25 நவ., 2011

குப்பைத் தொட்டியருகே...


நீங்கள் பார்ப்பதற்கு முன்பிருந்தே 
அது 
அங்கேதான் இருந்தது 
நீங்கள் நகர்ந்தபின்னரும் 
அது 
அவ்விடத்தில்தான் இருக்ககூடும் 
எனினும் 
கூடுதலாக 
உங்கள் மனதின் சொல்ல முடியாத 
துயரங்களை 
எழுப்பியிருப்பதால் 
உங்களின் 
சில நாட்களை 
அல்லது 
இரவின் கனவுகளை 
அது ஆக்கிரமிக்கக்கூடும்..

நீங்கள் பார்த்த 
இன்னும் ஏராளமானோர் பார்த்த 
அது 
பல வருடங்களுக்கு முன்பு 
ஒரு அழகியாகக் கூட இருந்திருக்கலாம்
பலராலோ 
அல்லது 
ஒருவராலோ 
மறைக்கவேண்டியதை 
மறைக்க முயலும் 
குறைந்தபட்ச மிச்சமிருக்கும் 
நாகரீகத்தை 
தக்கவைத்திருக்கும் உள்ளுணர்வுடன் 
இருக்கும் அவளை 
தினமும் ஒரு தேநீர் 
தரும் 
தேநீர்க் கடைக்காரர் உள்ளிட்ட 
அனைவரும் 
அது என்றுதான் அழைக்கின்றனர்..

காலம் 
அவள் நினைவுகளை அழித்த மாதிரியே 
அவள் பெயரையும் அழித்துவிட்டது
ஏன்? எப்போதும்!
குப்பைதொட்டிகளை அடுத்து 
தூங்குகிறாள் என  
அவள் அறியாத அவளை 
யாராலும் அறியமுடியவில்லை..

4 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

சிவாவுக்கு இந்தமாதிரி பதிவுன்னா ரொம்ப பிடிக்கும்... படிச்சா சந்தோஷப் படுவார்...

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

குப்பைத் தொட்டியில் கிடைக்கும் உணவுக்காகத் தான். வேதனை நிரம்பிய கவிதை

பெயரில்லா சொன்னது…

பொதுவாக உங்கள் வலைப்பூவிற்கு பாலா படம் பார்க்கும் திகிலுடனேயே நுழைவேன். நான் படித்ததில் பெஸ்ட் என்று இதை சொல்லலாம். சூப்பர்ணா!!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வேதனை நிரம்பிய கவிதை