எனக்கு அடுத்த ஒரு வாரத்தை தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது, இப்போது போல் அப்போதெல்லாம் போன் கூட பேசமுடியாது. அவள் அழுதது என் கண்முன் வந்துகொண்டேயிருந்தது, அவளின் நெருக்கத்திற்கு பிறகு நான் தண்ணி அடிப்பதை முற்றாக விட்டுவிட்டதால் நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க நூல் நிலையம் போக ஆரம்பித்தேன். மேலும் நண்பர்கள் வற்புறுத்தினால் மஞ்சள் காமாலையை காரணம் சொல்லி தப்பித்துவிடுவேன், அதனால் அவர்களும் என்னை மாலை வேளைகளில் கூப்பிடுவதை தவிர்த்தனர். எனவே எப்போதும் புத்தகங்களுடன் வாழ ஆரம்பித்தேன்.
ஒரு வாரம் கழித்து எனக்கு அவளிடமிருந்து கடிதம் வந்தது, எனக்கு சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பேன், அதில் நவம்பர் இருபதாம் தேதி மன்னார்குடி வருவேன் எனவும் மறுநாள் மாலை வழக்கம்போல் கோவிலில் சந்திப்போம் எனவும், வந்து எனக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தாள். முடிவில் வித் தவுசண்ட் வார்ம் ஆப் கிஸ்ஸஸ் என எழுதி கையெழுத்து போட்டிருந்தாள். அந்த சந்தோசத்தை எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனி உற்சாகத்துடன் நடமாட ஆரம்பித்தேன். பத்தொன்பதாம் தேதி அன்று காலை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையான ஜுரம் அடித்தது உடனே மன்னார்குடி அழைத்து வந்தார்கள். அங்கு எனக்கு டைபாய்டு என அட்மிட் செய்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு இருபத்திஒன்றாம் தேதி அவளை பார்க்கமுடியவில்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது. அதனால் நண்பன் ராஜசேகரை விட்டு விசாரிக்க சொன்னேன், அவனும் விசாரித்துவிட்டு அவள் மன்னார்குடி வந்தமாதிரி தெரியவில்லை என்றான்.
ஆனால் என்னை பார்க்க அஞ்சலியின் தோழி சுமதி வந்தாள், வந்து என்னைபார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள், நான் இருந்தது தனி அறை என்பதாலும், காலை பத்துமணிக்கு மேல் என்பதாலும் யாரும் இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என்ன ஆச்சும்மா, ஏன் அழுவுறே என சமாதானபடுத்தினேன், அவள் அழுகையை நிறுத்தவில்லை, அழட்டும் என மௌனமாக இருந்தேன், மெல்ல அவளை ஆசுவாசபடுத்திக்கொண்டு அண்ணே அஞ்சலி நம்மை எல்லாம் ஏமாத்திட்டு போய்ட்டான்னே.. என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,.எனக்குள் எதுவோ உடைந்தது, ..........................................
சுமதி போனபிறகு அப்படியே பைத்தியம் பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.. என்னைப்பார்க்க வந்த நண்பனிடம் அஞ்சலி வீட்டின் முகவரி சொல்லி எப்படியாவது என்ன நடந்தது என விசாரிக்க சொன்னேன்,
பெங்களூரில் பத்தொன்பதாம் தேதி ஊருக்கு கிளம்புவதற்குமுன் கடைசி நேரத்தில் தனக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு கிருஷ்ணகுமாரின் அம்மா, மற்றும் அஞ்சலியின் மூத்த சகோதரி, கிருஷ்ணகுமார் என்ற குட்டிபையனுடன் கிளம்பியிருக்கிறார்கள், மெயின் ரோட்டில் சாலையை கடக்கையில் சாலையின் நடுவில் நின்று மறுபுறம் கடக்கையில் அந்த குட்டிபையனை யார் அழைத்துவருகிறார் என தெரியாமல் கடந்துவிட அந்த குட்டிபையனோ போகிற வருகிற கார்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கேயே சாலைநடுவில் நிற்க, மறுபுறம் கடந்த அஞ்சலி அதனை கவனித்துவிட்டு அவசரமாக சாலையின் குறுக்கே ஓடி அவனை காப்பாற்ற முயன்ற பொது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திரிக்கிறது, அவள் சாகும்போது கடைசியாக சொன்ன பெயர் குமார்....... இதனை நண்பன் வந்து சொன்னபோது நான் அழவேயில்லை, என் உயிரில் கலந்த அவள் இறந்துவிட்டாள், என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபின், நான் எங்கும் செல்லவில்லை, எந்த நேரமும் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், நான் யாருடனும் பேசுவதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை என நண்பனிடம் அம்மா வருத்தப்பட்டது, அவன் பிடிவாதமாக என்னை வெளியில் அழைத்துசென்றான், அன்று இரவு நிறைய குடித்தேன்.. அத்தனை நாள் இரவுகளில் அன்று இரவுதான் போதையில் தூங்கினேன், அதன்பிறகு குடி என்னுடன் ஒட்டிகொண்டது, குடிக்காமல் என்னால் தூங்க முடியாது, வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக மாட்டு கொட்டகையில் தூங்க ஆரம்பித்தேன்...
இப்படி ஒருநாள் நண்பன் செழியனுடன் குடித்தபோது, ஓவராக குடித்துவிட்டு அஞ்சலியை பற்றி புலம்ப அவனோ நீ \"ஏழு சுவரங்களுக்குள்\" என்ற பாட்டு கேட்டிருக்கிறாயா என்றான், அதில் \'எனக்காக நீ அழுதாள் இயற்கையில் நடக்கும்\',\' நீ எனக்காக உணவு உன்ன எப்படி முடியும்\' என்றொரு வரி உண்டு தெரியுமா? என்றான் அதுக்கு இப்ப என்னடா என்றபோது, நீ அஞ்சலியை நெஜமாகவே காதலிச்சியா? என்றான், ஆமாண்டா... அத எதுக்கு கேக்குறே என்றேன். இல்லடா நீ நிஜமா காதலிச்சிருந்தா அப்பவே செத்திருப்பே, ஆனா நீ இப்ப எங்களுக்காக நடிக்கிறே.. உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்.. என் போதை வடிந்துவிட்டது, வீட்டிற்கு வந்து நெடு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்...
தற்கொலை செய்து கொள்ளவேண்டும், அதுவும் இன்றைக்கு இரவே என முடிவெடுத்தேன்..
மாலையில் மன்னார்குடி சென்று ஒரு பாட்டில் விஷமும், இன்னொரு பாட்டில் பிராந்தியும் வாங்கிகொண்டேன், கடைசியாக ஆத்மநாதன் அத்தானை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என அவரைப்பார்க்க சென்டருக்கு போனேன்.. அவர் வீட்டிற்கு சாப்பிட போனதாக சொன்னார்கள், அவருக்காக காத்திருந்தேன்,, என் நினைவுகள் முழுதும் அஞ்சலி மட்டுமே இருந்தாள், இன்னும் சில மணி நேரத்தில் அவளுடன் கலந்துவிடப்போகிறேன், அந்த நினைப்பே என்னை ஒரு ஏகாந்தத்திற்கு இட்டுசென்றது... வகுப்பின் பெஞ்சில் படுத்து கண்மூடினேன் என் கண்களுக்குள் அஞ்சலி சிரித்தாள்... அப்படியே தூங்கிவிட்டேன்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக