6 ஆக., 2013

சில நேரங்களில் மட்டும்...

Photo : KRP Senthil
இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். மெல்ல ஆட்களின் நடமாட்டம் சுறுசுறுப்பாக மாறிக்கொண்டிருந்தது. தெருவின் டீக்கடையில் டி.எம்.எஸ் உரத்த குரலெடுத்து எம்.ஜி. ஆருக்காக பாடிக்கொண்டிருந்தார். எப்போதும் அதிகாலைப்பொழுதை ரசிப்பவன் நான். அதிலும் மார்கழி காலத்து காலை வேளைகள் அற்புதம். இப்போது ஆடி மாதம் என்பதால் காற்று அவ்வப்போது தூசிகளை முகத்திலடித்து சென்றது. நான் ஊரை விட்டு நீங்கிக்கொண்டிருந்தேன். இது தற்காலிகம்தான் என்றாலும், மனசு கிடந்து அல்லாடியது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவன் நிலமை என்பது பொதுவாகவே எல்லோருக்கும் சலிப்பூட்டுகிற வெறுமையை அவ்வப்போது தருகிற வாழ்வைத்தான் பரிசளிக்கிறது. அங்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் பணம் மட்டுமே.

சிங்கப்பூர் என்பது பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் மாதிரி ஆகிவிட்டது என் ஊர்க்காரர்களுக்கு. பெரும்பாலன வீடுகளில் ஒருவருக்கு மேல் சிங்கப்பூர் சம்பாத்யத்தில்தான் தன் குடும்பத்தின் பொருளாதார நிலமையை உயர்த்தியிருக்கிறார்கள். பொதுவாகவே விடுமுறைக்கு ஊருக்கு வரும் ஆட்கள் சொல்லுவார்கள். ஊருக்கு போன மொத வாரம் தடபுடலா கறி, மீனுன்னு நம்பள கவனிக்கிறதுதான் அவங்க வேலையா இருக்கும், ரெண்டாவது வாரம், சாம்பார், புளிக்குழம்பு வாரம், மூனாவது வாரம் காலை சாப்பாடு பழைய சாதமா மாறும். ஒடனே நாம பொட்டிய கட்டிர வேண்டியதுதான் என்பார்கள். மாதத்தின் முப்பது நாளும் காலை எட்டு மணி துவங்கி நள்ளிரவு வரை வேலை பார்க்கும் பெரும்பாலான நபர்கள். கிடைக்கும் மொத்த சம்பளத்தையும், சொற்ப காசை மட்டும் சாப்பாட்டுக்கு வைத்துக்கொண்டு  ஊருக்குத்தான் அனுப்புவார்கள். உழைக்கவே பிறப்பெடுத்தவர்கள் மாதிரி அற்பணிப்புக்கான எதிர்பார்ப்புகள் ஏதுமற்று பிள்ளைங்க நம்ம மாதிரி கஸ்டப்படாம, படிச்சு பெரியாளா வந்தாப்போதும் என்பதுதான் அவர்களின் ஆசை. அப்படிப்பட்டவர்களின் பிள்ளைகளும் இன்று படித்து அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள்.

என்னை பணம் சம்பாதிக்கனும் என்றெல்லாம் வீட்டினர் சிங்கப்பூர் அனுப்பவில்லை. ஊரில் தேவையில்லாத பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வெட்டியா ஊர் சுற்றிக்கொண்டிருந்தவனை இப்படியே விட்டால் சரிப்பட மாட்டான் என சிங்கப்பூர் அனுப்பிவைத்தனர். எனக்கும் வெளிநாட்டுக்கு வந்தபிறகு சிங்கப்பூர் வாழ்க்கை பிடித்து நான்கு ஆண்டுகள் கடந்தபோது. பத்தாவது கூட தாண்டாத ஆள் நான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே கேம்பஸ் வேலை கிடைத்த தம்பி அவ்வருடமே தன் காதலியை கரம்பிடித்து விட்டான். கல்யாணம் முடிஞ்ச மறுநாள் தொலைபேசியில் “ஒன்ன விட்டுட்டு நான் இப்படி அவசரப்பட்டிருக்க கூடாதுன்னு” சொல்லும்போதே உடைந்து அழுதான். நான் சமதானப்படுத்தி ”நீயே எனக்கு ஒரு பெண்ணை பாருடா!” என்றேன். அதன் பிறகு அடுத்த வருடமே இன்னொரு தம்பிக்கும் காதல் திருமணம், இது உள்ளூர் பெண். பசங்க அவசரப்பட்டதால் பெண் ஆறு மாசம் கர்ப்பம். பிரச்சினை பெருசாகக்கூடாது என திருமணம் முடித்து விட்டனர்.

எனக்கும் பொண்ணு ஒன்னுமே கெடைக்கலன்னு சொல்வாங்க, எல்லாப்பொண்ணுகளுமே காலேஜ் படிச்சிருக்குங்க. அதனால அமைய மாட்டேங்குதுன்னு இப்பல்லாம் என் ஜாதகத்த கொறை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. வயசும் 36 ஆச்சு. இதுக்கு மேல கல்யாணமான்னு ஆயாசமா இருக்கும். கேக்குற எல்லாரும் துக்கம் விசாரிக்கிற மாதிரி கேட்பது மட்டும் எரிச்சலா இருக்கும். இம்முறை லீவுக்கு வந்தவுடன் குலதெய்வ பூஜை விமர்சையாய் நடந்தது. தம்பிங்க, தங்கச்சிங்க என எல்லோரும் குடும்பத்துடன் இருந்தனர். பூஜையெல்லாம் விமர்சையாய் முடிஞ்ச பிறகு பெரிய தங்கச்சியோட புருஷன் “நம்ம ஊர்ல ஒரு பொண்ணு இருக்கு, கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துல புருஷன் ஆக்சிடெண்டுல போயிட்டான், நல்ல பெண், பேசி முடிச்சிடவா?” என்றார். குடும்பமே என் பதிலை எதிர்பார்க்க, “பேசி முடிச்சிடுங்க அத்தான்” என்றேன். அப்புறம் ஜாதகம் பார்க்கும் வேலைகள் தடபுடலா நடந்துச்சு. ஜோசியக்காரனுக்கு என் மேல் என்ன முன் ஜென்மப்பகையோ ஒத்து வராதுன்னு சொல்லிட்டான். ஆனாலும் பிடிவாதமா எப்படியோ பெரிய தங்கச்சி புருஷன் சமாளிச்சு பரிகார நிவர்த்தி செய்துக்கலான்னு சொல்லி நிச்சயம் செஞ்சுட்டாரு.

ஒரு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம் வைக்கனுன்னு பரிகார ஜோசியன் சொல்லிவைக்க விடுமுறை முடிந்து சிங்கப்பூர் கிளம்புகிறேன். நேற்றுதான் அந்தப்பெண்ணைப் பார்த்தேன். தயங்கி.. தயங்கிப்பேசினாள். முந்தைய கணவனை மறக்கமுடியவில்லை எனும்போது குலுங்கி அழுதாள். சங்கடமாக இருந்தது. அழுது முடித்தபின் ”சாரிங்க” என்றாள். இந்த ஒரு வருட காலம் அவளை அவள் நினைவுகளில் இருந்து மீட்டெடுக்கலாம். விதவை பெண்ணிற்கு வாழ்வு கொடுக்கிறோம் என்கிற பெருமை நேற்று வரைக்கும் இருந்தது. இப்போது எப்படி அவள் முதல் கனவனை விடவும் நல்லவனாக இருப்பது என்கிற கவலை வந்துவிட்டது.

முன்பெல்லாம் திருமணம் ஆகாத கவலை சில நேரங்கள் மட்டுமே வந்து போகும். இனி எப்போதும் இவள் பற்றிய கவலை இருக்கப்போகிறது. திருச்சி விமான நிலையத்தில் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு விமானத்தில் அமரும் வரைக்கும் அவள்தான் கண்களுக்குள் இருந்தாள். மெல்ல கண்ணயர்ந்தபோது, விமானம் உயரே பறந்துகொண்டிருந்தது.  

4 கருத்துகள்:

vijayan சொன்னது…

எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ ஆசாரியன் இராமானுஜர் அருள் புரியட்டும்.

rajasundararajan சொன்னது…

சிக்கலான திருப்பம். நானும் உணர்வுகளை மதிப்பவன்தான் என்றாலும், நம் சுமூகம் இப்படி இருக்கிறதே என்று வருத்தமாகவும் இருக்கிறது

வெத்து வேட்டு சொன்னது…

is this your real story?
I really bow my head in front of you for agreeing to marry a widow.
I really wish you a happy married life.
Congratulations...

'பரிவை' சே.குமார் சொன்னது…

புனைவு அருமை....