"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" - தமிழக பழமொழி
எங்களுக்கு வீட்டு தெய்வம் முருகன் என்பதால் பாம்புகளை அதிலும் நல்ல பாம்பை அடிக்கக் கூடாது என வீட்டில் பரம்பரை சட்டம் வைத்திருந்தனர். ஆனால் வடசேரி கணேசா தியேட்டருக்கு படம் பார்க்க போகனுண்ணா அதற்கு முதல் நாள் சாயங்காலம் காட்டாற்றில் எப்படியாவது ஒரு தண்ணீர் பாம்பினை பிடித்து பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்துக்கொள்வோம். காரணம் கணேசா தியேட்டரில் தரை டிக்கெட்காரர்களுக்கு மணல் பரப்பி வைத்திருப்பார்கள் நாங்கள் சிறுவர்கள் என்பதால் தலை மறைக்காமல் இடம் கிடைக்காமல் அவதிப்படுவோம். என் சகோதரி வீட்டில் சேகர் என்ற வயல் வேலைக்காக ஒருவனை வைத்திருந்தனர். சகலகலா கில்லாடி அவன். எங்களைவிடவும் பத்து வயது மூத்தவன் என்றாலும் நடவடிக்கைகள், சேட்டைகள் எங்களைப்போலத்தான் இருப்பான். எனவே படம் ஆரம்பித்து எழுத்து போட்டவுடன் அவன் கையில் வைத்திருக்கும் தண்ணீர் பாம்பை அவிழ்த்து விடுவான். அது விட்டால் போதும் என்கிற அவசரத்தில் பாய மக்கள் எல்லாம் பாம்பு பயத்தில் அவசரமாக தியேட்டரை விட்டே ஓடுவார்கள். அனேகமாக யார் காலிலாவது மிதிபட்டு அந்த பாம்பு இறந்து போய்விடும். கிடைத்த இடைவெளியில் எங்களுக்கான இடத்தை தேர்ந்தெடுத்து மணலை கூட்டிவைத்து மேடையாக்கி அமர்ந்து படம் பார்ப்போம். சமயங்களில் பாம்பு கிடைக்கும்போது ஓணானை பயன்படுத்துவோம். இதனால் நிர்வாகம் ஒரு கட்டத்தில் தரை டிக்கெட்டுகளுக்காக சவுக்கு மரங்களை வைத்து பென்ச் செய்து வைத்தனர். பின்னாளில் பெரிய நவீன திரையங்கமாக மாறி இப்போது திருமண மண்டபமாக இயங்குகிறது.
அதன்பிறகு +2 முடித்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு ஆள் சிங்கப்பூரில் இருந்ததால் அவர்கள் ஊருக்கு வரும்போது HARA ஜீன்சும், கேன்வாஸ் ஷூவும் வாங்கிவந்து தருவார்கள். மன்னார்குடி டவுனுக்குப் போகும்போது ஜீன்ஸ், ஷூவில்தான் போவோம். நாங்கள் ரவுடி ஊர்க்காரர்கள் என்பதால் எங்களை ஒரு புள்ளைகளும் மதிக்காது என்றாலும். ஹீரோ கணக்காக அப்படி சென்று வருவதுதான் அப்போதைய எங்களது பகுதிநேர தொழில். அடிக்கடி இப்படி போகிற வேலை இருக்காது என்பதால் மற்ற நேரங்களில் எனது ஷூக்கள் கண்ட இடங்களில் கிடக்கும். சமயத்தில் வீட்டு முன்புற கூரையில் அம்மா எடுத்து சொருகி வைத்திருப்பார். அப்படி ஒரு நாள் நகர வேட்டைக்கு கிளம்பும்போது கூரையில் சொருகி வைத்திருந்த ஒரு ஷூவை எடுத்து போட்டுக்கொண்டு இன்னொரு ஷூவை தேடி எடுக்கும்போது பக்கத்து வீட்டு சின்னம்மா பையன் குமார் என்னிடம், அண்ணே ஷூவை எடுத்தால் தட்டிவிட்டு போடுங்கண்ணே. இப்படித்தான் மன்னார்குடி கான்வெண்டுக்கு படிக்கவந்த ஒரு பையனின் ஷூவில் இருந்த தேள் கொட்டி ஒரு பையன் இறந்துவிட்டான் என அந்தக் கதையை சொல்ல. சுவாரஸ்யமாக கேட்டுவிட்டு எனது இன்னொரு ஷூவை தட்டிவிட்டு அதற்குள் என் காலை நுழைக்கும்போது விருட்டென்று வெளியே வந்தது ஒரு நல்ல பாம்புக் குட்டி எல்லோரும் பதறி அடித்து ஓடினோம். அந்த பாம்பை அடிக்காமல் விரட்டிவிட்டோம். அதன்பிறகு புத்துக்கு மூன்று வெள்ளிகிழமை பால் வைக்க சொல்லி அம்மா எல்லா பாம்புகளுடனும் பரிகாரம் செய்து கொண்டார்கள்.
சிங்கப்பூர், தாய்லாந்து என ஊர் சுற்றியபோது பாம்புக்கறியை சாப்பிடும் வாய்ப்பு தாய்லாந்தில் கிடைத்தது. வீட்டினரின் சட்டத்தை மீறி பாம்புக்கறியை அப்போது சாப்பிட்டு பார்த்திருக்கிறேன். டிஸ்க்கவரி சேனலில் ஒருவர் விஷ பாம்புகளைக்கூட தலையை வெட்டிவிட்டு அப்படியே பச்சையாக சாப்பிடுவார்.
கடந்த இரண்டு மாதங்களாக திருமுல்லைவாயல் தாண்டி ஒரு இடத்தில் ஒரு புதிய நிறுவனத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை கவனித்துவருகிறேன். தினசரி போகவர 90km என அசுவராஸ்யமான வேலை. ஆனால் நம் ஆட்களுக்கு பயிற்சி கொடுக்க சீனாவில் இருந்து இருவர் வந்திருக்கின்றனர். கையோடு தாங்கள் சாப்பிடுவதற்கான நூடுல்ஸ் கொண்டுவந்து தினசரி சமைத்து சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு நமது இந்திய உணவு வகைகளை கொடுத்துவிட்டு நான் அவர்களின் உணவுகளை சாப்பிட்டுவருகிறேன். ஒருநாள் ஒரு பெரிய பள்ளியை பார்த்துவிட்டு இது சீனாவில் கிடைக்காது. இதை சூப்வைத்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று சொன்னார்கள். அதிலருந்து பயபுள்ளைங்க சாப்பாட்டை ஒரு பயத்தோடுதான் சாப்பிட்டு வருகிறேன்.
நேற்று தண்ணீர் வரும் குழாயில் எங்கோ உடைத்துக்கொள்ள அதனை சரிசெய்வதற்க்காக வேலி ஓரமாக இருந்த அந்த குழாயை ஆராய்ந்தேன். எங்களது நிறுவனத்தினை சுற்றிலும் இடுப்பளவுக்கு புல் வளர்ந்து இருக்கும், வினோதமான பூசிகளை எல்லாம் தினசரி பார்ப்பேன். ஒருமுறை ஒரு உடும்பு எங்களது குளியலறையில் மாட்டிக்கொண்டது. பிடித்தால் அரைகிலோ கூட தேறாது என்பதால் எப்படியும் ஒரு நாள் நம்மிடம்தானே மாட்டும் என்ற நம்பிக்கையில் அது ஒரு கிலோ அளவுக்கு வளர்ந்தபிறகு பிடித்துக்கொள்ளலாம் என விரட்டிவிட்டோம். இப்படியாக வேலியை ஒட்டி நான் மெதுவாக நடந்தபோது என் பேண்டில் எதுவோ ஏறியது ஓணானாக இருக்கும் என் தட்டிவிட முயற்சித்தபோது என் டி.ஷர்ட்டுக்குள் நுழைந்துவிட்டது. நான் அலறியடித்து குதித்து கூச்சலிட்டுக்கொண்டே கம்பெனியை நோக்கி ஓடிவந்து அவசரமாக பனியனை கழட்டி உதறியபோது அதிலிருந்து ஒரு இரண்டடி நீள நல்ல பாம்புக்குட்டி விழுந்து அவசரமாக ஓட முயற்சித்து கம்பனி சுவர் ஓரமாக பொந்துகளை தேட, என் கூட இருந்த சீனக்காரன் ஒரு இரும்பு பைப்பை எடுத்து அதனை அடிக்கப்போனான். நான் உடனே தடுத்து வேண்டாம் என விரட்டிவிட்டேன். அவசரமாக பனியனை கழட்டும் முயற்சியில் என் வலது கை தோள்பட்டை சுளுக்கிகொண்டது. நானும் பாம்பும் தப்பித்துக்கொண்டோம்.
அதன்பிறகு சீனன் ஏண்டா! அடிக்கக்கூடாது? என்று சொன்னே, என வருத்தப்பட்டான். அவன் சாப்பாடு பறிபோன கவலை அவனுக்கு.
8 கருத்துகள்:
ஒரு நாள் நம்மிடம்தானே மாட்டும் என்ற நம்பிக்கையில் அது ஒரு கிலோ அளவுக்கு வளர்ந்தபிறகு பிடித்துக்கொள்ளலாம் என விரட்டிவிட்டோம்.//
நல்ல கதையா இருக்கே ? where is the blue cross?
ஆக மொத்தம் பாம்பை அடிக்கக் கூடாது, ஆனா பாம்புக்கறி சாப்பிடலாம். கரெக்ட்தானே பங்காளி.
பாம்பு கிடைக்கும்போது ஓணானை பயன்படுத்துவோம்./////
கிடைக்கும்போதா....கிடைக்காதபோதா?
ஒரு நாள் நம்மிடம்தானே மாட்டும் என்ற நம்பிக்கையில் அது ஒரு கிலோ அளவுக்கு வளர்ந்தபிறகு பிடித்துக்கொள்ளலாம் என விரட்டிவிட்டோம்/////
ஒரு கிலோ அளவிற்கு வளர்ந்த பின் அந்த உடும்பு மாட்டுச்சா...இல்லையா தலைவரே....
அனுபவம் ok, not bad...
ஐயா கடைசியில் ஒன்று சொல்ல மறந்துவிட்டீர்கள். " இங்கே எழுதியது முழுவதும் கற்பனையே கற்பனை தவிர வேறு ஒன்றும் இல்லை "
Athu Sari....
UDUMBU kariyachcha illaiya?
நாமா அது வாழற இடத்துக்கு போய் குடிசை போட்டுகிட்டு, வந்துச்சு போய்ச்சு சொல்றத விட, கண்ணுல பட்டுச்சா, போட்டுற வேண்டியதுதான். திரும்ப பயமுறுத்
நாம நிறைய போட்டு தள்ளியிருக்கிறோம். நாம நிம்மதியா வீட்டுல வாழனுமில்ல.
வயலா இருந்த நீங்க சொல்ற மாதிரி விட்டுடலாம்.
கருத்துரையிடுக