15 ஆக., 2013

ஆதலால் காதல் செய்வீர்...

வெண்ணிலா கபடிக்குழு மூலம் தமிழ் சினிமாவின் அசத்தலான இயக்குனர்களில் ஒருவராக வந்த சுசீந்திரன், நான் மகான் அல்ல மூலம் அதனை மீண்டும் உறுதிபடுத்தினார். அதன்பின் அழகர்சாமியின் குதிரை அவரை இன்னொரு உயரத்துக்கு எடுத்துச்சென்றது. அதன் பிறகு ராஜபாட்டையில் சரேலென கீழிறங்கினார். அவரின் அடுத்த படம் எப்படி இருக்கும்!. உண்மையை சொன்னால் இன்று காலை காசி தியேட்டரில் குறைவான ஆட்களே வந்திருந்தனர். ஆனால் படம் அசத்தலான நிறைவை தந்திருக்கிறது.

படத்தின் கதை வழக்கமானதுதான் இன்றைய தருமபுரி பிரச்சனை, சேரன் மகள் காதல் என டீன் ஏஜ் காதல் அதனால் வரும் பிரச்சனைகள்தான். ஆனால் அதற்கான முடிவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். தருமபுரி இளவரசன் - திவ்யா ஜோடியின் வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியான முடிவைப்போல் இப்படத்திலும் ஒரு அதிரவைக்கும் கிளைமாக்ஸ் இருக்கிறது. பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைக்கும் அக்காட்சிகள் இயக்குனரின் சமூகபார்வையின் ஆழத்தை நம்மால் உணரமுடிகிறது.

இப்போதைய பதின்ம வயதினர்கள் எல்லா முடிவுகளையும் அவர்களே எடுக்கிறார்கள். ஆனால், இச்சமுகத்திற்கு அவர்களை அடையாளம் காட்டிய பெற்றோர்களின் கவுரவத்தைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. எல்லாமே அவசரமான முடிவுகள். பின் விளைவுகளைப்பற்றி கவலைப்படாத நடவடிக்கைகள் என சரியான சமயத்தில் சாட்டையடியாய் வந்திருக்கும் படம்.

முதல் பாதியில் வரும் கல்லூரி காட்சிகளில் படத்தின் மெயின் லைனை ஒட்டியே காட்சிகள் நகர்கின்றன. நாயகன், நாயகி, அவர்களின் நண்பர்கள், அவர்களின் வாழ்வியல் முறைகள் என படத்தை நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்கள்.

இரண்டாம் பாதிதான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. மிக வேகமாக நகரும் திரைக்கதையில் பாத்திரங்களின் உணர்ச்சிகள், மாறிக்கொண்டேயிருக்கும் நிகழ்வுகள் என படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

படத்தில் இயல்பான பெற்றோராகவே வாழ்ந்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அவர் மனைவியாக வருபவர் மற்றும் பூர்ணிமா தம்பதிகள் அசத்தல் என்றால். பாதிக்கப்பட்ட மகளின் தகப்பனாக ஜெயப்பிரகாஷ் தவிக்கும் காட்சிகளில் மனுஷன் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்.

நாயகன் சந்தோஷ் ரமேஷ், நாயகி மனிஷா, மனிஷாவின் தோழி, அந்த குண்டுப்பையன் அர்ஜூன்? பொருத்தமான தேர்வு. யுவன் நேர்த்தியான இசையும், பாடல்களும் தந்திருக்கிறார். ஆனால் நம்மை படத்துடன் ஒன்றவைத்த பெருமைக்கு உரியவர் படத்தின் ஒளிப்பதிவாளர்.

அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம். குறிப்பாக பதின்ம வயதினரும், அவர்தம் பெற்றோர்களும்.

2 கருத்துகள்:

ரூபக் ராம் சொன்னது…

பார்க்க வேண்டும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

படம் குறித்து நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன...

பார்க்க வேண்டிய படம்...