Photo : KRP Senthil |
ப்ரியா பனிரெண்டாம் வகுப்பு
வண்ணத்துப்பூச்சிகள் பிடிக்கும்
அவளுக்கு
எல்லா வண்ணங்களிலும்
வண்ணத்துப்பூச்சி வரைவாள்
ஒவ்வொரு நோட்டுக்கும்
ஒரு
கலர் வண்ணத்துப்பூச்சி
ப்ரியா விலங்கியல் முதல் ஆண்டு
கல்லூரியில் விலங்கியல்தான்
கிடைத்தது
பொம்பளை பிள்ளைக்கு
அதுவே அதிகம் என்றார் மாமா,
இப்போதைக்கு கல்யாணம் கிடையாது என்பதால்
பிரியாவும் ஒத்துக்கொண்டாள்
சோதனைச்சாலை பெரிய
சோதனையாகிவிட்டது அவளுக்கு
எலி
தவளை
கரப்பான் பூச்சி
இன்னபிற பூச்சி வகைகளை
ஆராய்வதில் பிரச்சினை இல்லை
வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய
ஆராய்ச்சியில்
அவள் நிலைகுலைந்தாள்
இறந்த வண்ணத்துப்பூச்சிகள்
மூன்றாவது வருடமுடிவுவரை
கனவுகள் முழுதும்
விடாது விரட்டின
தேர்வு முடிவுகள் சாதகமாக இல்லாததால்
சரவணனுக்கு வாழ்க்கைப்பட்டு
சென்னைக்கு வண்டியேறினாள்
கட்டிடங்களால் நிரம்பிய சென்னையில்
வண்ணத்துப்பூச்சிகள் இல்லாத
வாழ்க்கை..
ப்ரியாவின் மகள் பாவனா
ரங்கனாதன் தெருவில்
ஒரு
சாலை விற்பனையாளனிடம்
விதவிதமாய்
சுவற்றில் ஒட்டும் பேப்பர்
வண்ணத்துப்பூச்சிகளை
வாங்கி வந்து
அறை
முழுவதும் ஒட்டியிருந்தாள்
பாவனா..
பாவனாவின் அம்மா ப்ரியா
பாவனாவை
கல்லூரியில் சேர்க்கும் காலம்
கணிப்பொறி இயலில் சேர்த்து
வண்ணத்துப்பூச்சிகளை காப்பாற்றியதாக
பெருமை கொண்டாள்
அரசுக் கல்லூரியில் படித்த
அம்மா ப்ரியா..
பாட்டி ப்ரியா
தொலைக்காட்சியில்
சீரியல் பிடிக்காமல்
பேத்தியுடன் கார்ட்டூன்களிலும்
அனிமல் பிளானெட்டிலும்
வண்ணத்துபூச்சிகள் பற்றிய
நிகழ்வுகளில்
மனதை பறிகொடுக்கிறாள்
இப்போதெல்லாம்..
1 கருத்து:
வண்ணத்துப் பூச்சியாய் பறக்க ஆசைப்பட்ட ஒரு பெண் கார்ட்டூன் சித்திரங்களில் மனசை பழக்கப்படுத்திக் கொண்ட கவிதை அழகு அண்ணா....
கருத்துரையிடுக