மாசானபு ஃப்கோகா என்றொரு எளிய மனிதரால் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வம்சியும், பூவுலகில் நண்பர்களும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள். விவசாய பூமியான நமது தேசம் இப்போது எதை நோக்கி பயணிக்கிறோம் என்று இலக்கில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நம்மாழ்வார் போன்ற நமது ஆசான்கள் நமது பாரம்பரிய விவசாயத்தை காக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு லிட்டர் பாலின் விலையைவிடவும் அதே அளவு தண்ணீருக்கு அதிக விலைகொடுத்து கூச்சமில்லாமல் வாங்கப் பழகிவிட்டோம். எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகளை சந்திக்கபோகிறோமோ?.
இந்தப்புத்தகம் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் பேசாமல் பாரம்பரியம், கலாசாரம், உணவு பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்கிறது. யகொஹோமா கஸ்டம்ஸ் பீரோவில் தாவர சோதனைப்பிரிவில் வியாதிகளை பரப்பும் பூச்சிகள் உள்ளனவா எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மாசானபு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்தக்கிராமத்தில் வந்து விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் கடுமையான நஷ்டத்தினை ஏற்ப்படுத்திய இவரது விவசாய முறையைப்பார்த்து அவரது தந்தையார் கடிந்துகொள்ள, அவரது சிந்தனை வேறு மாதிரியாக இருந்தது. அவர் சொல்கிறார் "நான் ஒரு மகிழ்ச்சியான, இயற்கையான வேளாண்மை முறையை கண்டுபிடிக்கவும். அதன் மூலம் வேலைப்பளு குறையவும் குறியாயிருந்தேன். அல்லது "இதைச் செய்யாமல் இருந்தால் என்ன?" என்றே எனது சிந்தனை இருந்தது என்கிறார்.
இறுதியாக தனது நிலத்தை உழத்தேவையில்லை, செயற்கை உரங்கள் போடத்தேவயில்லை, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க தேவையில்லை, இப்போது நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான வேளாண்மை முறைகள் தேவையில்லை என முடிவு செய்கிறார். அதனை சோதனை செய்து பார்க்கும்போது ஒரு சமச்சீரான நெல் வயல் சூழலமைப்பு என்பதே பூச்சிகளாலும், தாவரக் குடும்பங்களும் நிரந்தர உறவைக்கொண்ட ஒரு அமைப்பாகும். இப்பகுதியில் தாவர நோய்கள் தாக்குவது அசாதரணமான விசயமாக இருந்தாலும், அதனால் பயிர்வகைகள் பாதிக்கப்படுவதில்லை எனக் கண்டறிந்தார்.
அவர் நான்கு அடிப்படைகளை முன்வைக்கிறார். முதலாவதாக மண் பதப்படுத்துதல் கிடையாது. அதவாது நிலத்தை உழுவதோ, புரட்டிப்போடுவதோ செய்தல் கூடாது. இரண்டாவது வேதியியல் உரங்களோ, நாமே தனியாக தயாரித்த தழை உரங்களோ போடக்கூடாது. மூன்றாவது களையெடுப்போ, களைக்கொல்லி உபயோகமோ செய்தல் கூடாது. நான்காவது இயற்கையை அதன் போக்கில் விடுவது. அதாவது நிலத்தை நாம் அதன் தொன்மை மாறாது பயன்படுத்துவது.
இவர் காய்கறி வளர்ப்பையே காட்டுச்செடிகளைபோல தன் இயல்பில் விட்டுவிடவேண்டும் எனச்சொல்கிறார். முல்லைக்கு தேர் தந்த வள்ளல் பரம்பரையான நமக்கு இது ஏற்றுக்கொள்ளமுடியாத விசயமாக இருந்தாலும் காட்டில் விளைகின்ற பழங்களை, காய்களை நீங்கள் யாராவது சாப்பிட்டு இருந்தால் மாசானபு சொன்னது உண்மைதான் என ஒத்துக்கொள்வோம். நம்மில் சப்பாத்திக்கள்ளிப் பழம் எத்தனை பேர் சாப்பிட்டுருப்போம்..
மிகச்சிறிய அளவில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயி, மிக எளிய அர்த்தமுள்ள வாழ்வை வாழ்கிறான். வெகு காலத்திற்குமுன்பு, ஒரு ஏக்கர் நிலம் மட்டும் வைத்திருக்கும் விவசாயி வருடமுடிவில் குன்றுகளில் முயல் வேட்டையாடியபடி ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை கழித்தான் அவன் ஏழையாக இருந்தாலும் அவனுக்கு இப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தது. இந்தப் புதுவருட விடுமுறை மூன்று மாதத்தில் இருந்து இரண்டாகி, ஒன்றாகி, இன்று வெறும் மூன்று நாள்களாக மாறிவிட்டன என ஜப்பானிய விவசாயிகள் பற்றி பேசுகிறார்.
"இளவேனில் என்பது மழையைக் கொண்டு வருமா? புயலைக்கொண்டு வருமா? என எனக்குத்தெரியாது ஆனால், நான் இன்று என் நிலத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன்" இது ஒரு பழைய நாட்டுப்பாடல் இதிலிருந்து வேளாண்மை ஒரு வாழ்க்கைமுறை என விளக்குகிறார்.
அவரிடமிருந்த இளைஞர்கள் இந்தியாவில் காந்தி கிராமத்திற்கும், இஸ்ரேலில் கிபுட்ஸ்க்கும்,அமெரிக்க பாலைவனம் மற்றும் மலைகளில் வசிக்கும் கூட்டுச் சமூகத்துக்கும் சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றனர்.
செறிவற்ற உணவு, சாதாரண உணவு, கொள்கை உணவு, இயற்கை உணவு, என உலகின் முக்கியமான நான்குவகை உணவுப் பழக்கத்தை விரிவாக அலசியிருக்கிறார். மனிதனைப்போல அறிவுடைய விலங்கு எதுவுமில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இந்த விவேகத்தால் மக்கள் அணு ஆயுதப்பரவலைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளனர் என்று சாடுகிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் நான்குபேர் கொண்ட குடும்பம் ஒன்று நாளொன்றுக்கு ஒருமணி நேரம் மட்டும் திட்டமிட்டு உழைத்தால், அவர்கள் தன்னிறைவு அடையும் அளவுக்கு அவர்களால் பயன்பெற முடியும் என உறுதியாக சொல்கிறார். உழைப்பு ஒன்றையே பிரதானமாக, பெருமையாக கருதும் ஜப்பானியர்கள் மத்தியில், ஏன் தேவையின்றி இவ்வளவு உழைக்க வேண்டும் என மனிதர்களை எள்ளி நகையாடும் மாசானபு எனக்கு ஆதர்சமாகதான் தெரிகிறார்.
ஒரே ஒரு வைக்கோல்!
இந்த வைக்கோல் சிறியதாகவும், இலகுவாகவும் தெரிகிறது. இது எவ்வளவு கனமுடையதாக இருக்கும் என்பதுகூட பலருக்கு தெரியாது. இந்த ஒற்றை வைக்கோலின் உண்மையான மதிப்பை மக்கள் புரிந்துகொண்டால், இந்த நாட்டையே, ஏன் இந்த உலகையே உலுக்கி விடக்கூடிய ஒரு மனிதப் புரட்சியே உருவாகும்.
புத்தகம் வாங்க வேண்டுமெனில்:
என்னுடைய பணம் புத்தகத்திற்க்கு நண்பர் ரஹீம் கசாலியின் விமர்சனம் படிக்க:
19 கருத்துகள்:
உணவு உண்டு உயிர்வாழும் அனைவரும் இதுபோன்ற புத்தகங்களைப் படிக்கவேண்டும்!
அண்ணே இப்ப இருக்கிற பல விவசாயிகள் யாரும் விவசாயம் செய்ய விரும்பவில்லை. உதாரணமாக என்னையே எடுத்து கொள்ளலாம். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் அதன் மீது நாட்டம் சிறிதளவும் இல்லை. சொகுசாக வாழ பழகிவிட்டது உடம்பு. எல்லாம் இருந்தும் எதிர்காலத்தில் குடிக்க குடிநீர் இல்லாமல் நாட்டிற்கு நாடு சண்டை வரும் என்று பல வல்லுனர்கள் கூறி வருவது உண்மையாக நடக்கும் அப்படி நடந்தால் அதன் முழு பொறுப்பும் இந்த தலைமுறையையே சாரும்.
பகிர்வுக்கு நன்றி தலைவரே
நம் தேசத்தின் விவசாயிகளின் முதுகை ஏற்கனவே ஒடித்து விட்டார்கள். பெரும்பானமை நிலத்தையும் மலடாக்கி விவசாயமே செய்ய முடியாதபடி ஆக்கிவிட்டார்கள். இந்த சூழலில் விவசாயம் செய்பவர்கள் ஏதோ கடனே என்றுதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அது நிச்சயமாக நஷ்டம் மட்டுமே தரும் ஒரு தொழிலாகவே இருக்கிறது.
இந்த நிலையில் அவர்களை இயற்கை விவசாயம் செய்யச் சொன்னால் கஷ்டம் தான். முதலில் சில/பல அருவடைகள் மோசமாக இருந்து நிலம் பண்பட்ட பிறகே இயற்கை விவசாயம் பலன் தரும் என்கிறார்கள். எனவே இதை நடைமுறைப்படுத்துவதில் அரசின் பங்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாம் செய்யும் காரியங்களுக்கு யார் அதிகம் கையூட்டு தருகிறார்கள் என்பதைப் பொருத்தே நடவடிக்கை எடுப்பதால் உர மற்றும் பூச்சிக் கொல்லி மட்டுமல்ல இனி விதைகளையும் வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து வாங்க சொல்வார்கள்..
இவர்களை வைத்துக் கொண்டு இயற்கை விவசாயம் என்பது நம் நாட்டில் கனவுதான்.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//இளவேனில் என்பது மழையைக் கொண்டு வருமா? புயலைக்கொண்டு வருமா? என எனக்குத்தெரியாது ஆனால், நான் இன்று என் நிலத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன்" இது ஒரு பழைய நாட்டுப்பாடல் இதிலிருந்து வேளாண்மை ஒரு வாழ்க்கைமுறை என விளக்குகிறார். //
மிக மிக அருமை....
அய்யா எங்க ஊர்ல பத்து வருஷம் முன்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வயற்காடாக இருந்தது இப்போ அந்த இடங்கள் வீடாகி விட்டன மற்றும் பல இடங்களில் தரிசாக, முள் காடாக கிடக்கிறது.....
ம்ஹும் வேதனை....
விவசாயம் என்பது அரசால் கைவிடப்பட்ட தொழிலாக இருக்கும் நிலையில், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்..படிக்கும் ஆவலைத் தூட்டி உள்ளீர்கள்!
நிச்சயமாய் நல்லதொரு புத்தகமாய்த்தான் இருக்கும்.
நன்றி செந்தில் !
நல்ல புரட்சிகரமான விஷய்ங்கள் தான். பாராட்டுக்கள்.
நல்ல பகிர்வு பாஸ்!
சிறப்பான புத்தகம். படிக்கனும்.
அடுத்த மாச லிஸ்டுக்கு ஒன்னு. நன்றி செந்தில்.
பதிவுக்கு மீண்டும் வருகிறேன்.
நாமும் சின்ன இணையப்புரட்சி செய்திருக்கிறோம்.டைம்ஸ் பத்திரிகையில் ராஜபக்சேவின் பெயர் நீக்கம்.உங்கள் பங்களிப்பும் மகத்தானது.நன்றி.
படிக்கிறேன்
தற்பொழுது மூன்று போகம் விளைவிக்கிறென்று சொல்லிக்கொண்டு இடைவிடாத விவசாயம் செய்துக்கொண்டு அல்லல் படுகின்றனர் நமது தஞ்சை பகுதி விவசாயிகள், போட்ட முதலை கூட எடுக்க சிர்மப்படுகின்றனர்
சத்ீஷ குமார்.
பரௌனி,பீஹார்
இந்தப் பதிவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன் செந்தில். சென்னையில் எங்கே கிடைக்கிறது உங்களின் பணம் மற்றும் அவரின் வைக்கோல்.
மாது படித்துவிட்டு மாய்ந்து மாய்ந்து சொன்ன புத்தகம்.ஆசைஅயாய் இருந்தது படிக்க.கொடுப்பினை இல்லை. மீண்டும் ஆசையாய் இருக்கு செந்தில்.
நான் படித்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று "ஒற்றை வைக்கோல் புரட்சி". இந்த நூலை தமிழாக்கிய திரு. நெடுஞ்செழியன் (பூவுலகின் நண்பர்கள் அமைப்பை நிறுவியவர். இப்போது உயிருடன் இல்லை) அவர்கள் 1993 ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு அளித்தார்.
"ஒற்றை வைக்கோல் புரட்சி" ஒரு வேளாண்மை நூல் மட்டுமல்ல. அது ஒரு தத்துவ நூலாகவும் அரசியல் நூலாகவும் வாழ்வியல் நூலாகவும் திகழ்கிறது. அதில் ஒரு கட்டுரை "அம்மா. மழலைப்பள்ளிக்கு போவதற்காகவா நான் பிறந்தேன்" என ஒரு குழந்தை தன் தாயிடம் கேட்பதாக இருக்கும். நம் வாழ்வின் அபத்தங்களை பட்டியலிட அந்த ஒரு கட்டுரையே போதும்.
அப்படியே, பூவுலகின் நண்பர்களின் "இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை" எனும் கவிதை நூலையும் படித்துப் பாருங்கள்.
There is a book by name silent spring written by Rachel Carson. Carson opened the topic of chemical invasion in our day to day life. Agriculture alone cannot bereversed to nature unless the lifestyle as awhole reverses back to nature
கருத்துரையிடுக