31 ஆக., 2010

பிரம்ம முகூர்த்தம் ...

பறவைகள்
துயிலெழும் இளங்காலை 
உன் நெருக்கம் சூடேற்ற 
படர்கிற தகிப்பில் 
மணித்துளிகள் வேகமாய் நகர்ந்து 
நாளின் வேலைகள் 
சந்தோச சிக்கலாகி விடுகின்றன..

முன்னிரவில் தடுமாறும் மனதை 
முரண்டு பிடிக்கும் குழந்தைகள் 
எரிச்சலூட்ட 
அசதியில் தூங்கிப் பின் சலனம் 
துயில் கலைக்க 
உறக்கம் கலைக்க விருப்பமில்லா 
இணையின் 
விருப்பம் ஜெயிக்கிறது...

அதிகாலை அசத்தும் கண்கள் 
கிறங்கும் கண்கள் 
கிறங்க .. கிறங்க ..
அசத்தும் கலைக்கு அதிகாலை ...

பிரம்ம முகூர்த்தம் 
பிரமாத பிராப்தம் ...
எப்போதும் அமைவதில்லை 
என்பதே எதார்த்தம் .....

30 ஆக., 2010

பயோடேட்டா - மலையாளிகள்


பெயர்                                  : மலையாளிகள்
இயற்பெயர்                       :சேர மக்கள் (சேரளம்)
தலைவர்                            : நம்பூதிரிகளும், நாயர்களும்
துணை தலைவர்கள்       :I.A.S, I.F.S அதிகாரிகள்
மேலும்
துணைத் தலைவர்கள் 
   :தொழிற்சங்கத் தலைவர்கள்
வயது                                  : தமிழனுக்குத் தம்பி வயது
தொழில்                             : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது
பலம்                                  : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை 

                                              இழந்துவிடாமல் இருப்பதும்                       
பலவீனம்                          :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது 
நீண்ட கால சாதனைகள்        :அந்நிய செலவாணியை பெருமளவில் ஈட்டியது
சமீபத்திய சாதனைகள்          :ராஜபக்சேவுக்கு உதவியது
நீண்ட கால எரிச்சல்                : தமிழர்கள் (பாண்டி)
சமீபத்திய எரிச்சல்                  : கர்நாடகா
மக்கள்                                         : மலையாளம் பேசுபவர்கள்
சொத்து மதிப்பு                         : இயற்கை நிறைய கொடுத்து இருக்கிறது..
நண்பர்கள்                                 :சோனியா, ஜோதிபாசு (இப்ப இல்ல)
எதிரிகள்                                     :தமிழ் பேசுபவர்கள் எங்கிருந்தாலும்
ஆசை                                          : பிரதமர் பதவி
நிராசை                                       : தமிழனே தீர்மானிக்கிறான்
பாராட்டுக்குரியது                     : காலையில் குளிப்பது..
பயம்                                            : பில்லி, சூனியம்
கோபம்                                        : முல்லை பெரியார்
காணாமல் போனவை             : தரமான சினிமாக்கள்
புதியவை                                    : ஷகீலா சினிமாக்கள்
கருத்து                                         : புத்திசாலித்தனம் மிக்க மலையாளிகள் பின்னால் மட்டும் 

                                                        இருந்து வேலை செய்வது ஏன்?
டிஸ்கி                                          :கடவுளின் தேசத்தில் பிறந்த நீங்கள் மனித நேயம் 

                                                       இல்லாதவர்களாக இருப்பது ஏன்?

29 ஆக., 2010

அடைக்கும் தாழ்....

அதீத கோபத்தின்
புதிய பார்வைகளை தருகிறாய்  நீ..
புரிதலின் நேர்க்கோட்டில்
நிற்கிறேன் நான்..

பின்னொரு நாள்
தவறுதலாக பேசிவிட்டேன் என வரும்
உன்
நேர்கோடுகளில்
நான் இல்லாமல் போகலாம்..

பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வாழ்வியல் ....

பறவையின் மொழிகேட்பவனிடம்
எதிர்காலம் அறியச்சென்றேன்
அறைக்கு வெளியேவந்து
அட்டைகளை கலைத்த
பறவை
கணிக்க இயலா தருணமொன்றில்
விருட்டென பறந்துவிட்டது...

பிடிக்க முடியாத வெறுப்புடன்
ரெக்கை வெட்டி நாளாச்சு
இன்னொன்னுதான் வாங்கனுமென்றான்
அவன்..

மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்
நான்...

குறிப்பு : இது ஒரு மீள் பதிவு 

28 ஆக., 2010

தமிழீழம் இன்றும் -நாளையும்...


முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும் தீவிரமாக அது வேறு வடிவம் எடுத்து விடகூடாது என்பதில் சிங்களவர்களை விடவும் இந்திய தேசியவாதிகளும், தமிழ் நாட்டின் சோனியாவின் அடிவருடிகளும் தீவிரமாக இருக்கின்றனர்.

பிரபாகரன் என்ற ஒற்றை ஆளுமையின் கீழ் மட்டுமா ஈழத்தின் சுதந்திரம் இருந்தது. அத்தனை குழுக்களும் தடுமாறி, திசைமாறி எதிராளியின் குண்டி கழுவ சென்று விட்டபின், ஈழம் அமைந்தால் அது பிரபாகரனின் தலைமையில்தான் அமையும் என மாறிவிட்டது பிரபாகரனின் தவறா? புலிகளை காரணம் காட்டியே பிழைப்பை நடத்தி வந்த டக்ளஸ் மற்றும் கருணா கும்பல்கள் இப்போது சொந்த நாட்டிலேயே முகாம்களில் கைதிகளாய் அடைபட்டு கிடக்கும் எம் இனப் பெண்களை கூட்டி கொடுத்தல்லவா பிழைப்பை தொடர்கிறார்கள்.

இப்போது புதிதாக ஒருத்தன் கிளம்பியிருக்கிறான் தான் பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற முயன்றால் நெடிலனும், கேஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என புதிய திரைக்கதை எழுதுகிறான். மேலும் இந்தியாவின் தலைவர்களையும் அதிலும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் ஈழ ஆதரவு தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்கிறது அந்த பேட்டி.

பிரபாகரன் மற்றும் அவரின் குடும்பமே இல்லை என்றாகிவிட்டபின், மீண்டும் மீண்டும் அதை சொல்லித்தான் பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது. இந்த அடிவருடிகள் கிடைக்க கூடிய உரிமையும் குழிதோண்டி புதைத்து ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்கள மக்களுடையதாக மாற்றிவிட்டுதான் மறு வேலையே பார்ப்பார்கள் போல. இந்த நாய்ப் பிழைப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்.

கண்முன் நடக்கும் அநியாங்களை காணப் பொறுக்காதே தற்கொலை படையாக மாறி சிங்களனை பயங்காட்டி தனக்கென தேசம் ஒன்றை உருவாக்கி அதனை உலகின் மிக சிறந்த உதாரணமாக வழி நடத்தினர். ஆனால் இந்தியாவில் காங்கிரஸ் அரசு வந்தபிறகு ராஜபக்சே அதனை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு ஓட்டு மொத்தமாய் உலகை தன் பக்கம் வைத்துக் கொண்டு கோரத்தாண்டவம் ஆடியபோது அதனை கவனிக்காத மாதிரி கண்களை மூடிக் கொண்ட இந்திய ஊடகங்கள் இப்போது சேவாக்கின் சதம் தவறியதற்கு பொங்கி எழுகிறீர்கள். 

அடுத்து கூட்டணி காங்கிரசுடன் வைத்துக் கொள்ள இரண்டு பெரிய(?) திராவிட கட்சிகளும் போட்டி போடுகின்றன, ஆட்சியையும், தொழிலையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான், மற்றபடி இங்கிருக்கும் தமிழன் பற்றியே அவர்களுக்கு கவலை இல்லை. இலங்கை தமிழன் செத்தால் என்ன? இருந்தால் என்ன? மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் தனக்கென பிடித்தாலும் பிடிக்காவிட்டலும் தன்னை மிகப்பெரிய அளவில் நேசிக்கும் தமிழர் கூட்டம் இருக்கிறது என்று தெரிந்துமே காங்கிரஸ் மாதிரி தமிழ்நாட்டில் காணமல் போய்க் கொண்டிருக்கிற கட்சிக்கு கலைஞர் பயப்படுவது. காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த ஒரு உண்மையான தொண்டனின் உறுப்பினர் படிவம் வரை பறித்துக் கொண்டீர்கள் நீங்கள். ஆனால் அங்கு மேடைக்கு மேடை முழங்கும் இளங்கோவனையும், கார்த்தியையும் யாரும் கண்டிக்கவே இல்லை.

சரி இனி ஈழம் மலருமா? என்பது இங்கு அனைவருக்கும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு நமக்கு விரிவான பார்வை வேண்டும், வெறுமனே நம்பிக்கையில் பிரபாகரன் இருக்கிறார் என்று அவரை தேடுவதைவிட அவர் நேசித்த நாம் நேசித்த தமிழ் மக்களை அகதியாக்கி சிறையில் வைத்திருக்கும் கொடுமைகளை அகற்ற பாடுபட வேண்டும். இங்கு கலைஞர் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார், இவர் ஆள்வதால் நாம் இந்த அளவுக்காவது நம் உணர்வுகளை வெளிபடுத்த முடிகிறது. அதனால் இவருக்கு நாம் மன நெருக்கடியை தராமல், நமகென்று இருக்கும் ஒரே மூத்த தலைவரான கலைஞரை வைத்தே இதனை நாம் நகர்த்த வேண்டும். 

இந்தகருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம், வைகோ மற்றும் நெடுமாறனால் பேசத்தான் முடியும், வேறெந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடும் அளவுக்கு தொண்டர் பலம் இல்லாதவர்கள் இவர்கள். ஜெ ஒரு சந்தர்ப்பவாதி அவரை நம்பினால் கேட் வரைக்கும் கூட நம்மால் போக முடியாது. இருக்கிற சூழ்நிலையில் கலைஞரை விட்டால் இதற்க்கு சரியான ஆளும் தமிழகத்தில் இல்லை. சீமானுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசத் தெரிகிற அளவுக்கு அரசியல் தெரியவில்லை. எனவே ஒரே வழி கலைஞரை ஆதரிப்பதே.

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு கலைஞரை ஆதரிக்க சொல்வது கசப்பை தரலாம். ஆனால் நிலைமையை நன்கு ஆராய்ந்தால் அதுதான் சரியான வழி. தமிழர்களின் இப்போதைய தேவை தனி ஈழம் அல்ல, சம உரிமை, அதனை பெற்று விட்டாலே இன்று உலகம் முழுதும் பரவி தொழிலில் கொடிகட்டிபறக்கும் ஈழ மக்கள் தங்கள் வியாபாரத்தை மீண்டும் இலங்கையில் ஏற்படுத்தி நமக்கென யூதர்கள் மாதிரி எல்லைகளை விரிவாக்கி சிங்களனை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். எதிர் பாதையில் நடை போடுவதைவிட இன்றைக்கு நம் மக்கள் நிம்மதியாக மூன்று வேலை உணவாவது சாப்பிடுவார்கள்.

நாம் வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் இருந்துகொண்டு தனி ஈழம்தான் நமது லட்சியம், பிரபாகரன் நிச்சயம் உயிரோடு இருக்கிறார், அவர் கண்டிப்பாக தமிழ் ஈழம் பெற்று தருவார் என பேசுவதும். இங்கிருக்கும் தலைவர்களை நாடு கடந்த தமிழீழ தனியரசை ஏற்படுத்தியவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும். அங்கு ஒரு வேலை உணவுக்கு திண்டாடும் மக்களை மேலும் பாதிக்கவே செய்யும். 

எனவே லட்சியங்களை சற்று தூர வைத்துவிட்டு எதார்த்தங்களை ஏற்றுக் கொண்டு அங்கிருக்கும் மக்களின் மனநிலையோடு நம்மை பொருத்திப் பார்த்து அவர்களுக்கான இப்போதைய சுதந்திரம் மற்றும் மீள்குடியேற்றம் இவற்றை மட்டுமே பேசினால். கருணா, டக்ளஸ், கே.பி.மற்றும் இங்கு அதனை வைத்து பிழைப்பை நடத்தும் பெரும்பாலோருக்கு சிங்களனே ஆப்படிப்பான்.

வேண்டுகோள் : எனது பெரியம்மா (அம்மாவின் அக்கா௦) வியாழன் அன்று தனது என்பதாவது வயதில் இவ்வுலகை நீங்கியதால் இந்த வாரம் முழுதும் எல்லோருடைய பதிவுகளையும் படிக்க முடியாது போய்விட்டது.மொபைலில் நிறைய பதிவுகளை சரியாக படிக்க முடியவில்லை, எனவே ஓட்டு மட்டும் போட முயல்கிறேன். கூடுமானவரைக்கும்  எனது பதிவை கிடைத்த இடைவேளையில் இணைய மையத்தில் சென்று பதிவேற்றுகிறேன்.. மீண்டும் அடுத்த வாரம் முதல் ஆட்டத்துக்கு வந்து விடுவேன்..

27 ஆக., 2010

பூனையின் கதை ....

அந்த நெடுங்கதையின்
அறுபதாவது பக்கத்தில்
ஒரு
திருப்பத்தை வைத்திருந்தேன்,
தேநீருக்காக  இறங்கிப்போன
என்
கதாநாயகனை காணவில்லை ...

கதையின் வில்லனை
நாயகனாக்கி
கதையை தொடங்கினேன்.,
வில்லனை பிடிக்காமல்
நாயகி ஓடிப்போனாள்..

தொடர முடியா கதையை
தூரத்தில் வைத்து
விட்டத்தை பார்த்தபோது
தன்
கடைசிக் குட்டியை
கவ்விச்சென்ற  பூனை
கதையின் மேல் சிறுநீர் கழித்தது...



25 ஆக., 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - இலங்கை விமான நிலையம்..

அது 1995 ஆம் ஆண்டு. நான் முதன் முதலில் மூன்று வருடம் கழித்து சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருகிறேன்.. மூன்று ஆண்டுகள் அங்கு இருந்துவிட்டு வருவதால் உறவினர்,நண்பர்கள் என அனைவருக்கும் பார்த்து பார்த்து பொருட்கள் வாங்கினேன். அன்றைய தேதிக்கு ஒரு லட்சத்துக்கு மேல் இந்திய ரூபாய்க்கு சமமாக செலவழிந்தது.. சில அனுபவமுள்ள நண்பர்கள் மட்டும் என்னை பார்த்து நீ எவ்வளவுதான் வாங்கி சென்றாலும் அவர்களுக்கு திருப்தி வராது என்று அறிவுரைத்தாலும் நான் கேட்கவில்லை.. எல்லோருக்கும் எல்லாம் வாங்கிய நான் எனக்கென்று புத்தம் புதிய வரவான சோனி சிஸ்டம் வாங்கிக் கொண்டேன். 

ஊருக்கு போக அப்போது பொங்கல் சமயமாக இருந்ததால் டிக்கெட் கிடைக்கவில்லை. நண்பன் அடித்து பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் ஒரு டிக்கெட் வாங்கி கொடுத்தான். எல்லாவற்றையும் அள்ளிக் கட்டிக்கொண்டு சிங்கப்பூர் விமான நிலையம் வந்து போர்டிங் போட்டால் என்பது கிலோ இருந்தது. அப்போது முப்பது கிலோ மட்டுமே அனுமதிப்பார்கள். போர்டிங் அப்புறம் போடுகிறோம் என்று சொல்லிவிட்டு லக்கேஜை பிரித்து முப்பது கிலோ தனியாகவும், கையில் வைத்துக் கொள்ள பத்து கிலோ தனியாகவும், எடுத்துக் கொண்டு, நான் வாங்கிய சோனி சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை தனியாகவும் சிஸ்டம் தனியாகவும் பிரித்துக்கொண்டு, எனக்கு சரியாக இருக்கும் அளவை எடுத்துக்கொண்டு மீதத்தை இன்னும் இரண்டு பேக்கில் கட்டி அதனை லக்கேஜ் எடுத்து வராத ஆட்களிடம் கிலோவுக்கு இவ்வளவு தருகிறேன் (S$ 6.00 என்று ஞாபகம்) பேசி அதனை கொடுத்து அனுப்பிவிட்டு எனது பெட்டியின் பூட்டை தேடினால் அதனை காணவில்லை.

போர்டிங் நேரம் முடியப்போகிறது என்பதால், நண்பன் அவசர அவசரமாக பெட்டியை  கிடைத்த சிறிய கையிற்றால் கட்டி பேக்கிங் டேப் சுற்றி கொடுத்தான். போர்டிங் போடுகிற சமயம் எனக்கு பின்னால் நின்றிருந்த ஆள் பூட்டவில்லையா என்றார். இல்லை என்றேன். இப்படி இருந்தால் சிறிலங்காவில் லக்கேஜை திருடிவிடுவார்கள் என்றார்.நான் போர்டிங் போடும் அதிகாரியிடம் பூட்டு வாங்கி வருகிறேன் என அனுமதி கேட்க, அவரோ எத்தனை தடவை இப்படி போவே, நேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கு எனவே அனுமதிக்க முடியாது என்று சொல்ல, எனக்கும் வேறு வழியின்றி போர்டிங் போட்டுவிட்டேன்.

ஆனால் என் லக்கேஜில்தான் விலை அதிகமுள்ள பொருட்கள் இருந்தன. என்ன செய்ய போட்டாச்சு. உள்ளே வெயிட்டிங் ஹால் வந்ததும், எனக்கு பின்னால் நின்ற நபர் மீண்டும் என் அருகில் வந்து நாம் இன்றிரவு இலங்கையில் தங்கி நாளைக் காலைதான் மீண்டும் சென்னை செல்வோம், இன்று இரவு சிறிலங்காவில் இப்படி பூட்டப்படாத பெட்டிகளை திறந்து பொருட்களை திருடி விடுவார்கள் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. முதன் முதலில் ஊருக்கு போகிறோம், அதிலும் எல்லோருக்கும் பார்த்து பார்த்து வாங்கிய பொருட்கள் திருடு போய்விட்டது என்று அவர்களிடம் சொல்லமுடியாமா என கவலை வந்துவிட்டது.

ஸ்ரீலங்கா விமான நிலையம் வந்ததும் சென்னை செல்லும் பயணிகளை தனியே அமரவைத்தனர். எல்லோருக்கும் ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் பஸ் வரும் வரைக்கும் காத்திருக்கும்படி சொல்லி சென்றார்கள். அப்போது என் அருகில் வந்த தமிழ் அதிகாரி என் கையில் இருந்த சோனி சிஸ்டம் பார்த்து மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும்படி, தம்பி நீங்கள் வைத்திருக்கும் சிஸ்டத்தை உங்களை ஹோட்டலுக்கு எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டார்கள். உங்களை இங்குள்ள லாக்கர் ரூமில் வைக்க சொல்வார்கள், ஆனால் காலையில் வந்தால் அது உங்களுக்கு கிடைக்காது. எனவே உங்களை அப்படி வைக்க சொல்லும்போது நான் வெயிட்டிங் ஹாலில் தங்கிக் கொள்கிறேன் உங்களுக்கு ஹோட்டல் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்தார்.எனக்கு இதைக்கேட்டதும் என்னடா சோதனை மேல் சோதனை என  வெறுப்பாகி விட்டது.

பஸ் வந்தவுடன் எங்களை அழைத்தனர், ஒரு அதிகாரி என்னைப் பார்த்து என் கையில் வைத்திருந்த சிஸ்டம் எடுத்து போக முடியாது என்றார். அவ்வளவுதான் நான் கடுப்பாகிவிட்டேன். சார் இதை நான் சிங்கப்பூரில் ஏறும்போதே ஏன் உங்கள் விமான சிப்பந்திகள் சொல்லவில்லை.அதனால் இதனை நான் கையில் எடுத்துதான் செல்வேன் என்றேன்.அவரோ நீ இங்கு சத்தம் போடகூடாது, மீறி சத்தம் போட்டால் உன்னைக் கைது செய்வேன் என்றார். அப்போது எங்களுடன் வந்திருந்த  ஒருவர் சமாதானத்துக்கு வந்தார். அவர் என்னை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு அதிகாரியைப் பார்த்து எதற்காக எடுத்துப் போக கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதிகாரி இவர் இந்தப் பொருளை வெளியில் நல்ல விலைக்கு விற்பார் அதனால்தான் என்றார். சமாதானம் செய்தவர் இவர் கையில் வைத்திருப்பது முழுமையான சிஸ்டம் இல்லை, மேலும் நீங்கள் சந்தேகப்பட்டால் இவர் பாஸ்போட்டில் எண்டோஸ் செய்து கொடுங்கள் என்றார். அதிகாரியும் பாஸ்போட்டில் எண்டோஸ் செய்துகொண்டு அனுப்பினார். சமாதானத்துக்கு வந்தவர் தன்னை ஒரு மருத்துவர் என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

ஹோட்டலுக்கு வந்ததும் என்னால் அன்று நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. காலையில் எழுந்து சென்னை செல்வதற்கு எங்களை விமான நிலையம் அழைத்து செல்வதற்காய் வரும் பஸ்சுக்கு காத்திருந்தோம், எல்லோருக்கும் காலை உணவு வழங்கினார்கள். நான் வேண்டாம் என்று மறுக்கவும் மருத்துவர் என்னை தம்பி பெட்டி ஒன்றும் ஆகாது என சமாதானம் செய்து சாப்பிட வைத்தார்.

விமான நிலையம் வந்து இமிக்ரேசன் முடிந்து சென்னை விமானம் ஏற காத்திருந்தோம், சிறிலங்காவில் அப்போது நேரடியாக விமானத்தில் ஏற முடியாது, உள்ளுக்குள் பஸ் வைத்துதான் அழைத்து செல்வார்கள். அங்கு சென்றதும் வரிசையாக நமது லக்கேஜ் வரும், அதனை நாம் அடையாளம் காட்டியதும் விமானத்தில் ஏற்றுவார்கள். எனக்கோ இதயம் படு வேகத்தில் அடித்துக் கொண்டது. என பெட்டியும் வந்தது. ஆனால் என நண்பன் எப்படி பேக்கிங் டேப் சுத்தியிருந்தானோ அப்படியே இருந்தது. எனக்கு நிம்மதி வந்தது.

ஆனால் திடீரென ஒருத்தர் தன் பெட்டி உடைக்கப்பட்டு விட்டதாக கத்தினார், எல்லோரும் அவரைப் பார்த்தோம் அவர் முதன்முதலில் என்னை எச்சரித்தவர். அவர் அதிகாரிகளிடம் மிகுந்த சண்டை போட்டார். அவர்களோ நீங்கள் சென்னை சென்றதும் புகார் செய்யுங்கள், அல்லது இந்தவிமானத்தில் போகவேண்டாம், இங்கேயே புகார் அளியுங்கள், நாங்கள் விசாரணை செய்து உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றனர். அவரோ நொந்து போய் வேண்டாம் இதே விமானத்தில் போகிறேன் என்று எங்களுடனே வந்தார்.

விமானத்தில் அவர் எழுந்து மருத்துவர் இருக்கும் இருக்கை அருகில் வந்து பார்த்தீர்களா சார் நான் நன்றாக பூட்டி வைத்திருந்தேன். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள் என பொருமினார். மருத்துவர் அமைதியாக அவரைப் பார்த்து தம்பி நீங்கள் அந்த தம்பியை (என்னைக் காட்டி ) தேவையில்லாமல் டென்சன் ஆக்கினீர்கள், போதாகுறைக்கு எங்கள் எல்லோரிடமும் அவர் பெட்டி உடைத்து கண்டிப்பாக திருடி விடுவார்கள் என சொன்னீர்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது ஆனால் உங்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

சென்னை விமான நிலையம் வந்து இறங்கி மருத்துவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினேன். ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை. அதனால் கல்யாணம் ஆகும் வரைக்கும் வெளிநாடு போய் வந்தால் வெறுங்கை வீசிக்கொண்டுதான் வருவேன். 

24 ஆக., 2010

குளக்கரையில்.....

இரவுகளை சேகரித்துக் கொண்டிருந்த அந்தியில் 
கூடு திரும்பிய பறவைகளின் பாடல் ஒளியின் கீழுள்ள 
குளத்தில் வந்தமர்ந்த நிலவின் அழகில் பொறாமையுற்ற 
அல்லியும், தாமரையும் தன் அழகை மெருகூட்ட 
நட்சத்திர ஆகாயம் பற்கள் உதிரும்படி சிரிக்க 
படிக்கட்டில் வந்தமர்ந்த உன்னை 
மேகம் எட்டிப்பார்க்க 
நிலா கோபித்துக் கரையேற 
அல்லியும், தாமரையும் உனைப்பார்த்து தலைவணங்க 
உன்னருகில் நானும் வந்து அமர்ந்தவுடன் 
சற்றே நின்ற பறவைகளின் பாடலில்  
இரவு நம்மை முழுவதுமாய் மறைத்துக்கொண்டது...

22 ஆக., 2010

தாய்மை ....

இந்தப் படங்களை அனுப்பி வைத்த தம்பி சரவணனுக்கு நன்றி ...



கடைசிப் படம் மட்டும் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது....

21 ஆக., 2010

என் இனிய காதலியே...

எனக்கு உன்னை மலையளவுக்கு புடிக்கும் ,
உனக்கு என்னை கடுகளவாவது பிடிக்குமா?..
உன் குடும்பத்தை நேசிக்கிற மாதிரி நன்றாக நடிப்பேன்,
நீ யாரையாவது நேசித்திருக்கலாம், 
நானும் சிலரை முயற்சித்திருக்கிறேன்,
ஏழேழு லோகத்திலும் நீதான் அழகி (நெசமாத்தான்)
ஆனாலும் நீதான் எனக்கு மனைவியாக வேண்டும்.
நம் திருமணத்தில் வரதட்சிணையாக,
உங்கப்பாவிடம் உனக்கு வேண்டிய மட்டும் கறந்து விடலாம்.
என் அம்மாவிடம் நீ சண்டை போட்டு நாம் தனிக்குடித்தனம் போகலாம், 
நீ விரும்பினால் மட்டும் வேலைக்கு போகலாம், 
சீக்கிரம் வீடு வாங்கலாம், அதை உன் பெயரில் பதிவு செய்யலாம், 
சமைக்க, துவைக்க ஆள் வைத்துக் கொள்ளலாம்,
இரண்டு பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்,
உனக்கு பிடித்த பெயர்கள் வைக்கலாம், 
நீ விரும்பினால் மட்டும் குடிக்கவோ, புகைக்கவோ, நட்பவோ செய்வேன்.
என் வீட்டுக்கு நீ சொன்னால் மட்டுமே போவேன்.
உன் வீட்டிலிருந்து யார் எப்போது வேண்டுமானாலும் வரலாம் ,
நீ கிழித்த கோட்டை நானும்..
நான் கிழித்த கோட்டை நானும் தாண்டவே மாட்டேன்.
என் சம்பளப் பணம் முழுதும் நீயே வைத்துகொண்டு, 
என் செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும் .
உன் சம்பளப் பணம்(ஒரு வேளை வேலைக்கு போனால்) உனக்கு நகையாக வாங்கிக்கொள்,
பெண் பெற்றால் அதற்கு உதவும் அல்லவா.. .
உன் அப்பா, அம்மாவுக்கு ஒன்றென்றால் நாமே பார்த்துக் கொள்ளலாம் .
என் அப்பா, அம்மாவுக்கு ஒன்றென்றால் என் தங்கை வீட்டுக்காரன் பாத்துக்குவான் (அத்தை மவன்).

ஆகவே யோசிக்காமல் பட்டென்று முடிவெடுத்து உன் அப்பனிடம்,
கட்டினால் இவனைத்தான் கட்டுவேன் என என்னைக் கை காட்டு... 

மக்களே.. 
இப்படியாகவும் எழுதலாம் 
காதல் கடிதத்தை...!

19 ஆக., 2010

பதிவர் சந்திப்பு...

வரும் 21.08.2010 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை தி.நகர், தக்கர் பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெறும் பதிவர் கேபிள் சங்கரின் "சினிமா வியாபாரம்" புத்தக வெளியீட்டு விழாவோடு பதிவர் சந்திப்பும் நடைபெற இருப்பதால் சென்னை பதிவர்கள் மற்றும் சென்னைக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

இது ஏற்கனவே நம்ம யூத் கொத்து பரோட்டாவில் அறிமுகப் படுத்திய பாடல், மீண்டும் இதனை உங்களுக்காக.... "வேலவா"
சுசிலா ராமன் மற்றும் கோவை கமலா...

18 ஆக., 2010

உமா சங்கர் அவர்களுக்கு ஆதரவாக...


"Any fool can make a rule, and any fool will mind it."

"The law will never make men free; it is men who have got to make the law free. "

"As a single footstep will not make a path on the earth,
so a single thought will not make a pathway in the mind.
To make a deep physical path, we walk again and again.
To make a deep mental path,
we must think over and over the kind of thoughts we wish to dominate our lives. " 

- Henry David Thoreau 

தமிழக அரசால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட உமா சங்கருக்கு ஆதரவாக இன்று அனைவரும் ஒரு இடுகை எழுத தருமி ஐயா வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இக்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்ப்பதே அபூர்வம். அப்படிப்பட்ட சூழலில் திருவாரூர் மாவட்டம் அமைந்தபோது அதன் முதல் ஆட்சியாளராக உமா சங்கர் அமர்ந்து அம்மாவட்டத்தை வளர்ச்சி செய்தபோது பாராட்டி மகிழ்ந்த கலைஞர், இப்போது தன் குடும்ப உறுப்பினர்களுக்காக பணி நீக்கம் செய்திருப்பது வருந்ததக்கது. 

எனவே தமிழக அரசை கண்டித்தும்.. உமா சங்கருக்கு ஆதரவாகவும் அனைவரும் இன்று ஒரு நாள் சிறப்பு இடுகை எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

பகிர்ந்தவை....

சொற்கள் நடனமிடும் கவிதையாய் 
சிக்கிக்கொள்ளும் நீ...
கைம்மாறாக கேட்ட அது,
என்னிடமும் இல்லாத ஒன்றல்லவா...

பிரதி வெள்ளிக்கிழமை 
சாயங்காலம் சரியாக ஐந்து மணிக்கு 
பிரகார வெளியில் ஜோடி சேரும் 
இரு ஜதை காலணிகள்..

உள்ளே சாமியும் 
சாமியின் ஓங்காரமும் 
ஓம்காரத்தின் உள்ளுணர்வும் 
கடந்து வரும் தெய்வீகம் நீ...

சாலையின் எதிர்ப்புற சந்திப்பில் 
பரிமாறும் புருவ மடல்களில்,
ஆடும் செவியின் தொங்கல்களில் நான்..

சலிக்கவே இல்லாத ''நின்னையே பாரதி'
பிங்க் நிற சல்வார்,
முதல் கடிதம்
சிவப்பு ரோஜா..

இப்போதும் இருக்குமா
உன் கணவனோடு நான் கை குலுக்கிய 
புகைப்படம்..

16 ஆக., 2010

விலைவாசி - பயோடேட்டா


பெயர்                                   : விலைவாசி 
   

இயற்பெயர்                        : வயிற்றெரிச்சல்
   

தலைவர்                             : தொழில் அதிபர்கள் 
துணை தலைவர்              :அரசியல் வாதிகள் 
மேலும் 
துணைத் தலைவர்கள்    :அதிகாரவர்க்கம் 
வயது                                   : பண்டமாற்று போய் பணம் பிறந்த நாள் முதல் 
தொழில்                              : பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குவது 
பலம்                                     : நுகர்வுக் கலாச்சாரம்
பலவீனம்                             : ஏறி இறங்கும் பங்குச்சந்தை  
நீண்ட கால சாதனைகள்        : உயர்ந்து கொண்டே இருப்பது 
சமீபத்திய சாதனைகள்           : மக்கள் கேள்வி கேக்காதது 
நீண்ட கால எரிச்சல்                : போராட்டம் செய்பவர்கள் 
சமீபத்திய எரிச்சல்                   : தேர்தல் நெருங்குவது 
மக்கள்                                          : அடிமைகள் 
சொத்து மதிப்பு                          : சுவிஸ் வங்கிகள் திணறுகின்றன 
நண்பர்கள்                                  : அதிகார வர்க்கத்தினர் 
எதிரிகள்                                      : எப்போதும் கம்யூனிஸ்டுகள் 
ஆசை                                           : இந்தியாவை அமெரிக்காவாக மாற்ற 
நிராசை                                       : தண்டகாரண்ய மக்களால் வருவது 
பாராட்டுக்குரியது                    : மக்களை இன்னும் பொறுமைசாலிகளாக வைத்திருப்பது (எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாங்கய்யா!)
பயம்                                             : இலவசங்களைத் தருபவர்கள் 
கோபம்                                        : எளியவர்களுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது 
காணமல் போனவை              : மானியங்கள் 
புதியவை                                    : கோடிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது 
கருத்து                                        : விமானப் பயணங்களையே தொழுவம் என்று சொல்பவர்களை நிர்வாகம் செய்ய சொன்னால் நாடு குட்டிச்சுவராகத்தான் போகும் 
டிஸ்கி                                          : இந்திய அரசியல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் மற்றும் தேசியத்தில் ஒற்றை ஆட்சியாக மாறிவருவது கவலை அளிக்கிறது.
.