நகரத்தை கடந்துகொண்டிருந்த
முன்னிரவில்
தன் முகத்திரையை மெல்ல
மூடிக்கொண்டிருந்த
நகரம்
சோம்பலாய் நகர்ந்த
கூட்டம் குறைவான ஆம்னியின்
பின்னிருந்து கையாட்டிக் கொண்டிருந்த
ஒரு குழந்தையின் தூக்கத்தை
திருடியபடி..
பாக்கெட் தண்ணீர் விற்ப்பவன்
குரல் வழியே
தாகத்தை நினைவுக்கு கொண்டுவந்தபோது
வாங்க மறந்த நீர் பாட்டில்
தூரத்துக் கடையில்
தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த
கண்களின் நொடிகளில்
"இந்த பஸ் தஞ்சாவூர் போகுங்களா?"
என்றொரு குயில் குரல்
நகரத்து சோம்பலை
என் முகத்தில் இருந்து
அகற்றியிருந்தது..
இனி தஞ்சாவூர்
வரைக்கும் வரும்
குயிலும் குரலும் ..
சுமாரானதுதான் பேரூந்து
சுமாரானதுதான் குயில்
சுமாரானவன்தான் நானும்..