1 ஏப்., 2011

துரோணா - 9 ...


நானும் நண்பர்கள் செங்குட்டுவன் மற்றும் சபா.ரவி மூவரும் வைதீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டு என்னுடைய இருபத்தி ஒன்றாவது வயதில் அங்கு போனோம், அங்கு பிரபலமாக இருந்த பூஷமுத்து ஜோதிடரிடம் சென்றோம். எங்கள் மூவருக்கும் சுவடி பார்த்ததில் என்னைத்தவிர மற்ற இருவருக்கும் அது திருப்தியாக இருந்தது, ஆனால் எனக்கு திருப்தி இல்லை.

எனக்கு 31 வயதுவரைக்கு மட்டுமே பலன் சொன்னார்கள், மற்ற இருவருக்கும் 72 வயதுவரைக்கும் சொன்னார்கள்,அதனை எழுதியும், கேசட்டில் பதிவு செய்தும் தந்தார்கள் , நானும் பேசாமல் வந்துவிட்டேன், ஊர் வந்தவுடன் நாடி ஜோதிடம் பற்றி அறிந்த நண்பர் ஒருவரிடம் இதனைப் பற்றி விசாரித்தபோது (வேறு ஒருவரின் ஜாதகம் இது என்று சொன்னேன்) அவர் அனேகமாக அவரின் ஆயுள் 31 வயதுக்குள் முடிந்துவிடும் அதனால்தான் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்றார்.

அப்போது அது எனக்கு சந்தோசத்தை தந்தது, கிட்டத்தட்ட தற்கொலை செய்து கொள்ளும் முடிவில்தான் அப்போது நானிருந்தேன்(காரணத்தை வேறொரு அத்தியாயத்தில் எழுதுவேன்) , இன்னும் பத்து வருடம் கழித்துச் சாகபோகிறேன் என்று தெரிந்ததும், அதற்குள் நான் குடும்பத்துக்கு தேவையான சொத்து சேர்த்து கொடுத்துவிடவேண்டும் என முடிவு செய்து அடுத்த வாரமே சென்னை கிளம்பினேன்.

சென்னையில் என்னுடைய மூத்த சகோதரியின் வீடு இருந்தது, என்னுடைய அத்தான் வந்த ஒரு வாரத்திலேயே ஒரு அச்சகத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார், சேர்ந்த முதல்நாள் எனக்கு ஒரு பழைய சைக்கிளை தந்து சுத்தம் செய்ய சொன்னார்கள், வாங்கினதுக்கு அப்புறம் அதை தொடைக்கவே இல்லை என்று நினைக்கிறேன், அதை சுத்தம் செய்யவே எனக்கு மதியம் ஆனது, மதியத்துக்குபிறகு அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் அச்சகதுக்கு வரவேண்டிய பணத்தை வாங்கச் செல்லவேண்டும் , முதல்நாள் ஒரு வயதானவர் என்னுடன் கூடவந்தார் , மறுநாள் நானே சென்றேன், காலை பதினோரு மணிக்கு தேநீர் குடிக்கும் நேரத்தில் அலுவலகம் வந்தபோது அங்கு உள்ள நபர் எனக்கு தன் கையில் உள்ள டீயை தந்தார். பரவாயில்லை நீங்கள் சாப்பிடுங்கள் நான் அப்புறம் குடிக்கிறேன் என சொல்லியும் பிடிவாதமாக என்னிடம் தந்தார். நானும் அன்பாக தருகிறார் என குடிக்க முற்பட்டபோது, அவரின் நண்பர் உடனே தடுத்து பாஸ் அதை குடிக்காதீங்க, அவனுக்கு வந்த டீயை நான் எச்சி பண்ணிட்டேன் அதனால்தான் உங்ககிட்டே கொடுக்கிறான் என்றார். வந்த கோபத்தில் டீயை அவன் முகத்தில் வீசிவிட்டேன். அப்புறம் என்ன சண்டைதான்.  நாம ஊரிலேயே பெரிய சண்டியர் என்பதால் கையில் கிடைத்த கட்டையை எடுத்து நாலு போட்டவுடன் என்னை அங்கு உள்ளவர்கள் பிடித்துகொண்டனர். அதற்குள் என் அத்தானையும் அழைத்துவந்துவிட்டனர் (அருகில்தான் அவருடைய கடையும்) அவர் வந்தவுடன் கட்டையை கீழே போட்டேன். வந்தவர் எதையும் விசாரிக்கவில்லை என்னை விட்டார் ஒரு அறை, மேற்கொண்டு அடிக்க வரவும் நான் மறுபடி கட்டையை எடுத்துக்கொண்டு அவரையே எதிர்த்தேன், உடனே அருகில் உள்ள எல்லோரும் சமாதானப்படுத்தி என்னை அனுப்பி வைத்தனர்.அன்றிலிருந்து இன்றுவரை என் அத்தானுடன் பேசுவது கிடையாது மேலும், நான் அவருடைய பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறேன் .

பிறகு இரண்டொரு இடங்களில் வேலை செய்து ஒன்றும் சரிப்படாமல் போகவே , சிங்கப்பூருக்கு சென்றுவிட்டேன். அங்கு நான்கு வருடங்கள் வேலை செய்தேன், ஓரளவுக்கு பணம் சம்பாதித்தேன்

நான் சிங்கபூரிலிருந்து திரும்பியவுடன் என் திருமணப் பேச்சு ஆரம்பித்தது, நான் திருமணமே செய்துகொள்ளமாட்டேன் என அம்மாவிடம் சொன்னேன், அம்மாவோ என்னை சமாதனப்படுத்தி அக்கா பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என சம்மதம் வாங்கிவிட்டது. உடனே பிரச்சனை ஆரம்பித்தது , மூத்த சகோதரிகள் இரண்டு பேர் வீட்டிலும் தன்னடைய பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பிடிவாதம் பிடித்தனர் . நான் தலையிட்டு நான் மூத்த அக்கா பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் , அதுதான் சென்னையில் சிரமப்படுகிறது என சொல்லி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தேன், அக்கா பெண்ணும் மேற்க்கொண்டு படிக்க வேண்டும் அதனால் திருமணத்தை தள்ளிவைக்கலாம் என சொன்னதால் நான் மறுபடியும் சிங்கப்பூர் சென்றுவிட்டேன்.

ஆனால் என் அடுத்த சகோதரி சும்மா இருக்கவில்லை, அது என்னுடைய மற்றும் இரண்டு அக்கா பெண்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதன் ஆஸ்தான ஜோதிடன் வடசேரி மணியிடம் பார்க்கசொன்னது, மணியோ இரண்டு பெண்களுமே எனக்கு பொருந்தவில்லை, இருவரில் யாரை திருமணம் செய்தாலும் நான் ஒரு வருடத்தில் இறந்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார் , என் வீட்டில் பிரச்சினை மறுபடி ஆரம்பித்தது , என் மூத்த சகோதரிக்கும் விஷயம் பரவ , அதற்குள் எனக்கும் என் அக்கா பெண்ணிற்கும் ஒரு புரிதல் வந்து அடிக்கடி தொலைபேசியில் உரையாட அதற்க்கு என் மூத்த சகோதரி விஷயத்தை மகளிடம் சொல்லாமல் என்னோடு பேசக்கூடாது என தடைபோட, அவர்களுக்கு தெரியாமலே நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். 

மூன்று வருடம் கழித்து நான் திரும்பி வரும்போது எனக்கு வேறு பெண்ணை பார்க்க ஆரம்பித்தனர், நானோ திருமணமே வேண்டாம் என்று இருந்த என்னை நீங்கள்தான் வற்புறுத்தி சம்மதிக்க வைத்திருக்கிறீர்கள், என்னால் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளமுடியாது என மறுத்துவிட்டேன். உடனே என் அக்கா பெண்ணிடம் இந்த விஷயத்தை சொல்லி என்னிடம் பேசவிடாமல் தடுத்தனர் . அவளும் நீங்க வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள் என சினிமா டயலாக் பேசினாள். நானோ அப்ப நீ முதலில் திருமணம் செய்துகொள் அப்புறம் நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்றவுடன், அது என்னால் முடியாது என மறுத்துவிட்டாள்.

அப்புறம் நண்பர்கள் , உறவினர்கள் எல்லோர் மூலமாகவும் சொல்லிப்பார்த்தனர் நாங்கள் பிடிவாதமாக இருந்ததால் பிப்ரவரி 24 , 2002 ஆம் வருடம் திருமணம் நிச்சயம் செய்தனர், இதற்குள் நானும் அருகில் உள்ள பிரபல ஜோசியக்கரர்களிடம் சென்று பார்த்தேன் , அவர்களும் சொல்லிவைத்தமாதிரி ஒரு வருடத்தில் இறந்துவிடுவாய் என்றார்கள், அது என்னுடைய முப்பதாவது வயது, எனக்கு திடீரென வைதீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் ஞாபகத்துக்கு வந்தது, அவர்களும் எனக்கு முப்பத்தியொரு வயதுவரைதானே சொன்னார்கள் என நண்பர்கள் இருவரை மீண்டும் அழைத்துக்கொண்டு பழைய எழுதிக்கொடுத்த புத்தகத்தையும், ஆடியோ கேசட்டையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் பூஷமுத்துவிடமே சென்றோம்

அங்கு சென்று ஏற்கனவே நான் அங்கு வந்து சுவடி பார்த்த விஷயத்தை சொல்லாமல் புதிதாக மூவருக்கும் பார்த்தோம். அதில் எனக்கு 74 வயதுவரைக்கும் சொன்னார். நான் என் பழைய நோட்டைக் கொடுத்து படிக்க சொன்னேன். அடடே நாங்க பார்த்ததுதான் யாரோடது என ரொம்ப சந்தோசமா வாங்கிப்படித்தார். படிக்கப் படிக்க அவர் முகம் மெல்ல மாறியது முடித்தவுடன் ஒன்றுமே தெரியாதது மாதிரி இது யாரோட ஜாதகம் என மறுபடிக்கேட்டார்.  என்னுதுதான் இரண்டில் எது உண்மை என நேரடியாக விசயத்துக்கு வந்தேன். முதலில் நீங்க தப்பாக கொடுதிருப்பீர்கள் என சமாளித்தவர், நான் ஏன் இப்படி பொய் சொல்லி சம்பாதிக்கிறீர்கள்?என்றவுடன், திடீரென ரவுடி மாதிரி எங்களிடம் ஆவேசமாக "என்கிட்டே சண்டை போடுரிங்களா? இது எங்களோட ஏரியா உங்களால ஒன்னும் புடுங்க முடியாது என மிரட்டினார்," என் நண்பனோ நாங்க ஜூனியர் விகடன் நிருபர், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம் என்றவுடன் மறுபடி கெஞ்ச ஆரம்பித்தார், சரி போகட்டும் விடுங்க எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது உங்களால் அது தீர்ந்துபோனது என சொல்லிவிட்டு அவர் வாங்கித்தந்த ஜூஸ் குடித்துவிட்டு கிளம்பினோம்.

என் திருமணதேதி நெருங்கியது பிப்ரவரி மூன்றாம் தேதி என் இன்னொரு சகோதரியின் மகன் வாகன விபத்தில் அடிபட்டான் ( இவன் பெற்றோர் அவனுடைய சின்ன வயதில் இறந்துவிட்டனர்) தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பிப்ரவரி எட்டாம் தேதி இறந்துவிட்டான். என் வாழ்க்கையில் நான் மிகவும் நேசித்த இரண்டாம் நபர் அவன், அவனும் போய்விட்டான், எனக்கு உலகமே இருண்டு போனது, எங்கள் குடும்பத்தில் அனைவரும் நிலைகுலைந்துபோனோம், என் திருமணமும் நின்றது.

அவனின் சாவுக்கு வந்திருந்த என் அக்கா மகளும் என் வீட்டிலேயே தங்கிவிட்டாள். மூன்று மாதங்கள் ஆனது , நான் அவளை திருமணம் செய்துகொள்ள போனதால்தான் இப்படி ஆனது என எல்லோரும் பேச ஆரம்பித்தனர் , மறுபடி பிரச்சினை வெடித்தது, ஆனால் நானும் அவளும் பிடிவாதமாக இருந்தோம், இடையில் எனக்கும் என் நண்பனுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சினையில் (இது தனி அத்தியாயமாக வரும் ) வேறு பாதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பனின் திருமணம் நிச்சயம் ஆனது, அதில் எனக்கு திருமணம் ஆகாமல் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என அவன் முரண்டு பிடிக்க , இது எதுவும் எனக்கு தெரியாமலே மீண்டும் திருமணபேச்சு ஆரம்பித்தது, நாங்கள் இருவரும் ஒரு வருடம் கழித்துதான் எங்கள் திருமணம் என்றோம். 

ஆனால் எங்களிடம் கேட்காமலே கோவிலில் வைத்து திருமணம் செய்யலாம் என ஏற்பாடு செய்தனர். வேறு வழியில்லாமல் நாங்களும் சம்மதித்தோம், சென்னையில் இருந்து என் சகோதரி மட்டும் வந்துவிட்டு, " நான் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீ நடு ரோட்டுலதான் நிப்பே" என வாழ்த்திவிட்டு திருமணத்துக்கு வராமலே சென்னை திரும்பிவிட்டார்.

மன்னார்குடி மீனாட்சி அம்மன் கோவிலில் என் நண்பனின் திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா, அப்பா, மலர் அக்கா, அதன் கணவர் , கண்ணகி அக்கா , அதன் கணவர், இவர்களின் பிள்ளைகள், தம்பி ரமேஷ், நண்பர்கள் பாலா அண்ணன் , ரவி , செங்குட்டுவன் இவர்கள் முன்னிலையில் தாலி கட்டாமல், ராகு காலத்தில் 12.06.2002 அன்று பதிவு திருமணம் செய்தேன்.

இன்று எனக்கு 37 வயதாகிறது , ஆறு வயது மற்றும் இரண்டு வயது என இரு பசங்களின் தகப்பன். 

ஜோசியர்கள் இருக்கிறார்கள், நானும் இருக்கிறேன் ...

நான் மரணத்தை வென்றவன் ..............

18 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

நான் தான் பஸ்ட்டா..

பாட்டு ரசிகன் சொன்னது…

தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தலைவரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

36 ஹி ஹி

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

Nagasubramanian சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

//அன்றிலிருந்து இன்றுவரை என் அத்தானுடன் பேசுவது கிடையாது மேலும், நான் அவருடைய பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறேன் .//

very good.

vinothagan hospitalaa?அம்மாடி!!!

நாடி ஜோசியம் இப்போ வியாபரத்துக்குதான்.

Pranavam Ravikumar சொன்னது…

பதிவு அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லதொரு பதிவு.

ஜோஸ்யர்கள் பல்ர் கூறுவது பல நேரங்க்ளில் இப்படித்தான் ஏட்டிக்குப்போட்டியாக உள்ளன.

எனக்கும் ஜோஸியம் பார்க்கப்போனதில் நிறைய அனுபவங்கள் உண்டு. என் பெயர்க்காரணம் என்னும் பதிவில் கூட கொஞ்சம் எழுதியுள்ளேன்.

நானும் இப்போதெல்லாம் இதையெல்லாம், கொஞ்சமும் நம்புவது இல்லை.

ஆனால் ஒரு சிலர் சொன்னது மட்டும் ஒரு சில நேரங்களில் மட்டும் சரியாக இருப்பது போலவும் தோன்றுகிறது.

மொத்தத்தில் குழம்பம் தான் மிஞ்சுகிறது.

இருப்பினும் உங்கள் துணிச்சல் + உங்கள் மனைவியின் துணிச்சல் பாராட்டத்தக்கவையே.

நீங்கள் இருவரும், குழந்தைகளும், நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சுயசரிதை ம்ம்ம் அருமையான வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்...

Amudhavan சொன்னது…

வாழ்க்கை பூராவுக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கும் போல...மகிழ்வான அனுபவங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

ஜோசியத்த நம்பாம உங்கள நீங்க நம்புனீங்க பாருங்க அப்பவே நீங்க ஜெயிச்சிட்டீங்க சார், உங்களின் சந்தோசமான வாழ்க்கை என்றும் தொடர என் வாழ்த்துக்கள் :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

pallaandu vaazhka annaa

Jana சொன்னது…

ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.

ஹேமா சொன்னது…

37 வயசுக்குள்ள எவ்ளோ அனுபவங்கள் !

ராஜ நடராஜன் சொன்னது…

ஜோசியகாரரை முகம் கிழித்தது பெரிய விசயம்.

பகிர்வுக்கு நன்றி!

நேசமித்ரன் சொன்னது…

அன்று இரவு அடைந்த அதே அதிர்வு இன்றும் தலைவரே :)

பா.ராஜாராம் சொன்னது…

அருமையான பகிர்வு செந்தில்!