10 மார்., 2013

வண்ணத்துப்பூச்சிகள் ...

Photo : KRP Senthil
பத்தாம் வகுப்பில் 
உடன் படித்த 
ரேணு என்கிற ரேணுகாதேவி
சலவைத்தொழிலாளியின் மகள்
இப்போதும் மிகுதியாக 
சாதி பார்த்துப்பழகும் 
என் ஊரில்
அவளென்றால் 
யாவருக்கும் பிரியம்தான் 
அழகு தேவதை அவள்
ஒரு நாள் 
அவளும் நானும்
இன்னபிற தோழிகள் 
சூழ குழுமியிருந்தபோது
கடந்து போனதொரு 
வண்ணத்துப்பூச்சி
”அய்.. வன்னாத்திப்பூச்சி” யென்றேன்
சடாரெனக் கோபம் கொண்ட 
ரேணுகா
“அது வண்ணத்துப்பூச்சிடா” 
எனத்திருத்தினாள்..

பணிரெண்டாம் வகுப்பில்
அரையாண்டுத் தேர்வின் 
மத்தியில்
எங்கள் காதலை
கழிவறை சுவற்றில் 
உறுதிப்படுத்தினார்கள்
சக தோழர்கள் ..

எங்கள் உறுதியால் 
ஒரு சலவைத் தொழிலாளியின் 
குடும்பம் 
ஊரை விட்டு வெளியேறும் 
உத்தரவை ஏற்றுக்கொண்ட 
நாளொன்றின் நள்ளிரவில்
ஊர் கடந்தோம் 
இருவரும்
எல்லையைக் கடக்கும் முன் 
பிடிபட்டு 
உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டோம் 
மறுநாள் காலை 
அவளின் தற்கொலையுடன் விடிய 
அன்றிரவு நான்
தற்கொலை முயற்சியில் 
காப்பற்றப்பட்டேன்.
இப்போதும் 
ஊருக்குப் போனால் 
தனியறைகளில் இருக்கும் நேரம் 
எங்கிருந்தோ வருகிறது 
எனது அறைக்கு
வண்ணத்துப்பூச்சியொன்று 
ஏதோ ஒரு மூலையில் 
வெகு நேரம் தவமிருக்கும் 
பின் 
ஏதோ ஒரு பல்லிக்கு உணவாகி
செத்துப்போகும் 
ஒவ்வொரு முறையும் 
ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சி..

ஊருக்குப்போவதை 
நிறுத்திய பின்னரும் 
எப்போதாவது
இந்த நகரத்தின் கொடிய இரவுகளில் 
சாத்திய சன்னல்களையும் மீறி 
எப்படியோ வந்துவிடுகிறது 
ஒரு வண்ணத்துப்பூச்சி
எங்கிருந்தோ வந்து சேர்க்கிறது 
ஒரு பல்லி..

சமீப காலமாக
வண்ணத்துப்பூச்சிகளை
ரகசியமாக
தின்றுகொண்டிருக்கிறேன்...


5 கருத்துகள்:

ரமேஷ் வீரா சொன்னது…

arumai annaa...

Unknown சொன்னது…

உள்ளம் தொட்ட வரலாறு!

manjoorraja சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு. மிகவும் நெகிழ்வுடன்.

Unknown சொன்னது…

அனுபவ ரசனையுடன் ஒரு கவிதை . நன்றி

அகலிக‌ன் சொன்னது…

காதலின் வலியா, ஜாதியத்தின் சாடலா, ஆண்மட்டும் காப்பாற்றப்படும் அவலமா,எதிக்கமுடியாத இயலாமையா என்னவோ போங்க ரொம்பவும் மனசுக்கு கஷ்டமா இருக்குது.