7 ஆக., 2013

தனித்துவமான பயணங்கள்...

Photo : KRP Senthil
சாலையோர மரங்கள் வெகுவிரைவாய் கடந்துகொண்டிருந்தன. குலுங்கும் பேரூந்தில் அதன் அசாதரன சப்தங்களையும் மீறி இருவர் உரத்த குரலில் அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். பிரயாணங்களின் மீதான என் பெருங்காதல் தீராப்பெருவெளியென இன்னும் புதிய ஆர்வங்களை விதைத்துக்கொண்டுதான் இருக்கிறது. தனித்த பிரயாணங்கள் எப்போதும் வரம் எனக்கு. அதிலும் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றுவதில் வேட்கை அதிகம். சென்னையில் இருந்து ஊருக்கு எப்போதும் மோட்டார் சைக்கிளில்தான் செல்வேன். சரியாக பணிரெண்டு வருடங்களுக்கு முன்னர் அக்காள் மகன் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனான். அதன்பிறகு மெல்ல குறைத்துக்கொண்டேன்.

நேற்று கோவையில் அலுவலக வேலை முடிந்தவுடன். இரவு ஓய்வுக்குப்பின் இன்று காலை ஊருக்கு கிளம்பலாம் என ரயில் நிலையம் நோக்கி நடந்தபோது பூரணியிடமிருந்து அழைப்பு வந்தது. கோவையில் இருக்கிறேன் என்றதும். சேலம் வழியாக பஸ்ஸில் வாயேன், இப்பவாவது சந்திக்கலாம் என்றாள். பூரணி இணையத்தோழி. இதுவரை முகம் காட்ட தேவைப்படாத நட்பு. நிறைய பேசியிருக்கிறோம். பெருந்துறையில் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றினாள். சரி அவளையும் பார்த்து விட்டு போகலாம் என பெருந்துறை வழியாக செல்லும் பேரூந்தில் ஏறினேன்.  வழியெங்கும் பத்து முறையேனும் எங்க வர்றே என கேட்டுக்கொண்டேயிருந்தாள். பெருந்துறை வந்ததும் அவள் மொபைலுக்கு அழைத்தேன். பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பெண்ணின் குரல்,வழியாக அவள் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் தகவலை சொன்னது. அதன்பிறகு ஒரு ஐந்து மணிநேரம் பெருந்துறையில் சுற்றிக்கொண்டிருந்தேன். வந்து சேர்ந்த குறுந்தகவலையும் இரண்டு முறை அனுப்பியிருந்தேன். எந்த பதிலும் வரவில்லை. அவள் மொபைலும் உயிர்த்தெழவில்லை.

மீண்டும் சென்னை பேரூந்தை பிடித்தேன். சன்னலோர இருக்கையை ஒரு பெண் குழந்தைக்கு விட்டுக்கொடுத்தேன். அதன்பிறகு ஒரு வயதானவர், பெண்மணி இப்படியாக நான் இருக்கைகளை விட்டுக்கொடுப்பதும், பின் கிடைத்த இருக்கைகளில் மறுபடி அமர்வதுமாக தொடர்ந்த பயணத்தில் கடைசி இருக்கைக்கு கடைசியாக இடம்பெயர்ந்தேன். வழியில் பெயர் அரியத்தேவைப்படாத ஊரின் நிறுத்ததில் இரண்டு பிள்ளைகளுடனும் கொஞ்சம் மூட்டை முடிச்சுகளுடன் தடுமாற்றத்துடன் ஏறினார் நடுத்தர வயது ஆசாமி. வறுமை நிலையில் இருப்பவர் என்பதை அவரின் தோற்றம் சக பயணிகளின் கண்களில் திரையிட்டது. அதில் அவரின் பெண் பிள்ளை அழுதபடி இருக்கவே, அவளை மெட்ராஸ் வந்தவுடன் சாப்பாடு வாங்கித்தருகிறேன் என ஆறுதல் வார்த்தைகளால் சமாதானம் செய்ய முயன்றார். எந்த தயக்கமும் இல்லாமல் கீழே அமர்ந்துகொண்டார். என் பேக்கில் வைத்திருந்த இரு பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்து நீட்டினேன். அவரின் பையன் அதனை அவசரமாக சாப்பிட்டதால் உடனே ஒமட்டல் வந்து வாந்தி எடுத்தான். அவசரமாக தன் கையில் பிடித்து வெளியே கொட்டினார். தன் துண்டால் அச்சிறுவனின் முகத்தை துடைத்தார், என்னிடம் இருந்த வாட்டர் பாட்டிலை கொடுத்தேன். மூவருக்கும் அது போதவில்லை. என் அருகில் அமர்ந்திருந்த பெரியவரும் தன் வாட்டர் பாட்டிலை கொடுத்தார். எங்கள் இருவரின் இருக்கையை அச்சிறுவனுக்கு தந்து படுக்க வைத்தோம்.

பெரியவரும், நானும் படிக்கட்டில் அமர்ந்துகொண்டோம். மெல்ல அந்த நபர் பேச ஆரம்பித்தார். தன் மனைவிக்கும் தனக்கும் சண்டை என்பதால் கோபத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மெட்ராஸ் செல்வதாகவும். இனி அவளுடன் வாழப்போவதில்லை எனவும் எழுத முடியாத கெட்ட வார்த்தைகளால் தன் மனைவியை திட்டியபடியே தன் கதையை சொல்லியபடி வந்தார். காதல் திருமணம் இடைப்பட்ட நாளில் கசந்து விட்டிருக்கிறது. கூலியோ, குபேரனோ காதல் எல்லா இடங்களிலும் தன் இருப்பை ஆணித்தரமாக அன்பாகவோ, துயரமாகவோ பதியவைத்து விடுகிறது. அடுத்த நிறுத்தத்தில் முதியவருக்கும் இருக்கை கிடைத்துவிட, நான் படிக்கட்டில் வெளிப்புறங்களில் ஓடும் மரங்களை ரசித்தபடி அமர்ந்திருந்தேன்.

பேண்ட் பாக்கெட்டில் சிணுங்கிய தொலைபேசி என்னை கலைத்தது. பூரணிதான், ”சாரிப்பா, ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா?” என்றவள். பதிலுக்கு காத்திராமல் “நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கல! மொதல்ல சும்மனாச்சும் சொல்றீங்கன்னுதான் நெனச்சேன். நாம சந்திக்காம இருக்கறதுதான் நல்லதுன்னு தோனுச்சு. ஒன்னோட பிம்பம் என் கற்பனை வரைஞ்ச மாதிரிதான் எப்போதும் இருக்கனுன்னு ஆசைப்படுறேன். உன் தோழமை அபூர்வமானது. நாம சந்திக்கவே வேண்டான்னு மனசுக்குள்ள இப்பகூட ஓடிட்டே இருக்கு. அதான் என்ன செய்யிறதுன்னு தெரியாம மொபைல ஆஃப் பன்னி வச்சிட்டேன்” என்றாள். அதனை சொல்லும்போது அவள் குரல் வெகுவாக உடைந்து விட்டிருந்தது. நான் “பராவாயில்ல, நாம் கடைசி வரைக்கும் பார்க்காமல் இருப்பதும் சுவாரஸ்யம்தான், அதில் எனக்கு பிரச்சினை இல்லை. உன் கணவரையும், பிள்ளையையும் கேட்டதாக சொல்” என்றேன். மீண்டும் கலங்கிய குரலில் ”வீட்டுக்கு வரச்சொல்லிட்டு பாக்காமயே அனுப்பிட்டேன் இல்ல, மன்னிச்சுருப்பா!” என்றாள். அதற்கு மேல் தொடர முடியாத சங்கடத்துடன் தொடர்பை துண்டித்தாள்.

அந்த நபர் தூங்கி விட்டிருந்தார். அவரின் பெண் குழந்தை அவர் மடியில் ஆழ்ந்து உறங்கியது. அப்பெண் குழந்தையின் கண்களில் இருந்து காய்ந்த கண்ணீர் வழித்தடங்களாய் காட்சியளித்தது. பேரூந்து தன் அசாதரன சப்தங்களுடன் சென்னை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. 

4 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

உள்ளே இழுத்துச் சென்று படிக்க வைக்கும் எழுத்து...

புனைவு மிகவும் அருமை...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

யதார்த்தமான நடையில் சிறப்பான கதை! அருமை! நன்றி!

SNR.தேவதாஸ் சொன்னது…

முகம் தெரியாத நீண்ட நட்பும்,முகத் தெரிந்த குறுகிய நட்பும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இதயத்தில் வலிக்கிறது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

a சொன்னது…

நிழலும் நிஜமும் கலக்காமல் இருப்பது நல்லதே.... நல்ல புனைவு தல....