பழங்கால இந்தியாவை விட்டுவிடுவோம், அங்கிருந்து ஆரம்பிக்க இது வரலாற்று கட்டுரை இல்லை..
சமீப காலமாக வரும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் என்னை வெகுவாக பாதித்துக் கொண்டிருக்கிறது , முன்னெல்லாம் இடம்பெறும் கைதுகள் சில லச்சங்களுடன் இருக்கும்,இப்போது ஒரு கைதில் கைப்பற்றிய தொகை மட்டும் ரூபாய் ஆயிரத்து எண்ணூறு கோடி, அதற்கும் முன்பு பேசப்பட்ட ஐ.பி.எல் ஊழல் இன்னும் நீள்கிறது, சாதாரண அடித்தட்டு , மற்றும் நடுத்தர மக்கள் அம்பதுக்கும், நூறுக்கும் அல்லல்பட விலைவாசிகளும் உச்சத்துக்கு போய் வாழ்வே கேலிப்பொருளாக மாறிப்போன நிலையில், இத்தனை ஆயிரம் கோடி சில தனி மனிதர்களிடம் சென்று சேர்ந்துள்ளதை அறிகையில் வெறுப்பாகத்தான் இருக்கிறது.
எப்ப நம்ம தொகுதி எம்.எல்.ஏ சாவான் என எதிர்பார்க்கும் கூட்டமாய் மாறிப்போன நமக்கு, நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என நினைக்கையில் பெரும் கவலை அளிக்கிறது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர்வை பற்றியும், நக்சலைட்டுகளையும் பற்றி பேசாமல் சசிதரூர் , லலித்மோடிக்கும் உள்ள பிரச்சினைகளை பெரிது பண்ணுவதில் குறியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் அமேரிக்கா என்ன சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டும் பிரதமர், காலடியில் ஈழத்தில் வந்து அமர்ந்து விட்டான் சீனன், மீன் பிடிக்க போனவன் பிணமாய் வருகிறான், அவர் மீன் பிடிக்கும் உரிமையை கூட தனியாருக்கு விற்க முயற்சி செய்யும் மத்திய அரசு.
மாநிலத்தில் மகன்களுக்கு பதவிகளை பிரித்து கொடுப்பதிலும் , வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தும் பெரியவர், சினிமாகாரர்களை வாழவைக்க செலவிடும் தொகையில் ஒரு பகுதியை தன் சொந்த வருமானத்தில் இருந்து கொடுக்கவேண்டியதுதானே. எல்லாம் யார் வீட்டு சொத்து, சினிமா தொழிலாளர்கள் போலவே எத்தனையோ ஏழை ஆட்டோ ஓட்டுனர்களும், ரிக்சா இழுப்பவர்களும், தெருவோர வாழ்க்கை வாழ்வோரும், விவசாய கூலிகளும் உள்ளனர். அவர்களுக்கு வந்ததெல்லாம் இலவச தொலைக்கட்சிதான், வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.
மக்களை சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை அடியோடு ஒழிக்காமல் வேடிக்கைபார்க்கும் பிரணாப் , ஒரு நாளைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து, தெருவோர உணவகத்தில் சாப்பிட்டு , ரேஷன் கடை கியூவில் நின்று இரவு மின்வெட்டில் தூங்கினால் தெரியும், இங்கு ஒவ்வொரு மக்களும் படும் சிரமத்தை. சின்ன மொதலாளி ராகுல் காந்தி சாப்பிட்டு போட்டோ எடுதுக்கிறாரே அது மாதிரி இல்லை, நிஜமாவே ஒரு நாளைக்கு சாதாரண மக்களை போல் வாழ்ந்து பாருங்க.
அப்புறம் மக்களே நமக்கு இருக்கவே இருக்கு, தாத்தா, பேரன்களின் மற்றும் சகோதரி, கேப்டன் இன்னபிற தொலைக்கட்சிகள் சீரியலுக்கு அழுதுவிட்டு, ஆட்டத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வேலை முடிந்து வந்தவனும் செல்லமே பாத்துவிட்டு , பிள்ளைகளுக்கு கிடைக்குது வகை வகையாய் ஜன்க் புட் , வாங்கி கொடுத்தா கிடைக்கும் ஆசுபத்திரி செலவுக்கு காப்பீட்டு திட்டங்கள் இருக்க, நமக்கென்ன ....... போச்சு. எல்லாருக்கும் உள்ளதுதானே நமக்கும்.
போங்க புள்ளை குட்டிகளை படிக்க வைங்கன்னு சொல்ல முடியாது , ஏன்னா அது விக்கிரமதித்யன் வேதாளத்த பிடிக்கிற கதை, எல்.கே.ஜி க்கு அப்புறம் ஐ.ஏ.எஸ் போறமாதிரி எது புள்ளைகளை உருப்புடாம அடிக்குமோ அதுல பெருமைக்கு சேத்துவிட்டு அதுக்கு கட்ட வட்டிக்கு வாங்கி, கொடுத்தவனுக்கு பயந்து அறைக்குள் புலம்பும் ஆட்கள் நாம்.
இப்படியே போனா மொத்தமா அமெரிக்கவோ, சீனாவோ நம்மளை குத்தகைக்கு எடுத்து எல்லாத்துக்கும் காசு கேப்பானுவோ, அப்ப நம்ம சிங்குகளும், பேரன்களும், சோனியா, சிதம்பர வகையறாக்கள் பகுதி குத்தகை வசூலிப்பார்கள். சொல்றத சொல்லிட்டேன்.
இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//
மக்களே ஒரு ஒசிகுடி இருப்பதால் அடுத்த பதிவில் சந்திக்கலாம். வரட்டா????.