4 மார்., 2013

தலைவா!!!….


Photo : Ramesh veera
நாம் எல்லோருமே எதோ ஒரு செண்டிமெண்டுக்கு அடிமையாக இருக்கிறோம். பொதுவாகவே தொன்றுதொட்டு சகுனம் பார்த்தோ அல்லது நாள், நேரம் பார்த்தோ காரியங்களை தொடங்குவது நமது வழக்கம் என்பதால் இப்படி ஆகியிருக்கலாம். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களுக்கு இப்படியான செண்டிகள் அதிகம். ஜெயாவுக்கு பச்சையும், கருணாவுக்கு மஞ்சளும் போல. பெரியார் துக்கத்தின் அடையாளமாக கருதப்பட்ட கருப்பை பயண்படுத்தினார். அவர் வாரிசுகள் இப்போது மங்களகரமாக மாறிவிட்டனர்.
 
இங்கு தலைவர்களை காட்டிலும் தொண்டர்கள் நிலைதான் படுமோசம். தி.மு.கவில் இருக்கும் பழைய ஆட்களைத்தவிர புதியவர்கள் பக்திப்பழங்களாக மாறிவிட்டாலும். அ.தி.மு.கவில்தான் தலைவி முதல் அடிமட்ட கடைசித்தொண்டன் வரை தீவிர ஆன்மீகவாதிகளாகவோ அடிமைகளாகவோ இருப்பதில் பெருமை கொள்பவர்கள். பகுத்தறிவு பகலவன் முதற்கொண்டு ஏகப்பட்ட அடைமொழிகளை கூசாமல் பொய் சொல்லி வைக்கப்படும் ஃப்ளெக்ஸ்களுக்கு பின்னால் கிடைக்கப்போகும் காண்ட்ராக்டுகளுக்காகவோ, பதவிகளுக்காகவோதான் என பழக்கத்தில் இருக்கும் அரசியல் நண்பர் சொன்னார்.

இங்கு அத்தனை அரசியல் கட்சிகளுமே இந்த தேசத்தை முன்னேற்றுவதாகவும், ஏழை மக்களை பணக்காரர்களாக மாற்றுவதாகவும் தமது கொள்கைகளாக கொண்டவைகள்தான் ஆனால் படிப்படியான முன்னேற்றம் மட்டுமே சாத்தியம் என்பதால் முதலில் தலைவர், அவர்தம் குடும்பத்தினர், அப்புறம் அமைச்சர்கள், மாவட்டம், நகரம், ஒன்றியம் என ஒவ்வொரு தலைவராக அவர்தம் குடும்பத்தினராக வளர்வதற்க்குள் மாற்றுக்கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். இந்த தேசமே ஊழல் வெள்ளத்தில் மிதந்தாலும், சாதரண மக்களின் பாக்கெட்டில் கைவிட்டு தைரியமாக வரி, விலைவாசியென பிடுங்கிக்கொண்டாலும் நமக்கென கிடைக்கும் போலி மதுக்களோடும் அதனை விற்கும் டாஸ்மாக் ஊழியன் குவாட்டருக்கு அஞ்சு ரூவாயும், பீருக்கு பத்து ரூபாயும் கூடுதலாக வசூலித்தாலும் கடை சாத்தும் கடைசி நேரம் வரைக்கும் கூட்டமாக குடித்து நமது தேசத்தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கோடிகளில் புரளச்செய்யும் கடமைகளை சரிவர செய்வதும் ஆச்சர்யம்தான்.

ஒட்டு மொத்த இந்தியர்களுமே பணவீக்கத்தின் படிகளில் இறங்கிக்கொண்டிருக்கிறோம். இந்திய பணமதிப்பு அதளபாதாளத்தை நோக்கி போகின்றது. ஒரு ரூபாய் இட்லியால் எல்லோருடைய பசியையும் போக்கிவிடும் அபாரமான திட்டங்களால் தமிழகம் மேலும் இருளில் மூழ்க. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.கவோ அதன் தொகுப்பில் இருந்து மின்சாரம் தரவிடாமல் தடுத்துக்கொண்டு பார்த்தீரா அ.தி.மு.க ஆட்சியை என ஃபேஸ்புக்கில் பொங்கி வழிகிறது. எதிர்கட்சியாக இருக்கும் தே.மு.தி.க முகவரியை கானாமல் போனவர்கள் பட்டியலில்தான் தேடனும். அவதூறு வழக்குகளில் ஆஜாராவதும் அது சமயம் ஏதாவதொரு கோர்ட் வாசலில் நின்றுகொண்டு செயல்படாத ஆட்சி என செயல்படாத வி.காந்த் கொடுக்கும் பேட்டியைப் பார்த்தால் வருகிற நாடாளுமன்றத்தில் ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது.

ஆனால் இவர்கள் அததனை கட்சிகளையும் விட தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான் நமக்கு உண்மையாக பொழுதுபோக வைக்கிறார்கள். அதிலும் 15 நாள் நாராயணசாமியை தலைவர் கவுண்டமணி இருந்தால் இன்னேரம் பின்னி பெடலெடுதிருப்பார். எப்படி இந்தாளு மட்டும் கூச்சப்படாம பொய் சொல்றாரு? மண்மோகன் பேசாம காமெடி செஞ்சா! இவரு பேசியே காமெடி செய்றாரு கூடவே துனைக் காமெடிக்கு ஞானதேசிகன்னு ஒருத்தர். இந்த மாதிரி அரசியல் தலைவரை எல்லாம் பாத்தபின்னும் அப்துல்கலாம் அப்படின்னு ஒருத்தர் நாம 2020ல வல்லரசா மாறுவோன்னு சொல்றாரு!!. நம்ம பவர் ஸ்டார வச்சு வல்லரசு படத்தை ரீமேக் வேனா பன்னலாம்.
நல்லக்கண்ணு போன்ற நேர்மையான அரசியல் தலைவர் பின்னாடி எந்த தொண்டனும் போறது கிடையாது. அவருக்காக கைக்காச போட்டு பேனர் எல்லாம் ஒரு பயலும் வைக்க மாட்டான். அவரே அராசங்க பஸ்ல போறப்ப நம்மையெல்லாம் சைக்கிளில்தான் போவச்சொல்வாருன்னு தெரியும். இப்படியாக சகல வியாதிகளிலும் இருந்து சொஸ்தப்படுத்தும் வைத்திய சிகாமணிகளாய் நமது அரசியல் தலைவர்கள் கடவுள்களாகும் நாள் காத தூரத்தில் இல்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி அலுத்துப்போன தமிழ்கூறும் நல்லுலகம் வாஸ்து, நியூமராலஜி, அல்லது இரவு நேர சேனல்களின் வருமானத்துக்குகாக டாலர் விற்கும் நவீன சாமியார்கள் வரை ஆயிரம் செண்டிமெண்ட்கள் நம்மை உய்விக்க எல்லாம் வல்ல நித்யானந்தா அருள் புரியட்டும்.

கருத்துகள் இல்லை: