5 பிப்., 2014

முடிவு...

யாரிடமும் சொல்லாமல் கிளம்புவது இதுதான் எனக்கு முதல்முறை. இனிமேல் திரும்பவே மாட்டேன் எனும் முடிவான முடிவுக்கு வந்தபின்  விடைபெற என்ன இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அன்பாய் இருந்தவர்களின் கேள்விகளுக்கு பொய் சொல்லி சமாளிப்பதில் விருப்பம் இல்லை. முதலிரண்டு நாட்கள் எங்காவது அருகில் போயிருப்பேன் என நினைப்பார்கள். அதன்பின் வீட்டில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்பார்கள். கேள்விகள்... பதில்கள்... சந்தேகங்கள் என என்னைத்தேட துவங்குவார்கள். அதற்குள் நான் வெகுதூரம் பயணப்பட்டிருப்பேன்.

வாழ்க்கையில் இதுதான் பாதை என அறியாத, வாழ்வின் போக்கில் பயணிக்கிறவனுக்கு இந்த உலகம் எத்தனை பாடங்களை மிக எளிதாய் பயிற்றுவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?. ஒரு காட்டாறு தன் இயல்பில் பாய்ந்தாலும் அது தன் முன்னே இருக்கும் அத்தனை தடைகளையும் உடைத்து பிரவாகமாய் கீழிறங்கி விடுகிறது. மனித வாழ்க்கையில் நம்மால் பிரவாகமாய் ஊற்றெடுக்க முடியாது. நமக்கு முதல் தடை நாம்தான், சூழ்நிலை நம்மை ஒரு படியில் ஏற்றி பிறகு, இன்னுமிரண்டு படிகளில் இறக்கிவிடுகிறது.

ஒரு எளிய மனிதன் இந்த வாழ்க்கையை கடப்பது என்பது எத்தனை சிரமமானதாகிவிடுகிறது. தினசரி குறைந்தது எட்டு மணி நேரமாவது தன் உடல் உழைப்பை செலவிட்டால்தான் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கும். சமயங்களில் அப்படிப்பட்ட வாழ்க்கையை கூட இயற்கை ஏன் நமக்கு கொடுக்கவில்லை? என வருத்தமாக இருக்கும். காரனம் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுடன் வாழும் அவர்களில் பல பாக்கியவான்களை நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து. கொஞ்சமாக படித்துவிட்டு, சமூகத்தில் அடுத்த கட்டத்துக்கு தன்னை நகர்த்த போராடுகையில் மேலே போகவும் முடியாமல் கீழே இறங்கவும் விருப்பம் இல்லாமல் ஒரே பாதையில் சீராகவும் செல்ல முடியாமல் அந்தரத்தில் காற்றில் மிதக்கும் இலை போல பணம் போன போக்கில் அதனை துரத்தும் உத்தியில் இளமையை தொலைத்து விடுகிறோம்.

எல்லோருக்கும் இயல்பாய் வரும் காதல் நம்மை கிடைக்கும் இடைவேளைகளில் படுத்தி எடுக்கும். நமக்கான ஐஸ்வர்யா ராவை கண்டடைந்தபின் கிடைக்கும் பேரானந்தம் அதே சொற்ப இடைவெளிகளில் அவள் யார் பைக்கிலாவது பின்னால் அமர்ந்து செல்லும்போது பார்க்க நேர்கையில் பறிபோய்விடும். ஆனால் நாட்டில் ஒரே ஒரு ஐஸ்வர்யா ராய் மட்டும்தானா? ஒரு அசின், அமலாபால் இல்லாமலா போய்விடுவார்கள் என விக்கிரமாதித்யனின் மன உறுதியைப்போல் மீண்டும் காதல் வேதாளத்தை மனதின் தோள்களில் சுமக்கிறோம். வருத்தப்பட்டு காதல் பாரம் சுமக்கிறவர்கள் யேசுவிடம் சென்றால் கூட இளைப்பாறுதல் கிடைக்காது.

வாழ்வின் போராட்டங்கள் நம் வயதைக்கூட்டி நரை முடிகள் தென்பட ஆரம்பிக்கும். எனக்கும் அப்படியான காலம் வந்துவிட்டிருந்தது. ஒரு கட்டத்தில் வாழ்வே போராட்டமான நிலையில் பெண்களை சைட் அடிப்பது கூட நின்றுபோய் திருமண ஆசையே இல்லாமல் போய்விட்டது. ஒரு நிலையான வேலை கிடையாது. ஒரு தடவை மஞ்சள் காமாலை வந்ததாலும், மறுமுறை அம்மாவின் இறப்பினாலும் ஆரம்பித்த மூன்றாம் மாதமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கை கடன்காரனாக மாற்றி, நிலத்தை விற்று வட்டிக்கு போக மீந்த பணத்தில் ஒன்று மாற்றி ஒன்றென செய்த வியாபாரங்கள் தோல்வியில் முடிய, இறுதியாக உனது பங்கு முடிந்துவிட்டது என அண்ணன்கள் கைவிரித்து விட்டபோதுதான் நான் தனித்து நிற்பதை உணர்ந்தேன். சாகத்துணிந்தவனுக்கு வாழ்வில் பயமே கிடையாது என்பார்கள், வாழப் பயந்தவன் நான். என்னால் தற்கொலை செய்துகொள்வதை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. ஆனால் அதைத்தான் முடிவாக முடிவு செய்தபின் ஒரு இறுதி முயற்சிக்கு ஆயத்தமாகிவிட்டேன்.

நெடுந்தூரப் பயணம் இது. ரயில் பெட்டியின் பொதுவகுப்பு நிற்கவே முடியாத நெருக்கடியில் நம்மைப்போல ஏராளமான ஜீவராசிகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை உணர்த்தியது. தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும் ஒருவன் எதற்கு இப்படி வெகுதூரம் பயணிக்க வேண்டும், என உஙகள் மனதில் எழும் கேள்வி என் காதில் விழுகிறது. வாழ்வின் கடைசி பக்கங்களை இனி எதுவுமற்று கடக்கும் எனது பாதையில் எனது முடிவை நான் ஆவலாக அனுபவித்தே பயணிக்கிறேன். இத்தோடு சாப்பிட்டு இரண்டு நாள் ஆகப்போகிறது. என் பெயர் எழுதப்பட்டிருக்கும் கடைசி அரிசி எதுவென பார்க்கலாம்.......

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரக்தியின் விளிம்பு நிலை...

வாழ்வே சுமைதாங்கி தான்... சுமைதாங்கி VCD சென்னையில் கிடைக்குமே...!

அந்தப்படத்தில் ஒரு பாடல்...

ஏழை மனதை மாளிகையாக்கி...
இரவும் பகலும் காவியம் பாடு...
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து...
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...

rajasundararajan சொன்னது…

ஒரே வ்ர்ணத்துல இருக்கு. அதுவும் இருள்வண்ணம். ஓர் எதிர்வண்ணம், கோணத்தனம், கேணத்தனம் என் ஒன்று சேராமல் கலையாகது.

மலரின் நினைவுகள் சொன்னது…

முடிவல்ல செந்தில்...
ஆரம்பம்...!!
பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்...!!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

என்ன ஆயிற்று செந்தில்சார்! ஏனிந்த விரக்தி! நம்பிக்கையுடன் இருங்கள்!

Unknown சொன்னது…

பொதுவாக நான் பின்னூட்டங்களுக்கு நன்றியோ, பதிலோ சொல்வதில்லை, காரனம் எனது கருத்தை நான் எழுதிவிட்டேன்.அதேபோல் உங்கள் கருத்தை பாராட்டோ, திட்டோ யாரும் எழுதலாம் என்பதால் நான் கமெண்ட் பாக்சை திறந்தே வைத்திருக்கிறே.

அன்பு நண்பர்கள் ”மலரின் நினைவுகள்” மற்றும் s.suresh இருவரும் இதனை என்னுடைய கதையாக நினைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கரனம் நான் சொந்த அனுபவங்களை நிறைய பகிர்வதுதான்.

ஆனால் இது என்னுடைய நண்பரின் கதை. அவர் இப்போதும் சென்னையில்தான் இருக்கிறார். வாழ்வின் மீதான நம்பிக்கைகள் அவர் பெயரிட்ட அரிசிகளை இப்போதும் ரேஷன் கடைக்காரனைப்போல் தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த விளையாட்டு இன்னும் எத்தனை நாளுக்கு தொடரும் என்று தெரியவில்லை!

வில்லவன் கோதை சொன்னது…

எழுதுவதையெல்லாம் உங்கள் கதையென்று நம்பும்போது நீங்கள் எழுதியதின் பயனைப் பெற்றுவிட்டதாகவே கருதலாம்.வாழ்த்துக்கள் !
வில்லவன்கோதை