு சென்றேன். ராஜாராமன் ஊருக்கு வந்துவிட்டதால் அங்கு இருந்த ஆக்லூ எனும் கிரியோல் காரர் எனக்கு உதவுவார் எனச்சொன்னார்.

ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜாராமன் நண்பர் தன் ஆட்கள் ஐந்து பேர் மொரிசியஸ் செல்வதாகவும் அவர்களை நான் அழைத்துசென்று ஒரு ஹோட்டலில் தங்கவைத்தால் போதும் அதன்பிறகு இன்னொரு நபர் அவர்களை வந்து அழைத்து செல்வார், அவர்கள் அனைவரும் மொரிசியஸ்க்கு வேலை தேடி செல்வதாகவும் சொன்னார். நானும் அதில் எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை அழைத்துப் போகிறேன் என சொன்னேன். ராஜாராமன் அவர்கள் அனைவரும் சும்மாதானே போகிறார்கள் நம்மகிட்ட ஏற்றுமதிக்கு உள்ள சுடிதார்களை மட்டும் அவர்கள் பேரில் லக்கேஜ் போட்டுக்கொள்கிறேன் என்றார்.

சென்னை விமான நிலையத்தில்தான் அவர்களை சந்தித்தேன். அப்போது வந்த ராஜாராமன் ஹோட்டல் புக்கிங் இல்லாமல் அங்கு இறக்க மாட்டார்கள், நான் ஒரு ஹோட்டலுக்கு பேசிவிட்டேன் என அந்த ஹோட்டலின் முகவரி தந்தார். விமானத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டபோதுதான் அவர்கள் மொரிசியசுக்கு வேலைக்கு போகவில்லை.. அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு அங்கிருத்து பிரான்ஸ் செல்லப் போகிறார்கள் என்று. 

சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டோமே எனக் குழப்பமாக இருந்தது, அவர்களிடம் நான்தான் அவர்களின் கைடு என்றும் அவர்கள் தமிழகத்தில் இறால் பண்ணை வைத்திருக்கிறார்கள் என்றும், வருடத்திற்கு ஒருமுறை சுற்றிப்பார்க்கப் போவோம், இந்தமுறை மொரிசியஸ் அப்படியே ஏற்றுமதி வாய்ப்புகளையும் பாப்போம் என்று சொல்லச் சொன்னேன்.இதைதவிர அங்கு யார் என்ன கேட்டாலும் மாற்றி சொல்லக் கூடாது எனவும் சொன்னேன்.

மொரிசியஸ் விமான நிலையத்தில் எங்கள் ஹோட்டல் புக்கிங் கேட்டபோது, ஹோட்டலின் விசிட்டிங் கார்ட் கொடுத்தேன், அவர்கள் ஹோட்டலை விசாரித்தபோது போன் மட்டும் செய்தார்கள் புக்கிங் செய்யவில்லை என சொல்லி விட்டார்கள். அவ்வளவுதான் என்னைத் தனியாகவும் அவர்கள் ஐந்து பேரைத் தனியாகவும் அழைத்து சென்றனர்.

என்னை விசாரித்தவர் என்னை உட்கார சொல்லவில்லை, நானாகவே அங்குள்ள இருக்கையில் அமர்ந்ததும் அவர் உன்னை நான் உட்கார சொல்லவில்லை என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் மிகக் கடுமையாக என்னைக் குற்றவாளிபோல் நடத்தினால் நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றேன். அதற்கு நான் இன்டர்போல் போலிஸ் நான் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றார். நீங்க மொரிசியஸ் பிரதமர் என்றாலும் எனக்குப் பயம் இல்லை. நான் ஒரு இந்தியன் இங்கு சுற்றுலா வந்திருக்கிறேன், முதலில் என்ன காரணத்திற்கு என்னை அழைத்து வந்தீர்கள் என சொல்லவில்லை, மேலும் எனக்குத் தெரியும் நான் குற்றம்  எதுவும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றேன்.

அதன்பிறகு அவர் சற்று இறங்கிவந்து அந்த ஐவரையும் எங்கு அழைத்து செல்கிறாய் என்றார். நான் குழப்பாதீர்கள் தெளிவாக சொல்லுங்கள் என்றேன். அவர் நீ அவர்களை கள்ளத்தனமாக வேறெங்கோ அழைத்து செல்லத்தான் மொரிசியஸ் அழைத்து வந்திருக்கிறாய் என்றார். கடுப்பான நான் மிஸ்டர் நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம், முடிந்தால் அனுமதியுங்கள் அல்லது திருப்பி அனுப்புங்கள் முட்டாள்தனமாக கேள்வி கேட்க வேண்டாம் என்றேன். அவரோ எனக்கு தெரியும் நீ அவர்களை எங்கேயோ அழைத்து செல்லத்தான் இங்கு கூட்டி வந்திருக்கிறாய் உணமையைச் சொல் என மிரட்டினார். 

எனக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அப்படியே நான் அழைத்துப் போனாலும் உங்கள் நாட்டுக்கு என்ன பிரச்சினை, நீங்கள் ஒன்றும் உலகப் போலிஸ் அல்ல, முடிந்தால் அனுமதியுங்கள் இல்லை திருப்பி அனுப்புங்கள் நான் இந்தியா சென்றதும் அங்கு உள்ள ஊடகங்களில் யாரும் மொரிசியஸ் செல்லவேண்டாம் அங்கு நமக்கு மரியாதை இல்லை என சொல்கிறேன். இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச விரும்பவில்லை என கத்தினேன். உடனே அவர் என்னை அங்கு அமரவைத்துவிட்டு சென்று விட்டார். எனக்கு கவலையே அந்த ஐவரும் மாற்றி சொல்லக் கூடாதே என்பதுதான்.

அதன் பிறகு நடந்தவற்றை நாளைய பதிவில் சொல்கிறேன் ..

17 ஜூன், 2010

கடவுள் பிச்சை ...

எப்போதும் 
எதுவும் தருவதில்லை கடவுள் 
நமக்கு  மட்டும் தீர்வதில்லை 
நேர்த்திக் கடன்கள்..

கல்லுக்கு அலங்காரம் 
கற்பனை புகழாரம் 
கடவுளுக்கும் தரகன் 
நிரம்பி வழியும் உண்டியல் 
வாசலில் பிச்சைக் காரன் 
கலாசாரம் பண்பாடு.

ஜாதகம் 
சாதகமில்லை எனில் 
சாங்கியம் நிறைய உண்டு 
சாங்கியமும் பலிக்கலையா..?
முன்னோர்களை பழி சொல் ..

நன்றாக உற்றுப் 
பாருங்கள் 
சாத்தானை வணங்குகிறீர்கள் 
எப்போதும் சாத்தான் 
நன்மையை பெற்றுக் கொண்டு 
தீயதையே தருவான்..

அல்லா
இயேசு 
விஷ்ணு 
புத்தா 
உங்களை சகல துன்பங்களில் இருந்தும் 
காப்பாற்றுவார்..
பிரசங்கிகள் சம்பாதிக்கின்றனர்..

இன்னொரு மீட்பர் 
இனி வரவே போவதில்லை 
உன் முட்டாள்தனம் மாறும்போது 
நீயே உன்னை மீட்பாய்....