25 ஆக., 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - இலங்கை விமான நிலையம்..

அது 1995 ஆம் ஆண்டு. நான் முதன் முதலில் மூன்று வருடம் கழித்து சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருகிறேன்.. மூன்று ஆண்டுகள் அங்கு இருந்துவிட்டு வருவதால் உறவினர்,நண்பர்கள் என அனைவருக்கும் பார்த்து பார்த்து பொருட்கள் வாங்கினேன். அன்றைய தேதிக்கு ஒரு லட்சத்துக்கு மேல் இந்திய ரூபாய்க்கு சமமாக செலவழிந்தது.. சில அனுபவமுள்ள நண்பர்கள் மட்டும் என்னை பார்த்து நீ எவ்வளவுதான் வாங்கி சென்றாலும் அவர்களுக்கு திருப்தி வராது என்று அறிவுரைத்தாலும் நான் கேட்கவில்லை.. எல்லோருக்கும் எல்லாம் வாங்கிய நான் எனக்கென்று புத்தம் புதிய வரவான சோனி சிஸ்டம் வாங்கிக் கொண்டேன். 

ஊருக்கு போக அப்போது பொங்கல் சமயமாக இருந்ததால் டிக்கெட் கிடைக்கவில்லை. நண்பன் அடித்து பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் ஒரு டிக்கெட் வாங்கி கொடுத்தான். எல்லாவற்றையும் அள்ளிக் கட்டிக்கொண்டு சிங்கப்பூர் விமான நிலையம் வந்து போர்டிங் போட்டால் என்பது கிலோ இருந்தது. அப்போது முப்பது கிலோ மட்டுமே அனுமதிப்பார்கள். போர்டிங் அப்புறம் போடுகிறோம் என்று சொல்லிவிட்டு லக்கேஜை பிரித்து முப்பது கிலோ தனியாகவும், கையில் வைத்துக் கொள்ள பத்து கிலோ தனியாகவும், எடுத்துக் கொண்டு, நான் வாங்கிய சோனி சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை தனியாகவும் சிஸ்டம் தனியாகவும் பிரித்துக்கொண்டு, எனக்கு சரியாக இருக்கும் அளவை எடுத்துக்கொண்டு மீதத்தை இன்னும் இரண்டு பேக்கில் கட்டி அதனை லக்கேஜ் எடுத்து வராத ஆட்களிடம் கிலோவுக்கு இவ்வளவு தருகிறேன் (S$ 6.00 என்று ஞாபகம்) பேசி அதனை கொடுத்து அனுப்பிவிட்டு எனது பெட்டியின் பூட்டை தேடினால் அதனை காணவில்லை.

போர்டிங் நேரம் முடியப்போகிறது என்பதால், நண்பன் அவசர அவசரமாக பெட்டியை  கிடைத்த சிறிய கையிற்றால் கட்டி பேக்கிங் டேப் சுற்றி கொடுத்தான். போர்டிங் போடுகிற சமயம் எனக்கு பின்னால் நின்றிருந்த ஆள் பூட்டவில்லையா என்றார். இல்லை என்றேன். இப்படி இருந்தால் சிறிலங்காவில் லக்கேஜை திருடிவிடுவார்கள் என்றார்.நான் போர்டிங் போடும் அதிகாரியிடம் பூட்டு வாங்கி வருகிறேன் என அனுமதி கேட்க, அவரோ எத்தனை தடவை இப்படி போவே, நேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கு எனவே அனுமதிக்க முடியாது என்று சொல்ல, எனக்கும் வேறு வழியின்றி போர்டிங் போட்டுவிட்டேன்.

ஆனால் என் லக்கேஜில்தான் விலை அதிகமுள்ள பொருட்கள் இருந்தன. என்ன செய்ய போட்டாச்சு. உள்ளே வெயிட்டிங் ஹால் வந்ததும், எனக்கு பின்னால் நின்ற நபர் மீண்டும் என் அருகில் வந்து நாம் இன்றிரவு இலங்கையில் தங்கி நாளைக் காலைதான் மீண்டும் சென்னை செல்வோம், இன்று இரவு சிறிலங்காவில் இப்படி பூட்டப்படாத பெட்டிகளை திறந்து பொருட்களை திருடி விடுவார்கள் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. முதன் முதலில் ஊருக்கு போகிறோம், அதிலும் எல்லோருக்கும் பார்த்து பார்த்து வாங்கிய பொருட்கள் திருடு போய்விட்டது என்று அவர்களிடம் சொல்லமுடியாமா என கவலை வந்துவிட்டது.

ஸ்ரீலங்கா விமான நிலையம் வந்ததும் சென்னை செல்லும் பயணிகளை தனியே அமரவைத்தனர். எல்லோருக்கும் ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் பஸ் வரும் வரைக்கும் காத்திருக்கும்படி சொல்லி சென்றார்கள். அப்போது என் அருகில் வந்த தமிழ் அதிகாரி என் கையில் இருந்த சோனி சிஸ்டம் பார்த்து மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும்படி, தம்பி நீங்கள் வைத்திருக்கும் சிஸ்டத்தை உங்களை ஹோட்டலுக்கு எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டார்கள். உங்களை இங்குள்ள லாக்கர் ரூமில் வைக்க சொல்வார்கள், ஆனால் காலையில் வந்தால் அது உங்களுக்கு கிடைக்காது. எனவே உங்களை அப்படி வைக்க சொல்லும்போது நான் வெயிட்டிங் ஹாலில் தங்கிக் கொள்கிறேன் உங்களுக்கு ஹோட்டல் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்தார்.எனக்கு இதைக்கேட்டதும் என்னடா சோதனை மேல் சோதனை என  வெறுப்பாகி விட்டது.

பஸ் வந்தவுடன் எங்களை அழைத்தனர், ஒரு அதிகாரி என்னைப் பார்த்து என் கையில் வைத்திருந்த சிஸ்டம் எடுத்து போக முடியாது என்றார். அவ்வளவுதான் நான் கடுப்பாகிவிட்டேன். சார் இதை நான் சிங்கப்பூரில் ஏறும்போதே ஏன் உங்கள் விமான சிப்பந்திகள் சொல்லவில்லை.அதனால் இதனை நான் கையில் எடுத்துதான் செல்வேன் என்றேன்.அவரோ நீ இங்கு சத்தம் போடகூடாது, மீறி சத்தம் போட்டால் உன்னைக் கைது செய்வேன் என்றார். அப்போது எங்களுடன் வந்திருந்த  ஒருவர் சமாதானத்துக்கு வந்தார். அவர் என்னை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு அதிகாரியைப் பார்த்து எதற்காக எடுத்துப் போக கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதிகாரி இவர் இந்தப் பொருளை வெளியில் நல்ல விலைக்கு விற்பார் அதனால்தான் என்றார். சமாதானம் செய்தவர் இவர் கையில் வைத்திருப்பது முழுமையான சிஸ்டம் இல்லை, மேலும் நீங்கள் சந்தேகப்பட்டால் இவர் பாஸ்போட்டில் எண்டோஸ் செய்து கொடுங்கள் என்றார். அதிகாரியும் பாஸ்போட்டில் எண்டோஸ் செய்துகொண்டு அனுப்பினார். சமாதானத்துக்கு வந்தவர் தன்னை ஒரு மருத்துவர் என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

ஹோட்டலுக்கு வந்ததும் என்னால் அன்று நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. காலையில் எழுந்து சென்னை செல்வதற்கு எங்களை விமான நிலையம் அழைத்து செல்வதற்காய் வரும் பஸ்சுக்கு காத்திருந்தோம், எல்லோருக்கும் காலை உணவு வழங்கினார்கள். நான் வேண்டாம் என்று மறுக்கவும் மருத்துவர் என்னை தம்பி பெட்டி ஒன்றும் ஆகாது என சமாதானம் செய்து சாப்பிட வைத்தார்.

விமான நிலையம் வந்து இமிக்ரேசன் முடிந்து சென்னை விமானம் ஏற காத்திருந்தோம், சிறிலங்காவில் அப்போது நேரடியாக விமானத்தில் ஏற முடியாது, உள்ளுக்குள் பஸ் வைத்துதான் அழைத்து செல்வார்கள். அங்கு சென்றதும் வரிசையாக நமது லக்கேஜ் வரும், அதனை நாம் அடையாளம் காட்டியதும் விமானத்தில் ஏற்றுவார்கள். எனக்கோ இதயம் படு வேகத்தில் அடித்துக் கொண்டது. என பெட்டியும் வந்தது. ஆனால் என நண்பன் எப்படி பேக்கிங் டேப் சுத்தியிருந்தானோ அப்படியே இருந்தது. எனக்கு நிம்மதி வந்தது.

ஆனால் திடீரென ஒருத்தர் தன் பெட்டி உடைக்கப்பட்டு விட்டதாக கத்தினார், எல்லோரும் அவரைப் பார்த்தோம் அவர் முதன்முதலில் என்னை எச்சரித்தவர். அவர் அதிகாரிகளிடம் மிகுந்த சண்டை போட்டார். அவர்களோ நீங்கள் சென்னை சென்றதும் புகார் செய்யுங்கள், அல்லது இந்தவிமானத்தில் போகவேண்டாம், இங்கேயே புகார் அளியுங்கள், நாங்கள் விசாரணை செய்து உங்களை அனுப்பி வைக்கிறோம் என்றனர். அவரோ நொந்து போய் வேண்டாம் இதே விமானத்தில் போகிறேன் என்று எங்களுடனே வந்தார்.

விமானத்தில் அவர் எழுந்து மருத்துவர் இருக்கும் இருக்கை அருகில் வந்து பார்த்தீர்களா சார் நான் நன்றாக பூட்டி வைத்திருந்தேன். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள் என பொருமினார். மருத்துவர் அமைதியாக அவரைப் பார்த்து தம்பி நீங்கள் அந்த தம்பியை (என்னைக் காட்டி ) தேவையில்லாமல் டென்சன் ஆக்கினீர்கள், போதாகுறைக்கு எங்கள் எல்லோரிடமும் அவர் பெட்டி உடைத்து கண்டிப்பாக திருடி விடுவார்கள் என சொன்னீர்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது ஆனால் உங்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

சென்னை விமான நிலையம் வந்து இறங்கி மருத்துவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினேன். ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை. அதனால் கல்யாணம் ஆகும் வரைக்கும் வெளிநாடு போய் வந்தால் வெறுங்கை வீசிக்கொண்டுதான் வருவேன். 

42 கருத்துகள்:

Cable சங்கர் சொன்னது…

ippo.. ஆகியும் வெறும் கைதான் வீசிட்டு வர்றோம்.. :)

Unknown சொன்னது…

///Cable Sankar கூறியது...
ippo.. ஆகியும் வெறும் கைதான் வீசிட்டு வர்றோம்.. :)///

அண்ணே கையில் பாட்டில் எடுத்து வர்றோம் இல்லியா?

Selvaraj சொன்னது…

நானும் ஆரம்ப காலங்களில் இப்படி சுமந்தது உண்டு. அனுபவபட்டபின் இந்த பழக்கம் இல்லை. இப்போது கையடக்க பெட்டியுடந்தான் பயணிக்கிறேன்.

ஜெய்லானி சொன்னது…

//உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது ஆனால் உங்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.//

எண்ணம் போல் வாழ்வு

நசரேயன் சொன்னது…

//அண்ணே கையில் பாட்டில் எடுத்து
வர்றோம் இல்லியா?//

Sivas regal or red label

vasu balaji சொன்னது…

நசரேயன் கூறியது...
//அண்ணே கையில் பாட்டில் எடுத்து
வர்றோம் இல்லியா?//

Sivas regal or red label//

இப்புடி அலம்பல் பண்ற கேஸ் எல்லாம் மூடிய மோந்தா மொடங்கற கேசுங்க:)).

வினோ சொன்னது…

அண்ணே, அப்ப இப்போ வருந போது அமைதியா வர சொல்லிறீங்க.. புரிஞ்சுப் போச்சு..

ஹேமா சொன்னது…

விமான நிலையத்தில் தமிழ் பேசும் அதிகாரி இருந்தாரா ?அதிசயமா இருக்கு செந்தில் !

திருப்தியைப் பற்றிச் சரியாகச் சொன்னீர்கள் !

Chitra சொன்னது…

ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை.

.....என்ன கொடுமை சார், இது? ம்ம்ம்ம்ம்ம்......

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல அனுபவம்.

ஜோதிஜி சொன்னது…

நீயெல்லாம் வெளிநாடு போயிட்டு வர்றேன்னு வெளியே சொல்லாதடா? சிரிக்கப் போறாங்க..........

ஒவ்வொரு முறையும் கையை வீசிக் கொண்டு வந்த போது அம்மா சொன்ன வாசகம் இது .

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை.


//

எனக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன... நாம் எவ்வளவு தான் பொருள் வாங்கி சென்றாலும் அவர்கள் அதனுடைய மதிப்பை தான் கணக்கிடுகிறார்கள்..

என்னது நானு யாரா? சொன்னது…

உங்க பெட்டியில் இருந்து திருடபட்டு விடுமோ என்றே மனம் படபடத்தது. எசசரிக்கை செய்தவரின் பெட்டி உடைக்கபட்டது முறண்நகை.

எழுத்து நல்ல வேகமான ஒரு நடையில் செல்கிறது. சபாஷ்!

மனித மனங்கள் எப்போதுமே அப்படிதான். தாங்கள் வாங்கிய பொருட்கள் மீதே திருப்தி அடையாதவர்கள். மற்றவர் வாங்கி வந்த பொருட்கள் மீதா திருப்தி அடைந்து விட போகிறார்கள்!

a சொன்னது…

அனுபவம் அருமை.............

எங்க அப்பா / சித்தப்பா எல்லாம் சிங்கப்பூரிலிருந்து லீவுக்கு வரும்போதெல்லாம் ஷாங்கி ஏர்‌போர்ட்ல நீங்க பண்ணுன மாதிரித்தான் லக்கேஜ் பிரித்து போர்டிங்க் போடுவாங்களாம்..

எங்கப்பா பெட்டிய மூடூரதுக்கு முன்னாடி ஈர கைலிய போட்டு மூடிடுவாங்க... சென்னை ஏர்‌போர்ட்ல கஸ்டம்ஸ்ல பெட்டிய திறக்கும்போது அடிக்கிற ஸ்மெல்ல ஆபீசர், எங்க அப்பாவ சீக்கிரம்
அனுப்பிடுவார். ...

முனியாண்டி பெ. சொன்னது…

//ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை. //

I also had same experience in my first trip. now I stop purchasing.

Jerry Eshananda சொன்னது…

சிரி..சிரி...லங்கா.

Jerry Eshananda சொன்னது…

Shame On Lankans.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல அனுபவம்.

நம்ம சொந்தங்களுக்கு நாம் அந்தப் பணத்துக்காக செய்யும் தியாகங்களும் படும் கஷ்டங்களும் தெரிவதேயில்லை. அவர்கள் எண்ணம் வெளிநாட்டில் சம்பாதித்து அள்ளி வருவதாக நினைப்பு. என்ன செய்ய?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இதுக்குதான் எதுவும் வாங்க்கிட்டு வர கூடாதுன்னு ஒரு சபதம் எடுக்கணும்....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல அனுபவம்

அம்பிகா சொன்னது…

நல்ல அனுபவம்.

\\நம்ம சொந்தங்களுக்கு நாம் அந்தப் பணத்துக்காக செய்யும் தியாகங்களும் படும் கஷ்டங்களும் தெரிவதேயில்லை. அவர்கள் எண்ணம் வெளிநாட்டில் சம்பாதித்து அள்ளி வருவதாக நினைப்பு. என்ன செய்ய? \\
நல்ல அனுபவ பகிர்வு.

வடுவூர் குமார் சொன்னது…

இப்போதெல்லாம்...உல‌க‌ம‌ய‌மாக்க‌லில் எல்லா சாமான்க‌ளும் இப்போது இந்தியாவிலேயே கிடைக்குது என்று த‌ப்பித்துக்கொள்கிறோம்.

Unknown சொன்னது…

அவரவர் எண்ணம்போல் தான் அமையுங்கறது முற்றிலும் உண்மைன்னு உங்க பதிவைப் படிக்கும்போது புரியுது..

நல்ல பதிவு..

சௌந்தர் சொன்னது…

பூட்டாத பெட்டியில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து இருப்பாங்க

Jey சொன்னது…

அருமையான அனுபவம் .

Jackiesekar சொன்னது…

வெறுங்கை வீசிதான் வரனும்..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அதனால் கல்யாணம் ஆகும் வரைக்கும் வெளிநாடு போய் வந்தால் வெறுங்கை வீசிக்கொண்டுதான் வருவேன்.

-----------------

குடும்பத்தில் புரிவார்கள்..

ஆனால் ஒருமுறை சென்னையிலுள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் ஒரு லிஸ்ட் போட்டு சாமான் வாங்கி வர சொன்னார்..

தூரத்து சொந்தமாம்..

நானும் வாங்கி வந்தேன்.

கொடுத்ததும் பணம் தருவதாயில்லை.

" நீயெல்லாம் பணம் வாங்க மாட்டேன்னு அண்ணி சொன்னா " னு பில்டப்..

ஷாக் ஆயிட்டேன்.. பணம் செல்வழிக்க ஏழைகளும் நல்ல விஷயமுமா இல்லை நமக்கு .?

உடனே ரசீது கொடுத்து பணம் வாங்கினேன்.. அவர் முகம் வெளிறியது..

கண்டுகொள்ளவில்லை. நமக்கேன் வெட்டி பந்தாக்களின் நட்புன்னு..

அப்புரம் அம்மா கிட்ட திட்டு வாங்கினேன்..:(

vinthaimanithan சொன்னது…

சரி சரி அடுத்தாப்ல போயிட்டு வாரப்ப எனக்கு ரெண்டு செண்ட் பாட்டிலும், அப்புறம் 'அந்த' பாட்டிலும் வாங்கியாங்க!

ராஜ நடராஜன் சொன்னது…

இந்திய சுங்க வரி பிரிவினரும்,விமான காவல்துறையும் சேர்ந்து பெட்டியை திற என செய்யும் கொள்ளையை இலங்கைகாரன் பூட்டை உடைத்தே திருடுகிறான்.யார் உசத்தி?

செ.சரவணக்குமார் சொன்னது…

ஆமாங்க செந்தில்.. எவ்வளவுதான் வாங்கிட்டுப் போனாலும் நம்ம மக்களுக்கு திருப்தியே வரமாட்டேங்குது. நல்ல அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

சசிகுமார் சொன்னது…

சார் முழுவதுமாக படித்தேன் சார் அருமையாக இருந்தது. நல்லா ஊர் சுத்துவீங்க போல

அருண் பிரசாத் சொன்னது…

அப்ப ஊருக்கு வரும்போது எதுவும் வாங்கிட்டு போக கூடாதா? ரைட்டு

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

எப்படி இருக்கிங்க?

நல்ல அனுபவ பகிர்வு...

சொந்தங்கள்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க...வாங்கி வந்தவுடன் குறைபட்டுக் கொள்வார்கள்...ஆனால் நாளாக நாளாக சும்மா வராம எதையாவது வாங்கிட்டு வந்தாப்லயேனு நினைப்பாங்க.

மற்றபடி பொருள் திருடு போகாமல் இருந்தது ஒருவேளை
செளந்தர் சொன்ன மாதிரி பூட்டாத பெட்டியில் என்ன இருக்கப்பொகிறது என நினைத்திருப்பார்கள்...

வழிப்போக்கன் யோகேஷின் ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு...

அன்புடன்,
மறத்தமிழன்.

RK நண்பன்.. சொன்னது…

//ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை. //

I also had same experience ....

வாங்கிட்டு போலைனாலும் பிரச்சினை ,வாங்கலைனாலும் பிரச்சினை....... இவங்களாள நாம ஊருக்கு போயி லீவை என்ஜாய் பண்ண முடியல சாமி...

நிகழ்காலத்தில்... சொன்னது…

//உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது ஆனால் உங்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.//

ஆயிரம் சதவீதம் உண்மை..

pichaikaaran சொன்னது…

முன்பின் தெரியாதவர்கள் கூட சிலசமயம் ஆதரவாக இருப்பார்கள் .நெருங்கி பழகியவர்கள் சில சமயம் உபத்திரவமாக இருப்பார்கள் என்பதை நிறைய ஊர் சுற்றுபவர்கள் பார்க்கலாம் . நல்ல பதிவு

Indian சொன்னது…

//இப்போதெல்லாம்...உல‌க‌ம‌ய‌மாக்க‌லில் எல்லா சாமான்க‌ளும் இப்போது இந்தியாவிலேயே கிடைக்குது என்று த‌ப்பித்துக்கொள்கிறோம்.
//

உண்மை.

dheva சொன்னது…

நல்ல அனுபவம் செந்தில் இன்னும் சொல்லிக்கொண்டுதானிருக்கிறார்கல் இலங்கையில் பொருட்களை திருடுவதாக....ஆனால் எனக்கு இது வரையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை....

மகேஷ் : ரசிகன் சொன்னது…

என்ன கொடும சார் இது,...

குழந்தை அருமை... :)

priyamudanprabu சொன்னது…

நல்ல அனுபவ பகிர்வு...

Ravichandran Somu சொன்னது…

//ஆனால் ஊரில் வந்து பொருட்களை பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொருவரும் தனக்கு வாங்கிவந்த பொருட்களில் சரியாக திருப்தி அடையவே இல்லை//

எல்லோரும் சொன்னதுபோல் இதுதான் நிதர்சனமான உண்மை செந்தில்.

ஆரம்ப காலகட்டத்தில் என் மனைவி சொல்லியும் கேட்காமால் credit card-ல் பொருட்கள் வாங்கி செல்வேன். இப்போது பட்டு புத்தி வந்துவிட்டது:( இப்போது ஊருக்கு போகும்போது பெரிசுகளுக்கு மட்டும் கோடலி தைலம்.. டைகர் பாம் அவ்வளவுதான்!

பெயரில்லா சொன்னது…

//உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு சரியாகத்தான் வேலை செய்திருக்கிறது ஆனால் உங்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.//

சரியாக சொன்னார்