யாருடனாவது சண்டை போட்டுவிட்டு திடீரென ஏதாவது ஊருக்கு
பயணப்பட்டு இருக்கிறீர்களா? அப்போது என்ன மாதிரியான சிந்தனை தோன்றும்
உங்களுக்கு? வாழ்வின் முடிவை நோக்கிய இறுதிப்பயணமாக முடிவு செய்துவிட்ட
பயணத்தை துவங்குவதற்கு சற்று முன்பாக இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன்
நான் வாழ்வை முடித்துக்கொள்ளவேண்டும்?, ஒரு சன்னியாசியாக உலகை துறந்து
வாழலாமே என்று கூட தோனியது. ஆனால், யாருக்காக? எதற்காக எனது வாழ்வை
சாமியாராக நீட்டிக்க வேண்டும்?. காரனமற்ற வாழ்வை ஒரு பிச்சைக்காரனைப்போல
வாழ என்னால் முடியாது. அது கொடுமை. எல்லோரிடமும் இறைஞ்சி வாழ என்னால்
ஆகாது. இப்போது மட்டும் என்ன மாதிரியான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என
மனசாட்சி கேள்வி கேட்கிறது. அதனை குப்பையில் போட்டுவிட்டு நான் முடிவில்
உறுதியாய் இருக்கிறேன். இருப்பேன். இப்போது கூட இருத்தலைப்பற்றியே எழுதும்
என் மனதை என்ன செய்து வழிக்கு கொண்டுவர!.
சண்டைக்கான காரனங்களை விடுங்கள். இப்படி ஒரு கடைசி கடிதத்தை
யாராவது எழுதியிருப்பார்களா? அனேகமாக ”என் தற்கொலைக்கு யாரும் காரனமில்லை”
என ஒற்றை வரியில் யாராவது எழுதியிருக்கலாம். நான் தற்கொலை
செய்துகொள்ளப்போவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. குழப்புகிறேனா?
மேற்கொண்டு படிக்க எரிச்சலாக இருந்தால் மூடிவிட்டு வேறுவேலை பாருங்கள். என்
கதையை கேட்டு என்ன ஆகிவிடப்போகிறது. யாரிடமாவது உச் கொட்டியபடி விமர்சனம்
செய்ய உதவலாம்.மேலும் நான் என் சண்டைக்கான காரனத்தை சொல்லப்போவதும் இல்லை
என்பதால், நீங்கள் தராளமாக டிவியில் சீரியல் பார்க்கலாம். இல்லை தொடர்ந்து
படிப்பேன் என்பவர்கள் பாவம் செய்தவர்களாக கடவீர்கள்.
பொதுவாகவே பெரும்பாலோர் என்னுடைய நிலமையை கடந்து
வந்திருப்பவர்களாக இருப்பீர்கள். சமயங்களில் நம் கையாலாகாத்தனத்தை
சகிப்புத்தன்மை எனும் லேபிள் ஒட்டி மறைத்துவிடுவோம். இதற்கு முன்பெல்லாம்
என் முடிவுகளை மாற்றுவது அரசியல்வாதிகளுக்கு வைக்கப்படும் போஸ்டர்கள்தான்.
அந்த போஸ்டர்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்களில் தங்கள் தலைவகடவுளுக்கு அவர்கள்
சூட்டியிருக்கும் பட்டங்களை பார்க்கையிலும் அதற்கு கீழே சின்ன சின்ன
கட்டங்களாக அடுத்தடுத்த வட்ட பொறுப்புகளில் இருக்கும் பக்த கேடிகளின்
புகைப்படம் பார்க்கும்போதும், இந்த மாதிரியான சமூகத்தில் இவர்களெல்லாம்
வாழும்போது நாம் ஏன் வாழக்கூடாது? என்கிற அறச்சீற்றம் என்னை மீட்டெடுக்கும்
கர்த்தாவாக மாறும்.
ஆனா நேற்று பாருங்க நிலமை அவ்வளவு
மோசமா போகக்கூடாது. இத்தனை வயதில் ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகாம இருக்கிறது
ஒரு பிரச்சனையாங்க. நாப்பது வயசெல்லாம் ஒரு வயசா? இல்லை கல்யாணம்
பன்னாத்தான் இந்த லோகத்துல மனுசனா வாழுற தகுதி இருக்குன்னு ஏதாவது
சாங்கியம் இருக்கா? வருமானத்துக்கே மானம் கெட்டுப்போன வக்கு இல்லாத எனக்கு
இன்னொரு துணைய வச்சுகிட்டு ரெண்டு பேரும் தெனமும் அம்மா உணவகத்துலயா
சாப்பிட முடியும்? ஆனாலும் எனக்கு அவ்வபோது எழும் காம எழுச்சிகளை சுயமாக
தீர்த்துக்கொள்ள வழிமுறைகள் இருக்கும்போது திருமணம் என்பது தேவையற்ற
ஒன்றாகவே நான் நினைக்கிறேன். இதில் என்னங்க தப்பு இருக்க முடியும்.
அதவிடு்ங்க நம்ம வாஜ்பாய், காமராஜர்ன்னு .... அடடா கொட்டாவி விட
ஆரம்பிச்சுட்டீங்க பாத்தீங்களா?.
நான் கிளம்பறேங்க.
தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?.
அப்புறம் என்ன வாழ்வின் முடிவு என்கிறீர்களா?. அதாங்க திருமணம்
செய்துகொள்ளப்போகிறேன்!!. இனி என்னை கேலி பேசும் அத்தனை பேரின் வாயையும்
மூடப்போகிறேன். எனக்கென ஒரு ராஜகுமாரி கிடைக்காவிடினும் அவர் வீட்டில்
கழுவித்துடைக்கும் ஒரு வேலைக்காரியாவது கிடைக்காமலா போவாள்?. அதான் எந்த
ஊருன்னு கூட முடிவு பன்னாம கிளம்பிட்டேன். போகிற இடத்தில் எனக்குன்னு
ஒருத்தி கிடைபான்னு இதனை எழுதறப்பவே சனி மூலையில ஒரு பல்லி அதனை
உறுதிப்படுத்திடுச்சு. அப்ப நான் கெளம்பட்டுங்களா?