26 செப்., 2010

வியாபாரம் - பொருளின் தரம் - விற்பனை தந்திரம் எது முக்கியம்.


நீங்கள் பயன்படுத்தும் ஒரு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அது தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லது அதிகம் பிரபலமான பொருளை சற்று தரத்தில் குறைவாக இருந்தாலும் வாங்குவீர்களா?.. இதற்க்கு உங்களிடம் இரண்டு விதமான பதில்கள் இருக்கும். இங்கு பொதுவாகவே அது எத்துனை தரமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் இல்லையென்றால் அதன் விற்பனை நினைத்த அளவிற்கு இருக்காது என்பதே உண்மை.

இப்ப இந்த விளம்பரம் எவற்றுக்கெல்லாம் தேவை என்றால் அது எல்லாவற்றுக்கும் தேவை என்பேன். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் அதில் சிறந்த தகவல்களையோ அல்லது சிறந்த இல்லகியத்தையோ எழுதுகிறீர்கள் ஆனால் உங்களை வாசிப்பவர் என்று பார்த்தால் அது ஒரு இருபது பேரில் இருந்து ஐம்பது பேருக்குள் மட்டுமே இருப்பார்கள். இதுவும் தமிழ்மணம், இன்லி போன்ற திரட்டிகளில் நீங்கள் இணைத்தால் மட்டுமே சாத்தியம். இப்போது உங்களுக்கு ஏன் மொக்கை பதிவுகள் ஓட்டு வாங்குகின்றன என்பதை விளக்க தேவையில்லை என நினைக்கிறேன். அது உங்களுக்கே புரியும். காரணம் இது பற்றி சமீபத்தில் சிபி.செந்தில்குமார் வரை சொல்லியிருக்கிறார்கள்.

இத்தாலியில் இரண்டு புகழ் பெற்ற சாக்லேட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்று மிகுந்த தரமாக இருக்கும் ஆனால் அதன் பேக்கிங் அவ்வளவு நன்றாக இருக்காது. இன்னொன்று தரம் குறைவாக இருக்கும் ஆனால் அதற்கு பேக்கிங் அசத்தலாக இருக்கும். இரண்டுமே நன்றாக போகிறது சொல்லப்போனால் இரண்டுமே ஒரே விலை. இப்ப தரமான சாக்லேட்டுக்கு விளம்பரம் மற்றும் பேக்கிங் நன்றாக செய்தால் விலை அதிகம் இருந்தாலும் இதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். சென்னை சரவணபவன் ஓட்டலில் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அவர்கள் விரைவு உணவகம், அமர்ந்து சாப்பிடும் உணவகம், பணக்காரர்களுக்காக அதிக விலையுடன் கூடிய ஏசி உணவகம் என மூன்று விதமாக வைத்திருக்கிறார்கள். இதில் விரைவு உணவகத்தில் விற்கும் உணவும், அமர்ந்து சாப்பிடும் உணவகத்தில் விற்கும் உணவும் ஒரே மாதிரியான தயாரிப்பு ஆனால் விரைவு உணவகத்தில் விலை குறைவாக இருக்கும். காரணம் எல்லா விதமான வாடிக்கையாளர்களையும் அவர்கள் விட்டுவிட விரும்பவில்லை.

தினகரன் பத்திரிக்கை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 2005 ஆண்டு கலாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கை வாங்குவதற்கு முன் தி.மு.க காரர்கள் மட்டுமே வாங்கிப்படித்த பத்திரிக்கை அது. அதன்பிறகு ஒரு ரூபாய்க்கு அதனை விற்று பரபரப்பாக்கி இன்றைக்கு தமிழின் No.1 நாளிதழ் அதுவாகவே மாறிவிட்டது. இன்றைக்கு மூன்று ரூபாய் ஆக மாறிவிட்டது. ஆனால் இனி அதனை படிப்பவர்கள் தொடர்ந்து படிக்கவே செய்வார்கள். தனி நபர் வலைப்பக்கம் என்றாலும் அல்லது மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் உங்களை சரியாக கொண்டு சேர்க்கும் உத்தி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களால் வெற்றிபெறவே முடியாது. இன்றைக்கு உங்கள் குழந்தைகள் தொலைகாட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்கித்தர அடம்பிடிக்க காரணம் அந்த பொருட்களை விளம்பர படுத்த பெரியவர்கள் சிந்தித்ததுதான்.

இப்ப தரம் இருக்கு, விளம்பரம் செய்து பெரிய அளவில் விற்பனை ஆகிறது, உங்கள் விளம்பரங்களை குறைக்க வேண்டுமா என்றால், உங்களுக்கு ஒரு போட்டியாளர் வராதவரைக்கும் குறைக்கலாம். ஆனால் போட்டியாளர் வந்துவிட்டால் மீண்டும் முன்னைவிட பலமாக விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். ஹமாம் சோப் அந்த உத்தியைதான் கையாள்கிறது. இன்றைக்கு இந்துஸ்தான் லீவரின் பொருட்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்துவதில் பெருமளவு இருக்கிறது. எத்தனை பேருக்கு ஒரே நிறுவன பொருட்களைத்தான் பயன்படுத்துகிறோம் என்கிற விவரம் தெரியும். நான் பொதுவாகவே சோப் மற்றும் அன்றாட உபயோக வாங்கும்போது எது இலவசங்களுடன் அல்லது தள்ளுபடி விலையில் வருகிறதோ அதையே வாங்குவேன். காரணம் விளம்பரத்திற்காக விலையில் சமரசம் செய்துகொள்ளும் தருணம் அது. நாம்தான் அதனை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காதி கிராப்டில் கிடைக்கும் நிறைய பொருட்கள் மிக தரமானவை ஆனால் பெரும்பான்மையாக விவரமான ஒருசிலரே பயன்படுத்துகின்றனர். இங்கு விளம்பரம் கிடையாது. தரமும் இருக்கும் ஆனால் சந்தை வாய்ப்பு வெகு சொற்பமே.

கோகோ கோலா, பெப்சி பற்றி பேசுவோம். டாஸ்மாக் பானங்களை குடிப்பவர்களுக்கு அறிவுரை கூறும் நண்பர்கள் இதனை பற்றி அறியாமல் இருப்பது ஆச்சர்யமே. முழுக்க உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்கள் இவை . இதனைத்தான் நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்கிறோம். ஒரு லிட்டர் பெப்சியோ, கோக்கோ, இன்னபிற வஸ்துகளோ, அது தயாரிக்க ஆகும் செலவு வெகு சொற்பமே. ஆனால் விளம்பரம் செய்தது மக்களை அடிமையாக்கி இன்று உலகம் முழுதும் அது விற்பனையில் கொடிக்கட்டி பறக்கிறது. குடிக்கும் பாலில் அது கேட்டுப் போகாமல் இருக்க யூரியா கலக்கிறார்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு அதில் இருக்கும் அழுக்கை நீக்க பயன்படுத்துகிறார்கள். பாலுக்கு பற்றாக் குறை கடுமையாக இருக்கிறது, ஆனால் அப்படி பற்றாக்குறை இருக்கும்போதே நிறைய நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. காரணம் சொல்லவேண்டியதில்லை.

"சரக்கு முறுக்கா இருந்தா பத்தாது; செட்டியாரும் முறுக்கா இருக்கணும்"
என்கிற சொலவடை தமிழில் இருக்கிறது..

அடுத்த கட்டுரையில் மாணவர்கள் ஆரம்பித்திருக்கும் நிறுவனம் பற்றி சொல்கிறேன்.

27 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

சொம்மா ஒரு வெளம்பரத்துக்குத்தான் ஹி...ஹி :)

vinthaimanithan சொன்னது…

//இப்ப இந்த விளம்பரம் எவற்றுக்கெல்லாம் தேவை என்றால் அது எல்லாவற்றுக்கும் தேவை என்பேன். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் அதில் சிறந்த தகவல்களையோ அல்லது சிறந்த இல்லகியத்தையோ எழுதுகிறீர்கள் ஆனால் உங்களை வாசிப்பவர் என்று பார்த்தால் அது ஒரு இருபது பேரில் இருந்து ஐம்பது பேருக்குள் மட்டுமே இருப்பார்கள்.//

அடுத்தாப்புல எப்படியெல்லாம் தலைப்பு வெச்சா வலைப்பூ கடை கல்லா கட்டும்னு எளுதுவீங்கன்னு எதிர்பாக்குறேன்! (இதுவும் வெளம்பரத்துக்குத்தான்!)

vinthaimanithan சொன்னது…

மொக்கைப் படத்த எல்லாம் வெளம்பரம் பண்ணியே எப்பிடி கல்லா கட்டுது சன் குரூப்புன்னும் சொல்லி இருக்கலாம்!

அப்பிடியே விஷூவல் மீடியாவுல விளம்பரத்தோட ஃபர்ஸ்ட் ஃப்ரேம்லயே எப்படி பார்வையாளனைக் கட்டிப் போடுறதுன்னும் சொல்லி இருக்கலாம்.ஏன்னா மக்கள்ஸ் விளம்பரம் வந்தவுடனேயே ரிமோட்டை அமுக்கிடுறாங்க!

ஒரு ஜோக் (அல்லது தத்துவம்?!) படிச்சிருக்கேன்! "ஒரு நல்ல விற்பனைப் பிரதிநிதி என்பவன் யார் என்றால் அவன் எஸ்கிமோக்களிடம்கூட குளிர்பதனப் பெட்டியை விற்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்!"

(இது சத்தியமா விளம்பரம் அல்ல!)

என்னது நானு யாரா? சொன்னது…

இன்றைய காலகட்டத்தில வியபாரங்களிடையே போட்டிகள் அதிகமா இருக்கு! அதனால விளம்பரங்களோட பட்ஜெட் எக்கசக்கமா பொருட்களோட தயாரிப்பு செலவோட கூடிப் போகுது. சரியா சொல்லி இருக்கீங்க!

பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்ன்னு கேட்ட காலம் இப்போ இல்லை. எல்லாத்துக்கும் விளம்பரம் தேவை. டாஸ்மாக்கிற்கு தவிர! :))

அன்பரசன் சொன்னது…

இரண்டுமே தல.
உதாரணமா சோனி நிறுவன பொருட்கள் அனைத்துமே மற்ற போட்டி நிறுவன விலையைவிட அதிகமாகதான் இருக்கும். இருப்பினும் விளம்பரத்தின் காரணமா நல்லா வியாபரமும் ஆகுதுல்ல.

vasu balaji சொன்னது…

good one senthil. ஒரு நல்ல உதாரணம் பி.எஸ்.என்.எல். முதல்ல பூத் அதிகம் பண்ணாங்க. அக்கம் பக்கதுல கூப்புட சலிப்புன்னு தனியார் ஃபோனுக்கு விண்ணப்பம் பெருகிச்சி. :)

ஹேமா சொன்னது…

வியாபாரத்திற்கு விளம்பரம் அவசியமானதுதானே செந்தில்.சிலபொருட்களை விளம்பரப்படுத்தி பிரபலயமாக்கிவிட்டுப் பின் தரத்தைக் குறைத்துவிடுவார்கள்.ஆனால் பிரபல்யமானதால் தரம் அதே இடத்திலேயே இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice Post

பெயரில்லா சொன்னது…

//விந்தைமனிதன் சொன்னது…
மொக்கைப் படத்த எல்லாம் வெளம்பரம் பண்ணியே எப்பிடி கல்லா கட்டுது சன் குரூப்புன்னும் சொல்லி இருக்கலாம்!//

அண்ணன் கருத்த ரிப்பீட்டிக்கிறேன் நானும் :)

இரண்டு பொருளும் ஒரே தரம் அப்டினாலும் சில பேரு அவங்க பிடிச்ச செளிப்ரடீஸ் வர்ற விளம்பர பொருளைத்தான் வாங்குறாங்க..
நல்ல பதிவு அண்ணே.. !

PB Raj சொன்னது…

என்னத்த சொல்ல மீடியா இருந்தோல் வரட்டியை கூட விற்கலாம் என்ற நிலை தமிழ்நாட்டு வளம் அனைத்தும் அரசியல்வாதிகளின் கையில் நாம் என்ன செய்ய போகிறோம்?

காமராஜ் சொன்னது…

செந்தில்...
செதுக்கி செதுக்கி எழுதுகிறீர்கள்.
எதோ ஒரு சரக்கைப்பற்றிச் சொல்லிக்கொண்டே
இன்னொரு சரக்கையும்
விற்றுவிட்டீர்கள்.
அழகு.

பெயரில்லா சொன்னது…

கு பொதுவாகவே அது எத்துனை தரமாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் இல்லையென்றால் அதன் விற்பனை நினைத்த அளவிற்கு இருக்காது என்பதே உண்மை

கவி அழகன் சொன்னது…

சிந்தனையை கிளறிவிடும் அருமையான படைப்பு

அம்பிகா சொன்னது…

\\நீங்கள் ஒரு வலைப்பக்கம் வைத்திருக்கிறீர்கள் அதில் சிறந்த தகவல்களையோ அல்லது சிறந்த இல்லகியத்தையோ எழுதுகிறீர்கள் ஆனால் உங்களை வாசிப்பவர் என்று பார்த்தால் அது ஒரு இருபது பேரில் இருந்து ஐம்பது பேருக்குள் மட்டுமே இருப்பார்கள். இதுவும் தமிழ்மணம், இன்லி போன்ற திரட்டிகளில் நீங்கள் இணைத்தால் மட்டுமே சாத்தியம்.\\
மிகச்சரி.

Unknown சொன்னது…

மேட் இன் ஃபாரின்ன்னு கவர்ல போட்டா, பழய சோறு பாக்கெட் கூட பிச்சிகிட்டு ஓடும்.

மக்கள் சிந்திக்க மறந்து மாமாங்களாச்சு மாப்ள..

அலைகள் பாலா சொன்னது…

திருப்பதி பெருமாள்க்கு வர்ற கூட்டம் மத்த பெருமாளுக்கு வரலையே. சாமிக்கே விளம்பரம் தான் தேவை. இல்லனா நைவேத்தியத்துக்கு சிங்கி தான்.

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//தனி நபர் வலைப்பக்கம் என்றாலும் அல்லது மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் உங்களை சரியாக கொண்டு சேர்க்கும் உத்தி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களால் வெற்றிபெறவே முடியாது.//

- வாஸ்த்தவம்...

தமிழ்போராளி சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் தோழரெ! விளம்பரம் விளம்பரமாக வந்தால் பரவாயில்லை. மக்களை கவர பெண்களை வைத்து மிக கேவலமாக விளம்பரம் செய்கிறார்கள். அதை பற்றி உங்கள் கருத்து என்ன? விளம்பரம் தேவைதான் ஆனால் கவர்ச்சி பொருளாக்கி விட்டனர் பெண்களை.இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்..

பெயரில்லா சொன்னது…

ஆமாம் நண்பரே..பொருளின் தரத்தை விட விளம்பரம் முக்கியமாகிறது..விளம்பரம் பண்ண கத்துக்கணும்..நன்றி

Jayadev Das சொன்னது…

Dinakaran No.1 Paper- kalaththin Kodumai, Tamilan Bad Time

ராஜ நடராஜன் சொன்னது…

எனது ஓட்டு பொருளின் தரத்துக்கே!

தரமில்லாமல் ஒரு பொருளை விளம்பரம் செய்யும் போது பரிட்சித்துப்பார்க்கலாம் என்று ஒரு முறை வாடிக்கையாளரே மிஞ்சுவர்.

வாடிக்கையாளரை நிரந்தரப்படுத்துவது தரமே!தரமே!தரம்தான் என்று பின்னூட்டத்தை முடித்துக்கொள்கிறேன்!

உமர் | Umar சொன்னது…

// நான் பொதுவாகவே சோப் மற்றும் அன்றாட உபயோக வாங்கும்போது எது இலவசங்களுடன் அல்லது தள்ளுபடி விலையில் வருகிறதோ அதையே வாங்குவேன். //

சோப் மற்றும் அன்றாட உபயோகப் பொருட்களுக்கு இலவசங்கள் கொடுப்பது மூன்று காரணங்களுக்காகவே இருக்கும்.

முதல் மற்றும் முக்கியமான காரணம். அதனுடைய விலை ஏறும்போது. உதாரணத்திற்கு இன்று ஹமாம் சோப் Rs.23/- MRP உள்ளது விற்பனையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சில மாதங்கள் கழித்து அதனுடைய MRP Rs. 24/- ஆக உயர்த்தப்படும்போது, ஏதேனும் ஒரு இலவசம் ஷாம்போ, சீப்போ வரும். அந்த இலவசம் வரும்போது மக்கள் விலை கூடியிருப்பதை நிச்சயம் கவனிக்க மாட்டார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அந்த இலவசத்தில்தான் இருக்கும். சில நாட்கள் கழித்து, அதே பொருள் Rs.24/- என்னும் விலையில், இலவசம் இல்லாமல் வரும். விலையேற்றத்தை நுகர்வோர் கண்களில் இருந்து மறைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே இலவசம் மேற்கொள்ளப்படுகின்றது. (ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவை வருடத்திற்கு இரண்டு முறை இலவசம் அளிப்பார்கள்.)

இரண்டாவது காரணம், மூலப்பொருட்களின் விலைக் குறைந்திருக்கும்போது. கோதுமை மாவு வகைகளில் வருடத்திற்கு ஒரு முறை சால்ட் இலவசமாக கொடுப்பார்கள். அப்பொழுது கோதுமை விளைச்சல் நேரமாக இருக்கும். கோதுமையின் விலையும் குறைந்திருக்கும். ஆனாலும், கோதுமை மாவின் விலையை குறைக்காமல், சில காலம், சால்ட் போன்ற சில இலவசங்களைக் கொடுப்பார்கள். கோதுமை விலையையும், கோதுமை மாவின் விலையையும் மக்கள் அப்பொழுது ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க செய்யும் நடைமுறை.

மூன்றாவது காரணம்தான் வியாபாரப் போட்டி போன்றவை. புதிதாக வந்த பொருளோடோ அல்லது சந்தை நிலவரத்தைப் பொறுத்தோ வியாபாரப் போட்டி அமையும். ITC நிறுவனம் நுழைந்தபின்பு HLL, Britannia போன்ற நிறுவங்கள் சற்று அடி வாங்கியதை சமாளிக்கவே இப்பொழுது வரும் இலவசங்களும், விளம்பரங்களும். தீபாவளி நேரத்தில் மட்டும் குலோப் ஜாமூன் மிக்ச்களுக்கு இலவசம் வரும். கவனித்திருக்கின்றீர்களா?

செல்வா சொன்னது…

//உங்களுக்கு ஏன் மொக்கை பதிவுகள் ஓட்டு வாங்குகின்றன//

நீங்க ஏன்னா மொக்கை பதிவுகளுக்கு அவ்வளவு ஒண்ணும் அதிக வோட் விழுரதில்லை .. நானும் எவ்வளவோ முயற்சி செய்யுறேன் .. 35 வோட்டுக்கு மேல வர மாட்டேன்குது ..

செல்வா சொன்னது…

// காதி கிராப்டில் கிடைக்கும் நிறைய பொருட்கள் மிக தரமானவை ஆனால் பெரும்பான்மையாக விவரமான ஒருசிலரே பயன்படுத்துகின்றனர். இங்கு விளம்பரம் கிடையாது. தரமும் இருக்கும் ஆனால் சந்தை வாய்ப்பு வெகு சொற்பமே.//

அதே போல விளையும் கொஞ்சம் குறைவாக உள்ளது .. ஆயினும் சில பொருட்கள் தரம் குறைந்தவையாகவும் இருக்கின்றன ..!!

ராஜ நடராஜன் சொன்னது…

கும்மியடிக்கும் மூன்று காரணங்களும் இந்தியாவுக்கே பொருந்தும் என நினைக்கின்றேன்.

ஏனைய நாடுகளில் ஏற்றுமதி செய்யும் போது (20 அடி,40 அடி கண்டெய்னர்) குறிப்பிட்ட கால வரையறைக்குள் விற்கா விட்டால் விற்பனை மூலம் குறைந்த விகிதாச்சார லாபத்துடனோ அல்லது அசலாவது மிஞ்சட்டும் என்ற எண்ணத்தில் விற்பது தள்ளுபடியும் 1+1ம்.

தமிழகத்தில் இப்ப 1 வாங்கினா 1 இலவசம் - நிலம் விற்பனையில் களை கட்டுது போல தெரியுதே!

உமர் | Umar சொன்னது…

//ஏற்றுமதி செய்யும் போது (20 அடி,40 அடி கண்டெய்னர்) குறிப்பிட்ட கால வரையறைக்குள் விற்கா விட்டால் விற்பனை மூலம் குறைந்த விகிதாச்சார லாபத்துடனோ அல்லது அசலாவது மிஞ்சட்டும் என்ற எண்ணத்தில் விற்பது தள்ளுபடியும் 1+1ம்.//

இறக்குமதி செய்யப்பட்டவைகளுள் உணவுப்பொருட்கள் இருந்தால், காலவரையறை முக்கியமான ஒன்றாக இருக்கும். மற்ற பொருட்களுக்கு, இடம், சேதாரம் உள்ளிட்ட வேறு காரணிகள் இலவசங்களைத் தீர்மானிக்கும். (அத்தகைய பொருட்களுக்கு 25 சதவிகித விற்பனையே அசலைப் பெற்றுத் தந்துவிடும்). இறக்குமதிப் பொருட்களுக்கான இலவசங்களை முடிவு செய்வது விற்பனையாளர். சோப் உள்ளிட்ட அன்றாட உபயோகப் பொருட்களின் இலவசங்களைத் தீர்மானிப்பது, சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதுலேயும் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?